Published:Updated:

இசையால் வசமானேன்!

வித்யா சுப்ரமணியன்

இசையால் வசமானேன்!

வித்யா சுப்ரமணியன்

Published:Updated:
இசையால் வசமானேன்!
##~##

னக்கு ஆறோ ஏழோ வயசிருக்கும்போது, என்னையும் என் அக்காவையும் பாட்டு கிளாசுக்கு அனுப்பினாள் அம்மா. முதல் நாளிலேயே எனக்குப் பாட்டு வராது என்ற மகா பெரிய உண்மையை உணர்ந்துகொண்ட டீச்சர், அதை என் அம்மாவிடமும் சொல்லிவிட்டார். என்னால் நிச்சயம் ஒரு எம்.எஸ். ஆகிற மாதிரி கனவுகூடக் காண முடியாது என்பதாலேயோ என்னவோ, பாட்டு கேட்பதில் ஆர்வம் அதிகரித்தது. கேட்பதற்கு யார் தடை போட முடியும்? அப்போதெல்லாம் வெறும் ரேடியோ பெட்டிதான். சினிமா இசையிலிருந்து சாஸ்திரீய இசை வரை ஏதோ ஒரு இசை கேட்பதில் அத்தனை ஆனந்தம். இன்றுவரை நான் இனிமையாய், சந்தோஷமாய், உற்சாகமாய் இருப்பதில் இசைக்குப் பெரும் பங்கு உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அப்போதெல்லாம் ரேடியோவில் ஒரு பாட்டு அடிக்கடி கேட்டது உண்டு.

''காண வேண்டாமோ? இரு கண்ணிருக்கும்போதே
விண்ணுயர் கோபுரம் காண வேண்டாமோ?''

- கணீரென்ற அந்தக் குரல் இன்னும் என் செவிக்குள் இருக்கிறது. அது எம்.எம்.தண்டபாணி தேசிகரின் குரல் என்று என் அப்பாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். பாபநாசம் சிவனின் பாடல் அது. அந்த வயதில் அந்தப் பாடலின் முழுப் பொருளையும் புரிந்துகொள்ளும் வயது இல்லை என்றாலும், அந்தப் பாடல் என் ஆத்மாவைத் தொட்டது. கேட்கும்போதெல்லாம் என் கண்கள் கலங்கும். அதற்குப் பிறகு ஒரு முறை, என் அப்பா எங்கள் அனைவரையும் குடும்பத்தோடு சிதம்பரம் அழைத்துச் சென்றார். தில்லையின் அந்தக் கோபுரங்களைக் கண்டபோது எனக்கு எட்டு வயதிருக்கும். கோபுர அழகிலும், விதான ஓவியங்களிலும் மெய்ம்மறந்து நான் அங்கங்கு நின்றுவிட, ஒரு கட்டத்தில் என் குடும்பத்தைக் காணவில்லை. நான் மட்டும் தனியே நிற்கிறேன். என்ன செய்வதென்று புரியாமல் பயந்து, பின்பு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஒரு கோபுர வாசலில் இருந்த போலீஸ்காரரிடம் சென்று, என் அப்பாவைக் காணவில்லை என்று புகார் கொடுத்தேன். அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, என்னை உட்கார வைத்துவிட்டுப் போன அரை மணியில் என் அப்பாவுடன் திரும்பி வந்தார். 'எங்கேடி தொலைஞ்சு போனே?’ என்று அப்பா என்னை அடிப்பார் என்று பயத்துடன் அவரைப் பார்த்தேன். அவரோ சந்தோஷமும் நிம்மதியுமாய் சிரித்தபடி என்னை அழைத்துப் போனார். பிற்பாடு அதே பாட்டின் பொருள் உணர்ந்து கேட்டபோது, எனக்கு ஏற்பட்ட சிலிர்ப்பு சொல்லி மாளாது.

இசையால் வசமானேன்!

நாற்பது வயதில், அதே பாடலை சற்றே மாற்றிப் பாடி, நான் வேறு ஒரு தரிசனம் காண ஏங்க ஆரம்பித்தேன்.

'காண வேண்டாமோ? இரு கண்ணிருக்கும்போதே
விண்ணுயர் கயிலையைக் காண வேண்டாமோ?.
ஓட்டை சடலம் ஒடுங்க வெட் டெறும்பு
கூட்டிலிருந்து உயிர் ஓட்டம் பிடிக்குமுன்
காண வேண்டாமோ கயிலையைக்
காண வேண்டாமோ?’

மீண்டும் மீண்டும் உருகி உருகி எனக்குள் நான் பாட, எனக்கு கயிலாய தரிசனம் ஒரு முறையல்ல, இருமுறை கிடைத்தது.

இசையால் வசமானேன்!

சிவ புராணம் எனக்குப் பிடிக்கும். அதிலும் அதில் வரும் இந்த வரிகள் என்னை மிகவும் யோசிக்க வைக்கும்.

'புல்லாகி பூடாகி புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள்
                 கண்டின்று வீடுற்றேன்’

இசையால் வசமானேன்!

ஒவ்வொரு பிரதோஷத்திலும் இந்த வரிகளைச் சொல்லும்போது என் கண்களில் நீர் கசியும்.

ப்பர் சுவாமிகளுக்குக் கயிலாய தரிசனம் கிடைத்த விஷயம் குறித்து அனைவருக்கும் தெரியும். தான் கண்ட கயிலையை விவரித்து அவர் தனது போற்றி திருத் தாண்டகத்தில் பாடியுள்ள ஒவ்வொரு வரியின் அதிசயமும், நான் கயிலாயத்தில் உள் பரிக்ரமா செய்து கயிலையின் அருகில் செல்லும்போது உணர்ந்தேன். கண்டறியாதன கண்டேன் எனலாம். கயிலை மலையின் தெய்வீகம் மட்டுமல்லாது, அதன் பௌதீகம் குறித்தும் நுணுக்கமாகப் பாடி வைத்திருக்கிறார் அவர்.

'நெடிய விசும்போடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றி’

என்ற வரிகள் கயிலை மலையைப் புகைப்படம் எடுத்துக் காட்டுவது போல் இருக்கிறதல்லவா?

'சில்லுருவாய் சென்று திரண்டாய் போற்றி’

கயிலை மலை பலப் பல சிறு கற்கள் ஒன்று சேர்ந்து திரண்ட ஓர் அமைப்பு என்ற அதன் பௌதீக இயல்பை எப்படிக் கண்டுணர்ந்து பாடி இருக்கிறார் பாருங்கள்!

ன் இஷ்ட தெய்வம் குருவாயூரப்பன். சின்ன வயதிலிருந்து இன்று வரை தவறாது குருவாயூர் சென்று வரும் பாக்கியம் எனக்குக் கிடைத்துக்கொண்டிருக்கிறது. அந்த மண்ணில் கால் வைக்கும்போதே என் உடல் பரபரக்க ஆரம்பித்துவிடும். அந்தக் கோயில் ஒரு மிகப் பெரிய காந்தமாய் என்னை ஈர்க்கும்.

நிர்மால்ய தரிசனத்துக்கு வரிசை யில் நிற்கும்போது, பி.லீலாவின் 'ஞானப்பான’ ஒலித்துக் கொண்டிருக்கும். இன்றளவும் தவறாமல் நான் தினமும் ஒரு முறையாவது கேட்கும் பாடல் என்றால், அது 'ஞானப்பான’தான்.

பூந்தானம் இயற்றிய, முழுக்க முழுக்கத் தத்துவங்கள் பொதிந்து கிடக்கும் அந்தப் பாடல்கள் அற்புத மானவை. நமக்குள் இருக்கும் அஞ்ஞானங்களை அகற்றும் சிவ புராணத் தில் சொல்லியிருப்பதுபோல், இதிலும் பல பிறப்புகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும்.

இசையால் வசமானேன்!

'கிருஷ்ண கிருஷ்ண
      முகுந்தா ஜனார்த்தனா
கிருஷ்ண கோவிந்த
      நாராயணா ஹரே!
எத்ர ஜன்மம் மலத்தில் கழிஞ்சதும்
எத்ர ஜன்மம் ஜலத்தில் கழிஞ்சதும்
எத்ர ஜன்மம் மண்ணில் கழிஞ்சதும்
எத்ர ஜன்மம் மரங்களாய் நின்னதும்
எத்ர ஜன்மம் மிருகங்கள்
            பசுக்களாய்...’

இப்படிப் பல ஜன்மங்கள் பிறந்து, கர்மங்களைக் கழித்து, அன்னையின் கர்ப்ப பாத்திரத்தில் வந்து விழுந்தேன் என்று போகும் அந்தப் பாடல். தன் ஒரே குழந்தையின் மரணத்தை எண்ணிப் புலம்ப ஆரம்பிக்கும் பூந்தானம், பிறகு 'யாரும் கூடிப் பிறப்பதுமில்லை; கூடி மரிப்பதுமில்லை; உன்னி கிருஷ்ணன் மனசில் களிக்கும்போள் மற்றோர் உண்ணிகள் எதற்கு மக்களாய்’ என்று தானும் தெளிந்து, நமக்கும் வாழ்க்கையின் உண்மைகளைப் புரிய வைப்பதுதான் 'ஞானப்பான’. இந்தப் பாடலால் நான் கஷ்டங்களைச் சகித்துக் கொள்ள நிறையவே கற்றிருக்கிறேன்.

இசையால் வசமானேன்!

கிருஷ்ணர் மீது எழுதப்பட்ட பாடல்கள் என்பதாலேயே ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் அத்தனைப் பாடல்களுமே எனக்குப் பிடிக்கும். அதுவும் மகாராஜபுரம் சந்தானம் குரலில் 'குழலூதி மனமெல்லாம்’ கேட்கும்போது உலகமே குழலோசையில் அமிழ்ந்துவிட்டதாகத் தோன்றும்.

அதே போல் கண்ணதாசனின், 'குருவாயூருக்கு வாருங்கள், ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்’ என்ற பாடல். அப்போதெல்லாம் தினமும் ரேடியோவில் இந்தப் பாடலை ஒருமுறையாவது கேட்காவிட்டால் தலையே வெடித்துவிடும். குருவாயூரப்பனுடன் ஒரு நாள் முழுவதும் இருந்து தரிசிக்கும் உணர்வை அந்தப் பாடல் ஏற்படுத்தும் என்பதால், இன்றளவும் நான் முணுமுணுக்கும் பாடல் இது.

எந்த ஒரு பாடலும் வரிகளாய் வாசிக்கும் போது ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, அதை அழகான குரலில் இசையோடு கூடிய பாடலாய்க் கேட்கும்போது நமக்கு ஏற்படும் பரவசம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக இந்தப் பாடலைச் சொல்லலாம். அருணாசல கவிராயரின் ராம நாடகப் பாடல்களில், அனுமன் சீதையைக் கண்டு வந்து ராமனிடம் கூறும் அந்தப் பாடல் இருக்கிறதே... ஆஹா, அற்புதம்! அதுவும் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில், பாகேஸ்ரீ ராகத்தில் அந்த 'கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையைக் கண்டேன் ராகவா’ என்ற பாடலைக் கேட்க வேண்டும். நீங்களும் கேட்டுப் பாருங்கள்; மீண்டும் மீண்டும் கேட்பீர்கள். அசோகவனத்து சீதையின் சோகம் படிந்த ரூபம் நம் கண்முன்னே காட்சியாய் விரியும்.

இசையால் வசமானேன்!

நான் சந்திக்கவேண்டும் என்று மிக மிக ஆசைப்பட்டுச் சந்திக்க முடியாமல் போன மூவர்... இறையருள் ஓவியர் சில்பி, எழுத்தாளர் தி.ஜானகிராமன், பாடகர் சீர்காழி கோவிந்தராஜன். இந்த உலகிலேயே மிக மிக அபூர்வமான, வேறு எவருக்குமே கிட்டாத ஒரு வெண்கலக் குரல் உண்டென்றால், அது சீர்காழியினுடையதுதான். நான் திருவண்ணாமலை செல்லும்போதெல்லாம் உண்ணாமுலை அம்மனின் சந்நிதியில் நிற்கும்போது என் மனசுக்குள் சீர்காழியின் குரலில் ஒரு பாடல் தவறாது கேட்கும்.

'சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருந்தாள்’

குட்டியூண்டு உண்ணாமுலை அம்மனின் அழகை இந்தப் பாடலை மனசுக்குள் கேட்ட படியே தரிசனம் செய்யும்போது மெய் சிலிர்க்கும்.

ன் வாழ்வில் நான் போற்றல்களையும் கண்டி ருக்கிறேன்; தூற்றல்களையும் கண்டிருக்கிறேன். அனைத்தையும் சமமாக எண்ணுவதற்கும், நான் செய்த புண்ணியம், பாபம் அனைத்தையும் இறைமைக்கே சமர்ப்பணம் செய்வதற்கும் எனக்குக் கற்றுத் தந்த பாடல் ஒன்று இருக்கிறது. பகவத்கீதையின் மொத்த சாராம்சத்தையும் ஒரு கேப்ஸ்யூல் வடிவில் தந்திருக்கும் கண்ணதாசனின் இந்தப் பாடல் என்னை மிகவும் செம்மைப்படுத்தி வந்திருக்கிறது.

'மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, மரணத்தின் தன்மை சொல்வேன்... மானிடர் ஆன்மா மரணமெய்தாது, மறுபடி பிறந்திருக்கும், புண்ணியம் இதுவென்று உலகம் சொல்லும் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே! போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே...’ - சீர்காழியின் கணீரென்ற குரலில், 'கர்ணன்’ படத்தில் வரும் இந்தப் பாடலை முழுவதும் கேட்டுப் பாருங்கள். பகவத்கீதையையும் கண்ணதாசனையும் ஒருசேர வியப்பீர்கள்.  

சீர்காழியின் இன்னொரு பாடலும் அதி அற்புதமான பாடல். அது ஒரு பழைய திரைப்படப் பாடல். தர்பாரி கானடாவில் பாடப்பட்ட 'சிவசங்கரி சிவானந்த லஹரி...’ என்ற அந்தப் பாடலைக் கேட்கும்போது, மனசுக்குள் அமைதி படர்வதை உணர்வீர்கள்.

இசையால் வசமானேன்!

ன் சின்ன வயதில் மயிலாப்பூர் பாலஸ் ரோட்டில் (தற்போது பாபநாசம் சிவன் சாலை) செம்பை வைத்தியநாத பாகவதரின் வீட்டுக்கு என் அக்காவுடன் நிறைய முறை சென்றிருக்கிறேன். வாசல் திண்ணையில் ஒரு குன்று போல் திறந்த மேனியோடு அமர்ந்திருக்கும் அந்த உருவம் கண்டு பயந்து என் அக்காவின் பின்னே ஒளிந்து கொள்வேன். நான் போகும்போது சில நேரம் கணீர்க் குரலில் ஏதாவது பாடிக் கொண்டிருப்பார். அவரது அருமை பெருமையெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. பின்னால் தெரிய வந்தபோது அவர் இல்லை. குருவாயூரப்பனின் அருள்பெற்ற பரம பக்தரான அவர் பாடிய நாராயணீயத்தின் நூறாவது சதகமான,

'யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ§
வதிக ஸு மதுரம் முக்தி பாஜாம் நிவாஸ’

என்ற பாடல் என் கவலைகளைப் போக்கி சோர்வை நீக்கும் ஒரு மாமருந்து. அதே பாடலை கே.ஜே.யேசுதாஸும் அழகாகப் பாடி இருப்பார். பின்னாளில் யேசுதாஸை செம்பையின் வீட்டில் வைத்துச் சந்தித்துப் பேசும் பாக்கியமும் கிட்டியது. நான் வரைந்த குருவாயூரப்பன் படத்தில் அவரது கையெழுத்தைப் பெற்ற போது என் மனசே நிறைந்துவிட்டது என்று சொல்லலாம்.

நிறைவாக ஒரு மிட்டாய்ப் பாடல். இது ஒரு பழைமையான பாடல். யார் பாடியது என்று தெரியாது. நாட்டுப் பாடல் எனலாம். என் அக்கா பாடுவாள்.

'அமிர்த ரஞ்சித இங்கித மிட்டாய்
அன்னமே நீ வாங்கு மிட்டாய்
தவ முனிவர் புகழும் மிட்டாய்
தையலுக்கு ஏற்ற மிட்டாய்
சீனிப்பாகில் சிறந்த மிட்டாய்
சித்தரெல்லாம் புகழும் மிட்டாய்
நான் உனக்குச் சொன்ன மிட்டாய்
நாரி பாகமான மிட்டாய்
அப்பர் சுந்தரர் மாணிக்க வாசகர்
அழகு சம்பந்தர் போற்றும் மிட்டாய்
நான் உனக்கு சொன்ன மிட்டாய்
பெண்ணே நீயும் வாங்கு மிட்டாய்!’

இந்தப் பாடலைப் பாடி என்னை அடிக்கடி மகிழ்வித்த என் அக்கா திடீரென என்னை அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டு அந்தச் சிவ மிட்டாயின் திருவடி சேர்ந்துவிட்டாள். அவள் பாடியபோது எடுத்து வைத்த வீடியோவின் வழியே, அந்தப் பாடலை இன்றும் கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

  படங்கள்: ரா.மூகாம்பிகை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism