சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

சுகப்பிரசவம் அருளும் வெள்ளிமலை வேலன்!

வெள்ளிமலை மன்னவா..! ஜே.வி.நாதன்

'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான்!’ என்பார்கள். இந்தக் குன்றின் உச்சியிலிருந்து தெற்கே பார்த்தால் அழகான கடல்; வடக்கே பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலை; சுற்றிலும் பார்த்தால், ஆஹா... எங்கும் பச்சைப் பசேல் என்று கண்கொள்ளாக் காட்சி! இதுதான் வெள்ளிமலை! சிறிய குன்றுதான் வெள்ளிமலை. இதன் மீது, பாலசுப்ரமண்ய ஸ்வாமியாகக் கோயில்கொண்டுள்ளார் முருகப்பெருமான்.

நாகர்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், இரணியலில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் வெள்ளிமலை அமைந்துள்ளது. 118 படிக்கட்டுகளுடன், 200 அடி உயரம் உள்ள குன்று இது.

குன்றின் மீது அழகான கோயில், பளிச்சென்று காணப்படுகிறது. ஸித்தி விநாயகர், தர்மசாஸ்தா, சிவபெருமான் (ஆனந்த சிவன் என்பது திருநாமம்), நவக்கிரகங்கள் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

மூலவர் ஸ்ரீபாலசுப்ரமண்ய ஸ்வாமி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ள சுசீந்திரத்தில் கோயில்கொண்டுள்ள ஸ்ரீதாணுமாலயனை (சிவபெருமான்) நோக்கியபடி இவர் அருள்வதாகக் குறிப்பிடுகிறார்கள். குன்றின் உச்சியில் நந்திப் பாதம், முருகர் பாதம் காணப்படுகிறது.

சுகப்பிரசவம் அருளும் வெள்ளிமலை வேலன்!

ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை இங்கு மிகவும் விசேஷம்! அன்றைய தினம் பக்தர்களுக்கு பகவத் பிரசாதமாகக் கஞ்சி வழங்கப்படுகிறது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலய முன்னேற்ற சங்கத்தினர் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர்.

சுகப்பிரசவம் அருளும் வெள்ளிமலை வேலன்!
சுகப்பிரசவம் அருளும் வெள்ளிமலை வேலன்!

சித்திரை மாதம் 10-ஆம் நாள் ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமியின் திருப்பாதத்தில் சூரிய ஒளி படுவது அற்புதக் காட்சி! கந்த சஷ்டி விழா இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. தைப்பூசத்தில் பக்தர்கள் காவடி எடுத்து விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் கடைசி

சுகப்பிரசவம் அருளும் வெள்ளிமலை வேலன்!

வெள்ளிக்கிழமையன்று, இரணியலில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துக் கால்நடையாக ஊர்வலம் வந்து ஸ்ரீபாலசுப்ரமண்யரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வைகாசி விசாகத் திருவிழா மிகவும் புகழ்பெற்ற திருவிழாவாக இங்கே கொண்டாடப்படுகிறது.

ஆலயத்தின் தலைமை அர்ச்சாகர் பத்மநாப ஐயரிடம் பேசினோம். ''தினமும் காலை 5.30 மணிக்குக் கோயில் நடை திறந்து, காலை 11.30 மணிக்கு மூடுகிறோம். மறுபடியும், மாலை 5.30 மணிக்குத் திறந்து, இரவு 7.30 மணிக்கு மூடுகிறோம். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காலை 12.30 மணிக்கு நடை சாத்தப்படும். மாலை 5 மணி முதல் இரவு 7.45 மணி வரை கோயில் திறந்திருக்கும். காலை 7.30 மணி, காலை 11.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு மூலவருக்குப் பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. ஸ்வாமிக்கு பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி கொண்டு அபிஷேகம் நடத்துகிறோம். அரவண பாயசம், நெய்ப் பாயசம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இந்த பாலசுப்ரமண்ய ஸ்வாமியை வழிபட்டால், தேக ஆரோக்கியத்தோடு கூடிய வலிமையான குழந்தைகள் பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!'' என்றார் பத்மநாப ஐயர்.

நாமும் வெள்ளிமலை வருவோம். குழந்தை வரத்துடன், அந்தக் குமரனின் பேரருளையும் பெற்றுத் திரும்புவோம்.

படங்கள்: ரா.ராம்குமார்