Published:Updated:

பத்மநாபபுரம் நீலகண்ட ஸ்வாமி!

கோபாலா... கோவிந்தா!ஜே.வி.நாதன்

பத்மநாபபுரம் நீலகண்ட ஸ்வாமி!

கோபாலா... கோவிந்தா!ஜே.வி.நாதன்

Published:Updated:
##~##

த்மநாபபுரம்- அழகான அரண்மனை கொலு வீற்றிருக்கும் இயற்கைப் பேரழகு நிரம்பிய ஊர். நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராகத் திகழ்ந்த ஊர் இது. இங்குள்ள கல்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற நயினார் நீலகண்ட ஸ்வாமி கோயில். ஆலயத்தின் மூலவர் திருநாமம் ஸ்ரீநீலகண்ட ஸ்வாமி; அம்பாளின் திருநாமம் ஸ்ரீஆனந்தவல்லி. ஸ்வாமியும் தேவியும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் 12 சிவாலயங்களில், அழகான கோபுரமும், அம்பாளுக்குத் தனிச் சந்நிதியும், இரண்டு கொடி மரங்களும் இருப்பது இங்கு மட்டுமே! கேரளப் பாணியிலும் தமிழ்நாட்டுப் பாணியிலும்  கட்டுமானங்கள் அமைந்த கோயில் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிகவும் பழைமையான இந்தக் கோயிலில் ஏராளமான சிற்பங்களை நிறுவித் திருப்பணி செய்தவர் மன்னர் திருமலை நாயக்கர். கேரள மன்னனான மார்த்தாண்ட வர்மாவும் திருப்பணிகள் செய்து இந்த ஆலயத்தை அழகுபடுத்தியிருக்கிறார். இங்கே, பிராகாரத்தில் கையில் விளக்கு ஏந்திய அழகுப் பாவையர் சிலைகள் ஒரே வரிசையில் ஏராளமாக நிற்கும் அழகோ அழகு! ஆலயத்தினுள் அர்ஜுனன், கிருஷ்ணர், மன்மதன், ரதி ஆகிய தெய்வ விக்கிரகங்களோடு, இங்கே திருப்பணிகள் செய்த திருமலை நாயக்க மன்னன், மார்த்தாண்ட வர்மா ஆகியோரது சிலைகளும் அழகுறக் காட்சி தருகின்றன.

பத்மநாபபுரம் நீலகண்ட ஸ்வாமி!

கோயிலின் உள்ளே ஸ்ரீகணபதி, ஸ்ரீநடராஜர், ஸ்ரீசாஸ்தா, மூலவர் ஸ்ரீநீலகண்டர், அம்பாள் ஸ்ரீஆனந்தவல்லி ஆகியோருக்குத் தனித் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன. ஸ்வாமி கருவறையின் சுற்றுப் பிராகாரத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர், பூதத்தான் மற்றும் தூணில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோர் வீற்றிருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவாலயங்கள் மொத்தம் 12. அவை: திருமலை, திக்குறிச்சி, திருநந்திக்கரை, திற்பரப்பு, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்னியோடு மற்றும் திருநெட்டாளம். இவற்றில், ஏழாம் இடத்தில் உள்ளது கல்குளம் ஸ்ரீநீலகண்ட ஸ்வாமி ஆலயம்.

மாசி மாதம் வரும் மகா சிவராத்திரியன்று, முதல் கோயிலில் பிரதோஷ தீபாராதனை பார்த்துக் கிளம்பி, 12 சிவன் கோயிலுக்கும் 'கோபாலா! கோவிந்தா!'' என்ற கோஷத்துடன், சுமார் 50 கி.மீ. தொலைவுக்கு நடையும் ஓட்டமுமாகச் சென்று, மறுநாள் காலையில் பயணத்தை முடிக்கும் 'சிவாலய ஓட்டம்’ இந்த மாவட்டத்தில் பிரசித்தம். இந்த ஓட்டத்தின் மூலம் ஸ்வாமியைத் தரிசித்து வழிபடுபவர்களின் பாவங்கள் அகன்று, அவர்களுக்குக் கோடிப் புண்ணியம் சேரும் என்து ஐதீகம்!

பத்மநாபபுரம் நீலகண்ட ஸ்வாமி!
பத்மநாபபுரம் நீலகண்ட ஸ்வாமி!

சிவாலய ஓட்டம் ஓடுவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே விரதம் இருக்கத் தொடங்குகிறார்கள் பக்தர்கள். இளநீர், பதநீர் என்று மட்டுமே பருகி விரதம் மேற்கொள்வார்கள்.

சரி, இந்த சிவாலய ஓட்டம் எப்படிப் பிறந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

பஞ்சபாண்டவர்களுள் ஒருவனான பீமன், ஒருமுறை புருஷாமிருகத்தின் பால் தேவை என்று பல இடங்களில் தேடி அலைந்தான். கடைசியில், வியாக்ரபாதர் என்னும் முனிவரிடம் கேட்டால் தான் கிடைக்கும் எனத் தெரிந்து, அவரிடம் வந்து சேர்ந்தான். அப்போது அவர் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்துகொண்டிருந்தார்.

பீமனின் செயலால் வியாக்ரபாதரின் தவம் கலைந்தது. கோபம் கொண்ட முனிவர் பீமனைத் துரத்தினார். பீமன் ஓட முற்பட்டான். அப்படி ஓடும்போது, அவனிடமிருந்து ஒரு ருத்திராட்சம் பூமியில் விழுந்தது. என்ன ஆச்சரியம்... கீழே விழுந்த ருத்திராட்சம் சிவலிங்கமாக மாறியது. வியாக்ரபாதர் சிவலிங்கத்தைப் பார்த்ததும், அங்கேயே நின்று சிவனை வழிபடத் தொடங்கி விட்டார்.

பத்மநாபபுரம் நீலகண்ட ஸ்வாமி!

பீமன் மறுபடியும் அவரை அணுகி, தனக்குப் புருஷாமிருகத்தின் பால் தேவை என்று நச்சரிக்கத் தொடங்கினான். தன் வழிபாட்டுக்கு இடையூறு செய்த பீமனை முனிவர் மீண்டும் துரத்த, பீமன் ஓட ஆரம்பித்தான். இரண்டாம் முறையும் அவனிடமிருந்து ருத்திராட்சம் ஒன்று கீழே விழுந்து, சிவலிங்கமாக மாறியது. வியாக்ரபாதர் அந்த லிங்கத்தை வழிபட ஆரம்பித்துவிட்டார்.

இப்படியே 12 ருத்திராட்சங்கள் பூமியில் விழுந்து, அவை அனைத்தும் சிவலிங்கங் களாக மாறின. கடைசியில் தர்மர் அங்கு வந்தார். அவரிடம் நடந்ததைச் சொல்லி, இருவரும் நியாயம் கேட்டனர். தன் தம்பியாக இருந்தபோதிலும் பீமன் செய்தது தவறே என்று தீர்ப்பு கூறினார் தர்மர். அவருடைய நேர்மையை மெச்சிய வியாக்ரபாத முனிவர், பீமன் கேட்ட புருஷாமிருகத்தின் பாலை அவனுக்கு வழங்கினார் (இந்தக் கதையையே வேறு விதமாகவும் கூறுவர்).

இந்த வரலாற்றின்படி, வியாக்ரபாதர் வழிபட்ட 12 சிவலிங்கங்களையும் அடுத்தடுத்து வழிபடுவதே 'சிவாலய ஓட்டம்’ என்கிறார்கள். பீமனை நினைவுப் படுத்த 'கோபாலா... கோவிந்தா!’ கோஷம் போலும்! சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் கோஷம்... தரிசனம்!

நீலகண்ட ஸ்வாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பானது. இந்த வழிபாடு முற்பிறப்பு தோஷங்களை நீக்கும். சிவபெருமானுக்கு உகந்த உபாசனா காலமான ஒவ்வொரு பட்சத்திலும் (வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும்) வரும் திரயோதசி திதியன்று, சூரிய அஸ்தமனத்துக்கு முன்னர் உள்ள மூன்றேமுக்கால் நாழிகைக் காலமே 'பிரதோஷம்’ எனப்படும். அன்றைய தினம் சிவபெருமானைக் குறித்து விரதம் இருந்து, பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று சிவனாருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, அவருடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி வழிபட்டால் பல கோடி நன்மைகள் தானாகவே வந்து சேரும் என்பது ஐதீகம். இதனாலயே பிரதோஷ வேளை 'பாவத்தைப் போக்கும் நேரம்’ என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது.

பத்மநாபபுரம் நீலகண்ட ஸ்வாமி!

ஆலயத்தின் மேல்சாந்தியான மூர்த்தி குருக்களிடம் பேசியபோது, 'இந்த ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். காலை 5 மணி, மாலை 6:15 மணி, இரவு 7:30 மணி ஆகிய நேரங்களில் ஸ்வாமிக்கு பூஜை முடிந்து சீவேலி ஊர்வலம் (உத்ஸவர் உலா உட்பிராகாரத்தில்) நடக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அபிஷேகங்கள், ஆறு கால பூஜை ஆகியன குறைவற நடந்து வருகின்றன. ஆலயம் அதிகாலை 5 மணிக்குத் திறந்து காலை 10:15 மணிக்குச் சார்த்தப்படும்.பிற்பகல் 5:15 மணிக்கு நடைதிறந்து, இரவு 8 மணிக்கு மூடுகிறோம்.

பங்குனியில் பத்து நாள் திருவிழா நடைபெறும். 9ஆம் நாள் தேரோட்டம். தேர் புறப்படுவதற்கு முன், பூதத்தானை வழிபட்ட பிறகே தேர் நிலையை விட்டுக் கிளம்பும். பூதத்தானை வழிபட்டால் விக்கினங்கள் நேராது என்பது நம்பிக்கை. தை மாதம் ஸ்வாமிக்குத் திருக்கல்யான உத்ஸவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது நவராத்திரித் திருவிழா முடிந்து, 10-ஆம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறும்.

ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10 மணிக்கு அம்பாளும் ஸ்வாமியும் உட்பிராகாரத்தில் ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக எழுந்தருள்வது கண்கொள்ளாக் காட்சி! அம்பாளுக்கு புஷ்ப அலங்காரமும் விசேஷ பூஜைகளும் அன்று அமர்க்களப்படும்.

பிரதோஷ தினங்களில் மட்டுமல்லாது, இந்த ஆலயத்து இறைவனை எப்போது பிரார்த்தித்தாலும் பாவங்கள் அகலும், பக்தர்களுக்கு நல்லதே நடக்கும் என்பது காலம் காலமாக விளங்கிவரும் நம்பிக்கை!'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

நாமும் பத்மநாபபுரம் சென்று இறைவனை வணங்கி, பாவம் நீங்கி வருவோம்.

படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism