Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!
##~##

பொதுவாக உலகியல் வழக்கத்தில் ஒருவர் மிகுந்த திறமைசாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும், பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவும் விளங்கினால், அவரை 'ஜாம்பவான்’ என்று குறிப்பிடுவார்கள். சரி, யார் இந்த ஜாம்பவான்? இன்றைக்கும் குறிப்பிட்டுப் பேசக்கூடிய அளவில் அவரது சாதனைதான் என்ன? கரடி வடிவில் வாழ்ந்து, மனிதர்களையும் தேவர்களையும்விட ஆற்றல் மிக்க ஜாம்பவானின் சரித்திரம் என்ன என்பதை விளக்கவே இந்தக் கதை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ராமாயண கதாபாத்திரங்களில் முக்கியமான ஒருவன், ஜாம்பவான் எனும் கரடி. ராமபிரானின் மனைவி சீதையை ராவணன் சிறையெடுத்துச் சென்றபின், அவளை மீட்க ராமனுக்குப் பேருதவி செய்தவர்கள் சுக்ரீவன், அனுமான், ஜாம்பவான் ஆகியோர் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், வயதான கரடி வடிவில் வாழ்ந்த ஜாம்பவான், ராமாயண காலத்துக்குப் பல யுகங்கள் முன்பே தோன்றி, கிருஷ்ணாவதார காலத்திலும் பங்கேற்று, மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டிருந்தவன் என்பது பலருக்குத் தெரியாத விஷயம். வலிமையும் திறமையும், அறிவாற்றலும் மிக்க ஜாம்பவான், ராம- ராவண யுத்தத்தில், களத்தில் முன்நின்று போரிட முடியாமல் தவித்தான்.

மூன்று யுகங்களில் வாழ்ந்த வலிமைமிக்க வீரனான ஜாம்பவான் மரணத்தை வென்ற அதே வேளையில் முதுமையை வெல்லமுடியாமல் போனதுதான் அதற்குக் காரணம்.

ஏன் இப்படி நிகழ்ந்தது?

பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் முதல் அவதாரம் மச்சவதாரம். இது நிகழ்ந்தது சத்ய யுகத்தில்! இன்றைய கலியுகம், இதற்கு முந்தைய துவாபரயுகம், அதற்கும் முந்தைய திரேதாயுகம் ஆகியவற்றுக்கும் முந்தையது இந்த சத்ய யுகம். அதாவது, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம். ஸ்ரீமத் பாகவதம், வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்ற புராண இதிகாசங்களின் அடிப்படையில், ஜாம்பவான் தோன்றியது சத்ய யுகத்தில். வால்மீகி ராமாயணத்தில், கிஷ்கிந்தா காண்டத்தில் ஜாம்பவான் தோன்றிய வரலாறு குறிப்பிடப்படுகிறது.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

ஒருமுறை பிரம்மதேவன், பல ஆண்டுகள் சிருஷ்டியில் ஈடுபட்ட களைப்புத் தீர, பிராணாயாமம் செய்தார். அப்போது அவர் வெளியிட்ட மூச்சுக்காற்றில், ஒரு கரடி வடிவில் தேவன் தோன்றினான். மிகவும் நல்ல சுபாவம் கொண்ட, வலிமைமிக்க அந்தக் கரடியை 'ஜாம்பவான்’ என்று பிரம்மதேவன் அழைத்தார். அந்த பிரம்ம புத்திரன்தான் ஜாம்பவான் என்பது ஒரு வரலாறு.

ஆனால், விஷ்ணு புராணத்திலோ ஜாம்பவான் தோற்றம் குறித்து வேறு ஒரு வரலாறு குறிப்பிடப்படுகிறது.

மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் பிரம்மனிடமிருந்து உருவான வேதங்களை எடுத்துச்செல்ல முயன்றபோது, பிரம்மனின் வியர்வைத் துளிகளில் இருந்து தோன்றிய கரடி வடிவ தேவனே ஜாம்பவான். வியர்வைத் துளிகளில் தோன்றியதால், முதலில் அவன் 'அம்புஜதா’ என்று பெயர் பெற்றான். பிரம்மனின் சிருஷ்டியில் தோன்றிய ஜம்புத்வீபம் என்ற கண்டத்தில் முதலில் காலடி எடுத்து வைத்ததால் 'ஜாம்பவான்’ எனப் பெயர் பெற்றான்.

விஷ்ணுவின் பத்து அவதார காலத்திலும் பங்கேற்றவன் ஜாம்பவான். இவன் தோன்றிய போது அபாரமான உடல் வலிமை யும், வியக்கத்தக்க அறிவாற்றாலும் பெற்றிருந்தான். அவனது அற்புத ஞாபக சக்தியால், எல்லா யுகங் களிலும் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து அவனால் சொல்ல முடிந்தது. அவனது ஞான திருஷ்டி அவனை சப்த ரிஷிகளுக்குச் சமமானவன் ஆக்கியது.

ஜாம்பவான், கரடிகளுக்கு அரச னாகத் திகழ்ந்தவன் என்று கூறும் புராணங்கள், அவன் குரங்குகளின் இனத்தைச் சேர்ந்தவன் என்றும் குறிப்பிடுகின்றன. 'கபி ஸ்ரேஷ்டன்’ என்று குறிப்பிடப்படுவதால், இது தெரிய வருகிறது. 'கபி’ என்றால் குரங்கு, ஸ்ரேஷ்டன் என்றால் சிறந்தவன் என்று பொருள்.

ஜாம்பவான் பல பெயர்களால் அறியப்படுகிறான். ஜாமவந்தா, ஜாம்பவந்தா, ஜாம்பவாத், ஜம்புவான் ஆகியவை அவனது பெயர்கள்.

மந்திரகிரியை மத்தாக்கி, வாசுகிப் பாம்பை கயிறாக்கி, தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறப் பாற்கடலைக் கடைந்த காலத்தில் ஜாம்பவான் இருந்ததாகவும், மந்திரகிரியை வலம்வந்து வணங்கியதாகவும் பாகவத புராணம் கூறுகிறது.

வாமன அவதார காலத்தில், மகாவிஷ்ணு திரிவிக்ர மனாகி மூன்று உலகங்களையும் தன் திருவடிகளால் அளந்து, மண்ணுக்கும் விண்ணுக்கும் வியாபித்து விஸ்வரூபனாகக் காட்சி தந்தபோது, அவரைப் பலமுறை வலம் வந்து, எல்லா உலகங்களையும் பக்திப் பரவசத்தோடு பிரதட்சிணம் செய்தான் ஜாம்பவான். அவ்வாறு வலம் வருகையில், விஷ்ணுவைத் தவிர, வேறு எதுவும் அவன் கண்ணில் படவில்லை. எனவே, அவன் பாதங்களின் கூரிய நகம், மகாமேரு மலையைக் கீறிவிடவே, அதன் சிகரம் வெடித்துச் சிதறிவிட்டது. இதனால் கோபமடைந்த மகாமேரு, ''உன் இளமை மற்றும் வலிமையின் செருக்கால் நீ இந்தத் தவற்றைச் செய்ததால், நீ மரணமில்லாமல் வாழ்ந்தாலும், உன் வலிமையை இழந்து, ஒரு வயோதிகக் கரடியாகவே வாழ்வாய். உன் அறிவாற்றல் மற்றும் மனோவேகத்துக்கு உன் உடல் வலிமை ஈடுகொடுக்காமல் போகட்டும்'' என்று சாபமிட்டுவிட்டது.

இந்தச் சாபத்தின் காரணமாகவே, ஜாம்பவான் அறிவாற்றல் மிக்கவனாயிருந் தும், உடல் வலிமையற்ற ஒரு வயோதிகக் கரடியாகவே வாழ நேர்ந்தது.

ராமாயண காலத்தில் தன் வலிமை தெரியாமல் அனுமன் கலங்கி நின்றபோது, அவனது குழந்தைப் பருவ வீரதீரச் செயல்களை எடுத்துரைத்து, அவனுக்கு நம்பிக்கையூட்டி, கடலைக் கடந்து சீதையைத் தேடும் தன்னம்பிக்கையை உருவாக்கியது ஜாம்பவான்தான். ஆனால், ராம- ராவண யுத்தத்தின்போது, முன்னணியில் ஒரு வீரனாக நின்று போரிட முடியவில்லையே என்று ஜாம்பவான் கலங்கி நின்ற சூழ்நிலையை கம்ப ராமாயணத்தில் கம்பன் அழகாகக் குறிப்பிடுகிறான்.

ராமபிரானே ஜாம்ப வானைத் தன் தந்தைக்கும், குருவான வசிஷ்டருக்கும் ஒப்பாகக் கருதி, அவனிடம் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளைக் கேட்டறிந்தார் என்ற உண்மையிலிருந்து ஜாம்பவானின் சிறப்பு நமக்குப் புலப்படுகிறது. சுக்ரீவனின் ஆலோசகராக இருந்து, அரசியல் தந்திரங் களைக் கற்றுக் கொடுத்தவன் ஜாம்பவான். கிருஷ்ணாவதார காலத்திலும் ஜாம்பவான் வாழ்ந்து, ஸ்ரீ கிருஷ்ணனுடனேயே யுத்தம் செய்த சம்பவம் மகாபாரதத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும் குறிப்பிடப்படுகிறது.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

ஒருமுறை சூரிய பகவான், சியமந்தகமணி எனும் ஒளியும் சக்தியும் மிக்க வைரம் ஒன்றை சத்ரஜித் எனும் மன்னனுக்கு அளிக்கிறார். மன்னனின் சகோதரன் பிரசேனா இந்த மணியை எடுத்துக் கழுத்தில் அணிந்துகொண்டு, காட்டுக்கு வேட்டையாடச் செல்கிறான். ஒரு சிங்கம் அவனைத் தாக்கிக் கொன்றுவிடுகிறது. அந்தச் சிங்கம், சியமந்தக மணியைக் கவ்விச் சென்றபோது, ஜாம்பவான் சிங்கத்துடன் போராடி, அதைக் கொன்று சியமந்தக மணியை எடுத்துச் சென்று, தன் குகையில் வைத்து விடுகிறான். அதனை ஓர் ஒளிமிக்க சிவலிங்கமாகக் கருதி பூஜையும் செய்கிறான்.

சத்ரஜித்தின் மகள் சத்யபாமா ஸ்ரீகிருஷ்ணனை விரும்புகிறாள். இதனால் கோபமுற்ற சத்ரஜித், சியமந்தகமணியை ஸ்ரீகிருஷ்ணன்தான் திருடி வைத்திருக்கிறான் என்று பழி சுமத்துகிறான். உண்மையை விளக்க சியமந்தகமணியைத் தேடி வந்த ஸ்ரீகிருஷ்ணன், ஜாம்பவானை அவன் குகையில் சந்திக்கிறார். சியமந்தகமணியைத் தர மறுத்து ஸ்ரீகிருஷ்ணனுடன் மல்யுத்தம் செய்ய முயல்கிறான் ஜாம்பவான். ஸ்ரீகிருஷ்ணன்தான் ஸ்ரீராமன் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

ராமாவதாரத்தின்போது ராமனது வீரத்தைக் கண்டு வியந்து, 'இத்தகைய மாவீரனுடன் போரிட்டுத் தன் வலிமையைக் காட்ட முடிய வில்லையே’ என ஏங்கினான் ஜாம்பவான். அவனது அந்த ஏக்கத்தைப் போக்கவே ஸ்ரீகிருஷ்ணன் ஜாம்பவானிடம் சண்டை போரிட்டார். உடல் வலிமை இழந்த ஜாம்பவானுக்குச் சிறிதுநேரம் அந்த வலிமையைத் தந்து அவனுடன் போரிட்டு, இறுதியில் தானே ஸ்ரீராமன் என்பதை விளக்குகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

தன் தவற்றுக்கு வருந்தி, சியமந்தக மணியை ஸ்ரீகிருஷ்ணனிடம் கொடுத்து, தன் மகள் ஜாம்பவதியையும் அவருக்கு மணம்முடித்து மகிழ்கிறான் ஜாம்பவான்.

சத்யயுகம் முதல் துவாபரயுகம் வரை வாழ்ந்த ஜாம்பவான் கலியுகத்தில் எங்கு, யாராக இருக்கிறான் என்ற கேள்வி எழுகிறது. இன்றும் 'ஜாம்பவான்’ என்ற பெயர் பெரியவர்கள் வாயில் பாராட்டு வார்த்தையாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. உடல் வலிமை இல்லாத நிலையிலும், தன் அறிவாற்றலால் ஸ்ரீராமனின் வெற்றிக்கு வழிகோலிய ஜாம்பவான், உடல் வலிமை இழந்தாலும் அறிவாற்றலில் தொண்டு செய்யலாம் என்ற உயர்ந்த தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறான்.

- இன்னும் சொல்வேன்...