மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப்பொக்கிஷம் - 27

ஞானப் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானப் பொக்கிஷம் ( பி.என்.பரசுராமன் )

பி.என்.பரசுராமன்

ஞானப்பொக்கிஷம் - 27
##~##

பொருள் (செல்வம்) இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை! எல்லோருக்கும் தெரிந்த வாக்குதான் இது. சரி, பொருளை மட்டும்- அதாவது, செல்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது?

பசிக்கிறது என்பதற்காகப் பத்து ரூபாய் நோட்டை கைநிறைய அள்ளி, வாய்க்குள் திணித்து விழுங்கவா முடியும? பசியாற வேண்டும் என்றால், அரிசி வாங்கிச் சமைத்து உண்டால்தான்... அல்லது, ஓட்டலுக்குப் போய் எதையாவது வாங்கி உண்டால்தான் பசி தீரும். அதுபோல, ஆடை முதலான அனைத்துத் தேவைகளுக்கும் அந்தந்த இடங்களுக்குப் (கடைகளுக்கு) போய்த்தான் வாங்கி உபயோகிக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொன்றுக்காகவும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, திரும்பி வருவதற்குள் மூச்சு முட்டுகிறது. இதற்குப் பதிலாக, நம் வீட்டின் பக்கத்திலேயே அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் படியான ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தால் எப்படி இருக்கும்? அங்கே இங்கே அலையாமல், தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கிக்கொள்ளலாம் அல்லவா?

உடலுக்குத் தேவையானவைகளுக்காக ஒரு சூப்பர் மார்க்கெட் இருப்பதைப் போல, உள்ளத்துக்குத் தேவையானவைகளுக்காக, உள்ளம் உயர்வு பெறுவதற்காக, அதாவது நாம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்குத் தேவையான எல்லாம் ஒரே நூலில் இருந்தால் எப்படி இருக்கும்?

ஞான நூல்கள் மலைபோல் குவிந்து இருக்கின்றன. அவற்றில் இருந்து எந்த நூலை எடுத்துப் படிப்பது? ஒவ்வொன்றையும் முழுமையாகப் படித்து, ஒவ்வொரு தகவலாக அறிந்து, நமக்குத் தேவையான ஒன்றை அறிவதற்குள்... ஊஹூம், சாத்தியமே இல்லை. அதற்குள் நம் வாழ்நாளே முடிந்து போய்விடும். வாழ்க்கையின் மற்ற தேவைகளுக்காகவும் நாம் உழைக்க வேண்டியிருக்கிறதே!

எனவே, எல்லா நூல்களையும் படித்து அறிவதற்கு நமக்கு நேரம் இருக்காது என்பதை உணர்ந்துதான் ராமாயணம், மகாபாரதம், மனுஸ்ம்ருதி, பர்த்ருஹரியின் வாக்கு... என ஏராளமான நூல்களில் இருந்து அற்புதமான நீதிகளையெல்லாம் தொகுத்து, ஒரே நூலாகக் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்.

அந்த நூலின் பெயர் 'நீதி சாஸ்திரம்’. எந்தவொரு நூலாக இருந்தாலும், அதை உருவாக்கியவரின் பெயர் இருக்கும். தொகுப்பு நூலாக இருந்தாலும், தொகுத்தவரின் பெயர் நூலில் இடம்பெறும். ஆனால், மிகவும் அபூர்வமான இந்த நீதி சாஸ்திரத்தில், எந்தவொரு இடத்திலும் தொகுத்தவர் தன் பெயரைக் குறிப்பிடவில்லை.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே கிரந்தத்தில் ஸ்லோகங்களும், தமிழில் உரைநடையுமாக வெளிவந்தது இந்த நூல். காலக்கிரமத்தில் இது கிடைக்காமல் போய்விட்டது. அதை உணர்ந்து ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜகத்குரு ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் அவர்களின் அருளாசியோடு வெ.கணபதி சர்மா என்பவர், கிரந்தத்தில் இருந்த ஸ்லோகங்களை சம்ஸ்கிருதத்திலும், எளிமையான தமிழில் விளக்க உரையும் எழுதி வெளியிட்டார்.

இனி... நீதி சாஸ்திர நூலில் இருந்து ஒரு சில தகவல்களை இங்கே நாம் பார்ப்போம்.

முதல் தகவலே, இந்தக் காலத்துக்கு மிகவும் அவசியமானது.

தண்டோரா போடுவது, தம்பட்டம் அடிப்பது என்பதெல்லாம் பெரும்பாலானோர்க்குப் பிடிக்கும். தன் பெருமை எதையாவது நான்கு பேரிடம் சொல்லாவிட்டால் பலருக்குத் தூக்கமே வராது. இவ்வாறு செய்வது தவறு என்கிறது நீதி சாஸ்திரம். குறிப்பாக, ஒன்பது விஷயங்களைக் கண்டிப்பாக அடுத்தவர்களிடம் சொல்லக்கூடாது என்று பட்டியலிடுகிறது இது.

இங்கே ஒரு விநோதத் தகவல்... சொல்லக்கூடாத விஷயங்கள் ஒன்பது என்பதால்தானோ என்னவோ, திருவள்ளுவர் அந்த எண்ணைப் பற்றிக்கூடச் சொல்லவில்லை. ஆம்... திருக்குறள்களில் 1, 2 முதலான எண்கள் இருக்கும். 100 இருக்கிறது; 1000 இருக்கு; கோடிகூட இருக்கிறது. ஆனால், 'ஒன்பது’ என்ற எண் எந்தவொரு குறட்பாவிலும் இடம்பெறவில்லை.

சரி, அடுத்தவர்களிடம் சொல்லக்கூடாத அந்த ஒன்பது எவை தெரியுமா? வயது, செல்வம், குடும்பத்தில் கலகம், மந்திரம், மருந்து, கணவன்- மனைவி சேர்க்கை, தானம், மானம், அவமானம் - இந்த  ஒன்பதையும் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் பாதுகாக்க வேண்டும்.

ஞானப்பொக்கிஷம் - 27

நம்மிடம் இருக்கும் இவற்றை நாம் வெளியே சொல்லிக்கொண்டு அலைவதால், பிரச்னைகள்தான் வளருமே தவிர, அமைதி கிட்டாது. ஆகவேதான் அவற்றை அடுத்தவர்களிடம் சொல்லாதே என்று எச்சரிக்கிறது இந்த நூல்.

ஆயுர்வித்தம் க்ருஹச்சித்ரம் மந்த்ர ஒளஷத ஸமாகம:
தான மானவமானாச்ச நவ கோப்தா மனீஷிபி:

                                   (நீதி சாஸ்திரம்: பாடல் எண் 19)

காலை வெயில், பிணப் புகை, தன்னைவிட வயதில் மூத்த பெண்ணின் சேர்க்கை, குட்டையாய் தேங்கிய அழுக்கு நீர், இரவில் தயிர் சாதம் உண்ணுதல் ஆகியவை ஆயுளைக் குறைக்கும்; மாலை வெயில், ஹோமப் புகை, இரவில் பால் அன்னம் ஆகியவை ஆயுளை வளர்க்கும்.

வருத்தார்க்கோ ஹோம தூமச்ச
பால ஸ்த்ரீ நிர்மலோதகம்
ராத்ரௌ க்ஷீரான்ன புக்திச்ச
ஆயுவ்ருத்திர் தினே தினே

                                  (நீதி சாஸ்திரம்: பாடல் எண் 25)

பொருமல்கள் பலவிதம். பேருந்தில், அலுவலகத்தில் எனப் பல இடங்களிலும் பலவிதமான பொருமல்களைக் கேட்டிருப்போம். ''என்னோட எதிர்த்த வூட்டுக்காரன் வாழறாம் பாரு ஒரு வாழ்க்கை, ஹா..! வாழ்க்கைன்னா அதான்டா வாழ்க்கை! ஹூம்... அவங்க அப்பன் ஏழு தலைமுறைக்கு சேர்த்து வெச்சிட்டுப் போயிட்டான். இவன் சொகுசா அனுபவிக்கிறான். கொடுத்த வெச்சவன்'' என்பது போன்று பலவற்றைக் கேட்டிருப்போம்.

இதெல்லாம் தவறு என்கிறது நீதி சாஸ்திரம். அவசரப்படாதீர்கள்... பொருமுவது மட்டும் தவறென்று சொல்லவில்லை; பொருமலுக்கு இலக்காகிறார்களே, அவர்கள் செய்வதும் தவறுதான் என்று சொல்கிறது.

எப்படி? தான் உழைத்துத் தேடிய பொருளைக் கொண்டு வாழ்பவன் உத்தமன். தகப்பன் சேர்த்த சொத்தில் வாழ்பவன் மத்திமன். உடன்பிறந்தவனின் பொருளில் வாழ்பவன் அதமன். பெண்ணின் உழைப்பிலோ, அவள் மூலமாக வரும் (வரதட்சணை முதலானவை) பொருளைக் கொண்டோ வாழ்வது மிகவும் கடையானது. அதைக் குறிப்பிடும் பாடல்...

உத்தமம் ஸ்வார்ஜிதம் வித்தம்
மத்யமம் பிதுரார்ஜிதம்
அதமம் ப்ராத்ரு வித்தம் ச
ஸ்த்ரீ வித்தம் அதமாதமம்

                     (நீதி சாஸ்திரம்: பாடல் எண் 26)

அடுத்து... பதவியிலும் யோகத்திலும் தலைசிறந்தவனான தேவேந்திரனாகவே இருந்தாலும், சில செயல்கள் அந்தத் தேவேந்திரனையும் ஏழையாக்கிவிடுமாம். அப்படி என்ன செயல்கள் அவை?

கல்லின் மேல் வைத்த சந்தனத்தைப் பூசிக்கொள்வது, பூனை தீண்டிய உணவை உண்பது, நீரில் தன் நிழலைப் பார்ப்பது ஆகிய செயல்கள், ஒருவன் எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் அவனை ஏழையாக்கிவிடுமாம். அது பற்றி எச்சரிக்கும் பாடல்...

சிலாஸ்த கந்த லேபச்ச
மார்ஜாலோச்சிஷ்ட போஜனம்
ப்ரதி பிம்பே க்ஷணம் நீரே
சக்ரஸ்யாபி  ஸ்ரியம் ஹரேத்

                  (நீதி சாஸ்திரம்: பாடல் எண் 44)

அடுத்து... இன்னொரு பாடல், வெட்கம் கூடாது என்கிறது. ''வெட்கம், மானம், சூடு, சொரணை ஏதாவது இருக்கா?'' என்று இடித்துக் கேட்பதில், 'வெட்கம்’தானே, முதலில் வருகிறது? அதுவே கூடாது என்றால் எப்படி? சந்தேகம் வருகிறதல்லவா?

இதற்கு நீதி சாஸ்திரம் விடை தருகிறது. அதாவது, பாடும்போது வெட்கம் கூடாது; வாத்தியம் வாசிக்கும்போது வெட்கம் கூடாது; நடனமாடும்போது வெட்கம் கூடாது; பகைவனுடன் போர் செய்யும்போது வெட்கம் கூடாது; சாப்பிடும்போது வெட்கம் கூடாது; ஏதாவது பிரச்னை- விவகாரம் என்று பேசும்போது வெட்கம் கூடாது; வெட்கப்படாமல் இருந்தால்தான், சுகம் கிடைக்கும். வெட்கப்பட்டால் மேற்கண்ட எதுவும் சுகமளிக்காது என்று சொல்லும் அந்தப் பாடல்...

கீதா வாத்யோ ததா ந்ருத்தே
ஸங்க்ராமே ரிபுஸங்கடே
ஆஹாரே வ்யவஹாரே ச
த்யக்த லஜ்ஜ: ஸுகீ பவேத்

                     (நீதி சாஸ்திரம்: பாடல் 61)

வேறொரு பாடலில், அஸ்வமேத யாகம் செய்யச் சொல்கிறது இந்த நூல். அளவற்ற பலனைக் கொடுக்கக்கூடியது அஸ்வமேத யாகம். அதே நேரம், அதை எல்லோராலும் செய்ய முடியாது. பிறகு, நீதி சாஸ்திரம் ஏன் அப்படிச் சொல்கிறது?

அஸ்வமேத யாகம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்தப் பலனை எளிமையாக அடைய, மாற்று வழிகளைச் சொல்கிறது நீதி சாஸ்திரம். அந்த மாற்று வழிகள்: தரித்திரனுக்குக் கொடுக்கும் தானம், பூஜையில்லாத கோயிலுக்குப் பூஜை நடக்க ஏற்பாடு செய்வது (ஒவ்வொரு சக்தி விகடன் இதழிலும் 'ஆலயம் தேடுவோம்’ தொடரைப் படிக்கிறீர்கள்தானே?!), அனாதைப் பிரேதத்துக்குப் பிரேத ஸம்ஸ்காரம் செய்வது எனும் மூன்றும் அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானமாகும் என்கிறது நீதி சாஸ்திரம். அந்தப் பாடல்...

தரித்ராய க்ருதம் தானம்
சூன்ய லிங்கஸ்ய பூஜனம்
அனாத ப்ரேத ஸம்ஸ்காரம்
அச்வமேத ஸமம் விது:

                     (நீதி சாஸ்திரம்: 81-ஆம் பாடல்)

ஞானப்பொக்கிஷம் - 27

வேறொரு பாடலில் பழங்களைப் பற்றிச் சொல்கிறது. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுக்குப் பிறகு, இலந்தைப்பழம் சாப்பிட வேண்டும். விளாம்பழத்தை எப்போதும் புசிக்கலாம். வாழைப்பழத்துக்குப் பத்தியமே கிடையாது. இந்தத் தகவலைச் சொல்லும் பாடல்...

அபுக்த்வாமலகம் பத்த்யம்
புக்த்வாது பதரீ பலம்
கபித்தம் ஸர்வதா பத்த்யம் கதலீ நகதாசன

                     (நீதி சாஸ்திரம்: பாடல் 23)

அடுத்ததாக... மிகவும் உயர்ந்ததான, செய்யமுடியாத மூன்று செயல்களைச் சொல்லி, அவற்றைவிட உயர்ந்தது இது என்று, செய்யமுடிந்த- அதே நேரம் செய்யவேண்டிய ஒரு செயலைச் சொல்கிறது நீதி சாஸ்திரம். அவை: ஆறு தடவை பூமியை வலம் வருவது; பதினாயிரம் தடவை காசி யாத்திரை செய்து, கங்கையில் நீராடுவது; பல நூறு தடவை ராமேஸ்வரத்தில் சேது ஸ்நானம் செய்வது. இப்படிச் செய்வதால் கிடைக்கும் பலன், பெற்ற தாயை மனப்பூர்வமாக ஒரு தடவை நமஸ்காரம் செய்வதாலேயே கிடைத்துவிடும் என்கிறது நீதி சாஸ்திரம். அந்தப் பாடல்...

பூப்ரதக்ஷிண ஷட்கேண
காசீ யாத்ரா யுதேன ச
ஸேது ஸ்நான சதைர்யச்ச
தத்பலம் மாத்ரு வந்தனே

                      (நீதி சாஸ்திரம்: 100-வது பாடல்)

இப்படிப்பட்ட அபூர்வமான கருத்துக்களைக் கொண்ட 219 பாடல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றை நம் உள்ளத்தில் பதித்துக் கொண்டோமானால், நாம் அனைவரும் வாழ்வில் உயர்வது நிச்சயம்.

- இன்னும் அள்ளுவோம்...