
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

##~## |
சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரத்தையும் (தில்லை), வைணவர்களுக்கான கோயில் என்றால் ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் ஆலயத்தையும் சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் பெரியகோயில் என்றால் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்று சொல்லப்படும் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம்தான்!
சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிற பிரமாண்டமான ஆலயம். சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜசோழன், தன்னை சிவபாதசேகரன் என அழைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொண்டான். இவனின் மகன் ராஜேந்திர சோழன், தன் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாக 'சிவசரணசேகரன்’ எனும் பெயரைப் பெருமையுடன் ஏற்றுக்கொண்டான். சைவத்தின் மீதும் சிவபெருமானின் மீதும் மாறாப் பற்றுக் கொண்ட தந்தையும் மகனும் கட்டிய ஆலயங்கள் ஏராளம்.
தாங்கள் அடைந்த பெருவெற்றியின் அடையாளமாகவோ அல்லது தங்கள் பெருமித வெற்றி தந்த ஆணவத்தின் வெளிப்பாடாகவோ அவர்கள் கோயில்களைக் கட்டவில்லை. கடவுளின் முன்னே அனைவரும் சமம் எனும் உயர்ந்த நெறியை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே ஆலயங்களை அமைத்தார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு பெரியகோயிலில், திருமாளிகைப் பத்தி எனும் திருவூற்று மண்டபத் தின் ஒரு பகுதியைக் கடைக்கால் வரை தோண்டி, அடித்தளமாக விளங்கும் முண்டுக் கற்களை வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் அந்தப் பகுதியை முழுவதுமாகச் சீரமைத்தனர். அப்போது உள்ளிருந்து எடுக்கப்பட்ட முண்டுக் கற்களில் மாமன்னன் ராஜராஜசோழனின் படைவீரர்களின் பெயர்கள் மற்றும் தனி நபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எதற்காக அங்கே பெயர் பொறித்தான் மன்னன்? கற்களை எவர் வழங்கினாரோ, அவர்களின் பெயரைக் கல்வெட்டுகளாகப் பொறித்து, அவர்களுக்குப் பெருமைச் சேர்த்த உயர்ந்த குணம் கொண்ட மன்னன் அவன்.
இதையெல்லாம் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஓர் உண்மை புலப்படும் நமக்கு. இந்த அழகிய, பிரமாண்டமான பெரியகோயிலின் அடித்தளக் கற்களில் ஓர் இடத்தில்கூட மன்னனின் பெயர் பொறிக்கப்படவில்லை. சாதாரணக் குடிமக்களின் பெயர்களும் படைவீரர்களின் பெயர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, இந்தக் கோயிலை நிலையாகத் தாங்கி ஆராதிப்பவர்கள் எளிய அடியார்களும் தொழிலாளர் களும்தான் என்பதை நமக்கு உணர்த்த, ராஜராஜசோழன் செய்திருக்கிற விஷயமாகத்தான் இது எனக்குத் தோன்றுகிறது.
அதேபோல், கோயிலின் திருச் சுற்று மாளிகையைப் பார்த்திருக் கிறீர்கள்தானே! அதன் அழகில் அசந்து போய்விடுவோம். அத்தனை அழகு; அத்தனை பிரமாண்டம்! அவன் நினைத்திருந்தால், அக்கா குந்தவை நாச்சியார் பெயரில், தன் மனைவியர் பெயரில், மகன் பெயரில், ஏன்... தன் பெயரில்கூட இந்தத் திருச்சுற்று மாளிகையைச் சொல்லியிருக்கலாம். ஆனால், தன் சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் என்பவர் பெயரில் திருச்சுற்று மாளிகையை அமைக்கச் செய்தான். இந்தத் தகவலை கோயிலில் உள்ள தூண் ஒன்றில் கல்வெட்டாகவும் பொறித்துள்ளான். அதாவது, சோழ தேசத்தின் மிக முக்கியமான கோயிலாக மட்டுமின்றி, உலகமே வியந்து பார்க்கும் ஆலயத்தின் கட்டுமானத்தில், அதன் பெருமை யில் அனைவரின் பங்களிப்பும் பெயர்களும் இருக்கவேண்டும் என்று பரந்த மனத்துடன் யோசித்துச் செயல்பட்டிருக்கிறான், மன்னன்.

அதேபோல், இன்னொரு சிலிர்ப்பான விஷயம்... கோயிலில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்குமான பூஜைகளுக்கு நிவந்தம் அளித்துள்ளார்கள், பலரும். தனிநபர்கள், வணிகர்கள், ஊர்ச்சபையினர் என நிவந்தம் அளித்தவர்களின் பெயர்களை யெல்லாம் கல்வெட்டுக்களில் பொறித்து, அவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறான் ராஜராஜசோழன்.
கோயில் விமானத்தின் வடக்குப் புறத்தில், சண்டீசர் சந்நிதிக்கு எதிரில், வாய்மொழி ஆணையாகச் சொன்னதை அப்படியே பதித்திருக்கிறான் மன்னன். 'தஞ்சாவூரில் தான் எடுப்பித்த கற்கோயிலான ராஜராஜச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரசாமிக்கு, தான் கொடுத்தது, தன் அக்கன் (சகோதரி) குந்தவைதேவியார் கொடுத்தது, தன் தேவிமார்கள் கொடுத்தது ஆகியோருடன் சிவனார்க்கு யார் யாரெல்லாம் எது எதெல்லாம் கொடுத்தார்களோ அந்தக் கொடை விவரங்களை தன் கொடை விவரத்துடன் சேர்த்துப் பொறிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப் பித்துள்ளான். அத்துடன், அருகிலேயே மிகப் பெரிய பட்டியலையும் குறித்துள்ளான். அந்தக் கல்வெட்டை இன்றைக்கும் பார்க்கலாம்.
அதுமட்டுமா? தஞ்சைப் பெரிய கோயிலுக்கென 400 ஆடல்மகளிரை நியமித்துள்ளான் மன்னன். இசைக்கவும் பக்கவாத்தியம் முழங்கவும் 220 பேரையும், தேவாரம் பாடுவதற்கு 50 ஓதுவாரையும், நூற்றுக்கும் மேற்பட்ட மெய்க்காவலர்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களையும் நியமித்திருக்கிறான் ராஜராஜசோழன். அவர்களின் பெயர், ஊர், ஊதியம், வேலை எனப் பலவற்றையும் கல்லில் பதித்திருக்கிறான்.

கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சரமல்லன். அவனைக் கௌரவிக்கும் பொருட்டு, அவன் பெயருடன் தன் பெயரையும் இணைத்து ராஜராஜப் பெருந்தச்சன் எனப் பட்டம் அளித்துச் சந்தோஷப்படுத்தியிருக்கிறான். அதுமட்டுமா? ஆயிரத்துக்கும் மேலான கோயில் பணியாளர்களின் வசதிக்காக ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்பாளர் கள்), சிகை அலங்காரம் செய்யும் நாவிதர் கள் எனப் பலரையும் நியமித்து, சிகை அலங்காரக் கலைஞன் ஒருவனுக்கு, ராஜராஜ நாவிதன் எனப் பட்டமளித்தான் மன்னன். இறைப் பணியில் எல்லா வேலையும் போற்றத்தக்கதே என்பதை வலியுறுத்திய பெரிய மனம் கொண்ட மன்னன், ராஜராஜ சோழன். இன்னொரு முக்கியமான விஷயம்... கலைகள் அனைத்தும் வளர்ந்த இடம் ஆலயம். கலைஞர்களுக்கு எஜமானன், பெருங்கோயில் ஈசனே! இதை உலகத்தார் உணரும் வகையில், ஈசனின் பண்டாரத்தில் இருந்து கலைஞர்களுக்கு ஊதியமும், கோயில் நிர்வாகிகளுக்கு அரசு பண்டாரத்தில் இருந்து ஊதியமும் அளித்து, கலைஞர்கள் இறைவனின் அடிமை என்பதையும், அரசனுக்கு ஒருபோதும் அவர்கள் அடிமை இல்லை என்பதையும் நிலைநாட்டி, அதனைக் கல்வெட்டுகளிலும் பொறித்து வைத்துள்ளான் மன்னன்.
பஞ்சபூதங்களால் இயங்குகிற உலகம் இது. தஞ்சைப் பெரியகோயிலின் கட்டுமான அமைப்புகளும் பஞ்சபூதங்களின் வடிவமாகக் கட்டப்பட்டுள்ளன. இயற்கையையும் இறைவனையும், குறிப்பாக மக்களையும் ஒரு வரிசையில் கோத்து, சமமாகப் பாவித்து, பொற்கால ஆட்சியையே நடத்திச் சென்றான், ராஜராஜசோழன் என்பதை இன்னமும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன, கோயிலில் உள்ள கல்வெட்டுகள்.
- புரட்டுவோம்
படங்கள்: கே.குணசீலன்