Published:Updated:

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

நினைக்கிறேன்... நெகிழ்கிறேன்..!இந்துமதி

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

நினைக்கிறேன்... நெகிழ்கிறேன்..!இந்துமதி

Published:Updated:
##~##

''நில்லு!'' என்றார் பெரியவா.

காஞ்சி மகாபெரியவா சதாராவில் இருந்த போது தரிசித்ததை மறக்கவே முடியாத கால கட்டம். அவரைத் தரிசிக்க அங்கே கிளம்பிப் போனேன். சதாராவில் இறங்கி, காலைக் கடமை களையெல்லாம் முடித்துக்கொண்டு தரிசிக்கச் சென்றேன். காஞ்சியைப் போலவே சதாராவிலும் ஏகத்துக்கும் கூட்டம்; நெரிசல். ஒருவழியாக முன்னேறினேன். கிட்டத்தட்ட பெரியவா எதிரில் வந்து நின்றேன். சிலிர்ப்புடன் அவரை நமஸ்கரிக்கக் குனிந்தபோது, ''நில்லு'' என்றார் பெரியவா. திடுக்கிட்டுப் போனேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உன் பேரென்ன?''

சொன்னேன்.

''நீ சுமங்கலிதானே?''

''ஆமாம், பெரியவா...''

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

''பின்னே இது என்ன கோலம்?''

அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று புரிந்தது. கழுத்தில் திருமாங்கல்யச் சங்கிலி தவிர கைகளில் வளையல்களோ, காதுகளில் தோடோ அணிவதில்லை நான். நெற்றியில்கூட புருவ மத்தியில் சின்னஞ்சிறு கறுப்புப் பொட்டு. அதையே பெரியவா சுட்டிக் காட்டினார். ''இந்து சுமங்கலிப் பெண்கள் யாரும் இப்படி இருப்பதில்லை'' என்றார்.

உடனே கூட்டத்தை விட்டு நகர்ந்து, அருகில் இருந்த கண்ணாடி வளையல் கடைக்குப் போனேன். சிவப்பும், பச்சையுமாக வளையல்கள் கைகளில் ஏறின. நெற்றியில் சிவப்பு குங்குமப் பொட்டு பெரிய அளவில்; காதுகளில் பத்து ரூபாய் அணிகலன். திரும்பி வந்து மீண்டும் மகாபெரியவாளை நமஸ்கரித்தபோது கனிவாகக் கூறினார்... ''இப்போ எவ்வளவு லட்சணமா இருக்கு! தெய்வத்தை, மகான்களை, ஞானிகளை, ஆச்சார்யர்களை தரிசிக்கப் போகும்போது வெறுங் கைகளுடன் போகக் கூடாதம்மா!''

அதன் பிறகு எங்கே சென்றாலும், சுமங்கலிக்கு உரிய லட்சணங்களுடன் செல்லத் துவங்கினேன்.

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

''நீ வீடு வாங்குவே!’ அருள்வாக்கு சொன்ன பாட்டியம்மா.

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

து நடந்தது 1984-ஆம் வருடம். மயிலாப்பூர் ஷீர்டி சாயிபாபா கோயில் படியில் கால் வைத்தபோது, மங்கலகரமாக இருந்த பழுத்த மூதாட்டி ஒருவர் என்னைப் பார்த்து, ''இங்கே வாம்மா'' என்று அழைத்தார். 'யார் இவர்? நம்மை ஏன் அழைக்கிறார்?’ என்று புரியாமல், குழப்பத்துடன் அவரை நெருங்கினேன்.

''நீ சொந்தமா வீடு வாங்கணும்னுதானே தேடிண்டிருக்கே... இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே இதே மயிலாப்பூர்ல உனக்கே உனக்குன்னு ஒரு வீடு அமையும். கவலைப்படாம போயிட்டு வா!'' என்றார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாம் வீடு வாங்க அலைந்துகொண்டிருப்பது இவருக்கு எப்படித் தெரியும்? அதற்குள் பரபரவென கூட்டம் நெட்டித் தள்ளவே... வியப்பும் குழப்பமுமாக தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினேன்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை. இப்போது வசிக்கும் இந்த வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, சாயிபாபா கோயிலுக்கு ஓடினேன். அந்தப் பாட்டியம்மாவைத் தேடினேன். காணோம். இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறேன் அவரை!

ஏன் அழுதார்? ஏன் அழுதேன்?

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

டபழநி முருகன் கோயிலுக்கு அருகே குடிகொண்டுள்ள சித்தர் ஒருவரைப் பற்றிக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஜூனியர் விகடனில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சத்குருக்கள் எனத் தேடித்தேடி ஓடிக்கொண்டிருந்த நேரம் அது! அந்த வடபழனிச் சித்தரைச் சந்தித்து, அவரின் கால்களில் வீழ்ந்து வணங்கினேன். அவர் ''மேலே போ, மேலே போ!'' என்பதையே திருப்பித் திருப்பிச் சொன்னார். 'மேலே போ’ என்பதன் உட்பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளாத நான் படிகளைத் தேடி, அங்கே குறுகலான படிகளில் ஏறி, கடைசிப் படியில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வந்த அஞ்ஞானத்தை என்னவென்று சொல்வது?

அவருக்கு லட்டு பிடிக்கும் எனத் தெரிந்துகொண்டு, மறுமுறை போகும்போது அட்டைப் பெட்டி நிறைய லட்டுகளை வாங்கிக் கொண்டு போனேன். ஒரு லட்டை எடுத்து வாயில் போட்டவர், கரகரவென்று கண்ணீர் விட்டு அழுதார். நானும் ஏனோ வாய்விட்டுக் கதறி அழத் துவங்கினேன். பத்து நிமிடங்களுக்கு நீடித்த எங்களின் அழுகை பின்பு சட்டென்று நின்றது. சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த நான், அவருக்குத் தொண்டு புரிந்தவரிடம், ''எதற்காக அழுதார்?'' எனக் கேட்டேன். ''நீங்கள் எதற்காக அழுதீர்கள்?'' என்று திருப்பிக் கேட்டார் அவர். ''தெரியவில்லையே...'' என்றேன். ''நன்றாக யோசித்துப் பாருங்கள், தெரியும்'' என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டார்.

எவ்வளவு யோசித்தும், இன்றுவரை இருவரின் அழுகைக்கான காரணம் தெரியவோ, புரியவோ இல்லை.

மண்ணும் பொன்னும் ஒன்றே!

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

ஷீர்டி! திருப்பதிக்கு அடுத்த திவ்ய க்ஷேத்திரமாக ஷீர்டியை நினைக்கிறேன். ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு நிகராகக் குவியும் காணிக்கை, தினமும் லட்சோப லட்சம் பக்தர்கள் 'ஓம் சாயி நமோ நமஹ’ எனச் சொல்லியவாறு நீண்ட வரிசைகளில் நின்று நகரும் கூட்டம், அத்தனை பேருக்கும் அன்னதானம், தங்குவதற்கு மலிவுக் கட்டணத்தில் அறைகள்... 'ஜருகண்டி’ மாதிரி அதே அர்த்தம் தரும் வேறொரு மராட்டி வார்த்தை இங்கும் ஆரம்பித்துவிடும். ஷீர்டி சமஸ்தானம் மாபெரும் சமஸ்தானம். ராஜாதி ராஜ யோகிராஜனாக பளிங்குச் சிலை பாபா! லட்சக்கணக்கில் கூட்டம். கோடிக்கணக்கில் கோயில் பணம்! இத்தனையும் யாருக்கு?

நைந்து போன வெள்ளை கஃப்னி, தலையில் இறுகக் கட்டி முடிந்த வெள்ளைத் துணி, கையில் குவளை, உணவு சேகரிக்க தோளில் முடிச்சிட்டு, பை போன்று தொங்கவிடப்பட்ட பழைய துணி... இவை தவிர, தனக்கென்று சொந்தமாக வேறெதுவும் வைத்துக்கொள்ளாமல், வீடுகளில் பிட்சை ஏந்தி இரந்து தானும் உண்டு நாய், பூனை போன்ற அனைத்து ஜந்துக்களுக்கும் பகிர்ந்தளித்த ஒரு பக்கிரிக்கு இன்று நடப்பவை!

யாரெல்லாம் உண்மையான சத்குருவோ, தங்களை சத்குரு என்றுகூட எவர் சொல்லிக்கொள்ளாமல் வாழ்ந்தாரோ, ஆத்மானுபவத்தை அழகுறவும் தெளிவுறவும் எவர் உபதேசித்தாரோ, மண்ணும் பொன்னும், ஓடும் தங்கமும் ஒன்றே எனச் சமமாக நோக்கியவர் எவரோ, அத்தகைய யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவர்கள் வாழ்ந்த காலத்துக்குப் பிறகும் கிடைக்கிற ராஜமரியாதை இது! ஷீர்டி சென்று வந்த நாள் முதல் 'உலகில் எதுவும் இல்லை’ என உணர்ந்து சலனமற்று நின்றிருக்கிறேன்.

நதியெனும் தேவதை!

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

ன் ஆன்மிக அனுபவத்தில், ஒரு நதி பற்றியும் சொல்லிவிடுகிறேன். 84-ஆம் வருஷம், உடலெங்கும் ஜில்லிப்புடனும், ஜிலீரென்கிற உள்ளக்குளிர்ச்சியுடனும் இருந்தது... சௌபர்ணிகா நதிக்கரையில் நின்றபோதுதான்! கொல்லூர் மூகாம்பிகை தேவியைத் தரிசிக்கச் செல்லும்போது இந்த நதியைக் காணலாம்.

இயற்கையின் நடுவே சுழித்துக் கொண்டு ஓடுகிற புண்ணிய நதி சௌபர்ணிகாவைப் பார்க்கப் பார்க்க... நம் பாவமெல்லாம் கரைந்து காணாது போகும். 'ஆதிசங்கரர் இங்கே உட்கார்ந்திருப்பாரோ... இதோ இந்த இடத்தில் நின்றிருப்பாரோ...’ என சிந்தித்தது உண்டு. 'சௌபர்ணிகா நதியில் குளித்துவிட்டு, மூகாம்பிகை யைத் தரிசனம் செய்யவேண்டும்’ என, கோயிலின் மூத்த அர்ச்சகரான மூர்த்திகணேஷ் சொன்னபோது, நதியின் மீது பேராவல் கொண்டது மனது. எப்போதும் ஜில்லென்றிருக்கும் அதன் தன்மை வியக்க வைக்கும் என்னை. இங்கே வந்தது முதல், வீட்டு பாத்ரூமில் குளித்தால்கூட, 'கங்கா ஸ்நானம், காவிரி ஸ்நானம்’ எனச்  சொல்லிவிட்டு, கடைசியாக 'சௌபர்ணிகா ஸ்நானம்’ என்று சொல்லிமுடித்து, நன்றி சொன்ன பிறகே குளியலைப் பூர்த்தி செய்கிறேன்.

அமைதி வேண்டுமா?

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

சென்னை, மயிலாப்பூர் லஸ் கார்னருக்கு அருகில் வள்ளுவர் சிலைக்கு எதிரில் உள்ள அப்பர்சாமி கோயிலுக்குச் சென்றிருக்கிறீர்களா? புராதனமான சிவாலயம் இது. இங்கே வந்தால் கிடைக்கும் அமைதி, வேறு எங்கும் கிடைத்ததாக நினைவில் இல்லை. 'ஹா...’ என்றிருக்கிற விஸ்தாரமான மண் தரைப் பிராகாரம், பெரிய ஆலமரத்தின் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகர், எப்போதும் பரபரப்பாக இருக்கிற மயிலையில் இப்படி அமைதியே உருவான இடம்... நிச்சயம் வரப்பிரசாதம்தான்!

பிரதோஷத்தின்போதுகூட இங்கே கூட்டம் குறைவாகவே இருக்கும். அதுவே எனக்கும் கோயிலுக்குமான நெருக்கத்தையும் அந்நியோன்யத்தையும் அதிகப்படுத்தியது. என்ன காரணம் என்றே தெரியவில்லை... இங்கே இருக்கிற வேளைகளில், எழுத்தாளர் தி.ஜானகிராமன் என்னுடன் நடந்து வருவது போலவும் ஸ்வாமி தரிசனம் செய்வது போலவும் நினைப்பு ஓடிக்கொண்டே இருக்கும். அமைதியின் உறைவிடமாகத் திகழும் அப்பர்சாமி கோயிலுக்கு ஒருமுறையேனும் சென்று வாருங்களேன்!

பல்லி சொன்ன அத்வைதம்!

திசங்கரரிடம் ஓர் புலையன், 'எதை நகரச் சொல்கிறாய்? இந்த உடம்பையா, ஆத்மாவையா?’ என்று கேட்டு, அத்வைதத்தை உணர்த்திய மாதிரி, எனக்கு ஒரு பல்லி, அத்வைதத்தைப் புரிய வைத்தது. 'எல்லாவற்றுக்குள்ளும் இருப்பது ஒரே இறைநிலை. எனக்குள் எது உள்ளதோ, அதுதான் எல்லா மனிதருக்குள்ளும், மிருகங்களுக்குள்ளும், ஈ, எறும்பு, கொசு, பூச்சி, கரப்பான், பல்லிக்குள்ளும் உள்ளது’ என்ற வரிகளை அடிக்கோடிட்டு வைத்திருக்கிறேன். அடிக்கோடு இட்டுவிட்டால் மட்டும் போதுமா? நடைமுறையில் செயல்படுத்த வேண்டாமா? ஊஹூம்... செயல்படுத்தியதே இல்லை.

கரப்பான் பூச்சிகளும், சுவரில் ஊர்ந்து செல்லும் பல்லிகளும் எனக்கு ஜென்ம எதிரிகள். கரப்பானையோ பல்லியையோ பார்த்துவிட்டால் ஆவேசக்காரியாகி, துடைப்பத்தை எடுத்து வந்து, அதை நொச் நொச்சென்று அடித்துச் சாகடித்தால்தான் நிம்மதி எனும் அளவுக்கு கடும் சாடிஸ்ட் நான்.

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

ஒருமுறை, எங்கள் கிராமத்து வீட்டுக் கூடத்தில், சாயிநாமம் ஜபித்துக் கொண்டிருந்தேன். அப்போது சுவரில் பல்லி ஒன்று இருப்பதைப் பார்த்ததும் ஆவேசமானேன். பெரிய சிவப்பு ஹிட்டை எடுத்து வந்து அதன்மீது அடித்தேன். அதே சுவரில், மிகப்பெரிய சாயிபாபா படம் மாட்டியிருந்தேன். அந்தப் படத்துக்குப் பின்னே போய் ஒளிந்துகொண்டது பல்லி. அப்போது, அதை அழித்தொழிக்கும் ஆவேசத்தில், பாபா படம் என் கண்ணுக்குத் தெரியவில்லை; பல்லியார் மட்டுமே தெரிந்தார்.  மொத்த 'ஹிட்’டும் காலியானால்கூட பரவாயில்லை, அதைச் சாகடிக்கவேண்டும் என்று சகட்டுமேனிக்கு பல்லியை நோக்கி ஹிட் அடித்தேன். அது படத்துக்குப் பின்னே அங்கே இங்கே ஓடி ஒளிந்து, போக்குக் காட்டியது. ஒருகட்டத்தில், கை வலியும் சோர்வும் வந்த பிறகுதான், சாயிபாபாவின் முகத்தில் எல்லாம் ஹிட் அடித்திருக்கிற விஷயம் எனக்கே தெரிந்தது. பதறிப்போய், மனதார மன்னிப்புக் கேட்டேன். 'நீ பல்லி மீது அடித்த ஹிட், என் மீது பட்டதே! பல்லி வேறு, நான் வேறு அல்ல! அதனுள் இருக்கும் அதே உயிர்தானே எனக்குள்ளும் உனக்குள்ளும் இருக்கிறது?’ என்று பகவான்  கேட்காமல் கேட்டது போல் இருந்தது, அவரது புன்னகையோடு கூடிய அந்த முகம்.

இதில் என்ன சிறப்பு தெரியுமா? அன்று துவங்கி இன்று வரைக்கும் என் கிராமத்து வீட்டில் அதன்பின் பல்லி நுழைவதே இல்லை. அதேபோல், கரப்பான் முதலான எந்தப் பூச்சிகளையும் அன்றிலிருந்து நான் கொல்வதுமில்லை.

 குரு பாகவதம்!

ஸ்ரீசந்திரபானு சத்பதி என்பவர் உத்தரப்பிரதேசத்தின் காவல்துறையில்  டி.ஜி.பி-யாகப் பணிபுரிந்தவர். மூன்று முறை ஜனாதிபதியிடம் விருது பெற்றவர். திருமணமாகி, மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தவர். தற்போது ஓய்வு பெற்று ஆன்மிகத்தின் பக்கம், தன் வாழ்வைத் திசை திருப்பி, சிறப்புற வாழ்ந்து வருகிறார்.

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

அவரின் வழிமுறைகளும் நெறிமுறைகளும் அலாதியா னவை. எதையும் அவர் இப்படிச் செய், அதைச் செய்யாதே என்று உபதேசிப்பதில்லை. ஆனால், எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதைப் புரியவைக்கிறார்; ஆத்மார்த்தமாக உணர வைக்கிறார். 'இதுதான் பாதை. இதில் பயணிப்பதே இனிமை’ என்று நாம் அறிந்துகொள்ளும் வகையில் எளிமைபடச் சொல்லித் தருகிறார்.

அவரே இசையமைத்துப் பாடியுள்ள குறுந்தகடுகள் ஏராளம். இவற்றில் மிக முக்கியமாக நான் கருதுவது... குரு பாகவதம்! புத்தகமாவும் வெளிவந்துள்ளது இது. இரண்டிரண்டு வரிகளாக, திருக்குறள் போலச் சொன்னதைப் படிக்கப் படிக்க, இந்தப் பிறப்பின் மீதே புதிய பார்வை மேலோங்கியது. ஆங்கிலம் மற்றும் ஒரிய மொழியில் சொல்லப்பட்ட விஷயங்கள்தான்... 'கர்மம்’ என்றால் என்ன, குரு என்பவர் யார், சத்குரு என்பவர் யார், பரம சத்குரு நம்மை எவ்வாறு வழி நடத்திச் செல்கிறார் என்பதை அறிந்து வியந்தேன். குருவின் அவசியத்தையும் மகோன்னதத்தையும் தெளிய வைக்கிற அற்புதப் படைப்பு அது!  

சும்மா இரு மனமே!

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

ர்மதா பதிப்பகம் ராமலிங்கம்,  எளிமை, இனிமை, அன்பு ஆகியவற்றின் சொந்தக்காரர். கோரக்பூர் கீதாபிரஸ் போன்று தனது பதிப்பகத்தின் மூலம் நல்ல ஆன்மிக நூல்களை நேர்த்தியோடும் பக்தியோடும் தந்தவர். அவர் எனக்குப் புத்தகம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். புத்தகத்தின் தலைப்பு - 'தியானத்தை விடு!’

'என்ன இது... தியானத்தின் மூலம் மனம் ஒருமைப்பட்டு, அடுத்தடுத்த நிலைக்கு நகருமே! ஆனால், இந்தப் புத்தகம் 'தியானத்தை விடு’ என்கிறதே? முரண்பாடாக அல்லவா இருக்கிறது!’ என ஆச்சரியப்பட்டுப் போனேன். என் முக மாற்றத்தைக் கவனித்தவர், அங்கேயே அந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொன்னார். அவரின் வற்புறுத்தலுக்காக ஸ்ரீபகவத் அவர்களின் அந்தப் புத்தகத்தைப் பிரித்துப் படித்தேன். புதிய கதவு எனக்குள் திறந்துகொண்டது அங்கே!  

'முட்ட முட்ட பாரமே ஆனாலும்
சும்மா இரு மனமே!’

இதைத்தான் பகவத் அவர்களும் தெளிவுறத் தந்துள்ளார். ஆனால், சொல்லப்பட்ட விதத்தில் நாம் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்களாவோம்!  

அவரை நேரில் பார்த்தேன். அமைதியாக இருக்கிறார். மென்மையாகப் பேசுகிறார். நீண்ட மௌனமும் மேற்கொள்கிறார். அந்த அமைதியும் மௌனமும் நம்மாலும் கடைப்பிடிக்க முடியும் என்றால், தியானத்தை விடலாம்; ஞானத்தைப் பெறலாம்!

எத்தனையோ மகான்கள் இந்த உலகில்!

ஆன்மிக அனுபவங்கள் பத்து...

டலும் தேடலும் கொண்ட வாழ்வில், போதும் என்கிற மனம்,  கிடைத்ததில் திருப்தி,  அனைத்து உயிர்களையும் நேசிப்பது, பேதமும் பிரிவினையும் அற்ற நிலை, தவறுகளைத் திருத்திக் கொள்ள நினைக்கிற புத்தி... என் இந்த வாழ்வும் ஆன்மிகமும் எனக்குக் கற்றுக் கொடுத்தது இதையே! எனக்குள் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறது, இது!  

குப்பைக்கூளமாக நிறைந்திருக்கும் மனத்துள் கருணை, இரக்கம் எனும் ஜே.சி.பி வைத்து வாரி வெளியே கொட்ட வேண்டும். பொறுமை, நம்பிக்கை எனும் ஏர் கொண்டு உழ வேண்டும். அன்பு மழை பொழியச் செய்து நேர்மறை எண்ணங்களாகிய செடிகள் நட்டு, பக்தி நீரூற்றி, நாற்றமடிக்கும் மனத்தை நந்தவனமாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு உதவவே இவ்வுலகில் எண்ணற்ற மகான்கள் அவதரித்தார்கள்.

குரு இன்றி தெய்வமில்லை; குருவே துணை; குருவே தெய்வம் குருவே சரணம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism