Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்! - 76

தி. தெய்வநாயகம்

தசாவதார திருத்தலங்கள்! - 76

தி. தெய்வநாயகம்

Published:Updated:
தசாவதார திருத்தலங்கள்! - 76
##~##

லக உயிர்களுக்கெல்லாம் ஆத்மாவாகவும், அந்தராத்மாகவும் திகழும் இறைவன், தமது ஆத்மாவாக ஞானியரைக் குறிப்பிடுகிறார். ஞானியர் என்றால்..? எப்போதும் இறைவனையே நினைத்துக்கொண்டிருப்பவர்கள்; அவரது திருவடிகளைப் பற்றிக்கொண்டவர்கள்.

 ஊனின்மேய ஆவிநீஉ றக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில்மேய ஐந்தும்நீஅ வற்றுள்நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும்நீவ ளங்கடற்ப யனும்நீ

யானும்நீய தன்றியெம்பி ரானும் நீயி ராமனே! - எனப் போற்றிப் பரவுகிறார் திருமழிசை ஆழ்வார். ஊனும், அதில் உறைந்திருக்கும் உயிரும், உறக்கமும், உணர்வும், பசுவின்

பஞ்சகவ்யத்தில் துலங்கும் தூய்மையும், வானும் மண்ணும், அவை தரும் வளங்கள் யாவும் ஸ்ரீராமரே எனும் கருத்துடன் பாடுகிறார் அவர். ஆமாம்! ஆழ்வாரின் உள்ளத்தில் யாதுமாகி நிற்கிறார் ஸ்ரீராமர்.

ஞானியர் நிலை இப்படித்தான் இருக்கும். சரி, இத்தகைய மேன்மையான நிலை அவர்களுக்கு வாய்த்தது எப்படி? அதற்குக் காரணம் பகவான்தான். தன் அன்புக்கு உகந்த இந்த அடியவர்கள் தன்னைப் பார்த்தமாத்திரத்திலேயே அவர்கள் உள்ளத்தில் அவன் குடியேறிவிடுகிறான்.

முக்கூர் ஸ்வாமிகள் மிக அருமையான ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டுகிறார்:

சந்திரகாந்தானனம் ராமம்
அதீத ப்ரிய தர்சனம்
ரூபைதார்ய குணபும்ஸாம்
திருஷ்டி சித்தாப ஹாரிணம்.

திருஷ்டி என்றால் பார்வை; கண்கள். ஸ்ரீராமரைத் தரிசிக்கும் நொடியிலேயே கண்ணையும் சித்தத்தையும் கொள்ளைகொண்டு விடுகிறாராம் அவர்!

இப்படி, ஸ்ரீராமரால் ஆட்கொள்ளப்பட்ட அடிய வர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் பத்ராசலம் ஸ்ரீராமதாஸர்.

கோதாவரி நதி தீரம் குதுப்புசாகி மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலம் அது. நுங்கும் நுரையுமாக சுழித்தோடிக்கொண்டிருந்த அந்தப் பெரும் நதியை பிரயத்தனப்பட்டுக் கடந்து, கரையேறி னார் கோபண்ணா. நவாப் அதிகாரத்தின் கீழ், ஒரு தாலுகா அதிகாரியாக பணிபுரிந்து கொண்டிருந்த கோபண்ணா, பிறவிப் பெருங்கடலில் இருந்தும் விரைவில் கரையேரப் போகிறோம் என்பதை அப்போது அறிந்திருக்க மாட்டார்.

கிராமங்கள்தோறும் வரி வசூல் செய்வது அவரது பணி. இப்போதும் அதற்காகவே கோதாவரி நதிக்கரையில் உள்ள அந்த மலைப்பகுதிக்கு வந்திருந் தார். நதிக்கரையில் அவர் கால்பதித்த அந்தத் தருணம், மனத்துக்குள் ஒருவித பரவசம் நிறைவதை உணர்ந்தார். சூழலும் சட்டென்று மாறியது. வெயில் மறைந்தது; வேக வேகமாக வானில் தவழ்ந்து வந்த மேகங்கள், மலை முகட்டில் மோத... வானம் தூறல் பொழிந்தது. அதனால் எழுந்த குளிர்ச்சியும், மலைத் தாவரங்களின் பசுமை வாசத்தை சுமந்து வந்த வாடைக்காற்றும் அவரது பரவசத்தை அதிகப்படுத்தின. மெள்ள அந்த மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் கோபண்ணா.

எவ்வளவு உன்னதம் வாய்ந்த மலை அது..!

தசாவதார திருத்தலங்கள்! - 76

திரேதா யுகத்தில், வனவாசத்தின் கடைசி நாட்களில் ஸ்ரீராமரும் இளவலும், சீதாவும் இங்கே தங்கியிருந்தனராம். அந்தக் கொடுப்பினை இந்த மலைக்குக் கிடைத்தது எப்படி?

மலையரசன் மேருவும், அவன் மனைவியும் குழந்தை வரம் வேண்டித் தவம் இருந்தனர். அதன் பலனாக அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு பத்ரன் என்று பெயரிட்டு வளர்த்தனர். வளர்ந்து பெரியவனான பத்ரன், தானும் தவம் இருந்து இறையருள் பெற விரும்பினான்.

அந்தக் காலத்தில் அசுரர்கள் அட்டூழியம் அதிகம் இருந்தது. அவர்களால் தங்களின் தவத்துக்கு இடையூறு வரக்கூடாது என்பதற் காக மகான்களும் தபஸ்விகளும் மலைகளும் மரங்களுமாக உருமாறி தவத்தில் இருப்பார்களாம். பத்ரனும் ஒரு மலையாக உருமாறி, தவத்தைத் தொடர்ந்தான். அதனால் விளைந்த புண்ணியம் ஸ்ரீராமனின் திருவடி தீட்சைக்கு ஆளானான் பத்ரன்.

வனவாசம் மேற்கொண்டிருந்த ஸ்ரீராமர், தம்பி மற்றும் மனைவியுடன் இங்கு வந்தார். மலையில் கால் பதித்தார். மறுகணம் சுயரூபம் கொண்டான் பத்ரன். தனக்குப் பிறவிப்பேறு கிடைத்தாக மகிழ்ந்து, ஸ்ரீராம ஸ்வாமியை வணங்கித் தொழுதான். அத்துடன், 'தாங்கள் என்றென்றும் இங்கேயே எழுந்தருளி, உலக மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்’ எனவும் பிரார்த்தித்துக் கொண்டான். அதற்கிணங்க, தம்பி லட்சுமணனுடமும் சீதாதேவியுடனும் விக்கிரகத் திருமேனியனாக அண்ணல் எழுந்தருளியதாகவும், அந்த மலைக்கு பத்ரா சலம் என்று பெயர் வந்ததாகவும் கூறுகின்றன தலபுராணக் கதைகள். (தவமிருந்து ஸ்ரீராமரின் அருள்பெற்றது, மேரு முனிவரின் மகள் பத்ரா என்றும் சொல்வார்கள்)

இத்தகு புண்ணியம் மிகுந்த பத்ராசலம், இப்போது கோபண்ணாவையும் முழுமையாக ஆட்கொண்டுவிட்டது. ஸ்ரீராம ஸ்ரீராம என்று தாரக மந்திரத்தை உச்சரித்தபடி அந்தச் சிறிய கோயிலுக்கு வந்து சேர்ந்தார் கோபண்ணா.

அந்த மலைப்பகுதியில் வசித்த பாகாலா தாமக்கா என்ற வன மங்கையின் கனவில் ஸ்ரீராமர் காட்சி தந்து, தாம் இங்கே எழுந்தருளி யிருப்பதை உணர்த்தினாராம். காலையில் கண்விழித்து அவள் தேடிப் பார்த்தபோது, ஸ்ரீராம- லட்சுமணர்களின் சிலை கிடைத்தது. அந்த இடத்திலேயே சிறியதாக ஒரு குடில் எழுப்பி, ஸ்ரீராமரை வழிபட ஆரம்பித்தாள் அவள். நாளடைவில், அருகிலுள்ள கிராமத்த வரும் ஆலயத்துக்கு வந்து ஸ்ரீராமனை வழிபட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, அகில உலகமும் இந்தத் தலத்தின் மகிமையை அறிந்து, இங்கு வந்து வழிபட்டு வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பரம்பொருள் திருவுளம் கொண்டு, அதற்காகவே இந்த அடிய வரை இங்கே வரவழைத்தது போலும்!

கண்களில் நீர் மல்க, பத்ராசலம் ஸ்ரீராமரைத் தரிசித்தார் கோபண்ணா. ஸ்ரீராமர் பத்ராசலத் தில் குடியேறிய கதையை, அங்கே அவருக்கு அந்தச் சிறிய ஆலயம் எழும்பிய வரலாற்றை கிராமத்தவர்கள் கதைகதையாய்ச் சொல்லச் சொல்ல, சிலிர்த்துப் போனார் கோபண்ணா.

இளம் வயதிலேயே ராம பக்தியில் திளைத்திருந்த அவர்,  ஸ்ரீராமனுக்கு அங்கே பெரிதாய் ஓர் ஆலயம் எழுப்ப முடிவு செய்தார். அதுவரை தான் வசூலித்து வைத்திருந்த வரிப்பணத்தைக் கொண்டு கோயில் திருப்பணியை வெகு சீக்கிரம் ஆரம்பித்தார்.

வரிப்பணத்தைக் கொண்டு கோபண்ணா கோயில் கட்டும் தகவல் நவாபுவுக்குத் தெரிய வந்தது. கடும் கோபம் கொண்டவன், வீரர்களை அனுப்பி கோபண்ணாவைப் பிடித்து வந்து சிறைப்படுத்தினான். அங்கு அவரை சித்ரவதை செய்தார்கள்.

கொடுமை தாள முடியாத கோபண்ணா, ஒருகட்டத்தில் விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொள்ளவும் துணிந்தார். அந்தத் தருணத்தில், அவர் சார்பாக வரிப்பணம் முழுவதும் செலுத்தப்பட்டு விட்டது என்று தகவல் வந்து சேர்ந்தது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் கோபண்ணா.

ஆமாம்! ஸ்ரீராமனே ஒரு பணியாளாகச் சென்று வரிப்பணத்தைச் செலுத்தினாராம். அண்ணலின் திருவருளை அறிந்த கோபண்ணா உள்ளம் சிலிர்த்தார். தனது வாழ்க்கையை ராமனுக்கே அர்ப்பணித்தார். ஸ்ரீராமதாஸராக பரிணமித்தார். அவர் அருளிய பாடல்கள்  இன்றும் ஸ்ரீராமனின் புகழ்பாடிக் கொண்டிருக் கின்றன. ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது பத்ராசலம். பக்தர்கள் பெரும்பாலும் விஜய வாடா அல்லது ராஜமுந்திரிக்கு சென்று அங்கிருந்து (184 கி.மீ.) பத்ராசலம் பயணிக்கிறார்கள்.

இடப்புறத்தில் இளவல் நிற்க, சீதாதேவியை மடியில் அமர்த்தியபடி அருள்கிறார் பத்ரா சலம் ஸ்ரீராமர். வில்-அம்பு, சங்கு- சக்கரம் ஏந்தியபடி இவர் நான்கு கரங்களுடன் காட்சி தருவது விசேஷம். வழக்கத்துக்கு மாறாக தம்முடைய வலக்கரத்தில், சக்கரத்துக்கு பதில் சங்கு ஏந்தி காட்சி தருகிறார் இவர். உலகில் அமைதியும் சந்தோஷமும் அருளும் பொருட்டு இப்படியான விசேஷ கோலமாம்!

வைகுண்ட ஏகாதசியும், ஸ்ரீராம நவமியும் மிக விசேஷம். ஸ்ரீராமநவமி அன்று சர்வ அலங்காரத்தோடு தேர்ப்பவனி காண்கிறார் ஸ்ரீராமன். பிறகு, திருக்கல்யாண உத்ஸவமும் நடைபெறுகிறது. இந்த வைபவங்களைத் தரிசித்து, ஸ்ரீராமனை வழிபட்டு வந்தால், சகலவிதமான துன்பங்களும் தோஷங்களும் அகன்று, நம் வாழ்வே வரமாகும்!

- அவதாரம் தொடரும்...