Published:Updated:

பாதாமி வனசங்கரி (கர்நாடகா)

ஸ்ரீமதி ரவிச்சந்திரன்

பாதாமி வனசங்கரி (கர்நாடகா)

ஸ்ரீமதி ரவிச்சந்திரன்

Published:Updated:
பாதாமி வனசங்கரி (கர்நாடகா)
##~##

னசங்கரி- அகிலமெங்கும் பல்வேறு ரூபங்களில் அருளும் அன்னை பராசக்தியின் ஒரு வடிவம். வனத்தைக் காப்பவள் என்பதால் அன்னைக்கு இப்படியரு திருநாமம். இந்த அன்னை அருள்வது கர்நாடகா மாநிலத்தில்! இங்குள்ள 'பாதாமி’யில் இருந்து தெற்கு நோக்கி சுமார் 5 கி.மீ. பயணித்தால் 'பாகல்கோட்’ என்ற கிராமத்தை அடையலாம். செழிப்பான வனப்பகுதியான இங்கு அமைந்துள்ளதுதான் வனசங்கரி ஆலயம் (இந்தப் பகுதி மக்கள், 'பனசங்கரி’ என்றே அழைக்கிறார்கள்). ஒருகாலத்தில் துர்காமசூரா என்ற ராட்சஸன் இப்பகுதி மக்களைத் துன்பப்படுத்தினான். அவன் செய்யும் இன்னல்களைத் தாங்கமுடியாமல் தவித்த மக்கள், தங்களை அந்த அரக்கனிடம் இருந்து காப்பாற்றுமாறு தேவியிடம் பிரார்த்தனை செய்தனர். சிவபெருமானையும் பார்வதியையும் வேண்டி யாகங்களும் நடத்தினர். அவர்களுக்கு உதவுவதற்காக அன்னை பராசக்தி யக்ஞ குண்டத்தில் இருந்து சாகம்பரியாக அவதரித்தாள். ராட்சஸனை வதம் செய்து மக்களைக் காத்தாள் என்கிறது இக்கோயில் தலவரலாறு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'திலகாரண்யம்’ என்ற பெயரில், முற்காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்ததாக ஸ்கந்த புராணத்திலும், தேவி பாகவதத்திலும் குறிப்புகள் வருகின்றன. அன்னை பார்வதிதேவியே இங்கு வன சங்கரியாகவும், சாகம்பரியாகவும் காய்- கனிகளால் ஆன ஆடையை அணிந்து குளிர்ச்சியாக வீற்றிருக்கிறாள் என்று சொல்கிறது ஸ்கந்த புராணம்.

பாதாமி வனசங்கரி (கர்நாடகா)
பாதாமி வனசங்கரி (கர்நாடகா)

இன்றும்கூட இப்பகுதி மக்கள் 108 வகையான காய்- கனிகளை காணிக்கையாக அளிக்க, அதையே அம்மனுக்கு ஆடையாக அணிவிக்கிறார்கள். அலங்காரமும் காய்கறிகளாலேயே செய்யப்படுகிறது.  

பாதாமி பகுதியில் சீதோஷ்ண நிலையைப் பாதுகாத்து எப்போதும் குளிர்ச்சியாக இருக்கவைப்பது இந்த அம்மனே என்கிறது வனசங்கரி மகாத் மியம் எனும் நூல். மகாலட்சுமி, மகாகாளி, மகாசரஸ்வதி ஆகிய மூன்று சக்திகளின் ஒருங்கிணைந்த அவதாரமே வனசங்கரி என்ற கருத்தும் இங்கே நிலவுகிறது.

சிம்மத்தின் மேல் அமர்ந்து காட்சி தரும் வனசங்கரியின் காலடியில் அவள் வதம் செய்த ராட்சஸனின் உருவமும் இருக்கிறது. வலது கரங்களில் போர்வாள், போர்க்கால மணி, திரிசூலம், கயிறு ஆகியவையும், இடது கரங்களில் மண்டை ஓடு, வெட்டப்பட்ட ராட்சஸனின் தலை, கேடயம், முரசு ஆகியவையும் ஏந்தியிருக்கிறாள் வனசங்கரி.

சாளுக்கிய ராஜவம்சத்தினரால் வழி படப்பட்ட இந்த அம்மனை கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநில பகுதியில் வசிக்கும் ஏராள மானோர் தங்களது குலதெய்வமாகக் கருதி வணங்குகிறார்கள்.

பாதாமி வனசங்கரி (கர்நாடகா)

இக்கோயில் கி.பி.17-ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று வரலாற்றுத் தகவல் சொல்லப்பட்டாலும், சரித்திர ஆராய்ச்சியாளர் களோ சாளுக்கியர்கள் இந்தப் பகுதியை ஆளத் தொடங்கிய  காலத்துக்கு முன்பே இந்தக் கோயில் இங்கே இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள். வைஷ்ணவ, ஜைன, சைவ மற்றும் சாக்த வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் தந்த சாளுக்கிய மன்னர்கள், சக்தியின் ரூபமாகத் திகழும் வன சங்கரிக்கு முதலிடம் தந்து வழிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

கோயிலில் அமைந்துள்ள ஒரு கல்வெட்டு, 'ஜகதேக மல்லா என்ற சாளுக்கிய மன்னன் கோயிலைப் புதுப்பித்து புனருத்தாரணம் செய்தான்’ என்ற செய்தியைத் தெரிவிக்கிறது. 1019-ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட கன்னட கல்வெட்டு ஒன்றும் இங்கு காணப்படுகிறது.  பீமதேவா என்ற ராஷ்ட்ரகூட அரசனின் பராக்கிரமத்தைப் போற்றும்விதமாக இந்தக் கல்வெட்டில் செய்தி காணப்படுகிறது.  

கோயிலின் பக்கவாட்டில், கல்லால் ஆன தூண் ஒன்றைக் காணமுடிகிறது. அதில், கீழிருந்து மேலாக கல்லிலேயே வடிக்கப்பட்ட அகல் விளக்குகள் உள்ளன. விழாக் காலங்களில் இதில் எண்ணெய் தீபமேற்றி அம்மனை வழிபடுகின்றனர் பக்தர்கள். இந்த தீப ஸ்தம்பம், கெட்டிமய்யா என்ற அரசனால் நிறுவப்பட்ட தாகச் சொல்கிறது கல்வெட்டுத் தகவல்.  

ஆதிகாலத்தில் திராவிட கட்டடக் கலையில் உருவான கோயில், பிற்காலத்தில் விஜயநகர மற்றும் மராட்டிய மன்னர்களால் அந்தத் தன்மையில் இருந்து மாறியது. தற்போது ஆலயம் சற்றே நவீனமயப்படுத்தப்பட்டு இருக்கிறது.    

பாதாமி வனசங்கரி (கர்நாடகா)

சுற்றிலும் மதில்சுவருடன் கூடிய இக்கோயில் முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை மற்றும் அழகிய விமானம் ஆகியவற்றுடன் பொலிவுடன் விளங்குகிறது. கோயில் அருகில் இருக்கும் ஒரு மண்டபத்தின் அமைப்பு, இஸ்லாமியர்களின் கட்டடக்கலையுடன் ஒத்துப் போகிறது. இதனை வெற்றிக் கோபுரம் என்று இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.  

கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள பிரமாண்ட திருக்குளம் 'ஹா¢த்ர தீர்த்தம்’ எனப்படுகிறது. ஹரிச்சந்திர தீர்த்தம் என்பதே இப்படி பெயர் மருவி இருக்கிறது. குளத்தின் மூன்று பக்கங்களிலும் அழகிய தூண்களுடன் அமைந்த மண்டபங்கள் உள்ளன. தெப்ப உத்ஸவம் நடக்கும்போது பொதுமக்கள் இங்கிருந்தபடி விழாவைக் கண்டுகளிப்பார்களாம்.

ஜனவரி- பிப்ரவரி மாதத்தில் இங்கே நடைபெறும் 'வனசங்கரி ஜாத்திரை’ என்ற திருவிழாவும் மிக விசேஷம்! கர்நாடக  மாநிலத்தில் அமைந்திருக்கும் ஹம்பி, பாதாமி ஆகிய கலைக் கருவூலங்களைக் காணச் செல்வோர், அருகே உள்ள வனசங்கரி அம்மனையும் தரிசித்துவிட்டு வரலாம். இயற்கை எழில்நிறைந்த பகுதி இது என்பதால், ஆன்மிக சுற்றுலாவாகவும் இது அமையும்.

படங்கள்: 'க்ளிக்’ ரவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism