Published:Updated:

மதிப்புக்குரிய வாசகர்களே...

மதிப்புக்குரிய வாசகர்களே...

மதிப்புக்குரிய வாசகர்களே...

மதிப்புக்குரிய வாசகர்களே...

Published:Updated:
##~##

வணக்கம்.

 உங்கள் 'சக்தி விகடன்’ பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சிலிர்ப்பு மிக்க இந்த சாதனைப் பயணத்தை சாத்தியம் ஆக்கியது உங்களின் அன்பான ஆதரவும், அறிவுபூர்வமான வழிகாட்டுதலும்தான். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த இந்தப் பரவச தருணத்தில், எங்களின் இதயம் கனிந்த நன்றிகள் அத்தனையும் உங்களுக்கு உரித்தாகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்தி விகடனின் ஒவ்வொரு இதழையுமே தனிப்பட்ட கவனத்தோடு கொண்டு வந்தாலும், 'ஆண்டுச் சிறப்பிதழ்'களுக்கு எப்போதுமே ஒரு விசேஷ தன்மை உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மற்றுமொரு புத்துணர்வுமிக்க ஆன்மிகத் தேடலுக்கு உங்களை இந்தச் சிறப்பிதழ்கள் தயார்படுத்தவேண்டும் என்னும் நோக்கில் உள்ளடக்கத்திலும், வடிவமைப்பிலும் புதிய நகாசு சேர்த்துத் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், மிக முக்கியமான நான்கு தொடர்களை இந்த பத்தாம் ஆண்டுச் சிறப்பிதழில் தொடங்குகிறோம்.

மாமுனி நாரதரை ஒரு நையாண்டி கதாபாத்திரமாகவே பலரும் அறிந்திருப்போம். நன்மையில் முடியும் அவருடைய கலகங்களைக்கூட ஒருவித நகைச்சுவை உணர்வோடு மட்டுமே உள்வாங்கி இருப்போம். ஆனால், நாரதரின் முற்றிலும் புதியதொரு பரிமாணத்தை நமக்குப் புரிய வைத்து, நாரதர் வார்த்தை நான்கு வேத சாரம் என்று படிப்படியாக விளக்கிச் சிலிர்க்க வைக்க வருகிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.

மதிப்புக்குரிய வாசகர்களே...

ஆழமான ஆன்மிகக் கருத்துக்களையும் மிக அழகான, எளிமையான கதை மூலம் பாமரனுக்கும் புரிய வைத்த விதத்தில் நமது மகா பெரியவாளுக்கு நிகர் அவரேதான்! அந்த மகத்தான கதைகளை இதழ்தோறும் நம் சிந்தனைக்கு விருந்தாகப் படைக்கிறார் 'சொல்லின் செல்வன்’ பி.என்.பரசுராமன். காஞ்சி மடத்தின் அன்பான அருளாசிகளுடன் துவங்குகிறது இந்தப் புதிய தொடர்.

இன்றைய இளைஞர்களின் அறிவுத் திறனுக்கும் செயல் திறனுக்கும் தனிச் சான்றுகள் தேவையில்லை. அவர்களின் இன்றைய தேவை எல்லாம், உற்சாகமூட்டும் வார்த்தைகளும், தன்னம்பிக்கை ஒளியூட்டும் தகவல்களும்தான். அந்த வகையில், இளைஞர் மனத்தில் ’நாளை நமக்காக’ என நம்பிக்கை விதை ஊன்ற வருகிறார், தலைசிறந்த எழுத்தாளர், அனுபவம்மிக்க பத்திரிகையாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் திருப்பூர் கிருஷ்ணன்.

புராதன ஆலயங்களில் அற்புதமான சிற்பங்களைப் பார்த்து பிரமிக்கிறோம். அவற்றின் புராண வரலாற்றைப் படித்து ரசிக்கிறோம். ஆனால், ஒவ்வொரு சிற்பத்தின் பின்னாலும் ஒளிந்திருக்கும் நுணுக்கமான ரகசியங்களை அறிவோமா? அதை எல்லாம் தேடி எடுத்து விளக்கி, நம்மை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த வருகிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

இவை அத்தனைக்கும் மகுடம் வைத்தாற்போல், இனி ஒவ்வொரு சக்தி விகடன் இதழுடனும் உங்களைத் தேடி வரப் போகிறது 'சக்தி ஜோதிடம்’ இணைப்பு! உங்களின் எதிர்காலத்துக்கான எளிய, தெளிவான கலங்கரை விளக்கமாக இருப்பதோடு, ஜோதிடக் கலை பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல் களஞ்சியமாகவும் இது விளங்கப்போகிறது. ஆர்வமுள்ள இளையோரும் ஜோதிடம் பற்றி அறிந்து பயனுற அற்புதமான வழிகாட்டியாக இந்த இணைப்புப் புத்தகம் திகழும்.  

மதிப்புக்குரிய வாசகர்களே...

வேறென்ன... எப்போதும்போல் உங்களிடம் நாங்கள் வேண்டுவதெல்லாம் தயக்கமில்லாத உங்களின் விமரிசனத்தைதான். எண்ணம் எதுவானாலும், உடனுக்குடன் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் சித்தப்படி சக்தி விகடனை தொடர்ந்து மெருகேற்றித் தருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறோம்.

  - ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism