மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 16

சித்தம் அறிவோம்...

சித்தம்... சிவம்... சாகசம்! - 16
##~##

ண்டப்பா இன்னுமொரு அதிசயந்தான்
உலகத்தில் உள்ளோர்கள் அங்கு வந்து
குண்டப்பா கோரக்கர் தீர்த்தமாடிக்
கொள்ளவே எப்பிணியும் அகன்று போகும்
மண்டப்பா கரம் இரண்டும் ஒன்றாய்க் கூட்டி
வாரிநீர் மூன்றுகை யுண்ணப் போதை
கொண்டப்பா சென்ம சாபல்யமாகும்...
கோரக்கர் தனைப் போற்றக் குணமுண்டாமே!

                    - ஞானவித்து ரகசியத்தில் காலாங்கி நாதர்

யோகி கைலாஷ்நாத், கொல்லிமலையில் உள்ள கோரக்கர் குகையில் கோரக்கரைச் சந்தித்தார் அல்லவா? ஆனால், கோரக்கர் என்கிற பெயரில் அல்ல; கைகட்டிச் சித்தர் எனும் பெயரில்!

கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் குளிரைப் பொருட்படுத்தாமல், நம்பிக்கையுடன் பொறுமையாக அந்தக் குகைக்குள் இருந்ததற்கான பலன் அது. கண்ணில் பட்ட அந்த சித்தரோடு யோகி பேசத் தொடங்குகிறார்...

''தாங்கள் யார்? தாங்கள் கோரக்கநாத சித்தரோ?''

''ஆம் மகனே! நான் கோரக்கனேதான். ஆனால், இப்பகுதி மக்கள் என்னைக் கைகட்டிச் சித்தன் என்று அழைப்பார்கள்.''

இப்படிச் சொன்னவர், அதற்கேற்ப கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டார். நீளமாக வளர்ந்திருந்த அவரது கை நகங்கள் உடம்பைச் சுற்றி வளைத்துக்கொண்டன. கட்டிக்கொண்ட கைகளை அவர் அவிழ்க்கவே இல்லை. அதேபோல, தலையிலும் ஜடாமுடி! நகத்தையும் தலைமுடியையும் பார்க்கும்போது, அவை கால காலமாக வளர்ந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது.

அடுத்து... அப்படியே கைகட்டிக் கொண்டிருப்பது அசாத்தியம்; உடம்பைத் தூசு போல கருத முடிந்தாலே இது சாத்தியம். கோரக்கர் தூசு போல உடம்பைக் கருத முடிந்தவர் என்பது அவரைப் பார்க்கும்போதே தெரிந்தது. அதனால் அவருக்கு அருகில் இருப்பது, யோகி கைலாஷ்நாத்துக்குள் பலவிதமான பரவச உணர்வை உருவாக்கியது. பேச்சும் தொடர்ந்தது.

''அப்பா... அஷ்டமா ஸித்திகள் உண்மையா?''

யோகியின் இந்தக் கேள்விக்கு 'உண்மைதான்’ என்று பதில் கூறியதோடு, யோகிக்கு அனுபவபூர்வமாக அதை உணர்த்தவும் தயாரானார் கோரக்கநாதச் சித்தர்.

''மகனே! கண்ணை மூடிக்கொண்டு, உன் உள்ளங்கையை விரித்தபடி உட்கார்!'' என்றார். யோகியும் அவ்வாறே உட்கார்ந்தார்.

20 முதல் 25 நிமிடங்கள் கழித்து, அவர் வலது கையில் ஒரு சிறு பாதரச லிங்கம் அளவு கனத்துடன் ஓர் அழுத்தம்.

''மகனே... கண்களைத் திறந்து பார்!'' என்றார் கோரக்கர். கண் திறந்து பார்த்த யோகிக்கு பெரும் ஆச்சரியம்! சற்று முன்பு வரை, 60 கிலோவுக்குக் குறையாமல் ஐந்தடி உயரத்துக்குக் கண் எதிரில் காட்சி தந்த கோரக்கர், இப்போது யோகியின் உள்ளங்கையில் ஒரு சிறு பொம்மைபோல அமர்ந்திருந்தார்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 16

அப்படியே, அந்தத் தோற்றத்தில் இருந்தபடியே, 'இதுதான் அணிமா ஸித்தி’ என்றார். யோகியிடம் ஏற்பட்ட பிரமிப்பு அடங்கவேயில்லை.

யோகி கைலாஷ், தான் எழுதிய 'சித்தர் களஞ்சியம்’ என்னும் நூலில் இந்த அனுபவத்தைக் குறிப்பிட்டுள்ளார். கோரக்க சித்தர் காலம் கடந்தும் வாழ்கின்றவர் என்பது இதனால் தெளிவாகிறது. சூட்சும சரீரத்துக்கே உண்டான ஆற்றல் அது.

கோரக்கர் போன்ற சித்த புருஷர்கள் சூட்சும சரீரத்தால் மட்டுமல்ல, ஸ்தூல சரீரத்தாலும் இந்த உலகின் நரை, திரை, மூப்பை வெற்றிகொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதற்கும் நிறையச் சான்றுகள் காணக் கிடைக்கின்றன. அது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், நாம் சதுரகிரி மலைக்குச் சென்று வர வேண்டும்.

எங்கே இருக்கிறது இந்தச் சதுரகிரி?

இன்றைக்கு சதுரகிரியைப் பற்றி அறியாதவர்கள் இல்லை என்றே கூறலாம். தமிழகத்தின் தென் பகுதியில், ராஜபாளையம் நகருக்கு அருகிலுள்ள வத்திராயிருப்பு எனும் ஊர்வழியாக இந்த மலையின் அடிவாரத்தை அடையலாம். அதன் பின்னர், அங்கேயிருந்து ஒரு 15 கிலோ மீட்டர் வரை மலைமேல் செல்ல, சதுரகிரியின் மையப் பகுதியை நாம் அடையலாம். இங்கேதான் ஆகாயம் பார்த்த லிங்கங்களாக சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கமாய் அந்த இறைவன் கோயில் கொண்டுள்ளான்.

ஒன்றேயான இறைவனுக்கு இங்கே எதற்கு இரண்டு சந்நிதிகள் என்று கேள்வி எழலாம். ஈசனின் சந்தன ரூபம் இகபர சுகத்தைத் தரவல்லது. அதாவது... பிள்ளைப்பேறு, கல்விச்செல்வம், அதுபோக நவநிதிகளும் பெற்று இகபர மாயா சுகத்தை முழுவதுமாய் அனுபவித்துத் தெளிவதற்கு உதவுவது. சுந்தர ரூபம், பற்றை அறுத்துக் கொள்ளவும் சித்தனாய் மாறிடவும், தவக்கோலம் ஏற்கவும் அருள்வதாகும்.

இந்தத் தெய்வங்களால் அன்றி இயற்கை வளத்தாலும் ஓர் அரிய தலம்தான் சதுரகிரி.

'மந்தரங் கலக்க முன்னாள் வாரியின் மருந்தின் மிக்க
நந்தலில் மூலிகைகள் நன் சுமை சதுர வெற்பின்
சுந்தரலிங்கர் வாசத் தூய நற்றவத்தின் சீரை
எந்தரங் கொண்டு சாற்ற வெழுந்தன மீங்குமாதோ’

என்பது, சதுரகிரியின் மகிமையைக் கூறும் ஒரு பாடலாகும். கிரி என்றால் மலையைக் குறிக்கும்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 16

சதுரகிரி என்றால், அந்த மலை சதுரமாக உள்ளது என்று பொருளல்ல. சதுர் என்றால் நான்கு என்று கணிதப் பொருள். இங்கே நான்கு புறமும் கிரியோடு, அதாவது மலைகளோடு உள்ளது. நான்கு என்றதும் நான்கு வேதங்கள் நம் நினைவுக்கு வரும். இந்த நான்கு என்பது வேதங்களை மட்டுமல்ல, திசைகளையும் நினைவுக்குக் கொண்டுவரும். நான்கு பக்கமும் ஒரே அளவான நேர்க்கோட்டை 90 டிகிரியில் நாம் வளைவின்றிப் போடும்போது, அந்தக் கோடுகள் ஒன்றோடொன்று சந்தித்துக்கொண்டு ஒரு சதுரம் உருவாகும். அந்தச் சதுரத்துக்கு வெளியே அதன் முனைகளை இணைக்கும்போதோ வட்டம் உருவாகும். அதாவது, பூஜ்ஜியம். இதைச் சற்று மாற்றி, 'நான்கும் வசப்பட்டால் பூஜ்ஜியமாகலாம்’ என்றும் கூறலாம்.

சதுரத்துக்குள் முன், பின், மேல், கீழ், இடது, வலது போன்றவை உண்டு. வட்டத்தில் இது எதுவுமே கிடையாது. இப்படிச் சொல்வதைப் புரிந்துகொள்ளச் சிரமமாக இருந்தால், ஒரு கற்பனைக்குத் தயாராகுங்கள்.

சதுரத்தின் மேலோ அல்லது உள்ளேயோ எங்கு வேண்டுமானால் போய் நின்று கொள்ளுங்கள்.

நீங்கள் நின்ற இடத்தை உடனே அடையாளப்படுத்த முடியும். உதாரணமாக, ஒரு சதுரத்தின் வலது பக்க கோட்டின் நடுவில் நீங்கள் நிற்கிறீர்கள் எனும்போதே, அது வலது பக்கம்; மேலே உள்ளது மேல் பக்கம்; கீழ் உள்ளது கீழ்ப் பக்கம்; நீங்கள் இருப்பது வலது கோட்டின் மையத்தில் என்று உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிந்து அடையாளம் காண முடியும்.

அப்படியே ஒரு வட்டத்தின் விளிம்பில் போய் நில்லுங்கள். அதே விளிம்பில் இன்னும் பலரும் நிற்கட்டும். வட்டத்தில் நிற்பவர்களுக்கு, முன்- பின்னோ, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எதுவும் கிடையாது. எதற்கு இந்த வியாக்கியானம் என்று கேட்பவர்களுக்காக, இன்னும் சற்று விளக்கமாகக் கூறுகிறேன்.

மனித வாழ்வில் பெரியவன், சிறியவன் எனும் பாகுபாடு உண்டு. வயதால் மட்டுமல்ல; செல்வத் தால், குணத்தால் என்று அநேக விஷயங்களால் இந்தப் பாகுபாடு தோன்றியே தீரும். இதைத் தவிர்க்கவே முடியாது. பாகுபாடு உள்ள இந்த வாழ்க்கையில், நம் நிலை எப்படிப்பட்டது, நாம் எங்கே உள்ளோம் என்பதை எல்லாம் கணிதப் படுத்திக் கூற முடியும். இப்படிக் கூற முடிந்தால், இதேபோன்று கணிதப்படுத்த முடிந்த சதுரத்தில் நாம் உள்ளோம் என்பது பொருள். இதிலிருந்து விடுபட வேண்டும் என்றாலோ, அதாவது மேல்- கீழ் அற்ற, உயர்வு- தாழ்வு அற்ற சம நிலைப்பாடு வேண்டும் என்றால் சதுரம் கடந்து, சதுர விளிம்புகளைத் தொட்டு உருவான வட்டத்துக்குச் சென்றுவிட வேண்டும்.

சதுரகிரி மலையும் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள் தந்து, அவர்களை மேல்- கீழ் பேதமற்ற, உயர்வு- தாழ்வு அற்ற பூஜ்ஜியத்துக்குள் கொண்டு சேர்த்துவிடுகிறது. இதை வைத்தே சித்த புருஷர்களை, ஞானிகளை 'பூஜ்யஸ்ரீ’ என்றழைக்கும் நிலை தோன்றியது. பூஜ்யத்துக் கென ஒரு மதிப்பில்லை. ஆனால், அது எந்த எண்ணின் பக்கத்தில் அமைந்தாலும், அந்த எண் மதிப்பில் பத்து மடங்கு அதிகரித்து விடும். ஞானிகளை நாடிச் செல்லும் நமக்கு அவர்களால் பல மடங்கு பலன் என்பதை எல்லாம் இதை வைத்தே உணரலாம்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 16

ஆக, சதுரகிரியில் ஆரம்பித்த சிந்தனை பூஜ்யம்- பூஜ்யஸ்ரீ வரை சென்றுவிட்டது. திரும்ப வருவோம்.

இந்தச் சதுரகிரியில் நாற்புறமும் உள்ள மலைகளும் நான்கு வேதங்களைக் குறிப்பதாகச் சொல்வர். இதற்கு 'பூலோக கயிலாயம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. இந்தப் பெயருக்கு பின்னாலே ரசமான ஒரு சிவச் சம்பவமும் உண்டு.

ஈசனுக்கும் பார்வதிக்கும் பூவுலகில் திருமணம் நடைபெற்றது. ஈசனின் உறைவிடமோ இமயம். அங்கு நடைபெற்ற அந்தத் திருமணத்தில் பிரம்மா, விஷ்ணு முதல் இந்திராதி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் பங்கு கொள்கின்றனர். இதனால் வடபாகம் தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்துவிடும் ஒரு நிலை. இதைச் சமன் செய்ய, அகத்திய முனிவரை சதுரகிரிமலைக்கு அனுப்பி, அங்கிருந்தபடியே கல்யாண கோலத்தை அவர் கண்டுகளித்திட ஈசன் அருளுகிறார். இதனால் இதற்கு 'பூலோக கயிலை’ என்ற பெயரும் உண்டாயிற்று.

இந்த கல்யாணக் கதையைக் கேட்கும் போது நமக்குள் நிறைய கிளைக் கேள்விகள் எழும். 'ஈசனுக்கும் பார்வதிக்கும் பூவுலகில் திருமணம் நடக்கத் தேவை என்ன? தன்னில் சரிபாதியை அந்த ஈசன் தேவியாருக்கு எப்போதோ தந்துவிட்ட நிலையில், இந்தக் கல்யாணம் என்பது எதற்கு? அடுத்து... இதற்கு எல்லோரும் வருவதால் எப்படி வடதிசை தாழ்ந்து தெற்கு உயர முடியும்? பூலோக அமைப்பு என்ன, தராசு போன்றதா... ஒரு தட்டு தாழ்ந்தால் ஒரு தட்டு உயர்ந்திட?’ எனப் பலப்பல கேள்விகள் எழும்.

இன்றைய நமது வாழ்க்கை முறையும், நம்மோடு கலந்துகிடக்கும் விஞ்ஞானமும் பகுத்தறிவும் இவ்வாறு நம்மை சிந்திக்கச் செய்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதேநேரம், விஷயத்துக்கு ஏற்ற அணுகுமுறை என்று ஒன்று உள்ளது. நாம் இந்த உலகில் ஒரு பொருளை வாங்கும்போது, அது ஆடையாக இருந்தால் கெஜத்திலும், முழத்திலும், மீட்டர் கணக்கிலும் அளந்தே வாங்குகிறோம். அதுவே திடப்பொருளாக இருந்தால், எடைக்கல்லால் நிறுத்து வாங்குகிறோம். திரவப் பொருளாக இருக்கும்பட்சத்தில் பாத்திரத்தில் கால்படி, அரைப்படி என்று நிரப்பி வாங்குகிறோம்.

இவ்வாறு அளந்து வாங்காமல் போனால் வாங்குபவருக்கும் சரி, விற்பவருக்கும் சரி, நியாயம் என்ற ஒன்று கிட்டாமல் போய்விடும். எனவேதான், நியாயமாக ஒரு வர்த்தகம் நடக்க, அதற்கேற்ற அளவு முறைகளை, அணுகுமுறைகளை நாம் உருவாக்கியுள்ளோம்.

இதேபோன்ற ஓர் அணுகுமுறையைத்தான்  காலம் தொடர்பான மற்றும் மறை தொடர்பான விஷயங்களிலும் நாம் பின்பற்றவேண்டும். ஆன்மிக சங்கதிகளை, அதிலும் சித்தர் பெருமக்கள் சார்ந்த விஷயங்களை மேலெழுந்த வாரியாக நோக்கினால் ஒரு பொருளைத் தரும்; ஆழ்ந்து நோக்கினால் வேறு பொருள் தரும். எனவே பொறுமையான, விரிந்த மனம் கொண்ட, எதிர்மறையற்ற, நம்பிக்கை எனும் தன்மை மிக முக்கியம்.

அந்தத் தன்மையோடு, இந்தத் திருமணம் குறித்தும், வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது குறித்தும் நோக்கும்போது, அதில் பல நுட்பங்கள் புதைந்திருப்பது தெரியும்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 16

நமது பாரத தேசத்தில் இமயம், தலை பாகத்தில் உள்ளது. சதுரகிரி கால் பாகத்தில் உள்ளது. திருமணம் என்பது சிவமும் சக்தியும் சேரும் ஒரு சம்பவம். சிவசக்தி சேர்க்கையை உலக இயக்கமாக- செயல்சக்தியாக உருவகப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தேவர்கள் அனைவரும் வருகிறார்கள் என்பதை, 'கலந்துகொள்ள வருகிறார் கள்’ என்று மேலோட்டப் பொருளாகவும், அந்த சிவசக்தி சேர்க்கை நிகழ உற்ற காரணமாக நிகழ்த்தும் கடமை உடையவர்களாக அவர்கள் உள்ளார்கள் என்பதும் ஆழ்ந்துபட்ட காரணமாகும். இது பூவுலகில் இமயத்தில் நடக்கிறது. இவ்வேளையில் ஈசனே அகத்தியரை சதுரகிரிக்கு அனுப்பி, அங்கிருந்தே கல்யாணக் கோலத்தை காணச் செய்கிறார் என்பது மேலெழுந்த வாரியாக ஒரு பொருளையும், ஆழ்ந்த நோக்கில் வேறு பொருளையும் கொண்டதாகும். மேலெழுந்த நோக்கில் சமநிலை ஏற்படுத்துவது என்பது, நோக்கம். ஆழ்ந்த நோக்கிலும் சமநிலை ஏற்படுத்துவதே நோக்கம். அது நிலமிசை அல்ல... மனமிசை!

ஆம்... இவ்வுலகில் சிவசக்தி சேர்க்கை என்னும் இயக்க கதியை- அதனால் உருவாகும் உயிர்களின் வாழ்வை அகத்தியர் போன்ற முற்றும் துறந்த முனிவர்களாலேயே சமப்படுத்த முடியும் என்பது ஒரு கருத்து.

அடுத்து, இமயத்துள் குவிந்திருக்கும் தேவசக்திக்குச் சற்றும் குறைவில்லாதது தவசக்தி என்பதை இது உலகுக்கு உணர்த்துகிறது என்பது இரண்டாவது கருத்து. இமயம் எப்படி இணையற்றதோ, அப்படியே சதுரகிரியும் இணையற்றது. இது மூன்றாவது கருத்து.

எல்லாவற்றுக்கும் மேலாக, சதுரகிரி என்பது திருவடி பாகம். அங்கு வருபவர்கள் திருவடி சேர்பவர்கள். திருவடி சேர்பவர்களுக்குத் திருவருள் கிடைப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லையே!

இப்படி, சதுரகிரிக்குப் பின்னே நாம் சிந்திக்க நிறைய விஷயங்கள் உள்ளன. இதனால்தான் இங்கே பதினெட்டு சித்தர்களில் இருந்து தேவர்கள் வரை சகலரும் வந்தும், தவம் செய்தும், வாழ்ந்தும், வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.

இப்படி ஓர் அற்புதமான தலத்தை நோக்கி கோரக்கர் வந்ததிலும் வியப்பில்லை அல்லவா?

அப்படி இங்கு வந்த கோரக்கருக்கு, பிரம்மமுனி என்று ஒரு சித்த புருஷரும் நட்பாகிறார். இருவருக்கும் எல்லா விஷயங்களிலும் ஒத்த கருத்து என்பது, அவர்களின் நட்பு இறுகவும் பெருகவும் காரணமாகிறது.

போகர் வாயிலாக அறிந்திருந்த மூலிகை ஞானம் இங்கே கோரக்கருக்குக் கைகொடுக்கிறது. எப்படித் தெரியுமா? அது ஒரு கதை!

கோரக்கர் பிரம்மமுனியோடு இருந்த ஒரு நாளில், சந்தன மகாலிங்கத்தையும் சுந்தர மகாலிங்கத்தையும் தரிசனம் செய்ய தேவலோகத்தில் இருந்து ஒரு ரதமும், அதிலிருந்து இந்திரன் முதலான தேவர்களும் வருகின்றனர்.

அது ஒரு மாலைப்பொழுது. அன்று திரயோதசி திதி. இந்தத் திதி சார்ந்த மாலைப்பொழுதை பிரதோஷ வேளை என்பார்கள். அதிலும், சனிக்கிழமை அன்று வந்திருக்கும் பிரதோஷம் அன்று!

இந்தப் பிரதோஷ வேளையின் பின்னே அமுதம் கடைந்த சம்பவம் நடைபெற்றதை நாமறிவோம். மேரு மலையை மத்தாகக் கொண்டு, வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு, தலைப்பாகத்தில் அசுரர்களும், வால் பக்கம் தேவர்களுமாய் நின்று பாற்கடலைக் கடைந்திட... அதில் முதலில் ஆலகால விஷம்தான் உருவாயிற்று. பிறகு, மகா லட்சுமி தேவியில் இருந்து உச்சைச்ரவஸ், கற்பக விருட்சம், காமதேனு என வரிசையாக செல்வ சம்பத்துக்கள் வெளிப்பட்டன. இறுதியாக, அமுத கலசம் வெளிப்பட்டது. இந்த அமுதத்தை அருந்தியவர்களுக்கு என்றும் சிரஞ்ஜீவித்துவமும், நோய் நொடியும், மூப்பும் நரையுமற்ற நித்ய யௌவனமும், ஆயுளும் ஸித்திக்கும் என்பதே அமிர்தத்தின் பின்புலம்.

இந்த அமிர்தம் வருமுன் ஆலகால விஷம் வந்து, அது அமிர்தம் கடையும் முயற்சியில் இருந்த தேவாசுரர்களை அழித்துவிடாதபடி இருக்க, அந்த ஈசனே அந்த ஆலகாலத்தை உண்டு தன்னுள் அடக்கமுனைய... அப்படிப்பட்ட தருணத்தில், சிவபெருமானின் கண்டகத்தில் பார்வதிதேவி கைவைக்க, அந்த விஷம் கண்டத்திலேயே நின்றுவிடுகிறது. இதனாலேயே, அந்த ஈசனும் நீலகண்டன் ஆனார்.

இப்படி விஷம் வெளிவந்த வேளைதான் பிரதோஷ வேளை. அதாவது, பெரிய தோஷமுள்ள ஒரு காலகதி. இக்கால கதியில் நம்மை அறியாது நாம் செய்திடும் சிறு பாவமும் பெரிதாகி தோஷமாகிவிடும். எனவே, இந்த வேளையில் இறை தியானத்தோடு இருந்து, இந்தத் தோஷம் ஏற்படாதவாறு நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும். இந்த வேளை கடந்து, அமிர்தம் கிடைக்கப்போகிறது. நாம் புரிந்த பூஜைக்கும் தியானத்துக்கும்கூட அருளானது அமிர்த பலத்தோடு கிடைக்கும். அதனால்தான் பிரதோஷ வழிபாட்டுக்குச் சிறப்பு அதிகம். அதிலும், கீர்த்தி மிகுந்த சிவாலயங்களில் கேட்கவே வேண்டாம்.

சதுரகிரி சந்தன- சுந்தர மகாலிங்கனோ பூலோக கயிலையின் உன்னத ரூபங்கள். அதனால்தான் அங்கே இந்திரனே வருகிறான். அவனே வரும்போது மற்ற சித்த புருஷர்கள் வராது இருப்பார்களா?

மொத்தத்தில், அன்று சந்நிதியில் அப்படியரு கூட்டம். அதில் தேவர்கள் ஒருபுறம், முனிவர்கள் இன்னொருபுறம். இரு தரப்பிலும் வழிபடுவதிலும்கூட ஒரு போட்டி! இதைக் கண்டபடி இருந்த கோரக்கர் மற்றும் பிரம்மமுனி இருவரது மனதுக்குள்ளும் ஒன்றே போல ஓர் எண்ணம். அதில் முதலான எண்ணம் என்ன தெரியுமா?

எதற்காக தேவர்கள், முனிவர்கள் என்கிற இரு நிலைப்பாடு? ஏன் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கக்கூடாது? பேதமே இல்லாத ஒரு மானுட நிலைப்பாட்டை உருவாக்க முடியாதா?

இப்படி ஒரு சிந்தனையைத் தொடர்ந்து... தேவர்கள், அசுரர்கள்தான் அமுதம் கடைந்து அதை அனுபவிக்க வேண்டுமா?

இப்படிச் சிந்தித்தவர்கள் மனதுக்குள், 'ஏன்... சித்தர்களாகிய நாம் இந்த மலையகத்தில் ஒன்றுகூடி மூலிகைகளில் இருந்து அமுதத்துக்கு இணையான ஒரு ரசத்தை எடுக்கக்கூடாது? அமிர்தத்துக்கு இணையான மூலிகைகள் உள்ள மலையாயிற்றே இது!’ என்கிற எண்ணமும் ஒரு சேர எழுந்தது.

ஒரு பிரதோஷ வேளையில் உருவான இந்தச் சிந்தனை... பின்னர், எப்படி எல்லாம் அவர்களைச் செயல்பட வைத்தது தெரியுமா?

- சிலிர்ப்போம்...