Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 15

சித்தம் அறிவோம்...

சித்தம்... சிவம்... சாகசம்! - 15

சித்தம் அறிவோம்...

Published:Updated:
சித்தம்... சிவம்... சாகசம்! - 15
##~##

'சோதி தன்னைப் பதினெண்பேரும் ஒளித்து- நூலிற்பேசி
சித்துஞான மர்மம் மிகக் காட்டிடாமல் ஏகி
ஓதியதன் உண்மை தன்னை யோகஞானதேகி
உரைத்தே நித்தம் மந்திரத்தை யனுதினமும் நேசி
நீதியாயிரம் மந்திரத்தா லகலும் பேய்பிசாசு
நிலைத்து வாசி தங்கிக்காயம் அழியாதுவிசுவாசி
ஆதிமந்திரம் இது தன்னாலே சித்தர் அனேகம்வீசு
அம்பிகையின் பாதத் தாணை அறைந்திட்டேன் சந்யாசி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கோரக்கர் நமனாசத் திறவுகோல்

குண்டலினி யோகம் பற்றி சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். இதை இன்னும் விளக்கமாகவும் எழுத முடியும். ஆனால், என்ன எழுதினாலும், குண்டலினியை அப்படி எல்லாம் ஒருவரால் சுலபமாகப் பயின்றுவிட முடியாது என்பதே உண்மை. சரியான குரு மூலம் உடம்பை வென்ற ஒருவரால்தான் இது முடியும். வைராக்கியம் இதற்கு மிக மிக முக்கியம்.

ஓர் இமாலயத்து யோகிக்கு, அவர் முக்தி அடைவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் இது வசப்பட்டது. இது வசப்பட அவர் எடுத்துக்கொண்ட காலமோ எழுபது வருடங்களுக்கும் மேல்! முக்கியமாக உடம்பு புரிய, யோகம் வசப்பட, சித்தனாக 'விதிப்பாடு’ மிக முக்கியம். நம் விதிப்பாடோ, நமக்கு முன் நாம் வரக் காரணமான ஏழு தாத்தன்- பாட்டிமார் சார்ந்த ஒன்றாகவும் இருப்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, இதைப் படித்துவிட்டு, 'நானும் குண்டலினி பழக விரும்புகிறேன்’ என்று ஏதோ கம்ப்யூட்டர் கிளாஸுக்குப் புறப்படுவது போலக் கிளம்புவதோ, அல்லது இந்தப் பரவச நிலைக்கு ஆசைப்பட்டு 'சந்நியாசியாகவே ஆகிவிடுகிறேன்’ என்று செயல்படுவதோ பைத்தியக்காரத்தனமாகும்.

இந்தக் குண்டலினியில் சிறு பிசகு நேர்ந்தாலும் சரி, பைத்தியமாகிவிட நேரிடும். சித்தர்களை இந்த உலகத்தவர்கள் மாயாவிகள்போல நினைத்துவிடக்கூடாது என்பதாலும், சித்தர்களும் விஞ்ஞானத் தன்மைக்கு உட்பட்டவர்களே என்பதாலும், விதிப்பாடும் அதன் காரணமாய் அவர்கள் புலனடக்கம் மேற்கொண்டதுமே அவர்களைச் சித்தர்கள் ஆக்கிற்று என்பதையும் நாம் அறிதல் வேண்டும்.

இவ்வாறு நாம் தெளிவாய் அறிவதால், நம் உடல் குறித்தும் ஒரு விழிப்பு நமக்கு ஏற்படும். அதில் நோய்- நொடிகள் நேரும்போது, கர்மவினை என்று அதை மனவிருப்போடு அனுபவித்துத் தீர்க்க முயல்வோமே தவிர, வெறுப்போடு அதை எண்ணி வருத்தத்தோடு வீழ்ந்து கிடக்க மாட்டோம்.

இந்த ஞானமே, ரமணரைப் புற்றுநோய் தாக்கியபோது, அதை விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளச் செய்தது. வலியையும் சந்தோஷமாக 'வா... வலியே வா!’ என்று இன்பத்தை விரும்புவதுபோல விரும்பி அழைப்பதுதான் உயர்ந்த மனத்தெளிவு; மனத் துணிவு! அது ரமணரிடம் இருந்தது. இவற்றை உணரும்பட்சத்தில் நமக்கும் அது கொஞ்சம் கொஞ்சமாய் வரும். சித்தர்கள் வாழ்வைக் கசடற அறிவதில் இதெல்லாம்தான் நமக்குத் தெளிவாக வேண்டும்.

சரி, இனி நாம் போகரிடம் வருவோம். பழநியம்பதியில் சமாதி கண்ட போகர், குண்டலினியால் தன் மிச்ச விந்துவை உச்சந்தலைக்குக் கொண்டு வந்து, உடல் இயக்கத்தையும் மன இயக்கத்தையும் நிறுத்தினார். இப்படி ஒரு நிலையில் அந்த உடலை மண்ணால் அரித்துவிட முடியாது; அந்த உடம்பும் சிதைந்து புழு பூச்சி என ஓருயிர்களாகப் பெருகாது. இப்படி ஒரு நிலையில், குறித்த அளவு வெப்பம் இருக்கும்; நகமும் முடியும் வளரும்; இதயமும் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பழத்துண்டு போல் தன்னிலை மாறாமல் அப்படியே இருந்துவிடும். மொத்தத்தில், ஜீவசக்தி நிலைப்படுத்தப்பட்ட, ஒரு கெடாத உடலாக இந்த உடல் கால காலத்துக்கும் இருக்கும்.

இந்த ஜீவசக்தி, அருள் அலைகளாக தீபச்சுடரில் இருந்து ஒளி அலை வட்டமாய்ப் பரவுவதுபோலப் பரவியபடியே இருக்கும். எனவேதான், ஜீவ சமாதிகளுக்கு நாம் செல்லும் போது, நம் உடலின் ஜீவசக்தி எந்த நிலையில் இருந்தாலும், இரும்பும் காந்தமும் ஒன்றை ஒன்று நேர்க்கோட்டில் சந்திக்கும்போது கவரப் பட்டு ஒன்றாகிவிடுவதுபோல, நம் ஜீவசக்தி, ஜீவசமாதியின் ஜீவசக்தியுடன் ஒன்றுபட்டுப் பலமடைகிறது. நம் ஜீவசக்தியின் பலத்தை தவத்தால் அதிகரித்துக்கொள்வது ஒரு விதம்; இதுபோல சமாதிகளில் வழிபாடுகளால் அதிகரித்துக்கொள்வது இன்னொரு விதம்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 15

திரும்பவும் போகருக்கு வருகிறேன். போகரின் வாழ்வு அவரின் சமாதி நிலை பற்றிச் சொல்லும்போது, நாம் சிந்தித்து அறிந்துகொள்ள இவ்வளவு விஷயங்கள் உள்ளன. இப்படிச் சமாதியில் அமர்ந்த போகர் தன் உடலை ஜீவசக்திக்கு ஆட்படுத்திவிட்டு, தன் சூட்சும உடலால் அங்கிருந்து, முன்பே கோரக்கரிடம் கூறியபடி அவரைத் தன் சூட்சும உடம்போடு நாகப்பட்டினத்தில் சந்தித்து, அவரை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வடக்கு பொய்கைநல்லூருக்குச் சென்று, அவருக்குச் சமாதி செய்வித்தார். கோரக்கரும் தன் உடலை ஜீவசமாதிக்கு ஆட்படுத்திவிட்டு, சூட்சும உடம்போடு வாழ விரும்பியதுதான் அதற்குக் காரணம். இதற்கான சான்றுகள் கோரக்கரின் தனி நூல் தொகுப்பில் உள்ள 4, 5, 6 பாடல்களில் காணக்கிடைக்கின்றன.

இவ்வாறு கோரக்கருக்குச் சமாதி செய்வித்த போகர், அதன்பின் சூட்சும உடம்போடு சீனா, மெக்கா, மதினா முதலான பல பாகங்களுக்கும் பல காரணங்களுக்காகப் பயணித்தார். கோரக்கரும் அவரைப் பின்தொடர்ந்தார். குருவின் வழியில் சிஷ்யன்!

அதேநேரம், போகரின் சூட்சும உடல் சஞ்சாரம் இன்றும் நிகழ்கிறது என்பதுதான் நாம் நினைவில்கொள்ள வேண்டிய ஓர் அதிசய விஷயமாகும்.

குருவாகிய போகர் குறித்து இயன்ற அளவு பார்த்துவிட்டோம். இனி, இந்தச் சிஷ்யனையும் பற்றிச் சிந்திப்போமே!

யார் இந்தக் கோரக்கர்?

சித்தர் பெருமக்களில் சிறிது குழப்பமான வரலாறு கொண்டவர் இவர் என்றால், அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இவரால் 22 நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கோரக்கர் சந்திரரேகை, கோரக்கர் நமநாசத் திறவுகோல், கோரக்கர் ரக்ஷமேகலை, கோரக்கர் முத்தாரம், கோரக்கர் கற்பம், கோரக்கர் மலை வாகடம், கோரக்கர் முக்தி நெறி, கோரக்கர் அட்டகர்மம், கோரக்கர் தாண்டகம், கற்ப சூத்திரம், பிரம்ம ஞானம்... என அந்தப் பட்டியல் பெரிதாக நீள்கிறது.

ஓர் ஆச்சரியம்போல, இவர் எழுதிய நூல்களில் சரி பாதிக்கு மேல் கிடைக்கவில்லை. கோரக்கரே அவற்றை எல்லாம் எங்கோ ஒளித்து வைத்துவிட்டதாகவும், அவ்வாறு ஒளித்து வைத்தற்குப் பின்னாலே ஒரு கதையும் கூறப்படுகிறது. அந்தக் கதைக்கெல்லாம் நாம் பிறகு செல்லலாம். அதற்கு முன்பாக, அவரது வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

ஏற்கெனவே ஏடுகள் பலவற்றில் கோரக்கர் குறித்த பல செய்திகள் வந்திருக்கக்கூடும். எனினும், இங்கே கோரக்கருக்கான எளிதான, அதே நேரம் தெளிவான ஒரு வரலாற்றுச் சுருக்கத்தை அளித்துவிடுவது நலம் என்று கருதுகிறேன். சித்தர் நூல்கள் பலவற்றை வாசித்ததன் அடிப்படையில், கோரக்கர் குறித்த ஒரு தெளிவோடு இதை நான் இங்கே அளிக்க விரும்புகிறேன்.

கோரக்கர் குறித்த குழப்பம் அவர் தமிழரா, இல்லை மராத்தியரா என்பதில் இருந்தே தொடங்குகிறது. வடநாட்டில் 'கோரக்கர்’ என்றே ஓர் ஊர் இருக்கிறது. சில சான்றுகளின்படி அவர் மராத்திய கானக் குறவர் எனும் வகுப்பைச் சேர்ந்தவர் ஆகிறார். ஆனால், இங்கே தமிழ்நாட்டில் வடக்கு பொய்கைநல்லூரில் கார்த்திகை மாத ஆயில்ய நட்சத்திரத்தில் அவர் அவதரித்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது.

பழநியிலே ஒரு பதினெட்டுச் சித்தர் வரிசை உண்டு. இந்த வரிசை ராமேஸ்வரத்திலே கிடையாது. இந்தப் பழநியின் கணக்குப்படி, கோரக்கர் கார்த்திகை மாதம் அவிட்டம் நட்சத் திரத்தில் அவதரித்தவர் ஆவார்.

இப்படி, இவரது நட்சத்திர காலகதியிலே நிறைய முரண்பாடுகள்! இதை எல்லாம் உற்றுப் பார்த்தாலோ, இல்லை... தராசில் எடை போட முனைந்தாலோ நமக்குத்தான் நஷ்டம் ஏற்படும். இதனாலேயே 'நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே’ என்றனர்.

கோரக்கர் மராத்தியரோ, தமிழரோ? அவர் பாடல்கள் தமிழில் இருப்பதில் இருந்து, அவர் தமிழராக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று கொள்ளலாம். அதே நேரம், வடநாட்டில் வழங்கப்படும் அந்த கோரக்கர் மகாஜீ வேறு ஒருவராக இருக்கலாம்.

கோரக்கர், தாய்- தந்தையர் கூடிப் பெற்ற யோனி வழி வந்தவர் அல்லர். இவர் ஓர் அயோனிஜர். வைணவ சம்பிரதாயத்தில் முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர், ஆண்டாள் இவர்கள் நால்வரும் அயோனிஜர்களாய் இந்த மண்ணுக்கு வந்தவர்கள்.

சித்தர்களில் இந்த அயோனிஜம் கோரக்கருக்குப் பொருந்தும். மச்சேந்திர நாதர் என்னும் சித்தரின் தவ சக்திக்கும் விபூதிக்கும் பிறந்தவர் இவர்.

பெண்ணொருத்தி பிள்ளைப்பேறு இல்லாமல் வருத்தத்தோடு இருந்த நேரம்... அந்தப் பெண்ணின் வீட்டு முன் பிட்சை கேட்டு வந்து நிற்கிறார் மச்சேந்திரர்.

'பிச்சை’க்கும் 'பிட்சை’க்கும் வித்தியாசம் உண்டு. பிச்சை இடுபவர் தர்மம் புரிபவர் ஆகிறார். பிச்சை பெறுபவரோ கர்மம் கெட்டவர் ஆகிறார். பிட்சை இடும்போதோ, பிட்சை இடுபவர் அருள்பெறுபவர் ஆகிறார். பிட்சை பெறுபவர், அதை இடுபவர் கர்மக் கணக்கை நேர்செய்தவர் ஆகிறார்.

பிச்சை, ஊன உடம்பை வளர்க்க உதவும். பிட்சை, ஊன உடம்பு ஒளிர உதவும்!

பிச்சை எடுப்பவன் இயலாதவன்; காலம் அவனைக் கைவிட்டுவிட்டது என்று பொருள். எனவே பிச்சையோ, பிட்சையோ இடுவது சிறந்தது. ஆனால், வித்தியாசம் புரிந்திருக்க வேண்டியது மிக முக்கியம். ஒன்று புண்ணியம் தரும்; மற்றொன்று பாவத்தை நீக்கும்.

பாவங்களை நீக்கவே சந்நியாச தர்மப்படி சித்த புருஷர்களும் பிட்சை கேட்டு வருவர். மச்சேந்திரரும் அப்படித்தான் வருகிறார். அந்தப் பெண்ணோ பிள்ளையில்லாக் கவலையில் அவரது பிட்சைக் குரலைக் காதில் வாங்காமல் அமர்ந்திருக்க... மச்சேந்திரருக்கு அவளது முகத் தோற்றமே அவளின் நிலையை உணர்த்திவிடுகிறது. அவளருகில் சென்று, ''உன் முகக்குறிப்பை வைத்தே உன் சோகத்தை உணர்ந்துகொண்டேன். கவலைப்படாதே! எனக்கு பிட்சை இடு. உன் பிள்ளைக்கலி தீரும்'' என்கிறார். அவளும் பிட்சையிடுகிறாள். அவரும் 'கையை நீட்டு’ என்று சொல்லி, ஒரு சிட்டிகை விபூதியை சிவநாமம் சொல்லி ஜெபித்து, அவள் கரத்தில் வைக்கிறார்.

''என்ன இது?''

''விபூதி, தாயே! உன் வரையில் இதுவே பிள்ளை!''

''என்ன.. இந்த விபூதி பிள்ளையா?''

''ஆம்... நமசிவாய நாமம் சொல்லி, வாயில் போட்டுக் கொள். என் தவ சக்தி இதில் உள்ளது.

பிள்ளை இல்லாத காரணத்துக்கான உன் கர்மக்கணக்கு நேராகி, உனக்குப் பிள்ளை பிறக்கும்.''

''இதை என்னால் நம்ப முடியவில்லை!''

''நம்பு! இன்றிலிருந்து சிலகாலம் கழித்து நான் திரும்ப வருவேன். அப்போது இந்த இல்லத்தில் குழந்தை இருக்கும். இது சத்தியம்.''

மச்சேந்திரர் சத்திய வாக்களித்துவிட்டுச் செல்ல, உள்ளங்கை விபூதியோடு அந்தப் பெண் சிந்தனையோடு நின்றபடி இருந்தாள். அதை தூரத்தில் இருந்தே பார்த்த பக்கத்து வீட்டுப் பெண் ஒருத்தி ஓடி வந்தாள். விபூதியை வாங்கிய பெண் அதை வாயில் போட்டு விழுங்க முற்பட, அதை அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் தடுத்தாள்.

''நிறுத்து!''

''ஏன் தடுக்கிறாய்?''

''இப்படித்தான் தெருவில் போகும் யாரோ ஒரு பிச்சைக்காரன் தருவதை எல்லாம் துளியும் சிந்திக்காமல் வாயில் போட்டுக் கொள்வாயா?''

''நீ என்ன சொல்கிறாய்?''

''அவன் யாரோ, எவனோ... இது வசிய விபூதியாகவும் இருக்கலாம். இதைச் சாப்பிட் டால், நீ அவனைத் தேடிக்கொண்டு அவன் பின்னாலேயே சென்றுவிடவும் கூடும்..!''

''அய்யோ... என்னடி இது, இப்படி பயமுறுத்துகிறாய்? இதன் பின்னால் இப்படி எல்லாம்கூட உள்ளதா?''

''பின்னே... யார் எதைத் தந்தாலும் உண்பது சரியா? போ... போய் அதை வீசி எறி!''

சித்தம்... சிவம்... சாகசம்! - 15

அந்தப் பெண்ணும் பயந்து, அந்த விபூதியை வீசி எறிய முற்பட... ''இரு இரு... கண்ட இடத்தில் அதைக் கொட்டாதே. தெரியாமல் யாராவது தீண்டப்போய், அவர்களுக்கும் ஏதாவது ஆகலாம். உன் கொல்லையில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் வெந்நீர் அடுப்பு இருக்கிறதல்லவா? இதை அதில் கொண்டு போய்ப் போட்டுவிடு. சாம்பலோடு சாம்பலாகட்டும்!''

அதன்படியே, அந்தப் பெண்ணும் மச்சேந்திரர் தந்த விபூதியை மாட்டுத் தொழுவத்தில் இருந்த அடுப்பில் போட்டாள். கையையும் நன்றாகத் தூசு தட்டிக்கொண்டாள்.

காலம் உருண்டது. சில ஆண்டுகள் கழிந்த நிலையில், மச்சேந்திரர் அந்தப் பெண்ணின் வீட்டு வாசலுக்கு, சொன்னது போலவே வந்து நின்றார். அந்தப் பெண்ணும் அவரை அடையாளம் கண்டுகொண்டாள்.

''என்னைத் தெரிகிறதா தாயே?''

''ஏன் தெரியாமல்..?''

''உன் பிள்ளைக்கலி தீர்ந்துவிட்டதா? நீ தாயாகிவிட்டாயா?''

''இல்லை..!''’

''ஏன்?''

அந்தப் பெண் தயங்கியபடி அன்று நடந்ததைக் கூற, அவர் முகத்தில் சலனமும் கோபமும் ஏற்படத் தொடங்கியது.

''ஹூம்... உன் நற்கருமம் எனக்குப் பிட்சை இடச் செய்தது. ஆனால், அதைவிட உன் தீய கருமத்துக்கு சக்தி அதிகம். அது என் விபூதியையே பழித்து, உன்னையும் மலடாகவே வைத்துள்ளது.''

''அப்படியென்றால், உங்கள் விபூதிக்குப் பிள்ளையைத் தரும் சக்தி இல்லை என்பதுதானே உண்மை?''

''தவறு பெண்ணே! சித்தன் தவமும் வாக்கும் பொய்க்கவே பொய்க்காது..!''

''இங்கே பொய்த்துவிட்டதே..!''

''ஒருக்காலும் பொய்க்காது. அந்த விபூதியை என்ன செய்தாய் நீ?''

''அதோ, அந்த வெந்நீர் அடுப்பில் போட்டேன்.''

''தவச்சாம்பலை கோவகத்து (மாட்டுத் தொழு

வம்) அக்னியோடு சேர்த்துவிட்டாயா?''

''ஆம்.''

''நான் இப்போதே என் தவத்தின் பேரால் கோருகிறேன்... கோவகம் பிள்ளை தரும், பார்! கோவகத்தே கோருகிறேன்... என் வாக்கு மெய்யாக வேண்டும்!'' என்று அவர் வேண்டிய நொடி, அந்த அற்புதம் நிகழ்ந்தது. கோவகத்து வெந்நீர் அடுப்பின் முன் ஒரு சிறுவன் தோன்றி, அவரை நோக்கி வந்தான். அவனே பின்னாளில் கோலகனாகி, பின்னர் கோரகனாகி, நாவின் வசதிப்பாட்டிற்கேற்ப 'கோரக்கன்’ என்றானான் என்பதே கோரக்கரின் பிறவிக் கதை.

இவர் வரையில் மச்சேந்திரர்தான் குரு. மச்சேந்திரரே தாய்- தந்தை எல்லாம்! மச்சேந்தி ரரும் தான் அறிந்ததை எல்லாம் கோரக்கருக்கு உபதேசிக்கிறார். போதாக்குறைக்கு போகர் வேறு. இதுவே கோரக்கரின் வரலாறு.

இன்றும் சித்தம் விரும்பும் சீலர்களுக்கு கோரக்கர் தரிசனம் தருகிறார் என்றொரு செய்தியும் உண்டு. பூனாவைச் சேர்ந்த ஓர் அன்பர் கோரக்கரை மானசீக குருவாகக் கொண்டு, அவரது ஜீவசமாதிக்குச் சென்று தவமிருந்தபோது, கோரக்கர் அவருக்குக் காட்சியளித்திட... அந்தக் காட்சியை அப்படியே ஓவியமாகவே வரைந்துவிட்டார் அந்த அன்பர்.

ஜீவசமாதிகளில் ஒடுங்குபவர்கள், விரும்பிய வேளையில் வெளியே வந்து, தங்கள் அருளாட்சியைத் தொடர்வது என்பதன் பின்னாலே பல கணக்குகள் உள்ளன. கோரக்கரும் அவர்களில் ஒருவராக இன்றும் தீவிரமாய் பிரார்த்தனை புரிகின்றவர்களுக்குக் காட்சி தருகின்றார் என்பதே ஆச்சரியமான செய்திதான். அந்த வகையில், இன்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் யோகி கைலாஷ் நாத் என்னும் யோகியாருக்கு கோரக்கர் தரிசனம் வாய்த்திருக்கிறது என்பது ஓர் ஆச்சரியமூட்டும் செய்தியாகும்.

யோகி கைலாஷ்நாத் என்பவர், 'பதஞ்சலி யோக மந்திரம் ட்ரஸ்ட்’ என்னும் ஒரு அமைப்பின் கீழ், பழநிக்கு அருகில் உள்ள கணக்கன்பட்டியில் வாழ்ந்துவருவதாகத் தெரிகிறது. சித்த வாழ்வே சுத்த வாழ்வு என்று ஒரு தூய வாழ்வை வாழ்ந்து வரும் இவருக்குப் பல அமானுஷ்ய அனுபவங்கள். அதில் ஒன்றே கோரக்கரின் தரிசன அனுபவமும்!

சேலம் மாவட்டத்துக் கொல்லிமலை ஒரு சித்தர் பூமி. இங்குள்ள ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி ஓர் அற்புதம்! இந்த நீர்வீழ்ச்சியின் நீர்ப்பாதையின் வழியில் ஓர் இடத்தில் கோரக்கர் தவமியற்றிய குகை மற்றும் மச்சேந் திரர் தவமியற்றிய குகைகள் இருப்பதாகத் தெரிகிறது.

ஒரு பௌர்ணமி நாளன்று, யோகி கைலாஷ் நாத்தும், அவரின் சீடர்கள் இருவரும் அந்தக் குகையைத் தேடி அலைந்துள்ளனர். உள்ளே அமர்ந்து குளிர்காற்றைத் தாங்கிக்கொண்டு தியானமும் புரிந்திருக்கிறார்கள்.

அப்போது உடன் வந்தவர்கள் குளிர் தாங்காது அங்கிருந்து விலகிவிட, யோகியார் மட்டும் அங்கேயே ஆறு மணி நேர அளவுக்குத் தியானத்தில் இருந்திருக்கிறார். அப்போது ஒரு சடாமுடி யோகி ஒருவரின் குரல் அவரைக் கலைத்து, ''வா, மகனே! உனக்காகத்தான் காத்திருக்கிறேன். சித்தானுக்கிரகத்தால் மட்டுமே நீ இங்கே வந்துள்ளாய் என்பதை நானறிவேன். கொடுவிலார்ப்பட்டி ஆஸ்ரமத்தில் இருக்கும் என் சீடரின் ஆசி பெற்றவன் நீ என்பதையும் அறிவேன்' என்றது.

யோகி கைலாஷ்நாத் கண் திறந்து பார்த்திட... எதிரில் கோரக்கர்!

- சிலிர்ப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism