##~## |
கயிலைமலையானை பரிக்ரமா வரத் துவங்கிவிட்டோம். இந்த மலைவலத்தின் நிறைவில் அந்தப் பரம்பொருளை மிக அருகில் தரிசிக்க இருக்கிறோம். அதற்கு முன்பாக நாம் மேற்கொள்ளும் பயணம் பரவசம் தரக்கூடியது மட்டுமல்ல; சிரமங்கள் பல நிறைந்ததும்கூட!
இந்தியர்களான நாம் நடைப்பயணம் மேற்கொண்டபடி பரிக்ரமா வர, திபெத்தியர் வித்தியாசமான முறையில் அதை மேற்கொள்கிறார்கள். அதாவது, கயிலைமலையானை இருகரம் கூப்பி வணங்கியபடி சாஷ்டாங்கமாக விழுந்து, கைநீட்டி ஒரு கோடு போட்டுவிட்டு எழுகிறார்கள். தொடர்ந்து, எந்த இடத்தில் கோடு போட்டார்களோ, அந்த இடத்துக்கு நகர்ந்து, மறுபடியும் சாஷ்டாங்கமாக விழுந்து, மீண்டும் கை நீட்டிக் கோடு போட்டு... என்று அவர்கள் பரிக்ரமா மேற்கொள் கிறார்கள். எந்த இடத்தில் பரிக்ரமாவை ஆரம்பிக்கிறார்களோ, அது முதல் பரிக்ரமா நிறைவடையும் 58 கி.மீ. தொலைவு வரைக்கும் இப்படியே செய்கிறார்கள். இதனால், நாம் மூன்று நாட்களுக்கு மேற்கொள்ளும் இந்த பரிக்ரமா, திபெத்தியர்களுக்கு 36 நாட்களுக்குத் தொடர்கிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
புத்த மதத்தில் கயிலைமலையை 'காங்ரிபோக்’ என்கிறார்கள். இதற்கு, 'விலை மதிப்பில்லாதது’ என்று பொருள். இந்த நம்பிக்கை யின் அடிப்படையில் திபெத்தியர்கள் அதிக அளவில் கயிலை மலையானை தரிசிக்க வருகிறார்கள். தவிர சீனா, திபெத் நாடுகளில் உள்ள பிற மதத்தினரும் ஒருவித ஈர்ப்பின் அடிப்படையில் இந்த யாத்திரையை மேற்கொள்கிறார்கள்.

இந்த பரிக்ரமாவில், மலைப்பகுதியில் கடுமையான பயணம் மேற்கொள்ளவேண்டி இருப்பதால், நமது உடல் சக்தி விரைவில் செலவாகிவிடுகிறது. அந்தச் சக்தியை ஈடுசெய்வதற்காக யாத்திரை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் உலர் பழங்களான திராட்சை, பேரீச்சை, அத்தி மற்றும் பருப்பு வகைகளான முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை உட்கொள்கிறார்கள்.
இந்த பரிக்ரமாவில் நாம் முதலாவதாக ஓய்வு எடுக்கும் இடம் 13 கி.மீ. நடைப்பயணத்தில் வந்துவிடுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 16,300 அடி உயரத்தில் உள்ள அந்த இடத்தின் பெயர் 'திராபுக்’. இங்குள்ள விடுதியில், இரவில் ஓய்வெடுக்கிறோம்.
கயிலைமலையானின் வாமதேவ (வடக்கு) முகத்தின் தரிசனம் நமக்கு இங்கே கிடைக்கிறது. வஜ்ரபானி- அங்கோலேஸ்வரர் ஆகிய இரு மலைகளுக்கு இடையே நாம்
காணும் அந்த அற்புதக் காட்சி பேரதிசயமானது!
(ஆன்மிக ஆல்பம் புரட்டுவோம்...)