Published:Updated:

வெற்றியைத் தரும் விஜய வருடம்!

இனிய புத்தாண்டே வருக!சண்முக சிவாச்சார்யார்

##~##

'நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்பது முன்னோர் வாக்கு. 'அது எப்படி? எல்லா நாளும் ஒன்றுதானே? காலையில் சூரிய பகவான் உதயமாகிறார்; மாலையில் மறைகிறார். இப்படியாகத்தானே நம் ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டிருக்கிறது’ என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், ஒவ்வொரு நிமிடமும்... ஏன், ஒவ்வொரு நொடியும்கூட வேறுபட்டது என்பதே உண்மை! 'இந்த நேரத்தில், இன்ன வேலையை இப்படிச் செய்யவேண்டும்’ என நம் முன்னோர் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படிக் காலம் தவறாமல் செய்கிறபோது, அதனால் விளைகிற முழுப்பலன்களையும் நாம் அடைகிறோம்.

'பிரயோஜனம் அனுத்திஷ்ய மந்தோ அபி ந ப்ரவர்த்ததே’ என்பர். அதாவது, பிரயோஜனம் இல்லாமல், பலன் இல்லாமல், எந்தக் காரியத்தையும் முட்டாள்கூடச் செய்ய மாட்டான் என்று அர்த்தம். சென்னை, அண்ணாசாலையில் பயணம் செய்வது என்பது ஒரே செயல்தான். ஆனால், காலை நேரத்தில் பயணிப்பதற்கும், மதிய நேரத்தில் பயணிப்பதற்கும், நள்ளிரவில் பயணிப்பதற்கும் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன? அப்படித்தான் நல்ல நேரம் பார்த்துச் செய்கிற காரியமும் வேறு விதமானவை; நமக்கு வெற்றியைத் தரக்கூடியவை.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொதுவாக, நல்லநேரம் என்பது சில மணி நேரங்களிலேயே முடிந்துவிடுகிறதே என்கிற ஏக்கம் உள்ளவர்களுக்கு, நிறைய நற்காரியங்கள் செய்பவர்களுக்கு, மிகுந்த உயர்ந்த பலன்களை அடைய விரும்புபவர்களுக்கு அரியதொரு வரப்பிரசாதமாக அளிக்கப்பட்டிருப்பதுதான் ஏப்ரல் 14-ஆம் தேதி... வருடப் பிறப்பு எனும் நன்னாள்.

வெற்றியைத் தரும் விஜய வருடம்!

இந்த முறை ஏப்ரல் 14-ஆம் தேதி பிறக்க இருப்பது... விஜய வருடம். ஜயம் என்றால் வெற்றி. விஜயம் என்றால் மிகப் பிரமாண்டமான வெற்றி. இந்த விஜய வருடத்தில் எந்தச் செயலைத் துவக்கினாலும், அது ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கவல்லது என்கின்றன ஞான நூல்கள். சூரியன் உதயமானதும், இருள் விலகி எப்படி வெளிச்சம் பாய்கிறதோ, அதேபோல், விஜய வருடம் துவங்கியதும் மங்கல காரியங்களும் சத் காரியங்களும் வரிசைகட்டி வந்தே தீரும்.

ஸாவனம், சௌரம், சாந்த்ரம், நாக்ஷத்ரம், பார்ஹஸ்பத்யம் என வருடங்கள் வகுக்கப் பட்டிருக்கின்றன. அதாவது, ஒரு ராசியில் இருந்து மற்ற ராசிக்குச் செல்லும் முறையே சௌரமானம். சூரியனைக் கொண்டு அளப்பது என்பதை ரிஷிகள் நமக்கு அருளியுள்ளனர். அதன்படி, சூரியன்  உச்சமாக இருக்கும் சித்திரை மாதத்தையே வருடத்தின் ஆரம்பமாகக் கொள்ளவேண்டும் என்பதே ரிஷிகளின் கணக்கு; கட்டளை!

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லும்போது, அங்கே உள்ள சீதோஷ்ணத்துக்குத் தக்கபடி நம் வாழ்க்கை முறையையும் உணவு முறையையும் எப்படி மாற்றிக் கொள் கிறோமோ, அதுபோல சூரியன் எந்த ராசியில் அமர்கிறாரோ, அதற்குத் தக்க படி நமக்குப் பலன்களை அருள்வார்.

காலம் என்பது அற்புதமான கணக்கு. காளியின் பரிசு அல்லவா காலம்! இந்த வருடப்பிறப்பில் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போமா?

விஷ§வ புண்ய காலம்:

புத்தாண்டு பிறக்கும் முதல் நாளே, விஷ§வ புண்ணிய காலம். நம் கர்ம வினைகள் விலகி, நமக்கு அனைத்து நன்மைகளையும் கொடுக்கக்கூடிய நாள் இது. எனவே, பித்ருக்கள் எனப்படும் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் முதலானவற்றை இன்றைக்குச் சிறப்புறச் செய்துவிடவேண்டும். நம் கர்மாக்களைக் கவனித்து, கர்ம சாட்சியாகத் திகழும் சூரிய பகவானை, நம் முன்னோருக்கு அளிக்கும் தர்ப்பணம் முதலானவை மூலமாகத் திருப்தி அளித்துவிடலாம். இந்த நாளில் காலை தர்ப்பணம் செய்யாதவர்கள், அதாவது சிறுவர்கள், பெற்றோரைக் கொண்டவர்கள் அனைவரும் காலை யில் எண்ணெய் தேய்த்துக் குளித்து (இதை மங்கல ஸ்நானம் என்பார்கள்), புத்தாடை உடுத்தி, நல்ல ஆபரணங்களை அணிந்து, பெரியோரிடம் ஆசி பெற வேண்டும். வேப்பம் பூவை உணவிலோ அல்லது தனியாகவோ உட்கொள்ளுதல் அவசியம்.  

வெற்றியைத் தரும் விஜய வருடம்!

விஷ§க்கனி தரிசனம்:

புத்தாண்டின் முதல் நாள் இரவு, நம் வீட்டுப் பூஜை அறையில் மஞ்சள், குங்குமம், ஆபரணங்கள் மற்றும் மங்கல திரவியங்கள், மலர்கள், காய்- கனிகள் ஆகியவற்றை ஒரு தாம்பாளத்தில் அழகாக அடுக்கி வைத்துவிட வேண்டும். விடிந்ததும், தாம்பாளத்தில் உள்ள மங்கலப் பொருட்களைப் பார்க்கும்போது, அந்த வருடம் முழுவதும் மங்கல காரியங்கள் நிகழும்; சகல ஐஸ்வரியங்களுக்கும் குறைவிருக்காது என்பது ஐதீகம்! இதுவே விஷ§க்கனி தரிசனம்!  

விஜய வருஷ தேவதை:

ஆறு முகங்களையும், 12 கைகளையும் கொண்டவரும், புலியை வாகனமாக உடையவரும், புலித்தோலை அணிந்தவருமான 'ககன்’ என்று போற்றப்படுகிறவர்... சூரிய பகவானின் ஒரு ரூபம். விஜய வருடத்தின் தேவதை. இவரை தியானித்தல் சிறப்பு.  

ஷண்முகம் த்வாதச புஜம் வ்யாக்ர வாஹனம்
அஸ்திரம் வ்யாக்ர சர்மாம்பரதரம் வந்தே விஜய
ஸம்ஞகம் ஓம் ககாய நம:

என்று சூரியனைக் குறித்து 12 முறை வீதம், வருடம் முழுதும் தினமும் காலையில் சொல்லிவருவது சிறப்பு. கோளறு பதிகம், ஆதித்ய ஹ்ருதயம் முதலான

தங்களுக்குத் தெரிந்த தோத்திரங்களால் துதித்தும் வணங்கலாம்.

பஞ்சாங்கப் படனம்:

'ஸ்ரீ கல்யாண குணாவஹம் ரிபுஹரம்
துஸ்ஸ்வப்ன தோஷாபஹம்
கங்கா ஸ்நான விசேஷ புண்ய பலதம்
கோதான துவ்யம் ந்ரூணாம்!
ஆயுர்வ்ருத்திதம் உத்தமம் சுபகரம்
சௌபாக்ய ஸம்பத்ப்ரதம்
நாநா கர்மசு ஸாதனம் ஸமுதிதம்
பஞ்சாங்கம் ஆகர்ண்யதாம்!’

- எவரொருவர் இந்தப் புத்தாண்டு தினத்தில் பஞ்சாங்கம் வாசிப்பதைக் கேட்கிறாரோ, அவருக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்! அவர்கள் விரோதிகள் இல்லாதவர்களாக, தீயகனவுகள் ஏதும் இல்லாதவர்களாக வாழ்வர்; புனித கங்கையில் குளித்த புண்ணியத்தைப் பெறுவர்; பசுவை தானம் செய்த பலனை அடைவர்; நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெறுவர். பஞ்சாங்கம் என்பது திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம் மற்றும் கரணம் என ஐந்து அங்கங்களை, உறுப்புகளைக் கொண்டவை.

திதேஸ்ச ஸ்ரீயம் ஆப்னோதி வாராத்
             ஆயுஷ்ய வர்த்தனம்
நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத்
               ரோக நிவாரணம்
கரணாத் கார்ய சித்திஸ்ச பஞ்சாங்க
              பலம் உத்தமம்.

திதியை அறிந்தால் நல்ல செல்வமும், நாளை அறிந்தால் நல்ல ஆயுளும், நக்ஷத்ரத்தை அறிந்தால் பாவங்களின் அழிவும், யோகத்தை அறிந்தால் நோய்கள் போக்கப்படுவதும், கரணத்தை அறிந்தால் காரிய ஸித்தியும் ஏற்படுகிறது.  

வெற்றியைத் தரும் விஜய வருடம்!

வருட பலன்:

விஜயாப்தே து ராஜான: ஸதா
                  விஜய காங்க்ஷினா
அகினோ ஐந்தவ: ஸர்வே
               பஹுஸஸ்யார்க வ்ருஷ்டய:

விஜய வருடத்தில் அரசர்களுக்கு வெற்றி கிடைக்கும்; மக்களுக்கு அனைத்துவிதமான சத்காரியங்களும் நடந்தேறும்; தானியங்கள் அமோகமாக விளையும்; நல்ல மழை பெய்து, பூமித்தாய் குளிர்ந்து போவாள்; ஏரி, குளங்கள் நிரம்பி வழியும். இந்த விஜய வருடத்தின் ராஜா குரு பகவான். குரு பார்க்க கோடி தோஷங்களும் விலகும். எனவே, இந்த விஜய வருடம் நமக்கும் நம் நாட்டுக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தரும்.  

மழை பொதுவாகப் பெய்தாலும், விதைக்குத் தக்கபடிதான் வளரும் என்பது போல், காலம் கனிவானதுதான் என்றாலும், நம் கடமையை நாம் செவ்வனே செய்வது ரொம்பவே அவசியம். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நேர்மை, பேரன்பு எல்லாவற்றுக்கும் மேலாக இறை நம்பிக்கையுடன் செயல்பட்டால், நமக்கு வெற்றி நிச்சயம்!

படம்: ரா.மூகாம்பிகை