மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விடை சொல்லும் வேதங்கள்! - 1

ஒரு கதை... ஒரு தீர்வு!அருண் சரண்யா

##~##

புராணங்கள் பூதக்கண்ணாடியைப் போன்றவை. வேதத்தின் சாரங்களை, அறநெறிகளை, அறிவுரைகளை கதைகளாலும் சம்பவங்களாலும் நமக்கு எளிதாக விளங்கவைப்பவை.

'இதை இப்படிச் செய்; அப்படிச் செய்தால் விஷயம் தோல்வியில் முடியும்’ என்று ஒற்றை வரியில் புத்தி சொன்னால், உடனே அதை ஏற்றுக்கொண்டுவிடுமா நம் மனம்?! 'அந்தக் காலத்துல எல்லாம்...’ என நம் வீட்டுப் பெரியவர்கள் ஆரம்பித்தாலே, 'போச்சுடா...’ என்று அலுத்துக்கொள்வோம். ஆனால், அவர்கள் கூற வருவதை நிதானமாகக் கூர்ந்து கவனித்தால், நமது பிரச்னைக்கான தீர்வு அதில் பொதிந்திருப்பதை அறிய முடியும். ஒரு கதை போன்று விலாவாரியாக விவரிக்கும் அவர்களது அனுபவங்களில், நமக்கான வாழ்க்கைப் பாடமும் ஒளிந்திருக்கும்.

அடம் பிடிக்கும் குழந்தைக்குக் கதை சொல்லி அன்பாகச் சோறு ஊட்டும் பாட்டிமார்களைப் போன்று, கதைகளால் நமக்கு ஞானச் சோறு ஊட்டுபவை புராணங்கள். ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி, நம் வாழ்வியல் பிரச்னைக்கான ஒரு தீர்வு ஒளிந்திருக்கும். இதோ, இதழ்தோறும் 'ஒரு கதை... ஒரு தீர்வு’ உங்களுக்காக!

ண்பன் ஒருவன் எனக்கு உண்டு. என்ன விஷயமாக இருந்தாலும், எனது அறிவுரையை ஏற்றுச் செயல்படுபவான். ஏனோ, 'புகைப்பழக்கத்தை விட்டுவிடு’ என்ற எனது புத்திமதியை மட்டும் ஏற்காமல், காலகாலமாய் நிராகரித்து வந்தான். அதற்காக அவனை நான் ஒதுக்கிவிடவில்லை. குறைகளோடு ஏற்பதுதானே நட்பு? நானும் ஏற்றுக் கொண்டேன்- அந்தக் குறையை என்றேனும் ஒருநாள் களைந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன்!

அன்று அவன் வீட்டுக்கு வரப் போகிறான் என்றதும், என் மனைவி ரூம் ஸ்பிரே அடித்து வைத்தாள்- அவன் வரும்போது கூடவே சிகரெட் புகை நாற்றமும் கூடவே வரும் என்பதால்.

வரும்போதே ஏதோ கோபத்துடன் வந்தான் நண்பன். அதே கடுப்புடன் அவன் பேச ஆரம்பித் ததும் கோபத்துக்கான காரணம் புலப்பட்டது. ''சே..! ரோட்டில் கண்ட கண்ட இடத்தில் எச்சில் துப்பும் ஆட்களைக் கண்டால், அப்படியே அந்த இடத்தி லேயே வைத்து சவுக்கால் விளாசணும்போல இருக்கு. என்ன ஒரு அநாகரிகமான பழக்கம் இது! கண்ட இடத்தில் துப்பி வைத்தால், விதவிதமாக நோய் பரவாமல் என்ன செய்யும்?'' என்றான். நான் சிரித்தேன். அவ்வளவுதான்... அவன் கோபம் எரிச்சலாய்ப் பரிணமித்தது. ''இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு?'' என்றான் முகம் இறுக.

விடை சொல்லும் வேதங்கள்! - 1

''கோவிச்சுக்காதடா..! இத்தனை நாள் என் பேச்சைக் கேக்காத நீ இன்னிலேர்ந்து சிகரெட் பழக்கத்தை விடப்போறதை நினைச்சு சந்தோஷம். அதை வெளிப்படுத்த ஒரு புன்சிரிப்பு! தப்பா..?'' என்றேன். அவன் புரியாமல் பார்த்தான்.

''என்ன பார்க்கிறே..? பொது இடத்துல எச்சில் துப்புறது தப்புன்னு தோணுற உனக்கு, பொது இடங்கள்ல புகைபிடிக்கிறதும் தப்புன்னு தோணாதா என்ன? சீக்கிரமே சிகரெட்டை முழுசா விட்டுடுவே. எனக்கு அந்த நம்பிக்கை வந்துடுச்சு!'' என்று நான் விளக்க... 'அதுமட்டும் நடக்கவே நடக்காது’ என்பது போன்று ஓர் ஏளனச் சிரிப்பு அவனிடம்.

என் மனைவி காபி கொண்டு வந்து உபசரித்தாள். வாங்கிப் பருக ஆரம்பித்தோம். ''தங்கச்சி... காபி ரொம்பப் பிரமாதம். இதுக்குப் பரிசா உனக்கு என்ன பரிசு வேணாலும் கொடுக்கலாம்மா!'' என்றான்.

''அப்படின்னா இந்த சிகரெட் பழக்கத்தை விட்டுடுங்களேன்!'' என்றாள் என் மனைவி.

அவனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. பிறகு, ஒருவாறு சமாளித்துக் கொண்டவன், தொடர்ந்து பேசினான்... ''இல்லம்மா... அது ரொம்ப நாள் பழக்கமாச்சே! சட்டுனு விட முடியலை. தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணணும்; பொட்டு நகைகூட வீட்ல கிடையாது. என்னையே எடுத்துக்கோ... என் படிப்புக்கேத்த மாதிரி நல்லதா ஒரு வேலை கிடைக்கலை! இப்படி எத்தனையோ காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு, அதைப் போக்கிக்கிறதுக்காக சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன். இப்ப, அது என்னைக் கெட்டியா பிடிச்சிக்கிட்டு விடமாட்டேங்குது! என்ன செய்ய..?'' என்றான் இயலாமையுடன்.

''சரி, சிறுசேரி பக்கம் ஒரு இண்டர்வியூக்கு போனீங்களேண்ணா, என்னாச்சு?'' எனக் கேட்டாள் என் மனைவி.

''ரெண்டு வாரத்துல ரிசல்ட் தெரியும்னு நினைக்கிறேன்'' என்றான்.

''நான் ஒண்ணு சொல்லவா... நீங்க இந்த ஸ்மோக்கிங் பழக்கத்தை உடனடியா, இந்த நிமிஷத்துலேர்ந்து நிறுத்துங்க. இந்த வேலை உங்களுக்கு நிச்சயமா கிடைக்கும்!'' என்றாள் என் மனைவி.

''அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?'' என்றான் நண்பன் புரியாமல்.

''சம்பந்தம் இருக்கோ இல்லியோ, நான் சொல்ற மாதிரி செய்து பாருங்க. ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கிறபோது மது, மாமிசம் இதையெல்லாம் கிட்டேயே சேர்க்காம விரதம் இருக்கிறதில்லையா, அது மாதிரி நினைச்சுக்கோங்க!''

''சரிம்மா... உனக்காக சிகரெட்டை தற்காலிகமா விட்டுடறேன். ஆனா, எனக்கு வேலை கிடைக்கிற வரைக்கும்தான்'' என்று கூறிச் சென்றான் நண்பன்.

எனக்கு நம்பிக்கை பிறந்தது. இனி அவன் எப்போதுமே சிகரெட் பிடிக்கப் போவதில்லை!

'அது எப்படி? இரண்டு வாரங்களுக்கு சிகரெட் பிடிக்கவில்லை என்றால், அந்தப் பழக்கம் அடியோடு நின்றுவிடுமா என்ன?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

புராணத்தில் ஒரு கதை உண்டு. அகத்திய மாமுனிவர் தென் திசை நோக்கிப் பயணப்பட்ட தருணம் அது. கிரௌஞ்சன் என்றொரு அசுரன், அவருக்கு இடைஞ்சல்

தர நினைத்தான். அவர் வரும் வழியில் மலையாகி உருமாறி நின்றான். அகத்தியரும் ரொம்பச் சிரமப்பட்டு, செங்குத்தான அந்த மலைமீது ஏறத் துவங்கினார். கிரௌஞ்சன் விடவில்லை; பெருமழை பெய்வித்தான்.

விடை சொல்லும் வேதங்கள்! - 1

அகத்தியருக்கு இது அசுரனின் வேலை என்று தெரியவந்தது. ''கிரௌஞ்சா... இனி நீ எப்போதும் இப்படி மலையாகவே இருந்து, முருகப் பெருமானால் மடிவாய்!'' என்று சபித்தார்.

இதேபோல், அகத்தியரின் வழியில் இன்னொரு மலையும் குறுக்கிட்டது. அது விந்திய மலை. இமயத்தைவிட அதிக உயரத்துடன் வளர வேண்டும் என்பது அதன் ஆசை. அதற்காகத் தவமிருந்து சிவனாரிடம் வரமும் பெற்றிருந்தது. ''நீ நினைக்கும்போதெல்லாம் சீராக வளர்ச்சி பெறுவாய்'' என்று சிவனார் வரம் தந்திருந்தார். விந்தியனும் நினைத்தபோதெல்லாம் வளர ஆரம்பித்தான். இதனால், தென்னகத்தில் இருந்து வடக்கேயும் அங்கிருந்து தெற்கேயும் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த அடியார்களும் மகான்களும் இன்னலுக்கு ஆளானார்கள். இந்த நிலையில்தான் அகத்தியர் அங்கு வந்து சேர்ந்தார்.

விநாடிக்கு விநாடி தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் விந்தியனுக்குப் பெருமை. ஆனால், அதை அகத்தியரிடம் வெளிப்படுத்த அவன் விரும்பவில்லை. தனது உயரத்தைக் குறைத்துக்கொண்டு தலை குனிந்து முனிவரை வணங்கி, வழிவிட்டான்.

கிரௌஞ்சனைச் சபித்து அடக்கியது போன்று விந்தியனை சபிக்க முகாந்திரம் இல்லை. அதேநேரம், உலகத்தாரின் இன்னலையும் களைந்தாக வேண்டும். சற்று யோசித்த அகத்தியர், விந்தியனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். ''விந்தியனே... நான் தென்திசை சென்று திரும்பும் வரை நீ இப்படியே இருக்கவேண்டும்.அது எனக்கு வசதியாக இருக்கும்'' என்று கேட்டுக்கொண்டார். விந்தியனும் மகிழ்ச்சியோடு சம்மதித்தான். 'சிறிது காலம்தானே, அகத்தியர் திரும்பியதும் மீண்டும் வளரத் துவங்கலாம்’ என்பது விந்தியனின் எண்ணம்.

குறுஞ்சிரிப்புடன் தென்னாடு சென்ற அந்தக் குறுமுனிவர், அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். விந்தியனும் வேறு வழியின்றி, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, உயரம் குறைந்த நிலையிலேயே நின்றுவிட்டான்.   

அகத்தியரின் வழியைத்தான் என் மனைவியும் பின்பற்றினாள். அணுக்கமானவர்களை அன்பால் திருத்தலாம். கிரௌஞ்சனைப் போன்று இறுமாப்பு கொண்டவன் அல்ல என் நண்பன்; அறத்துக்கு அணுக்கமான விந்தியனைப் போன்று, எங்கள் அன்புக்கு அணுக்கமானவன். ஆகவே, அவனிடம் கடிந்து சொல்வதை விடுத்து, அன்பான வேண்டுகோள் மூலம், இரண்டு வாரம் புகைப் பழக்கத்துக்கு தடை போட்டாள்.

வேலை கிடைக்கும் வரை, அதாவது குறைந்தபட்சம் இரு வார காலத்துக்குப் புகைபிடிக்காமல் இருக்கமுடியும் எனும்போது, நிரந்தரமாக அந்தப் பழக்கத்தை விட்டுவிடலாமே எனும் நம்பிக்கை பிறக்கும் என் நண்பனுக்கு. அப்புறம் என்ன? புகைபழக்கம் முற்றிலுமாக அவனிடம் இருந்து விடைபெற்றுக்கொள்ளும்!

- தீர்வுகள் தொடரும்...