
##~## |
மாயூரத்தில், காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு, அப்படியே தில்லையம்பதி நோக்கிப் பயணமானார் கண்வ மகரிஷி. அப்படிச் சென்றுகொண்டிருந்தபோது, காவிரி நதி கடலில் சேரும் காவிரிப்பூம்பட்டினத்தில் நீராடினால் என்ன என்று தோன்றியது. உடனே, மாயூரத்தில் இருந்து காவிரிப்பூம்பட்டினம் நோக்கி நடந்தார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வழியில், சிவபூஜை செய்யும் வேளை நெருங்கியது. அங்கே இருந்த வனத்தில் வில்வ மரங்கள் அடர்ந்திருந்தன. அந்த மரங்களுக்கு நடுவே அமர்ந்துகொண்டு, சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி, வணங்கி வழிபட்டார். கொத்துக் கொத்தாக வில்வ இலைகளை இரண்டு கைகளாலும் எடுத்து, சிவலிங்கத்தின் உச்சியில் வைத்து வணங்கினார். 'என் சிவமே! உன் உச்சி குளிர்ந்து போயிருக்குமே! அதுபோல் இந்த க்ஷேத்திரத்துக்கு வருவோரின் மனமும் குளிர்ந்துபோகட்டும். நீ அருள்வாயாக!’ என்று மனதாரப் பிரார்த்தனை செய்தார். தியானத்தில் மூழ்கினார்.
அங்கே... மொத்த இடமும் குளிர்ந்து போனது. எல்லா இடங்களிலும் வில்வத்தின் நறுமணம் சூழ்ந்துகொண்டது. 'அடடா... எப்பேர்ப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறோம்’ என்பதை உணர்ந்து சிலிர்த்துப் போனார் கண்வ மகரிஷி. தனது வாக்கு சத்தியவாக்காகும் என்கிற நம்பிக்கை தந்த ஆனந்தத்தில், அவரது கண்களில் இருந்து கரகரவென நீர் வழியத் தொடங்கியது.

மார்க்கண்டேயன் கதை ஞாபகம் இருக்கிறதுதானே! 'அவனுக்கு அல்பாயுசு’ என்று நாள் குறித்து, பதினாறாம் வயதுடன் அவன் வாழ்க்கை முடிந்துபோகும் என்று சொல்லப்பட்ட வேளையில், திருக்கடையூர் திருத்தலத்துக்கு வந்து, ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரிடம் அவன் அடைக்கலம் புகுந்தானே! தன் அடியவனான அந்தச் சிறுவனை சிவனார் காத்தருளிய அந்தத் திருக்கடையூர் தலத்தை மறக்கமுடியுமா என்ன?!
அபிராமிபட்டர் வாழ்ந்த அற்புதமான பூமி, திருக்கடையூர். இன்றைக்கும் ஆயுள் பலம் தரும் தலமாகப் போற்றப்படுகிறது, இந்தத் திருக்கோயில். இங்கு வந்து சஷ்டியப்த பூர்த்தியோ சதாபிஷேகமோ செய்து இறைவனை வணங்கினால், மார்க்கண்டேயனுக்கு அருளியதுபோல் நமக்கும் அருள்வார்; ஆயுள் பலம் கூட்டுவார் என்பது ஐதீகம்!
''இதோ, நான் அமர்ந்திருக்கிற இடத்தில்தான் மார்க்கண்டேயன் நின்றிருந்தானா? 'அருகில் இருக்கிற திருக்கடவூர் என்கிற தலத்துக்குப் போ! அங்கே எமன் உன்னிடம் நெருங்கக் கூட முடியாது. தைரியமாகப் போ!’ என்று அவனை சிவனார் வழிநடத்தினாரே, அது இந்த இடம்தானா? என் சிவனே... என் சிவனே...'' என்று பித்துப் பிடித்தவர்போல் எழுந்து, அங்குமிங்கும் ஓடினார் கண்வ மகரிஷி. சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். இரண்டு கைகளாலும் மண்ணை அள்ளியெடுத்து சிரசில் வைத்துக்கொண்டு, கண்களில் ஒற்றிக்கொண்டார். 'இந்தத் தலம் உன்னத வாழ்க்கைக்கு வழிகாட்டும் தலமாக மலரப் போகிறது. வாழ்வில் எந்தச் சிக்கல் வந்தாலும் இங்கு வந்து பாதம் பதித்தால் போதும்... அத்தனைச் சிக்கல்களும் கவலைகளும் பறந்தோடிவிடும்!’ என்று நெஞ்சம் நெகிழ நின்றவர், மீண்டும் வில்வங்களைப் பறித்து, சிவலிங்கத் திருமேனியில் சொரிந்து மகிழ்ந்தார்.

கண்வ மகரிஷி உருகி உருகி வழிபட்ட அந்தத் தலம், மாட்டூர் எனப்படும் மாத்தூர். நாகை மாவட்டம், திருக்கடையூருக்கு அருகில் உள்ளது இந்தத் தலம். திக்குத் திசை தெரியாமல் மார்க்கண்டேயன் வந்தபோது, திருக்கடையூருக்கு வழிகாட்டி சிவனார் அருளிய அற்புதமான இடம் இது. அசரீரி போல், சத்தியவாக்கு போல் மார்க்கண்டேயனுக்கு அருளிய இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீசத்தியவாசகர் எனத் திருநாமம் சூட்டி வழிபட்டனர் மக்கள்.
அதுமட்டுமா? சோழ மன்னன் ஒருவன், தோல் வியாதியால் பெரிதும் அவதிப்பட்டு வந்தானாம். அவன் நீராடுவதற்காகக் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தினமும் தண்ணீர் எடுத்து வந்து தந்தானாம், வண்டிக்காரன் ஒருவன். ஆனாலும் மன்னனின் நோய் நீங்கியபாடில்லை. ஒருநாள், காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்துகொண்டு வந்த தண்ணீரெல்லாம் கொட்டிவிட, அருகில் இருந்த வில்வவனத்தின் குளத்தில் இருந்து, தண்ணீர் எடுத்துச் சென்றான் வண்டிக்காரன்.

அந்தத் தண்ணீரில் குளித்து முடித்ததும், ஆச்சரியப்பட்டுப் போனான் மன்னன். அவன் தோல் வியாதி முழுவதும் நீங்கியிருந்தது. வண்டிக்காரனை அழைத்து விசாரித்ததும், அவன் விவரத்தைச் சொல்லி, வில்வவனக் குளத்தில் நீர் எடுத்து வந்ததைத் தெரிவித்தான். உடனே அங்கு வந்த மன்னன், தலத்தின் பெருமைகளை அறிந்து, அங்கே சிவனாருக்கு அழகிய ஆலயம் அமைத்தான். அந்தத் திருக்குளம் இன்றைக்கும் உள்ளது. அதனை ஸ்ரீலட்சுமி தீர்த்தம் என்று அழைக்கின்றனர்.
ஆயுள் பலம் தந்து, வாழ்க்கைக்கு வழிகாட்டிய திருத்தலம், இறைவன் சத்தியவாக்கு சொல்லி அருளிய பூமி, மன்னனின் வியாதியைத் தீர்த்தருளிய இடம் எனப் பல பெருமைகள் கொண்ட மாத்தூர் தலம், திருஞானசம்பந்தராலும் சுந்தரராலும் வைப்புத் தலமாகப் பாடப்பெற்ற தலம் என்பது குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தர் அருளிய திருக்ஷேத்திரக்கோவை (2-39-7), சுந்தரர் அருளிய ஊர்த்தொகை (7-47-1) ஆகியவற்றில் அந்தப் பாடல்கள் உள்ளன.

இத்தனைப் பெருமைகள் கொண்ட கோயிலில், கும்பாபிஷேகம் நடந்து சுமார் 75 வருடங்களாகின்றன என்பதை அறிய நேர்ந்தால், உங்களின் நெஞ்சே கனத்துப்
போகுமல்லவா? ஆமாம்.. முள்ளும் புதருமாக, கட்டடங்கள் பெயர்ந்து பிராகாரங்கள் விழுந்து, ஆலயம் சிதிலமுற்ற நிலையில் இருப்பதைப் பார்க்கப் பார்க்க, நமது கண்களிலிருந்து கரகரவென வழிகிறது கண்ணீர்.
என்றும் பதினாறாகத் திகழும் மார்க்கண்டேயனுக்கு ஆயுள் பலத்துக்கு வழிகாட்டிய சத்தியவாசகர் ஆலயம் அழகுறத் திகழ வேண்டாமா? மன்னனின் தோல் வியாதியைத் தீர்த்தருளிய திருத்தலம் மங்கலகரமாக, விழாக்கோலத்துடன் இருக்கவேண்டுமல்லவா! கண்வ மகரிஷி தவமிருந்து வழிபட்ட திருத்தலம் இப்படிக் கவனிப்பாரின்றி இருக்கலாமா? இந்த ஆலயம் பொலிவுறுவதற்கும், பழையபடி விழாக்கள் நடைபெறுவதற்கும் நாமும் ஏதேனும் ஒருவகையில் பங்கு பெறவேண்டும் அல்லவா!
கோயிலின் தொன்மையையும் தற்போதைய அவல நிலையையும் கண்டு ஸ்ரீமாத்தூர் சாஸ்தாஸ் பரிபாலன டிரஸ்ட் எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தெல்லாமோ, எவரிடம் இருந்தெல்லாமோ நிதி கேட்டுப் பெற்று, கோயில் திருப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கே அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசௌந்தர்ய நாயகி. அழகே உருவெனக் கொண்டு ஜொலித்த முகத்துடன் இருந்தவளின் விக்கிரகத் திருமேனி முழுவதுமாக பின்னம் அடைந்துவிட்டதாம். இப்போது அம்பாளின் புது விக்கிரகம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமா? ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீபைரவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, கண்வ மகரிஷி ஆகியோருக்குச் சந்நிதி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
''எப்படியும் நிதியுதவி கிடைத்து விடும்; எல்லாப் பணிகளையும் முடித்துவிட்டு, வருகிற 20.5.13 அன்று கும்பாபிஷேகம் செய்துவிடலாம் என்று திட்டமிட்டு, வேலைகளை முடுக்கினோம். ஆனால், நிறைவுப் பணிகளுக்குப் போதிய நிதி இல்லாமல், ரொம்பவே சிரமமாக உள்ளது'' என்று டிரஸ்ட் உறுப்பினர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
சத்தியவாசகர் திருத்தலப் பணிகளின் நிறைவில் வாசகர்களாகிய நம் பங்கும் இருக்கட்டும். பணியின் நிறைவில் கோயில் பொலிவுற, அந்தப் புண்ணியத்தில் ஒரு பங்கு நம் குடும்பங் களிலும் தொழில்களிலும் பரவட்டும். குறிப்பாக, நம் குடும்பத்தார் மற்றும் சந்ததியினரின் ஆயுள் பெருகட்டும்; ஆரோக்கியம் சிறக்கட்டும்!
'இவை அனைத்தும் சத்தியவாக்கு’ என்று அந்த மாத்தூர் சத்தியவாசகப் பெருமானே வந்து நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி அருள்வார் என்பது சத்தியம்!
படங்கள்: செ.சிவபாலன்
எங்கே இருக்கிறது?
நாகை மாவட்டத்தில் உள்ளது மாத்தூர். மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், காரைக்காலில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது மாத்தூர். திருக்கடையூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள மாத்தூர், வைப்புத் தலம் எனப் போற்றப்படுகிறது.
ஆலமர்செல்வன்
ஆலமர்செல்வனாம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சிற்சில தலங்களில், வேறு விருட்சங்களின் கீழ் அமர்ந்தும் ஞானோபதேசம் அருளியிருக்கிறார். சிவனார் அரூப தட்சிணாமூர்த்தியாக அருளும் தலம் திருப் பெருந்துறை. மாணிக்கவாசகரை தடுத்தாட்கொண்ட இந்தத் தலத்தில், அவர் குருந்த மரத்தடியில் வீற்றிருந்து உபதேசித்தாராம்.
உத்தரகோச மங்கையில் நந்திகணத்தைச் சேர்ந்த ஓராயிரம் முனிவர்களுக்கு உபதேசம் நிகழ்ந்ததாம். அப்போது இலந்தை மரத்தடியில் வீற்றிருந்ததாக தலபுராணம் கூறும்.
வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் அருளும் பெருமான், தாருகாவன முனிவர்களுக்கு உபதேசித்தவர். அவர் தாருகா மரத்தின் கீழ், உமாதேவியுடன் வீற்றிருந்து அருளியதாகக் கூறுவர்.