Published:Updated:

உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி!

வி.ராம்ஜி

உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி!

வி.ராம்ஜி

Published:Updated:
உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி!
##~##

நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அன்பர்கள் பலருக்கு, உவரி சுயம்புலிங்க ஸ்வாமிதான் கண்கண்ட தெய்வம். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த உவரி திருவிழா நாளில் வந்து கலந்துகொண்டு, உறவினர்களையும் நண்பர்களையும் பார்த்த சந்தோஷத்துடன், சுயம்புலிங்க ஸ்வாமியைக் கண்ணாரத் தரிசித்த திருப்தியுடன் திரும்பிச் செல்வார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது உவரி கிராமம். தூத்துக்குடி- கன்யாகுமரி சாலையில் (இ.சி.ஆர்), தூத்துக்குடியில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூர் திருத்தலத்தில் இருந்து சுமார் 38 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும் உள்ளது உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி கோயில்.

மிகச் சிறிய சுயம்பு மூர்த்தம். ஆனால், சக்தியும் சாந்நித்தியமும் அளவிட முடியாதது. அதனால்தான், இந்த மாவட்டங்களில் லிங்கம், லிங்கமூர்த்தி, சுயம்புலிங்கம், லிங்கப் பாண்டியன், சுயம்புமூர்த்தி என்றெல்லாம் ஸ்வாமியின் பெயரைக் குழந்தைக்குச் சூட்டி மகிழ்வது இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி!

முன்னொரு காலத்தில் பால், தயிர், மோர் ஆகியவற்றைப் பானைகளில் வைத்து ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, தலையில் சுமந்தபடி விற்று வந்தனர், யாதவப் பெருமக்கள். அவர்களில் ஒரு பாட்டியம்மாள், அந்தக் கடம்ப மரத்தைப் பார்க்கும்போதெல்லாம் ஆவேசமானாள்; அழுகையும் ஆத்திரமும் வந்தது அவளுக்கு. பின்னே... தினமும் இவள் பானைகளைச் சுமந்தபடி வரும்போதெல்லாம், அதன் வேர் தடுக்கி கீழே விழுவதும் பானைகள் உடைந்து, பாலும் மோரும் தயிருமாகக் கலந்து, மண்ணில் ஓடுவதும் வழக்கமாகி இருந்தது.

ஒருநாள்... அதே போன்று அவள் வேர் தடுக்கி விழுந்து பாலெல்லாம் பாழாகிப் போக, ரொம்பவே ஆத்திரமானாள். அந்த வேரை அப்படியே அரிவாளால் வெட்டினாள். அங்கிருந்து குபுக்கென்று ரத்தம் பீரிட்டது. அதைக் கண்டு மயங்கிச் சரிந்தாள் பாட்டியம்மாள். உடனே, ஊர்மக்கள் அனைவரும் திரண்டு வந்தார்கள். அப்போது அங்கு இருந்த ஊர்ப் பெரியவருக்கு அருள்வாக்கு வந்தது. 'இங்கே இருக்கிறது சிவபெருமான். சுயம்பு லிங்கமா இருக்கார். உடனே சந்தனத்தை அரைச்சு லிங்கத்துக்குப் பூசுங்க’ என்று அருளினார். அத்துடன், தென்னையும் பனையும் சூழ்ந்த இடத்தில் சந்தனமரத்தையும் காட்டி அருளினார். சந்தனம் பூசியதும், லிங்கத்தில் இருந்து வழிந்த ரத்தம் நின்றது.

உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி!

அடுத்து, சின்னதாகக் கூரை வேய்ந்து கோயில் கட்டி வழிபடலாயினர் மக்கள். அதையடுத்து அந்தப் பெரியவரே கோயில் மண்டபங்கள் கட்டி, சந்நிதி அமைத்து மிகப் பெரிய ஆலயமாக உருவாக்கினார் என்கிறது ஸ்தல வரலாறு.

இன்றைக்கு ஸ்ரீகன்னி விநாயகர் தனிக் கோயிலில் காட்சி தருகிறார். அதேபோல், ஸ்ரீபூரணை- புஷ்கலையுடன் ஸ்ரீவன்னியடி சாஸ்தா குடிகொண்டிருக்கிறார். அருகில் உள்ள கடலிலும் கிணற்றிலும் குளித்துவிட்டு, தரிசனம் செய்தால், சகல பிரச்னைகளும் பறந்தோடும் என்பது ஐதீகம்!

ஒரு சின்ன கூரையின் கீழ் இருந்தவருக்குச் சின்னதாகக் கோயில் அமைக்கப்பட்டு, மெள்ள மெள்ள மண்டபங்கள் அமைக்கப்பட்டு, வழிபட்டு வந்தார்கள் அல்லவா? இப்போது அந்தக் கோயிலில் மிகப் பிரமாண்டமான ராஜகோபுரம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது கோயில் நிர்வாகம். இதற்காக, அருள்மிகு உவரி சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயில் ராஜகோபுர திருப்பணிக் கமிட்டி என்ற பெயரில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி!

இந்தக் கமிட்டியின் தலைவர் ஜி.டி.முருகேசன், ''உலகெங்கிலும் உள்ள சுயம்புலிங்க ஸ்வாமியைக் குலதெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் கொண்ட அன்பர்களின் நீண்டகால கோரிக்கை இது! ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம். வருகிற 25.4.13 அன்று சித்ரா பௌர்ணமி நாளில், ராஜகோபுரப் பணிக்கான அடிக்கல்நாட்டு விழா, பூஜையுடன் துவங்குகிறது. திருப்பணிக்கு வரும் நன்கொடையைப் பொறுத்து, கோபுரப் பணிகள் நிறைவுறும் என்று நினைக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

அம்பாளுக்குப் பதிலாக ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் எனும் கிராம தேவதை குடிகொண் டிருக்கும் ஆலயம் இது. கடலில் இருந்து மணலை எடுத்து, கரையில் குவியலாக்கி, சிவனாரை வேண்டினால் நினைத்தது நடக்கும்; கேட்டது பலிக்கும் என்பது நம்பிக்கை. தங்கள் வேண்டுதலுக்குத் தக்கபடி 11 முறை துவங்கி 108 முறை வரை... மணல் பெட்டி சுமந்து பிரார்த்திக்கின்றனர். சந்தனம் பூசியதும் லிங்கத்தில் இருந்து வடிந்த ரத்தம் நின்றதால், இங்கே வரும் பக்தர்களுக்கு சிவ சந்நிதியில் சந்தனப் பிரசாதம் வழங்கப்படுகிறது. அதை உடலில் பூசிக்கொண்டு வலம் வருவது விசேஷம்!

'கோபுர தரிசனம், கோடி புண்ணியம்’ என்பார்கள், பெரியோர். நம் பாவங்களை நீக்கியருளும் ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி குடி கொண்டிருக்கும் கோயிலுக்கு, புண்ணி யங்கள் தரும் ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணியில் நாமும் பங்கேற்போம்.

லிங்கநாதனே போற்றி, போற்றி!

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism