Published:Updated:

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பயணம்... பரவசம்! - 7லதானந்த்

##~##

கோவர்த்தன தரிசனத்துக்குப் பிறகு கோகுலம் செல்வது என எங்களது பயணத் திட்டத்தில் முடிவாகி இருந்தது. நாங்கள் தங்கியிருந்த மதுராவில் இருந்து காலை 6 மணிக்கே கோகுலம் நோக்கி ஆட்டோவில் புறப்பட்டுவிட்டோம்.

பல நாட்களாகச் சப்பாத்தியையும் சப்ஜியையும் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு மரத்துப்போய் இருந்ததால், ஆட்டோ ஓட்டுநரிடம், 'இட்லி, வடா, தோஷா நாஸ்டா கிதர் ஹை?' என்று எங்களுக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் கேட்டோம். 'நை நை' என்று உதட்டைப் பிதுக்கியவர், அரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, யமுனை நதிப் பாலத்தைக் கடந்து, ஒரு சிறிய கிராமத்தில் ஆட்டோவை நிறுத்தினார். அதுதான் கோகுலம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆட்டோ நின்ற இடத்துக்கு அருகிலேயே சிறிய உணவகங்கள் இருக்கின்றன. அங்கிருந்த ஒரே உணவு வகை 'ஆலூ பராத்தா’தான். உருளைக்கிழங்கை மசித்து, நம்ம ஊர் புரோட்டா போலச் செய்திருந்தார்கள். ஒரு புரோட்டா சாப்பிட்டாலே போதும்... வயிறு நிரம்பிவிடும். சாப்பிட்டுவிட்டு, 50 ரூபாய் கட்டணத்தில் ஒரு கைடை அமர்த்திக்கொண்டோம். அவருக்கு இந்தி தவிர, ஆங்கிலம் உள்பட வேறு எந்த மொழியிலும் ஒரு வார்த்தையும் தெரியாமல் இருந்தது எங்களுக்கு மிகவும் சிரமமாகிவிட்டது.

எங்களுடைய கோகுல விஜயத்தின் முக்கிய நோக்கமே 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் பாடப் பெற்றதுமான ஆலயத்தை தரிசிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், கைடு எங்களை அழைத்துச் சென்றது 'புரானா கோகுல்’ மற்றும் 'நயா கோகுல்’ என்ற இரு கிருஷ்ணர் ஆலயங்களுக்குத்தான். அதன் பின்னர், திவ்ய தேசமான ஆலயம் பற்றிய விவரங்கள் நல்லவேளையாக தோழி திருமதி துளசி கோபால் மூலம் கிடைத்து, அங்கே சென்றோம். அங்கே செல்வதற்கு முன்பு, கோகுலத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்...

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

மதுராவில் இருந்து தென் கிழக்குத் திசையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது கோகுலம். நகர் பஞ்சாயத்து என்ற அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் இளமைக் காலம் இங்கு கழிந்ததாகச் சொல்வர். யசோதையால் ரகசியமாக இங்குதான் வளர்க்கப்பட்டார் ஸ்ரீகிருஷ்ணர்.

இவரைக் கொல்வதற்காகக் கம்சனால் அனுப்பப்பட்ட பூதனை என்ற அரக்கியைக் கிருஷ்ணர் கொன்றதும் கோகுலத்தில்தான். கிருஷ்ணரைக் கொல்வதற்காக ஏவப்பட்ட பூதனை, பேரழகி வடிவம் கொண்டு கோகுலத்துக்கு வந்தாள். கிருஷ்ணனை பாலூட்டி கொல்வது எனத் தீர்மானித்தாள்; தனது பாலையே விஷமாக மாற்றிக் குழந்தை கிருஷ்ணரைக் கொல்ல நினைத்தாள். ஆனால், பாலுக்குப் பதிலாகப் பூதனையின் உயிரையே உறிஞ்சிவிடுகிறார் குழந்தை கிருஷ்ணர்.

என்னதான் அரக்கியாக இருந்து அவள் கிருஷ்ணரைக் கொல்ல நினைத்தாலும், பாலூட்டிய காரணத்தால் பூதனைக்கும் சொர்க்கத்தில் இடம் கிடைத்ததாம்.

கோகுலத்தில் இருந்த ஓர் ஏரியில் 'காளிங்கன்’ என்ற நாகம் ஒன்று இருந்தது. எனவே அதை 'காளிங்கன் மடு’ என்றே அழைப்பார்கள். ஏரியில் தண்ணீர் குடிக்க வருகின்ற பசுக்களைப் பிடித்துச் சாப்பிடுவதுதான் அதனுடைய வேலை. கோபம் கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் ஏரியில் குதித்தார். காளிங்கனுடன் சண்டையிட்டார்.

அதைப் பார்த்துப் பயந்த கிருஷ்ணரின் தோழர்கள், ஊர் மக்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது, ஏரி முழுவதும் ரத்தம்! ஊர் மக்கள் அலறினர். அப்போது, மெதுவாக நீர்ப் பரப்புக்கு வந்தது காளிங்கன் என்ற அந்தப் பாம்பு. அதன் மீது நடனமாடிய படி காட்சி அளித்தார் ஸ்ரீகிருஷ்ணர். அவர் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு கோகுலத்தை விட்டு நீங்கியது அந்த நாகம். இப்படி, கிருஷ்ணரின் பால்ய லீலைகள் பலவும் நடந்த புண்ணிய பூமிதான் கோகுலம்.

நாங்கள் கோகுலத்துக்குள் அடியெடுத்து வைத்ததும்,

’பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம்
முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து கற்றுக்
குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு’

என்ற பேயாழ்வாரின் பாசுரம்தான் மனத்தில் நிழலாடியது. பூதனை அரக்கியை வதம் செய்ததையும், உரலை இழுத்துக்கொண்டு சென்று இரட்டை மருத மரங்களைச் சாய்த்ததையும், சகடாசுரனைப் பாதங்களால் உதைத்ததையும் மனக் கண்ணால் கண்டவாறே ஆலய தரிசனத்துக்கு முன்னேறினோம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

கைடின் வழிகாட்டலில் கடைத்தெருவின் நெரிசலைக் கடந்து நடந்தோம். கோயிலுக்கு அருகில் உள்ள சிறிய சந்தின் வழியே நடந்தபோது, மக்களோடு மக்களாக நிறைய பசுக்களும் காளைகளும் எங்களை உரசியபடி அமைதியாகக் கடந்து சென்றன. அங்கிருந்த வீதிகளில் பாலால் செய்த பொருட்களைப் பல கடைகளிலும் விற்கிறார்கள்.

நாங்கள் சென்ற தெருச் சந்தின் குறுக்கே இடது பக்கம் ஒரு நுழைவு வாசல் தென்பட்டது. அதன் உள்ளே நுழைந்தால், திண்ணை வைத்த வளாகம் தெரிந்தது. நடுவில் ஒரு திறந்தவெளி முற்றம். அதுதான் நந்தனின் மாளிகை என்றார்கள். முற்றத்தின் இடது புறம் சதுரமாக மணல் திட்டு. நடுவில், நமது இடுப்பு உயரத்தில் ஓர் ஆரஞ்சு வர்ண மரத் தண்டு. 'இந்த மணல்திட்டுதான் கிருஷ்ணன் விளையாடிய இடம், ஆரஞ்சு வண்ண மரத்தண்டுதான் கண்ணனை உரலோடு சேர்த்துக் கட்டிப்போட்ட இடம்’ என்று விளக்கம் தந்தார் கைடு. அங்கிருந்த சுவரில் 'நந்தன் யசோதா கஉ ஷாலா’ என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த வாசகத்தில் இடம்பெற்றிருந்த 'கஉ’ என்பதன் பொருள் என்னவென்று எங்களுக்குப் புரியவில்லை. அதுபற்றி கைடிடம் கேட்டபோது, 'பசுக்களை நாங்கள் கஉ என்றுதான் சொல்வோம்’ என்றார். அந்தச் சொல்தான் 'கோ’ என்று மருவியதாகவும் சொன்னார்.

இங்கே இருக்கும் கருவறை மண்டபத்துக்குள் நாம் நிற்கக்கூடாது; உட்கார்ந்துதான் வணங்க வேண்டும் என்றார்கள். அதற்குக் காரணம், இங்கே எல்லா இடத்திலும் ஸ்ரீகண்ணன் பரிபூரணமாக நிரம்பி இருக்கிறார் என்கிற ஐதீகமே! மேலும், ஸ்வாமியை கைகூப்பி வணங்கும்போது கைகளைத் தட்டி, 'ஆஹா... ஆஹா’ என்று கோஷமிட வேண்டுமாம். அங்கிருந்த பக்தர்கள் அவ்வாறு செய்வதைப் பார்த்த எங்களுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் கோகுலத்தில் வளர்வதாக ஒரு புள்ளி விவரம் சொன்னார் கைடு. அவை எல்லாமே கறவை நின்றுபோனவை. அவற்றை யாருக்கும் விற்பதில்லை. அவை, இங்கேயே பிறந்து வாழ்ந்து, இங்கேயே மடிந்துவிடுமாம். தவிர, இரண்டாயிரம் கைம்பெண்களும் கோகுலம் கோயில் சார்பில் அங்கே தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை எல்லாமும் கோயில் நிர்வாகம் சார்பில் தரப்படுகிறது. இந்தப் பெண்களுக்கு உற்றார், உறவினர் என யாருமே கிடையாது. கடைசி காலம் வரை அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு கோயிலைச் சார்ந்தது என்று அங்குள்ளவர்கள் சொன்னபோது, எங்கள் மனம் கனத்துப்போனது.

அடுத்ததாக, கோயிலின் முக்கியத் திருவிழா பற்றி விசாரித்தோம். ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் தொட்டில் வைபவமே இங்கு பிரசித்தம் என்றார்கள். அதன்படி, தீபாவளி நாளன்று தங்கத் தொட்டில் வைபவம் நடைபெறுமாம். அப்போது 51 கிலோ தங்கத்தினால் ஆன தொட்டிலில் ஸ்ரீகிருஷ்ணர் துயில் கொள்வார். அதேபோல், ஹோலிப் பண்டிகை அன்று வெள்ளித் தொட்டிலிலும், கோகுலாஷ்டமியில் வைரமும் முத்தும் பதித்த தொட்டிலிலும் துயில் கொள்வாராம் ஸ்ரீகிருஷ்ணர். மற்ற நாட்களில் சாதாரண மரத் தொட்டில்தான் என்றார்கள். அதேபோல், ஸ்ரீகிருஷ்ணரின் ஜன்மாஷ்டமி விழாவும் இங்கே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுமாம்.

அடுத்து, நாங்கள் சென்ற இடம் ஒரு வீடு. பலராமன் பிறந்த இடம் அதுதான்!

- யாத்திரை தொடரும்...

படங்கள்: துளசி கோபால்

அறிவோம் கோகுலம்...

மூலவர்: மனமோஹன கிருஷ்ணன். நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்: ருக்மிணி, சத்யபாமா பிராட்டியார்கள்
தீர்த்தம்: யமுனா நதி
விமானம்: ஹேமகூட விமானம்
திருக்காட்சி கண்டவர்: நந்தகோபர்