Published:Updated:

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!

கதை கேளு... கதை கேளு!
##~##

'இப்ப நாம எந்த ஊருக்கு வந்திருக்கோம், சொல்லு?'' என்று கேட்டார் தாத்தா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 ''ஏதாவது க்ளூ கொடுங்க, தாத்தா!'' என்றான் பேரன்.

''நாகப்பட்டினத்துக் கடலில் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் செட்டிக் கப்பலுக்குத் துணையாம் செந்தில் ஆண்டவனே!’ன்னு நான் அடிக்கடி கவியரசர் கண்ணதாசன் பாட்டு ஒண்ணைப் பாடுவேனே, ஞாபகம் இருக்கா?'' என்றார் தாத்தா.

''ஹை தாத்தா... அப்ப, இது நாகப்பட்டினமா?'' என்று கேட்டான் பேரன். அவனை வாரி அணைத்துக்கொண்டார் தாத்தா.  

''திருநாகைனு திருமால் அடியார்களால் போற்றப் பட்ட ஊர், நாகப்பட்டினம். இங்கே, ஸ்ரீசௌந்தர்ராஜ பெருமாள் கோயில் ரொம்பவே அழகு! பேருக்குத் தகுந்தது மாதிரி பெருமாளும் அழகு; கோயிலும் பிரமாதம். அந்தக் கோயிலுக்குத்தான் போகப் போறோம்'' என்று சொல்லிவிட்டு, வாகனங்கள் விரையும் தார்ச்சாலையின் ஓரத்தில் பேரனின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தார் தாத்தா.

கதை கேளு... கதை கேளு!

''க்ருத யுகத்துல துருவனுக்கும் ஆதிசேஷனுக்கும், த்ரேதயா யுகத்துல ஸ்ரீபூமாதேவிக்கும், துவாபர யுகத்துல ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷிக்கும், கலியுகத்துல சாலிசுக மகாராஜாவுக்கும் நாகராஜனுக்கும் காட்சி தந்து அருளியிருக்கார், இந்தப் பெருமாள்.  

இதோ தெரியுதே ராஜகோபுரம்... சுமார் 90 அடி உயரத்துல ஏழு நிலைகளோடு இந்த ராஜ கோபுரத்தை யார் பண்ணினது தெரியுமா? டச்சுக் கம்பெனிக்காரங்ககிட்ட ஆலோசகராகவும் உயர் அதிகாரியாகவும் இருந்தவர் ஜகுலு நாயக்கர். இவர் வைஷ்ணவத்துல தீவிர ஈடுபாடு கொண்டவர். அப்ப, இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. அதனால ஜகுலு நாயக்கருக்கு எப்படியாவது கோபுரம் கட்டிடணும்னு ஆசை. அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசனையில இருந்தார்.

அந்தக் காலகட்டத்துல, டச்சுக்காரங்களோட கப்பல் போக்குவரத்துக்குக் கலங்கரைவிளக்கம் ஒண்ணு தேவைப்பட்டுச்சு. ஏற்கெனவே இருந்த கலங்கரை விளக்கம் ரொம்பச் சேதப்பட்டிருந்ததால, புதுசா ஒண்ணைக் கட்டுற பொறுப்பு ஜகுலு நாயக்கர்கிட்ட வந்துச்சு. உடனே அவருக்கு ஒரு யோசனை... ஏழு நிலை ராஜகோபுரம் கட்டி, மேலே உச்சியில் விளக்கேற்றி, அதையே கலங்கரை விளக்கமா பயன்படுத்தினா என்னன்னு தோணுச்சு. அப்படிப் பண்ணினா. கோபுரத்துக்குக் கோபுரமும் ஆச்சு; கலங்கரைவிளக்கமும் ரெடி பண்ணின மாதிரி ஆயிடுமே! இதை வெச்சுத்தான், நாகப்பட்டினம் மற்றும் சுத்தியுள்ள ஊர்க்காரங்க மத்தியில, 'பெருமாள் கோயிலுக்குக் கோபுரம் கட்டினது மாதிரி...’ங்கற உதாரண சொல்வழக்கு இன்னிக்கும் புழக்கத்துல இருக்கு!'' என்றார் தாத்தா.

''மாணிக்கவாசகர்கிட்ட, மன்னர் குதிரை வாங்கக் காசு கொடுத்தார்; அந்தக் காசுல அவர் சிவனாருக்குக் கோயில் கட்டினாரே... அதேபோல இவரும் கோபுரம் கட்டியிருக்கார். அப்படித்தானே தாத்தா?'' என்று பேரன் கேட்கவும், உற்சாகமானார் தாத்தா.

''சரியாச் சொன்னேடா கண்ணா! கப்பல்கள் கரை சேர வழிகாட்டி உதவுறது கலங்கரைவிளக்கம். அது போல, நாமெல்லாம் பிறவிக்கடல்ல நீந்திக் கரை சேர, நமக்குக் கலங்கரை விளக்கமா இருக்கிறது இந்தக் கோயில் கோபுரம்!'' என்று சொன்ன தாத்தா, ஜகுலு நாயக்கர் தம்பதியின் தீவிர பெருமாள் பக்தி மற்றும் ஆன்மிகச் சேவைகள் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.  

''ஜகுலு நாயக்கரோட மனைவி லட்சுமி அம்மாள், பெருமாளை தினமும் வழிபடுறதை வழக்கமா வெச்சிருந்தாங்க. மார்கழி மாசம் அதிகாலைல ஒருநாள் கோயிலுக்குப் போனப்ப, 'ஐயோ! இந்தக் குளிரு குளிருதே! சால்வையெல்லாம் போர்த்திக்கிட்டு இருக்கோம். அப்படியும் குளிர் தாங்க முடியலையே! பெருமாள் குளிர்ல எப்படிக் கஷ்டப்படுறாரோ!’ன்னு கவலைப்பட்டாங்களாம். அதனால, சொக்கத் தங்கத்துல உடல் கவசமும் பொன்னாபரணங்களும் செஞ்சு கொடுத்தாங்களாம், பெருமாளுக்கு. அது மட்டுமா? ஜகுலு நாயக்கர் தம்பதி இந்தக் கோயிலுக்கு நிலங்களைத் தானமா தந்திருக்காங்க. மண்டபமும் கோயில் மதிலும் கட்டுறதுக்கு பண உதவியும் பொருளுதவியும் பண்ணியிருக்காங்க. அதனால, ஜகுலு நாயக்கர் மற்றும் லட்சுமி அம்மாளோட உருவங்கள் இந்தக் கோயில்ல சிற்பங்களா செதுக்கப்பட்டிருக்கு!'' என்று விரிவாகச் சொன்னார் தாத்தா.

கதை கேளு... கதை கேளு!

''இங்கே பாரு... பெருமாள் சந்நிதிக்கு முன்னால பாதையில நமஸ்காரம் செய்வது போலவே இந்தச் சிற்ப உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கு பாரு! அதாவது, இறைவனை வணங்கும் பக்தர்களோட திருவடிகள் நம்ம மேல படணும்கற எண்ணத்தோடதான் நாயக்கர் இப்படிச் செதுக்கி வைக்கச் சொல்லியிருக்கார். அப்படின்னா அவர் எத்தனைப் பெரிய வைஷ்ணவ பக்தரா, தொண்டருக்கும் தொண்டரா இருக்கணும் பார்த்துக்கோ!'' என்ற தாத்தா, தொடர்ந்து...

''1,737-ஆம் வருஷம், தஞ்சை நாட்டு அதிகாரியான வேலூர் சேஷகிரி ராயரோட மகன் குண்டோ பாகவதர், இந்தக் கோயிலுக்கு அர்த்தமண்டபங்களை ஒட்டிய இடத்துல ஆஸ்தான மண்டபம் ஒண்ணு கட்டிக் கொடுத்தார். பச்சைக்கண்ணன், பவளவண்ணன் சந்நிதிகள், வீற்றிருந்த பெருமாள், சயன திருக்கோலப் பெருமாள், விஷ்வக்சேனர் ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைச்சுக் கொடுத்திருக்கார்'' என்று சொல்ல, பேரன் விழிகள் விரியக் கேட்டுக்கொண்டிருந்தான்.

''சௌந்தர்ய வனம், சுந்தர ஆரண்யம்னு ஒரு காலத்துல சொல்லப்பட்டு, பின்னால நாகப்பட்டி னம்னு மாறியிருக்கு. நாரதர் மூலமா இந்த வனத்தின் மேன்மையைத் தெரிஞ்சுக்கிட்ட துருவன், இங்கே வந்து கடும் தவம் இருந்தார். அவனுக்குக் காட்சி தந்த பெருமாள், வான மண்டலத்துல துருவ நட்சத்திரமா ஒளிரவும் அருள்பாலித்தார். அடுத்து... பிரம்மா, ஸ்ரீபூமாதேவி, சிவபெருமான், நாகராஜான்னு பலரும் இங்கு வந்து வழிபட்டதா ஸ்தல புராணம் சொல்லுது. பத்ரகோடி விமானத்தின் கீழே, கிழக்குப் பார்த்த முகமா, நின்ற திருக்கோலத்துல காட்சி தர்றார் பெருமாள். அவருக்கு முன்னே இருக்கிற

கதை கேளு... கதை கேளு!

துவார பாலகர்களை நாம எங்கேருந்து பார்த்தாலும், அவங்க நம்மளையே பாக்கற மாதிரி இருக்கும்... பாரேன்!'' என்றார் தாத்தா. பேரனும் பார்த்து, 'அட, ஆமா தாத்தா!’ என்று வியந்தான்.

''இந்தத் தலத்துல பெருமாளோட திருநாமம்- ஸ்ரீசௌந்தர்ராஜப் பெருமாள். தாயார்- ஸ்ரீசௌந்தர்ய வல்லித் தாயார். பெருமாளின் அழகில் சிலிர்த்துப் போன நாகராஜனான ஆதிசேஷன், இங்கே ஆராதனை செய்யும் பாக்கியத்தைப் பெற்றானாம். அதனால இந்த ஊருக்கு நாகப்பட்டினம்னு பேரு வந்துச்சு. எல்லாப் பெருமாள் கோயில்லயும் நின்ற கோலத்தில் இருக்கிற கருடாழ்வார், இங்கே அமர்ந்த நிலையில இருக்கார். எட்டாம் நூற்றாண்டில் இங்கே வந்த திருமங்கை ஆழ்வார், சௌந்தர்ராஜப் பெருமாளோட கம்பீரத்தைப் பார்த்துட்டு தன் உள்ளத்தைப் பறிகொடுத்தார். தன்னை ஒரு பெண்ணாகவே பாவிச்சு, கடவுள்மேல் காதல் கொண்டார். பெருமாளைத் தலைவனாவும் தன்னைக் காதலியாவும், தன் மனைவி குமுதவல்லி நாச்சியாரைத் தோழியாவும் உருவகப் படுத்திப் பாசுரங்கள் பாடினார்.

'பொன் இவர் மேனி மரகதத்தின்
பொங்கு இளஞ்சோதி அகலத்து ஆரம்
மின் இவர் வாயில் நல்வேதம் ஓதும்
வேதியர் வானவர் ஆவர் தோழீ
என்னையும் நோக்கி எனல்குலும் நோக்கி
ஏந்து இளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்
அச்சோ ஒருவர் அழகியவா!

அதாவது, 'என் ஆருயிர்த் தோழியே! இந்தத் திருநாகையில் எழுந்தருளியுள்ள என் தலைவனின் திருமேனி தங்கமாக அல்லவா ஜொலிக்கிறது!

கதை கேளு... கதை கேளு!

அவரது மார்பைப் பார். மரகத மணி மாதிரி இருக்கிறது. மார்பில் அணிந்துள்ள ஆரம், மின்னல் போன்று கண்கூசச் செய்கிறது. கண்களை இமைத்துப் பார்க்கிறேன்... யார் இவர்? காம வேதியரா? தேவரா? இவரை ஆலிங்கனம் செய்து வணங்கவேண்டும் போல் உள்ளது!

இவரோ ஏகபத்தினி விரதன். எனவே, அருகில் இருக்கும் ஜகன்மாதா, உலகத்தாய் என்னைக் கோபிப்பாளோ என அஞ்சுகிறேன். இப்படி ஓர் அழகனா!’ என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

நாகப்பட்டினம் தபால் நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்குப் பக்கத்துல இந்தக் கோயில் இருக்கு. ஆலிலைக் கிருஷ்ணர் வழிபாடு இங்கே பிரசித்தம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதி, இங்கே வந்து ஆலிலைக் கிருஷ்ணரை மடியில ஏந்தி, மனசாரப் பிரார்த்தனை பண்ணினா, சீக்கிரமே பிள்ளை வரம் கிடைக்கும்கறது நம்பிக்கை.

19-வது திவ்ய தேசம் இது. சோழ தேசத்துல இருக்கிற 40 திவ்ய தேசங்கள்ல ஒண்ணு.

ஸ்ரீசௌந்தர்ராஜ பெருமாளை ஒருமுறையேனும் தரிசனம் பண்ணினா போதும்... சகல ஐஸ்வரியங்களும் நமக்குக் கிடைக்குங்கறது ஐதீகம். இந்தக் கோயிலுக்கு உன்னை அழைச்சிட்டு வந்துட்டேங்கறதுல எனக்கு நிம்மதியும் சந்தோஷமும்!'' என்று தாத்தா சொல்லிவிட்டு, ஸ்ரீசௌந்தரராஜப் பெருமாளை நெடுசாண்கிடையாக விழுந்து ஸேவிக்க... பேரனும் கண்கள் மூடி நமஸ்கரித்தான்.

(நிறைவுற்றது)

படங்கள்: கே.குணசீலன்