Published:Updated:

"எனக்குப் பிடித்த பத்து பாசுரங்கள்!”

தித்திக்கும் முத்துக்கள்!உபன்யாசகர் அக்காரக்கனி

##~##

1. பொய்கை ஆழ்வார்  எழுதிய முதல் திருவந்தாதியில் ஒரு பாசுரத்தில், 'நா வாயிலுண்டே நமோ நாராயணா’ன்னு சொல்றார். அதாவது, 'நாக்கும் இருக்கு, நாராயணாவும் இருக்கு. இரண்டும் இருந்தும் ஏன் நரகம்ங்கிற இடம் இருக்கு?’ன்னு கேட்கிறார். அதாவது, வாய் நிறைய 'நாராயணா’ன்னு சொல்றவங்க நரகத்துக்குப் போகமாட்டாங்கன்னு அழகாப் பாடியிருக்கார் பொய்கை ஆழ்வார்.

2. பூதத்தாழ்வார்  எழுதிய இரண்டாவது திருவந்தாதியில் 'என்னெஞ்சமேயான்’னு தொடங்கற பாடல். அதாவது, இந்த உலகத்துல எவ்வளவு பெரிய இடம் இருந்தாலும், இறைவன் தங்க விரும்புறது பக்தனின் இதயத்துலதான்னு சொல்றார். இதை உணர்த்துற விதமா, காஞ்சிபுரத்தில் பூதத்தாழ்வார் தன் நெஞ்சில் கை வைத்தபடி இருப்பார். 'பகவான் என் இதயத்தில் வசிக்க விரும்புறார்’னு இதுக்கு அர்த்தம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"எனக்குப் பிடித்த பத்து பாசுரங்கள்!”

3. மூன்றாம் திருவந்தாதியின் முதல் பாசுரத்தில்,   பேயாழ்வார்   'திருக்கண்டேன்’னு தொடங்குறார். இறைவனை விட்டு என்றும் பிரியாதவளாய், அகலாதவளாய் இருக்கும் ஸ்ரீமகாலட்சுமியைத் தரிசித்தேன்னு சொல்றார். அதாவது, அப்பாகிட்ட நேரடியா கேக்காம, அம்மாவின் மூலமாகக் கேட்டு காரியம் சாதிச்சுக்கற குழந்தைகளைப் போல!

4. திருமழிசை ஆழ்வாரின்  நான்முகன் திருவந்தாதியில், எமன் தன் தூதர்களிடத்தில் உரையாடுவதுபோல் உள்ளது ஒரு பாடல். அதில் எமன், ''நீங்கள் யாரிடத்தில் வேண்டுமானாலும் சென்று உயிரைப் பறித்து வாருங்கள். ஆனால், நாராயணனின் பக்தர்களிடம் மட்டும் போகவேண்டாம்! ஏனென்றால், அவர்கள் நமக்கு ஆட்பட்டவர்கள் அல்லர். நாம்தான் அவர்களுக்கு ஆட்பட்டவர்கள்'' என்கிறான். அதாவது, ஒருவன் நாராயணின் பக்தனாக இருப்பான் என்றால், அவனுக்கு எம பயம் தேவையில்லை என்கிறார் திருமழிசை ஆழ்வார்.

5. நம்மாழ்வாரின்  திருவிருத்தம். 'ஈனச்சொல்லாயினுமாக’ன்னு தொடங்கற பாசுரம். 'நான் சொல்லப்போறது உங்களுக்குப் பிடிக்கலைன்னாலும் பரவாயில்லை; ஆனா, நான் சொல்லுவேன்’னு சொல்றார். சரி, அப்படி என்ன சொல்றார்? 'நாராயணனின் அவதரமான ஸ்ரீவராகமூர்த்தியை வணங்குங்கள்! அது மட்டும்தான் நான் கண்ட நல்ல விஷயம்’ என்கிறார். 'நான் கண்ட நல்லதுவே’ என்று பாடி முடிக்கிறார்.

6. குலசேகரப்பெருமான்  பாடியது, பெருமாள் திருமொழி. பெரிய அரசராக இருந்து, கடவுளுக்காக எல்லாத்தையும் துறந்துட்டு வந்தவர் அவர். 'மொய்த்துக் கண் பனிசோர’ன்னு பாடுறார். ''இந்த மக்கள், ரொம்ப பக்தியா இருக்கறவங்களைப் பித்தன், பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க. ஆனா, யாரெல்லாம் இறைவனின் திருப்பாதங்களை உண்மையான அன்புடனும் பக்தியுடனும் வணங்காம இருக்காங்களோ, அவங்கதான் பித்தர்கள்'' என்கிறார்.

"எனக்குப் பிடித்த பத்து பாசுரங்கள்!”

7. பெரியாழ்வாரின் , 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ன்னு தொடங்குற பாடல். இறைவனிடம் என்றைக்காவது, 'கடவுளே நீ நல்லாயிருக்கியா? சாப்பிட்டியா?’ன்னு கேட்டிருப்போமா நாம்? 'கடவுளை நாம விசாரிக்கிறதாவது?’ன்னு தோணலாம். ஆனா, நாம நலம் விசாரிக்கணும்னு விரும்புறார் கடவுள். அவர் முன் சென்று அது வேணும், இது வேணும்னு கேக்காம, 'இறைவா, நீ பல ஆயிரம் நூற்றாண்டுகள் நல்லா இருக்கணும்’னு பாடுறதுக்கு, எப்பேர்ப் பட்ட பக்தி இருக்கணும், பாருங்க!

8. அடுத்து,  தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய ஒரு பாசுரம். 'பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்’னு தொடங்கற பாடல். இறைவனைக் காட்டிலும் இறைவனின் திருநாமத்துக்குப் பெருமையும் சுவையும் உண்டுங்கறார் இவர். 'இறைவன் எங்கே வேண்டுமானாலும் இருக்கட்டும். அவன் திருநாமம் நம்முள் எப்போதும் இருக்கவேண்டும்’னு சொல்றார். எல்லாத்துக்கும் மேலே, 'ஸ்ரீநாராயணனுக்குப் பக்கத்துலயே, வைகுண்டத்துலயே இருக்கிற வாய்ப்பே வந்தாலும், அதைவிட அவனோட திருநாமத்தைச் சொல்றதுலதான் எனக்கு அதிக ஆனந்தம்’னு திருநாமத்தோட மகிமையை இந்த அளவுக்கு வேற யாரும் சொல்லலை.  

"எனக்குப் பிடித்த பத்து பாசுரங்கள்!”

9. 'நீண்டவப் பெரியவாய கண்கள்’ அப்படின்னு திருப்பாணாழ்வார்  தன்னோட பாசுரத்துல அழகாச் சொல்றார். அதாவது, திருமாலோட கண்கள் காது வரைக்கும் நீண்டிருக்காம். 'ஏன்னா, பக்தர்கள் முதலில் என் கண்களைத்தானே பார்க்கிறார்கள்! அதனால், உடல் முழுக்க கண்களை வைச்சுக்கிட்டா என்ன?’ன்னு பெருமாள் நினைக்கிறாராம். ஒரு ராஜா, பெரிய ராஜ்ஜியத்தை வளைச்சுப் போடறதுக்கு முன்னால, அதுக்குப் பக்கத்துல இருக்கிற சின்னச் சின்ன நாடுகளையே முதல்ல ஜெயிப்பானாம். அதேமாதிரி, திருமால் தன் மேனி முழுவதும் கண்களாக ஆக்கிக்கிறதுக்கு முன்னால, பக்கத்துல இருக்கிற காது வரை கண்களின் எல்லையைப் பரப்பறாராம்.

10. ஸ்ரீஆண்டாள் , தன் திருப்பாவையின் ஒரு பாடலில், 'உன் தன்னோடு உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம்’னு சொல்றா. அதாவது, 'பெருமாளே! நீ பிறக்கிறபோதெல்லாம் நானும் பிறக்கணும். அப்படிப் பிறந்தாலும் சீதையைப் போல, பரதனைப் போல எனக்குப் பிறவி வேண்டாம். ஏன்னா, அவங்க எல்லாரும் உன்னை விட்டுப் பிரிஞ்சாங்க. அதனால, எனக்கு லட்சுமணனைப் போல ஒரு பிறவியைக் கொடு. நான் அவனைப் போல உனக்குத் தொண்டு செய்யறேன்’னு உருகிப் பாடுறா.