Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##

கும்ப ராசியின் அதிபதி சனி. இதில் எந்தக் கிரகத்துக்கும் உச்சமோ, நீசமோ இருக்காது. இருந்தாலும், அதிபதி சனிக்கு 'மூல த்ரிகோணம்’ என்ற தகுதியுண்டு. 1-க்கும் (கும்பம்), 12-க்கும் (மகரம்) அதிபதியாக இருப்பதால் குறையும் நிறையும் கலந்திருக்கும். 2-ம் (மீனம்), 11-ம் (தனுசு) குருவின் வீடானதால், பணமும் செழிப்பும் நிலைத்திருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராசிச் சக்கரத்தின் 300 முதல் 330 வரையிலான ஆரங்கள் இந்த ராசியில் அடங்கும். இறப்பும் பிறப்பும் என்றைக்கும் தொடர்பு உடையது (ஜாதஸ்யணித்ருவோம்ருத்யும் த்ருவம் ஜன்மமிருதஸ்ய). அந்த நியதியில்தான் ஜாதகமே உயிர்பெற்று விளங்குகிறது. அழிவுக்கும் ஆற்றலுக்கும் ஒருவனே பொறுப்பு. கர்ம வினை பிறப்பை அளித்தது. அதன் அனுபவ வேளையே வாழ்க்கை; அதன் முற்றுப்புள்ளியே மறைவு.

 சிருஷ்டி தத்துவத்தை உண்மையாக்குகிறார் சனிபகவான் (நிஹந்தா பாபகிருத்சனி). விருப்பப்படி மரணத்தை ஏற்கும் பீஷ்மரை, உத்தராயணத் துக்கு இழுத்து வந்தவன் சனி. உத்தராயண மரணத்தை உயர்வாகச் சொல்லும் தர்மசாஸ்திரம். தற்போது உத்தராயணத்தின் ஆரம்பம் (தை மாதம்) சனி அதிபதியாகத் திகழும் மகர ராசியில் துவங்கும். கடகத்தில் (ஆடி மாதம்) தக்ஷிணாயணம் ஆரம்பம். மனத்துடன் இணைந்த வாசனை வாழ்க்கையைத் துவக்கி வைக்கும். அதற்கு ஆன்மாவின் தொடர்பு (சூரியன்) ஒத்துழைக்கும். 2-ல் செல்வமும் (சிம்மம், ரவி), 3-ல் கல்வியும், 4-ல் பொருளாதாரமும், 2-ன் இணைப்பில் பூர்வபுண்ணியத்துடன் கலந்த 5-ல் வாழ்வின் வெற்றியும், 6-ல் மனத்தெளிவு, காரியம் முடிந்ததைச் சுட்டிக்காட்ட 7-ல் மறைவும்... இப்படிப் பரிணாம வளர்ச்சியின் செயல் பாடு, கிரக வரிசையில் செயல்படுத்தப்படுவதைக் கவனிக்கவேண்டும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய இவர்களின் வரிசையானது... இருக்கு, வெளிப்பட்டது, வளர்ந்தது, மாறுதலைத் தழுவியது, வாட்டமுற்றது, மறைந்தது எனும்படியாக வாழ்வின் படிகளை வரையறுக்கிறது (அஸ்தி, ஜியதெ, வர்த்ததெ, விபரிணமதெ, ஸ்ரீயதெ, நச்யதி). இந்த தத்துவம் சூரியனோடும் சந்திரனோடும் (ஆன்மா, மனம்) தனித்தனியே இணைக்கப்பட்டிருக்கிறது. சூரியனிலிருந்து ப்ரதக்ஷிணமாகவும் சந்திரனிலிருந்து அப்ரதக்ஷிணமாகவும் ஒரே கிரக வரிசைகள் தென்படும். பரிணாம வளர்ச்சியின் இரு பகுதிகளின் இணைப்பு சக்கர வடிவில் தென்படுகிறது. ஆன்மா, மனம் இரண்டின் இணைப்பில் வாழ்க்கை முளைக்கும்வரை, கிரகங்களின் பங்கு வழிகாட்டும். நுழைவாயிலில் (கடகம்- சிம்மம்) ஆன்மாவும் மனமும் இணைந்திருக்கும். பின் வாயிலில் இருபக்கமும் இருந்து முடிவை நிறைவு செய்வான் சனி. ஆன்மாவின் தொடர்பை அவனே முடித்து வைக்கிறான். முக்தியைக் கொடுப்பதும், மறுபிறவியை ஏற்கவைப்பதும் அவனே. துக்கம் தர நினைத்தால் மறுபிறவியை அளிப்பான்; துக்கத்தை அழிக்க நினைத்தால் மறுபிறவியை அறுத்து விடுவான். ஆக்கலும் அழித்தலும் அவனிடம் இருக்கும். சூரியனிலிருந்து வெளிவந்த கோளம் சனி. சூரியனின் புதல்வன். அந்த தொடர்பு இரண்டிலும் தகுதியை அளித்தது.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

இரு வரிசைகளில் தென்படும் கிரகங்கள் மாறுபட்ட இணைப்பைப் பெற்றிருக்கும். புதனும் குருவும் 4-ம் 10-ம் ஆகவும், சுக்கிரனும் செவ்வாயும் 6-ம் 8-ம் ஆகவும், சனி 12-ம் 1-ம் ஆகவும்; 1-ம் 2-ம் ஆகவும் இருப்பர் (ஒரு வரிசையில் உள்ள கிரகத்தை மனத்தில் கொண்டு, அடுத்த வரிசையில் அதே கிரகத்தை வைத்துக் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை வரும்). கல்வியில் தேறியிருந்தாலும், பொருளாதாரமும் செயல் பாடும் சிக்கலில் சேர்த்து சிந்தனையைத் தூண்டிவிடும். தெளிவு பெற்று மறுபிறவியை அறுக்கவும் செய்யலாம்; ஏற்கவும் செய்யலாம். அதற்கு,  சனியின் பங்கு தீர்வு அளிக்கும். ராசிபுருஷனின் 2-ல் இருந்து 6 வரையிலான ராசிகள், 8-ல் இருந்து 12 வரையிலான ராசிகளோடு தொடர்புடையவை. இரண்டு பதினொன்றுடனும், மூன்று எட்டுடனும், நான்கு பத்துடனும், ஐந்து ஒன்பதுடனும், ஆறு பன்னிரண்டுடனும் இணைந்து செயல்படும். 2 முதல் 6 வரையிலான ராசிகளின் பலனின் நிறைவை, 8 முதல் 12 வரையிலான ராசி களுடன் இணைத்து, இறுதி முடிவைத் தெரிந்துகொள்ள இயலும். 2-க்கு உடையவன் (தனாதிபதி) 11-லும் (லாபாதி பதி), 11-க்கு உடையவன் (லாபதிபதி) 2-லும் இருந்தால் தனலாபம் உண்டு என் கிறது ஜோதிடம். இங்கு 11-ஐ இணைத்து, பலன் இறுதியைப் பெறுகிறது. கிரக வரிசைகள் இரண்டானாலும், பலன் சொல்வதில் ஒன்றாக இணைந்துவிடும்.

12- வ்யயம், 2- மாரகம். பன்னிரண்டும் ஒன்றுமாகவோ (கும்பம்), ஒன்றும் இரண்டுமாகவோ (மகரம்) இருக்கும் சனி, இரண்டு வரிசைகளையும் இணைத்துப் பலன் சொல்வான். 12- பாபத்தின் மறைவு, செல்வத்தின் மறைவு இரண்டையும் சொல்லும். 2- மறைவையும் (மாரகம்) வாழ்வுக்குத் தேவையான செல்வத்தையும் சொல்லும். ஆகவேதான், சனி அடுத்த பிறவியையும் எட்ட வைப்பான், வீடு பேற்றையும் அளிப்பான் என்கிறது ஜோதிடம். முக்காலத்தையும் அளக்க மூன்று இடங்களில் சனியின் தொடர்பு இருக் கும். அகால மிருத்யு, அபமிருத்யு, துர்மரணம்

ஆகிய மூன்றையும் நடைமுறைப்படுத்துபவன் சனி. ஆன்மாவுடன் (சூரியன்) இருக்கும் நிரந்தர இணைப்பானது, அந்தத் தகுதியை அவனுக்கு அளித்தது. பிறப்பின் எதிரிடையான இறப்பைக் கையாளுவதால், இருவரும் பகைவர் என்பது பொருந்தும். சனியும் சூரியனும் தங்களது 7-ல் உச்சத்தையும் நீசத்தையும் பெறுவதால் உயர்வு - தாழ்வை நிர்ணயம் செய்வதில் இந்த இருவ ரின் பங்கு இறுதித் தீர்வுக்கு ஒத்துழைக்கும்.

ராசி புருஷனின் 10, 11 ஆகிய இடங்கள் சனிக்குச் சொந்தமானது. உழைப்பையும் உறுதி யையும் வரையறுப்பவன். நடைமுறை வாழ்வில் நெருடலைச் சந்திக்காமல் இருக்க, உழைப்பையும் ஊதியத்தையும் உறுதி செய்யவேண்டும். சனி துக்ககாரகனாக மட்டுமில்லாமல், வாழ்வை வளமாக்கும் உழைப்பையும் ஊதியத்தையும் சிறப்பாக்குகிறான். செவ்வாயும் சனியும் இணைந்தால், 'அக்னிமாருத யோகம்’ என்கிறது ஜோதிடம். காற்று, விளக்கை அணைக்கும்; காட்டுத் தீயை வளர்க்கும். எதிராளியின் பலத்தைப் பார்த்து செயல்படும். செவ்வாய் பலம் பொருந்தியிருந்தால், சனி ஒத்துழைக்கும்; பலம் குன்றியிருந்தால், தனது பலத்தால் அழித்துவிடும். இரண்டும் கெடுதலில் முடிவடை வதால் அந்த யோகம் அழிவை அளிக்கும். நெருப்பை அணைக்கவும் வளர்க்கவுமான மாறுபட்ட இரு தகுதிகள் சனிக்கு உண்டு.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

கும்ப ராசிக்கு உச்சம் பெற்ற சனி உயர்வுக்குக் காரணமாவான். நீசம்பெற்றால் செவ்வாயின் பலத்தால் உயர்வை எட்ட வைப்பான். குடம் ஏந்திய மனித வடிவம் கும்பத்தின் அடையாளம். சுக்கிரனும் புதனும் பந்து. சூரியன், சந்திரன், செவ் வாய், குரு ஆகியோர் சத்ரு. இது ஸ்திர ராசி; இரட்டைப் படை ராசி; பகல் ராசி; மனித ராசி; சிரோதய ராசி; குட்டை ராசி; கர்ம ராசி; மூல ராசி. இப்படி இருக்கும் தகுதிகள் அதில் பிறந்தவனில் தென்படும்.

குடத்தைச் சுமப்பவன் மனிதன். நாகரிகமாக நடப்பவன், துயரைத் தாங்கும் வலிமை கொண்டவன், மனம் தளராதவன், பொறுமை யுடன் இலக்கை நோக்கிப் பயணிப்பவனாக தென்பட இடமுண்டு. கட்டுக்கோப்பான உடல், சுகாதாரமான சூழல், தீர்மானமான முடிவு அத்தனையும் இருக்கும். புதனும் சுக்கிரனும் பலவானாக அமைந்தால், கரடு முரடு இல்லாத வாழ்வில் நிம்மதியும் சந் தோஷமும் நிலவும். கவிதைகள் புனைவதில் ஆர்வம், கலைகளிலும் விளையாட்டிலும் ஈடுபாடு, ஒப்பந்தம், பந்தயம், வாக்குறுதி ஆகிய வற்றில் வெற்றி வாய்ப்பு இருக்கும். தகவல்களை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் இருக்கும். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் எண்ணம் எழாது. விஷயத்தை உள்வாங்கிக் கொள்வதில் சுணக்கம் இருந்தாலும், வாங்கி யதை மனத்தில் பதியவைக்கும் திறன் இருக்கும். உள்ளதை உள்ளபடி உரைக்கத் தயக்கம் இருக் காது. பரோபகார சிந்தனையும் ஈவு இரக்கமும் மேலோங்கி இருக்கும். விளம்பரம், படாடோபம் இல்லாமல் சமுதாய சேவையில் இறங்கும் மனம் இருக்கும். பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்து வைப்பதில் திறமை இருக்கும். பகைவர் களை கட்டப்பஞ்சாயத்து மூலம் நண்பர் களாகச் செய்வதில் ஆர்வம் இருக்கும். தொழி லாளர்களுக்குத் தலைமை ஏற்றுத் தொண்டு செய்வதிலும் விருப்பம் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியோர் சேர்க்கையில் பல இழப்புகளைச் சந்திப்பான். உடல் உபாதையும் மன அமைதியும் இழந்து தவிப்பதும் உண்டு. லக்னாதிபதி நீசம் பெற்று, மற்ற கிரகங்கள் ஓங்கியிருந்தால், ஏழ்மையிலும் சங்கடங்களிலும் அகப்பட்டு ஒட்டுமொத்தமாக நிம்மதி இழக்க நேரிடும். சனி எந்தக் கிரகத்து டனும் இணைந்தாலும் பார்த்தாலும் நினைத்த பலனை எதிர்பார்க்க இயலாது. பலவானாக இருந்து பார்த்தால், நல்ல பலனைப் பெருக்கிப் பெருமை சேர்ப் பான். துர்பலனாக இருந்தால், அத்தனைச் செல்வங்களையும், செல்வாக்கையும், சுகாதாரத்தையும் இழக்க வைப்பான். நட்பைத் தளராமல் வைப்பதில் சிரத்தை இருக்கும். எல்லாக்கிரகங்களும் 8-ல் வந்தால் ஆயுளுக்குக் கெடுதல் என்று சொல்லும் ஜோதிடம். சனி 8-ல் இருந்தால் ஆயுளை நீட்டிப்பான் என்று விளக்கம் அளிக்கும்.

சனியுடன் இணைந்த நீச்ச செவ்வாய், சந்திரனின் க்ஷேத்திரத்தில் (மகரத்திலிருந்து) 7-ஆம் பாவமாக அமைந்தால், மனைவி சுமங்கலியாக வாழ்நாள் முழுவதும் சிறப்புப் பெற்று விளங்குவாள் என்கிறது ஜோதிடம் (ஸெளராரயோ: மதகயோ:...). கடகத்தில் இருக்கும் சனி லக்னாதிபதி செவ்வாய் நீசம். சனியின் சேர்க்கையில் செவ்வாய்க்கு நீசபங்கம். சந்திரனின் வீடு சனிக்குப் பகை. சனியால் பலம் பெற்ற செவ்வாய், சுபக்ஷேத்ரமான சந்திரன் வீட்டில் இருப்பதால், மனைவியை அழிக்கும் தகுதியை இழந்தான். சனி (மகரம்)லக்னத்தைப் பார்ப்பதால், கணவனுக்கு 7-ஆம் வீட்டில் இருக்கும் இடை யூறை அண்டவிடாமல் தடுத்தான். சந்திரன் வீடாக இருப்பதால், செவ்வாய்க்கு யோக கார கத்வம் இருப்பதால் மனைவியை வாழவைத்து மகிழ ஒத்துழைத்தான். இங்கு சனியின் பங்கு முக்கியமாகச் செயல்பட்டு பலனைத் திசை திருப்பிவிட்டது.  ஆன்மிகச் சிந்தனையில் ஆர்வம், முடிவெடுக்கும் விஷயத் தில் முழு ஈடுபாடு இருக்கும். தவம், தியானம் ஆகியவற்றில் பற்றுதல் இருக்கும். ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றில்... சொற்பொழிவில் இறங்குவதைவிட, அவர்களுக்கு சேவை செய்வதில் நாட்டம் இருக்கும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

முதல் இரண்டு நவாம்சங்கள் (அவிட்டம் 3, 4) செவ்வாய் தசை இருக்கும். அதன்பிறகு நான்கு நவாம்சங்கள் (சதயம் 1, 2, 3, 4) ராகுவின் தசை. கடைசி மூன்று நவாம்சங்கள் (பூரட்டாதி 1, 2, 3) குரு தசையாக இருக்கும். செவ்வாய் பலமிழந்து இருந்தால் 3 வயது வரை பாலாரிஷ் டம் தென்படலாம். அதிலும் சனி, புதன், சுக்கிரன் ஆகியோரது அந்தரங்கள் தெம்பை அளிக்கும். பாலாரிஷ்டத்தைத் துர்பலமாக்கி விடும். ராகு தசை கல்வியில் நிறைவை அளிக்கும். ராகு தசைக்கு சனியின் பலன் இருக்கும் (சனிவத் ராஹு:). இங்கு சனி ராசிநாதன் (கும்பம்) ஆனபடியால், உயர்வுக்குக் காரணமாகி விடுவான். கெடுக்கும் ராகு என்பதற்குப் பதிலாக கொடுக்கும் ராகுவாக மாறிவிடுவான். இதில் வரும் சனி, சுக்கிரன், புதன்... அதேபோல் குரு தசையில் தென்படும் இம்மூவரும் நீண்ட தசாகாலத்தை உடையவர் களாக இருப்பதால், அவர்களுடைய அந்தரங்களில் செழிப்பைப் பெறலாம். ஏறக்குறைய 40 வயதுக்கு மேல் தென்படும் சனியும் புதனும் இளமையையும் முதுமையையும் இனிப்பாக மாற்றி விடுவான். இளமையின் ஆரம்பத்தில் குருவின் தலையீட்டால் சிறு சிறு சிக்கல் களைச் சந்தித்தாலும், பெரும்பகுதி மகிழ்ச்சியளிக்கும்.

மிதுனம், துலாத்துக்கு இந்த தசா வரிசைகள் பொருந்தும். ஆனாலும் ராசிநாதன், பந்து- மித்திரர்கள், யோக காரகன், உச்ச நீசம் ஆகியவற்றின் இடை யூறால் பலனில் மாறுபாடு இருக்கும். இந்த மூன்றும் (மிதுனம், துலாம், கும்பம்) அரை முக்காலும் நட்சத்திரங்கள் இணைந்த ராசிகள். மூன்று கிரகங்களின் தசைகள் இளமை வரை பரவி, வாழ்வின் அடித் தளத்தை வலுவாக்கும். சரம், ஸ்திரம், உபயம் என்ற பாகுபாடும் பலனை அளிப்பதில் மாறுபடும்.

சனியும், புதனும், சுக்கிரனும் வலுப்பெற்று இருந்தால், சந்தித்த சங்கடத்தை எளிதில் கடந்துவிடுவர். தீராத வியாதியோ, பிரச்னையோ இவர்களுக்கு இருக்காது. முதுமையை எட்டியவர்கள் வாழ்வில் திருப்தி அடைந்து, பற்றுதல் அகன்று, ஆன்மிகத்தில் தெளிவு பெற்று வீடுபேறு அடைய வாய்ப்பு இருக்கும். அறம், பொருள், இன்பம் - மூன்றிலும் பற்று இருந்தாலும், துயரத்தை சந்திக்கும் அளவுக்கு அதை வளரவிடாமல் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். 2-க்கும் 11-க்கும் உடைய குரு பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்ட வைப்பதால், ஏழ்மை அகன்று சிந்தனை வளம் பெற்று உழைப்பில் ஈடுபட்டு உயர்வை எட்டு வார்கள். எல்லா கிரகங்களுடைய அமைப்பை யும், அவர்களின் தலையீட்டையும் ஆராய்ந்தே இறுதி முடிவை எட்ட வேண்டும்.

சம் சனைச்சராய நம: பும் புதாய நம: சும் சுக்ராய நம: என்று சொல்லி பணிவிடை செய்ய வேண்டும். சனிக்கு, 'மந்தன்’ என்று பெயர் உண்டு. மெள்ள நடப்பவன். ஆகையால்தான், ஒரு ராசியைக் (30 பாகையை) கடக்க இரண்டரை வருடங்கள் ஆகிறது. ஆகையால், 'மம் மந்தாய நம:’ என்று சொல்லியும் வழிபடலாம். 'இதம் விஷ்ணுர்விசக்ரமே’ என்ற மந்திரத்தைச் சொல்லி புதனை வழிபடலாம். 'ப்ரவ: சுக்ராய’ என்ற மந்திரத்தால் சுக்கிரனை வழிபடலாம். 'சம்னேதேவீ:’என்ற மந்திரத்தால் சனியை வழிபடலாம். சனைச்சரனின் அதிதேவதை, ப்ரத்யதி தேவதைகளையும் வழிபடலாம். பிரஜாபதியையும் எமனையும் வழிபடவேண்டும். விஷ்ணு, இந்திரன், இந்திராணியையும் வழிபடலாம். கால நேரம் இல்லாத சூழலில்,

நம: சூர்யாய ஸோமாய மங்களாய புதாய ச
குருசுக்கிர சனிப்ய: சராஹவே கேதவை நம:

எனும் இந்தச் செய்யுளை மனத்தில் அசைபோட்டு வணங்கலாம். சனி கிரகத்திடம் மக்களுக்கு பயம் உண்டு. ஜோதிடர்களின் மாறுபட்ட விளக்கங்களும் சில நேரம் பயத்தை உண்டுபண்ணுவது உண்டு. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி என்று சொல்லும் தறுவாயில், கெடுதல் விளைய வாய்ப்பு இருப்பதாக விளக் கும்போது, மனம் பயத்தைத் தழுவும். தனிப்பட்ட பலனைப் பொதுப் பலனாக வெளியிடும்போதும் சிலர் பயப்படுவது இயற்கை. எந்தக் கிரகத்தின் பலனும், அவரவர் ஜாதகத்தை வைத்து மாறு பட்டிருக்கும். ஆகையால் பொதுப்பலனில் மனம் கலங்கக்கூடாது.

- வழிபடுவோம்...