Published:Updated:

நாரதர் கதைகள் - 1

எழுத்துச் சித்தர் பாலகுமாரன்ஓவியம்: பத்மவாசன்

நாரதர் கதைகள் - 1
##~##

நாரதர் கதைகள் வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டவை அல்ல. எதனால், நாடகத்தில் நாரதர் கோமாளியானார் என்பது எனக்குப் புரியவில்லை. நாரதரது சரித்திரத்தைப் படிக்கும்போது அவர் மிகக் கூர்மையானவராக, மிகச் சிறந்த குணவானாக, மிக அமைதியானவராக, மிகுந்த ஒழுக்கச்சீலராக, தத்துவ விசாரம் உள்ளவராக, ஸ்ரீமந் நாராயணனையே சரணடைந்தவராக, சரணாகதிக்கு உதாரணமாகத் திகழ்ந்திருப்பதை உணர முடிகிறது. எதனாலோ மேடைகளில் அவர் கோணங்கியாகிவிட்டார்.

ஒரு விஷயத்தை ஒருவரிடமிருந்து பிடுங்கி இன்னொருவர் முன் வைத்து, இது சரியா என்று பார்க்கச் சொல்லி, 'இல்லை’ என்று அவரைச் சொல்ல வைத்து, இரண்டு பேருக்கும் இடையே கலகத்தை மூட்டுவதால் அவர் கோமாளியாகிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆனால், அது கலகமல்ல. 'இதுதான் சரி’ என்று ஒரு குழுவினரும், 'இல்லை, இதுவே சரி’ என்று இன்னொரு குழுவினரும் வாழ்ந்து வரும்போது, 'எது உண்மையில் சரி?’ என்று கேள்வி எழுப்புவது எப்படிக் கலகமாகும்? அது உண்மையை நோக்கிய பயணம். சத்தியத்தை நோக்கிய சாதனை. எனவே, 'நாராயண... நாராயண...’ என்று சொல்லிக்கொண்டே அவர் மேடையில் நுழைந்தால், அத்தனை பேருக்கும் சிரிப்பாகிவிடுகிறது. அப்படிச் சிரிக்கிறார்கள் என்று தெரிந்ததாலேயே அந்த நடிகர், அந்த 'நாராயண... நாராயண’ என்பதை மிகச் சரியான ஒரு நேரத்தில், மிகக் கேலியான ஒரு குரலில் வெளிப்படுத்துகிறார் என்றும் தோன்றுகிறது. உண்மையில் அந்த 'நாராயண... நாராயண’ என்ற சப்தம் வியப்பின்பால் வருவது என்பதாகவே நான் உணர்கிறேன்.

நாரதர் கதைகள் - 1

'அடடே! இதுவா உண்மை! அப்ப, இதுவா உண்மை’ என்று பல திசைகளிலும் தன் பார்வையைச் செலுத்தி, உண்மை எதுவெனக் கண்டுபிடிப்பதே அவருடைய தன்மையாக இருக்கிறது. தான் மட்டும் அறிந்த உண்மையை தனக்குள்ளே பொதித்துக் கொள்ளாது, தன் சரிதமாக அவர் வெளியிடுகிறார். தன் வாழ்க்கை யின் நோக்கமாகவும் அதைக் கொண்டுவிடுகிறார். எனவே, ஓர் உன்னத புருஷனுடைய வாழ்க்கையாகத்தான் நாரதருடைய கதைகளை நான் கவனிக்கிறேன்.

நாடகக் கொட்டகைக்குள் மக்கள் ஆணி அடித்ததுபோல் திகைப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் அவர்களைத் தளரவிடுவது நல்லது என்று ஆலோசித்து, நாடகக்காரர்கள் யாரை அனுப்புவது என்று யோசித்து, நாரதரை அனுப்புவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அந்த உச்சிக் கொண்டையும், காவி உடையும், பூணூலும், மார்பிலே தொங்குகிற வீணையுமாக அவர் உள்ளே நுழைய, கைதட்டல் ஆரவாரம் பொங்குகிறது. 'அப்பாடா, இனி அடுத்த பத்து நிமிடமும் நல்ல நகைச்சுவையாகப் போகும்’ என்று மக்கள் நினைக்கிறார்கள். அதை விரும்பவும் செய்கிறார்கள். நாடகக் காரர்களுக்கும் தங்களுடைய சாதனை பற்றிச் சந்தோஷம். பல நாடகங்களில் நாரதர் தம்பூரா வைத்துக்கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், நாரதரிடம் இருப்பது தம்பூரா அல்ல; அது மஹதி என்கிற வீணை. கந்தர்வ லோகத்து சமாசாரம்.

நாரதர் யார்? சப்த ரூபம். எது சப்தம்? உலகத்தில் ஏற்படுகிற எல்லா அசைவுகளும் சப்தத்தை உண்டு பண்ணுகின்றன. அந்த சப்தங்களில் உன்னதமானது எது? இசை. அந்த இசையில் உன்னதமானது எது? வீணை இசையே என்று சொல்லப்பட்டிருக்கிறது. சப்தத்தினுடைய இன்னொரு வடிவம் என்ன என்று யோசித்தால், பேச்சு. பேச்சின் உன்னதம் கவிதை. கவிதையின் இன்னொரு வடிவம் விவாதம். நாரதர் எல்லா இடங்களிலும் விவாதம் பேசி, மக்களுடைய திசையைத் திருப்பி, நல்லது நோக்கிப் பயணிக்கச் செய்கிறார்.

இங்கே எவர் கர்வம் கொண்டு அலைகிறாரோ, எங்கே ஆணவம் தலைவிரித்து ஆடுகிறதோ, இந்தப் பிரபஞ்சத்தில் எங்கே வீராவேசம் பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் நாரதர் போய் சமனம் செய்கின்ற பணியிலே தாமாக ஈடுபடுகிறார். இதற்கு, நாரதர் பாட்டுப் பாடவில்லை; கவிதை சொல்லவில்லை. மாறாக, பேச்சுகளில் இறங்குகிறார். 'என்ன இது?’ என்ற கேள்விதான் நாரதருடைய அடிப்படையான விஷயம். உண்மையை அறியும்பொருட்டு 'என்ன இது?’ என்று எவர் கேள்வி கேட்டாலும், அவர் நாரதருடைய தன்மையைக் கொள்கிறார். அப்படிக் கேட்கும்போது உள்ளுக்குள்ளே கலவரம் ஏற்படத்தான் செய்கிறது. அந்தக் கலவரம்தான் நல்ல விஷயத்தை வெளிக்கொண்டு வருகிறது. எது குழம்புகிறதோ, அதுவே தெளியும். எது கடையப்படுகிறதோ, அதிலிருந்தே அமிர்தம். எனவே, நாரதர் ஏற்படுத்துகிற கலவரம், அதாவது கடையல், நன்மையைக் கொண்டு வந்து சேர்க்கிறது; அமுதத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறது.

நாரதர் கதைகள் - 1

பிரம்மா- படைப்புத் தொழில். ஓர் உயிரின் ஆரம்பம்; ஓர் உருவத்தின் தொடக்கம். சிவன் அழிக்கும் தொழில். ஒரு முடிவின் ஆரம்பம்; ஒரு வாழ்க்கையின் முடிவு! எது வளர்ச்சி? விஷ்ணுவே வளர்ச்சி. வளர்வது என்பது விஷ்ணுவாகவும், படைப்பது என்பது பிரம்மாவாகவும், முடிவது என்பது சிவமாகவும் மூன்று வித சக்திகளுக்கு உருவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் சநாதன தர்மத்தின் அடிப்படை விதி.

ஆக, விவகாரங்கள் எல்லாம் வளர் வது பற்றித்தான் இருக்கின்றன. எது வாழ்க்கை என்பதைப் பற்றித்தான் இருக்கின்றன. அதைப் பற்றித் தவறாகக் கூறப்படும்போது, அது பற்றி மோசமாக பிரசாரம் செய்யப்படுகிறபோது, அது பற்றிய ஞானமில்லாமல் பேசப் படுகிறபோது, அவற்றை உடைத்து உண்மையை நிலைநாட்டுவதற்கு நல்லவர்கள் இடைவிடாது முயன்று கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு வடிவம்தான் நாரதர்.

நாரதர் என்பவர் படைப்புத் தொழிலோடும் சம்பந்தப்படவில்லை; ஒரு வாழ்க்கையின் முடிவோடும் சம்பந்தப்படவில்லை. அவர் வளர்ச்சி மீதே அக்கறை காட்டுகிறார். எது வளர்கிறதோ, அந்த வளர்ச்சியை நோக்கிச் சரணடைந்து, எது வளர்கிறது, எப்படி வளர்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார். எனவே, விஷ்ணுவின் பக்தராக, ஸ்ரீமந் நாராயணரைச் சரணாகதி அடைந்தவராக நாரதர் உருக்காட்டப்படுகிறார்.

படைப்புத் தொழிலைப் பற்றி விமர்சனம் இல்லை; முடிவு பற்றிய விமர்சனம் இல்லை. எது வளர்கிறதோ அதைப் பற்றி மட்டுமே விமர்சனம். அந்த விமர்சன சக்திதான், அந்த விமர்சன ரூபம்தான், எழுப்பப்படுகிற கேள்வி என்கிற மகோன்னதமான ஒரு மாறுதல்தான் நாரதர். இந்த விமர்சனம் இல்லாவிட்டால் வளர்ச்சி இல்லை. அல்லது, வளர்ச்சி கோணலாகப் போகும். ஆட்டு மந்தைகள் போல முன்னால் போவதன் பின்னாலேயே போகாமல், 'இது என்ன?’ என்று கேள்வி கேட்கும் நம் விமர்சன சக்தியே, நம்முடைய கேள்வி கேட்கும் திறனே நம்முள் தெளிவை உண்டாக்கும். அப்படித் தெளிந்து நடக்கிற பயணமே வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையே நாரதர் வகுத்த வழி! இந்தக் கேள்வி கேட்டலே நாரத சக்தி. இந்த விஷயம்தான் விதம் விதமான கதைகளாக்கப்பட்டிருக்கிறது.

நாரதர் கதைகள் - 1

நல்லவன், கெட்டவன் என்று பிரித்து, நல்லவனுடைய விளக்கத்தையும் கேட்டு, கெட்டவனுடைய விளக்கத்தையும் கேட்டு, எது சரியான வழி என்று தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது. எனவே, இங்கு கெக்கலித்துச் சிரிப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, கூர்த்த புத்தியும், விமர்சன புத்தியும் உள்ளவர்களுக்கே நாரதர் கதை புரியும்.

வழக்கம் போலல்லாது, பாலகுமாரன் மிக வித்தியாசமான ஒரு நகைச்சுவைக் கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டான் என்று நீங்கள் நினைத்துக்கொள்வீராயின் அது மிகப் பெரிய தவறு. முன்னைவிட இந்த நாரதர் கதைகள் மிகக் கூர்மையாகவும் கனமாகவும் இருக்கும்.

ந்தப் பிரபஞ்சம் பூமியை மட்டும் கொண்டதல்ல; வெவ்வேறு வடிவான உருவங்கள் வாழ்கிற பல்வேறு உலகங்கள் இருக்கின்றன என்பது சநாதன தர்மத்தின் கருத்து. மிகச் சமீபமாக, பூமியில் ஒரு பெரிய நட்சத்திரக் கல் வந்து விழுந்தபோது, அதை இடைமறித்து ஒரு விண்கலம் தாக்கிச் சிதறடித்து, பூமிக்கு அப்பால் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, பல்வேறு உலகக் கதைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அப்படிப்பட்ட உலகங்களில் ஒன்று கந்தர்வ உலகம். எந்த மாதிரியான ஆன்மாக்கள் கந்தர்வ உலகத்தில் ஜீவிக்கின்றன? இசையை பக்தியின் வெளிப்பாடாக, குழல், யாழ் போன்றவற்றை நன்கு பயின்று மீட்டி, அதன் மூலம் இந்தப் பிரபஞ்ச சக்தியை, இறைவனை வணங்குகிற ஆன்மாக்கள் அங்கு வாழ்கின்றன என்று சொல்லப்படுகிறது. அதாவது, புனிதப்பட்ட ஆன்மாக்கள் பசி, தூக்கமில்லாது, வேறு உடல் உபாதைகள் இல்லாது, சங்கீதமே வாழ்வாகக் கொண்டு கந்தர்வ உலகத்தில் வாழ்கின்றன. ஆனால் மன மயக்கங்கள், மதி சறுக்கல்கள் அங்கேயும் உண்டு.

உபன் என்ற கந்தர்வனுக்கு ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுக்கு உபவருக்கன் என்று பெயரிட்டார்கள். உபன் இசையையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவன். இறைவனை இசையால் வழிபடுவதையே எந்நேரமும் செய்துகொண்டிருந்தவன். தன் மகனை நன்கு பயிற்றுவித்தான். தன்னிலிருந்து பிரிந்த, கிளர்ந்த அந்தச் சக்தியை மிகவும் பாராட்டி வளர்த்தான். அவனுக்கு, தான் வாசிக்கிற மஹதி என்ற யாழை வாசிக்கக் கற்றுக் கொடுத்தான். உபவருக்கன் தந்தையை மிஞ்சிய சீடனாக அந்த வீணையைத் திறம்பட வாசிக்கக் கற்றுக்கொண்டான். எல்லா உலகத்தாரும் உபவருக்கனை அழைத்து, அவனை மஹதி வாசிக்கச் சொல்லிக் கேட்பது வழக்கம். நல்ல விழாக்கள் எதுவும் மஹதி வீணை இல்லாது, அதை வாசிக்கின்ற உபவருக்கன் இல்லாது நடைபெறுவதில்லை.

தேவர் உலகில் ஒருமுறை, பிரம்மசிரேஷ்டர் என்கிற முனிவர் மிகப் பெரிய யாகங்கள் செய்தபோது, அங்கே வீணை வாசிக்க உபவருக்கன் அழைக்கப்பட்டான். உபவருக்கனும் மனம் ஒருமித்து சாம கானம் வாசித்து, அங்குள்ளோரைத் தன் வயப்படுத்தினான்.

அந்த இடத்தில் இசை ஞானமுள்ள அந்தணக் கன்னிகை ஒருத்தியும் இருந்தாள். உபவருக்கனின் வீணை இசையில் சொக்கிப் போனாள். அதன் சுரத்தோடு அவள் மனமும் கலந்தது. தான் அவனுக்கு உரியவளாக வேண்டும் என்றும், அவனை போஷிக்க வேண்டும் என்றும், அவனை இன்னும் சிறப்பானவனாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும் அவன் மீது காதல் கொண்டாள். அவன் கவனத்தை ஈர்க்கும்படியாக நெகிழ்ந்தும், அசைந்தும், கண்களால் அழைத்தும், பார்க்கும்போது உதடு பிரித்துச் சிரித்தும், வெட்கப்பட்டும், ஆர்வப்பட்டும் பல்வேறு பாவனைகள் காண்பிக்க, உபவருக்கன் மனம் சிதறினான். பாடலில் இருந்த கவனம் நகர்ந்து போயிற்று. சாம கானம் வாசிப்பதில் பிழை ஏற்பட்டது. மிகப் பெரிய சிரேஷ்டர்கள் அமர்ந்திருந்த அந்தச் சபையில், சாம கானத்தை கரதலப் பாடமாகக் கற்ற பெரியவர்கள் கூடியிருந்த அந்த இடத்தில், பிசிறு பிசிறாக சாம கானம் வாசிக்கப்பட்டதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியுற்றார்கள்.

ஏன் தவறு செய்கிறான், எதனால் பிழை செய்கிறான் என்று கவலைப்பட்டார்கள். அவன் கவனம் ஒரு கன்னிகையிடத்தில் சிதறியிருப்பதைக் கண்டு வருத்தப்பட்டார்கள். கவனம் சிதறாமல் இருந்தால் மிக அற்புதமான ஒரு சாம கானம் வெளிப்பட்டிராதா, என்ன வாசிக்கிறோம் என்றுகூடத் தெரியாது இப்படிக் கவனம் சிதறலாமா, இது நல்லதா, இது பலருக்குத் துன்பம் நேர்விக்குமே என்று கலங்கினார்கள்.

நாரதர் கதைகள் - 1

யாகம் செய்த பிரம்மசிரேஷ்டர் கோபம் அடைந்தார். சபை சலசலப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வாசிப்பு தவறாக இருப்பதால் சபை தனது மௌனத்தை இழந்துவிட்டது என்பதைப் புரிந்து ஆவேசப் பட்டார். ''கந்தர்வனே, போதும் நிறுத்து!'' என்று கட்டளையிட்டார். வீணை இசை நின்றது.

''என்ன செய்கிறோம் என்று தெரியாமல், ஓர் உன்னதமான காரியம் செய்கிறபோது மனம் பிழன்று மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தில் ஈடுபடுகிறாய் என்றால், நீ இந்த மஹதி வீணையை வாசிக்கத் தகுதி இல்லாதவன். இந்த சாம கானம் இசைக்க யோக்கியதை இல்லாதவன். எனவே, யோக்கியதை இல்லாமல் ஒரு பெரிய சபையில் இந்த வித்தையை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதால், நீ கந்தர்வனாக இனி இருக்க வேண்டாம். அது உனக்குத் தகாது. எனவே, நீ பூமியில் பிற!'' என்று சாபமிட்டார்.

உபவருக்கன் தன் தவற்றை உணர்ந்தான். கந்தர்வன் என்ற இடத்திலிருந்து நகர்ந்து, ஒரு மானுடனாக பூமியில் வந்து பிறந்தான். அவனது வெகு இளம் வயதிலேயே அவனின் தந்தை இறந்தார். தாய் பல்வேறு வீடுகளில் வேலை செய்து மகனை வளர்த்து வந்தாள்.

சாம கானம் என்ற உன்னதத்தை, அதைத் தெரிந்த சபைக்கு நடுவே தவறாக வாசித்து தன்னுடைய தகுதியை இழந்தது மட்டுமல்ல; கந்தர்வனாக இருந்தபோது கிடைத்த ஓர் அற்புதமான தந்தையின் சிநேகமும் பூலோகத்தில் இருக்கும்போது கிடைக்கவில்லை. தந்தையின் அணைப்பும் அந்தச் சாபத்தில் அடித்துக்கொண்டு போயிற்று.

உபவருக்கன் தன் விதவைத் தாயுடன் ஓர் அந்தணர் வீட்டில் வசித்து வந்தான். அவள், அந்த அந்தணர் வீட்டில் வேலை செய்து, தன்னோடே தன்னுடைய பிள்ளையை வைத்துக் கொண்டாள். ஒரு மழைக்காலத்தில் அந்த அந்தணர் வீட்டுக்கு நாராயணனுடைய அடியார்கள் வந்தார்கள். பரத கண்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு கோயில்களைத் தரிசிக்கவும், நாராயணனின் புகழ் பாடவும் அவர்கள் ஒரு கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். அந்த மழைக்காலம் முழுவதும் அவர்கள் அந்த அந்தணர் வீட்டில் தங்கி, நாராயணனைப் பற்றி விதம்விதமான பாடல்களைப் பாடினார்கள். இசை என்ற ஓர் அற்புதமான வித்தை, அவனுக்குக் கந்தர்வ உலகத்தில் கிடைத்திருந்ததால், அந்த இசையால் அவன் பல பேரை மகிழ்வித்திருந்ததால், மானுடனாகப் பிறந்த உபவருக்கனுக்கும் அந்த இசை ஞானம் இருந்தது. அந்த அடியவர்கள் பாடும்போது, அவனும் தன்னுடைய இனிய குரலில் சேர்ந்து பாடினான். அவர்களோடு அமர்ந்து அந்தப் பாடல்களை எழுதிக்கொண்டு, மனனம் செய்தான். அவர்கள் பாட மறந்ததை எடுத்துக் கொடுத்தான்.

ஒரு சிறுவனின் புத்திசாலித்தனத்தையும், இசை மீதுள்ள நாட்டத்தையும், இசையின்பால் அவன் கொண்டிருந்த ஞானத்தையும் அறிந்து அந்த அடியவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவனுக்கு நாராயண மந்திரம் உபதேசித்தார்கள்.

நாரதர் கதைகள் - 1

''இது மிக உயர்ந்தது. இசையைக் காட்டிலும் உயர்ந்தது. எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தது. பேச்சைக் காட்டிலும் இந்த நாராயண மந்திரம் உயர்ந்தது. நமக்குப் பேச்சுத் திறன் இருக்கிறதே, அது கவிதை எழுத மட்டுமல்ல, பாட மட்டுமல்ல, ஆட மட்டுமல்ல, நாடகம் போட மட்டுமல்ல, இந்த மாதிரியான மந்திரங்களைச்சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே, இடையறாது, இடையறாது நாராயணன் பெயரைச் சொல். நாராயணன் உனக்கு நேரே வருவார். நீ வேண்டுகின்ற வரங்களைத் தருவார்'' என்று சொன்னார்கள். அந்தச் சிறுவன் மனமகிழ்ந்தான். அவர்களை வணங்கி, வழியனுப்பி வைத்தான்.

அவன் தாயார் இறந்தபோது என்ன செய்வது என்று தெரியாது தவித்தான். இசையா, கவிதையா, எது முக்கியம்? இரண்டும் இல்லை, நாராயண மந்திரமே முக்கியம் என்று தெளிந்தான். வனத்திற்குப் போனான். இடையறாது நாராயண மந்திரம் சொன்னான். தனக்குள்ளே அந்த மந்திரத்தை வைத்துப் பெரிய தீயாக்கி, சதா காலமும் அதனுள்ளேயே மூழ்கிக் கிடந்தான். அவனுடைய கடும் தவத்தைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் மனம் மகிழ்ந்தார். அவனுக்குக் காட்சியளித்தார். ''தொடர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிரு. இந்த உலகம் முடியப் போகிறது. பெரிய ஊழிக்காலம் வரப்போகிறது. சிருஷ்டிகள் அழியப் போகின்றன. மறுபடியும் சிருஷ்டி துவங்கும். அப்போது பிரம்மாவே உனக்குத் தந்தையாக இருந்து, உனக்குச் சகலமும் சொல்லிக் கொடுப்பார்'' என்று சொல்லி விடைபெற்றார்.

ஊழிக்காலம் வந்தது. உயிரினங்கள் அழிந்தன. சகலமும் நீர்மயமாயிற்று. நீர்மயத்திலிருந்து பிரம்மா உலகை சிருஷ்டிக்கத் துவங்கினார்.

வரிசி முதலிய முனிவர்களோடு, மஹதி என்ற வீணையோடு உபவருக்கன் மறுபடி பூமியில் பிறந்தான். அவனுக்கு 'நாரதர்’ என்று பெயரிட்டார் பிரம்மா. நாரதர் தன்னுடைய மகன் என்று பெருமையோடு உலகுக்கு அறிவித்தார். இந்த உலகம் மட்டுமல்லாது, எல்லா உலகங்களுக்கும் செல்கிற தகுதியோடு, நாரதர் மஹதி என்ற வீணையோடு பிறந்தார்.

சந்தோஷம் கொடுக்கிற இசை மட்டுமல்ல, துன்பத்தை நீக்கி ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்த்துகிற இசை மட்டுமல்ல, சத்தியத்தை நோக்கிக் கேள்வி கேட்டுத் தெளிகிற ஞானத்தோடும் நாரதர் பிறந்தார். அவருடைய வாக்கு பிரபஞ்சத்தின் எல்லாத் திசைகளிலும் ஒலித்தது. சாதாரண பிறப்பல்ல அது. மாமுனி என்கிற பிறப்பு. சகலமும் அறிந்து தெளிந்த பிறப்பு. கடும் தவத்தால் அது அவருக்குக் கிடைத்தது.

நாராயண மூல மந்திரம், மறுபிறப்பில் மிகச் சிறப்பான ஓர் அம்சத்தைக் கொண்டு வந்து கொடுத்தது. அந்தச் சிறப்பான அம்சத்திற்குப் பெயர் நாரதர். அவர் எடுத்துரைத்த உண்மைக்குப் பெயர் நாரத புராணம்.

- தொடரும்