Published:Updated:

பிரிந்த தம்பதியை சேர்த்து வைத்த திருவிழா!

இளமையாக்கினார் கோயில்!

##~##

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது இளமையாக்கினார் திருக்கோயில். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம்- ஸ்ரீயௌவனேஸ்வரர். இந்தத் தலத்தின் சிறப்பை, தன் பெயரிலேயே கொண்டிருக்கிறார் சிவனார்.

திருநீலகண்ட நாயனாருக்கு இளமையைத் தந்தருளிய அற்புதமான திருத்தலம் இது! வியாக்ரபாதர் வழிபட்டுப் பலன் பெற்ற புண்ணிய க்ஷேத்திரம். இந்தத் தலத்தில், வேறு எந்த ஆலயத்திலும் நடைபெறாத விழா ஒன்று வெகு பிரசித்தம். அது, இளமையாக்கிய திருவிழா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குயவரான திருநீலகண்டர், மிகுந்த சிவபக்தர். தன் கையால் திருவோடு செய்து, சிவனடியார்களுக்குத் தானமாகத் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 'நான் செய்வது தொழில் அல்ல; சிவனாருக்கும் சிவனடியார்களுக்கும் செய்யும் தொண்டு!’ என்று அகம் மகிழ்ந்து வந்தார்.

ஒருநாள், தாசி ஒருத்தியின் வீட்டுக்குச் சென்று வந்ததைக் கண்ட அவரின் மனைவி, 'இனி எம்மைத் தீண்டாதீர்கள்’ என்று சொல்லிக் குமுறினாள். இதில் வேதனையுற்ற நீலகண்டர், 'இனி எந்தப் பெண்ணையும் மனத்தாலும் தொடமாட்டேன்’ என்று சபதமிட்டார். அப்படியே காலங்கள் ஓடின. கணவன், மனைவி இருவருமே வயோதிக பருவத்தை அடைந்திருந்தனர்.

பிரிந்த தம்பதியை சேர்த்து வைத்த திருவிழா!

இந்த நிலையில், சிவனடியார் ஒருவர் தன் திருவோட்டை நீலகண்டரிடம் கொடுத்துவிட்டு, ''இது அபூர்வமான, அதிசயம் நிறைந்த திருவோடு. பிறகு வந்து இதைப் பெற்றுக்கொள்கிறேன். அதுவரை இதைப் பத்திரமாக வைத்திரு'' என்று சொல்ல... ''அப்படியே செய்கிறேன், சுவாமி'' என்று நீலகண்டர் அதை வாங்கி உள்ளே வைத்துக்கொண்டார். ஆனால், அந்தத் திருவோடு எப்படியோ மாயமாய் மறைந்து, காணாமல் போய்விட்டது.

பல நாட்கள் கழித்து அந்தச் சிவனடியார், நீலகண்டரின் வீட்டுக்கு வந்து, தான் கொடுத்து வைத்திருந்த திருவோட்டைத் தருமாறு கேட்டார்.

நீலகண்டர் உள்ளே சென்று பார்த்தால், திருவோட்டைக் காணோம். திடுக்கிட்டுப் போனார் நீலகண்டர். வந்திருப்பது சிவனாரே என்றும், அதைக் காணடிக்கச் செய்தது அவரின் திருவிளையாடலே என்பதும், பாவம்... நீலகண்டருக்குத் தெரியவில்லை. 'திருவோடு காணாமல் போய்விட்டது’ என்று அவர் வருத்தத்துடன் வந்து சிவனடியாரிடம் சொல்ல... 'இல்லை. நீதான் திருடியிருக்கிறாய்’ என்று சிவனடியார் குற்றம் சாட்ட... அங்கே ஏக களேபரமானது!

''சரி... திருவோடு உண்மையிலேயே காணாமல் போய்விட்டது என்றால், உன் பிள்ளை மீது சத்தியம் செய்து சொல்'' என்றார் சிவனடியார்.

பிரிந்த தம்பதியை சேர்த்து வைத்த திருவிழா!

''எனக்குக் குழந்தை இல்லை, சுவாமி'' என்று தெரிவித்தார் நீலகண்டர். ''அப்படியானால், உன் மனைவியின் கையைப் பிடித்துச் சொல்'' என்றார் சிவனடியார். ''நான் என் மனைவி உள்பட எந்தப் பெண்ணையும் தீண்டுவதில்லை என்று சபதம் செய்திருக்கிறேன், சுவாமி!'' என்று சொன்னார் நீலகண்டர்.

பிரிந்த தம்பதியை சேர்த்து வைத்த திருவிழா!

கடைசியில் ஒருவழியாக வாதப் பிரதிவாதங் கள் முடிந்து, சிவனடியார் ஒப்புக் கொள்ளும் வகையில், சபதம் செய்து தருவதாக திருநீல கண்டர் கூறினார். அதன்படியே அனைவருமாக குளத்தங்கரைக்குச் சென்றார்கள்.

அங்கே, ஒரு தண்டின் ஒரு முனையை நீலகண்டர் பற்றிக்கொள்ள, மறுமுனையை அவரது மனைவி பற்றிக்கொண்டார். இருவரும் நீரில் மூழ்கும் நேரத்தில் சிவனடியார் தடுத்தார். ''மனைவி கையைப் பற்றிக்கொண்டு மூழ்கச் சொன்னால், இப்படிச் செய்கிறாயே'' எனக் கேட்டார்.

அப்போதுதான் திருநீலகண்டர் நடந்ததைச் சொல்லி மனைவியை தீண்டமாட்டேன் என்ற தனது சபதத்தை விளக்கினார். நடந்ததை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தார்கள்.

பிரிந்த தம்பதியை சேர்த்து வைத்த திருவிழா!

பிறகு சிவனடியாரின் ஒப்புதலின் பேரில், தண்டினைப் பற்றிய அந்த நிலையிலேயே குளத்தில் மூழ்கி எழுந்தனர். என்ன ஆச்சரியம்..! அனைவரும் வியப்பும் அதிர்ச்சியுமாகப் பார்த்துக்கொண்டிருக்க, நீலகண்டரும் அவரின் மனைவியும் இளமையே உருவெனக் கொண்டு குளத்திலிருந்து வெளிப்பட்டிருந்தனர்.

அதன் பிறகே, சிவனடியாராக வந்திருப்பது சிவபெருமானே என அறிந்து உணர்ந்த கணவனும் மனைவியும் நெடுஞ்சாண்கிடை யாக விழுந்து அவரை நமஸ்கரித்தார்கள். அங்கே... ரிஷபாரூடராக அம்பிகையுடன் காட்சி தந்தருளினார் சிவபெருமான்.

அந்தச் சிவனார், ஸ்ரீயௌவனேஸ்வரராகக் குடிகொண்டிருக்கும் திருத்தலம் இது. கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது அழகிய திருக்குளம். நீலகண்டரும் அவர் மனைவியும் மூழ்கி இளமையாக வெளி வந்த திருக்குளம் இன்றைக்கும் உள்ளது.

ஒரு தை மாத சுவாதி மற்றும் விசாக நட்சத்திரத்தில் இந்த இனிய சம்பவம் நிகழ்ந்ததாகச் சொல்வர். எனவே, வருடந் தோறும் தை மாத சுவாதி நட்சத்திர நாளில், சிவனடியாரைப் போலவே அலங் கரிக்கப்பட்டு, அற்புதமாகக் காட்சி தருவார் சிவபெருமான். அன்றைய நாளில், நீலகண்ட ரிடம் திருவோடு தரும் சிவனடியார் போல் தரிசனம் தருவார் ஈசன்.

மறுநாள், விசாக நட்சத்திர நாளில், திருநீலகண்டருக்கு ரிஷபாரூடராகக் காட்சி தந்து முக்தி தரும் திருக்கோலத்தில், அழகே உருவெனக் கொண்டு திகழ்வார் சிவனார். இளமையாக்கினார் திருவிழா என்று நடத்தப்படும் இந்த விழாவில், சிவனாருக்கு சிறப்பு பூஜைகள் விசேஷ வழிபாடுகள் என ஆலயம் அமர்க்களப்படும்.

இந்த நாட்களில் இங்கு வந்து சிவதரிசனம் செய்து வழிபட்டால், தம்பதிக்கு இடையே இருந்த வந்த பிணக்குகள், மனக் கசப்புகள் யாவும் நீங்கும்; கருத்து வேற்றுமையுடன் இருக்கும் தம்பதி, மனம் ஒருமித்து இனிமையாக வாழ்வர் என்பது ஐதீகம்.

''கனம்புல்ல நாயனார் தன்னையே தீபமாக ஏற்றி சிவபெருமானுடன் ஜோதியாக ஐக்கியமானார். அதே போல் வியாக்ர பாதர், இங்கு வழிபட்டு சிவனாரின் திருநடனத் தைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார். வியாக்ரபாதரின் சந்நிதியும் இங்கே உண்டு. சந்தானக் குரவர்களுக்கு (மெய்கண்டார், அருள்நந்திசிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம்) சந்நிதி அமைவது அரிது. இந்தக் கோயிலில் அவர்களுக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. இங்கு வந்து வழிபட, இல்லறம் செழிக்கும்; பிரிந்த தம்பதி சேருவர்; கருத்து ஒற்றுமையுடன் வாழ்வர்'' என்கிறார் கோயிலின் குருக்கள் சுரேஷ்குமார்.

- மு.சா.கௌதமன்

படங்கள்: செ.சிவபாலன்