சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
##~##

காவிரிக் கரையோரத்தில் பயணிப்பது பரம சுகமானது. அப்படிப் பயணிப்பதை மன்னர் பெருமக்கள் பெரிதும் விரும்பினார்கள். ஜிலுஜிலுவென குளிர்ந்த காற்று முகத்தில் மோதி, கேசம் கலைக்கும் சுகத்தில், அரசியல் சூழ்ச்சிகளையும் அன்பற்ற உறவுகளையும் அவர்களால் ஏற்பட்ட காயங்களையும் மறந்துபோனார்கள்.

''பிரச்னைகளில் இருந்தும் கவலைகளில் இருந்தும் மக்களும் விடுபட்டு வாழ வேண்டும்; அவர்களும் இந்தக் காவிரிக் கரைப் பகுதியில் நடந்து வந்து, தங்கள் துக்கங்களையெல்லாம் மறக்கவேண்டும்; புண்ணிய நதியாம் பொன்னியில் குளித்துத் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள வேண்டும்; அதற்கேற்ப ஆங்காங்கே இறங்கிக் குளிப்பதற்கு வசதியாக படித்துறைகள் அமைக்க வேண்டும்'' என்று மன்னர் பெருமக்கள் ஆணையிட... அப்படி உருவானவைதான் காவிரிப் படித்துறைகள்.

திருச்சிராப்பள்ளியில் இருந்து காவிரிக் கரையையட்டி கல்லணையை அடைந்து, அப்படியே திருக்காட்டுப்பள்ளி வழியாகத் தலைநகர் தஞ்சாவூரை அடைவதற்கு ஒரு வழி உண்டு.

ஒருமுறை மன்னன் ஒருவன் அந்த வழியே காவிரிக் கரை ஓரமாக, ஜில்லென்று வீசும் காற்றிலும் அகமும் உடலும் குளிர, குதிரையில் வந்து கொண்டிருந்தான். அப்போது, அங்கே உள்ள ஆலயங்களைக் கவனித்தவனுக்கு, தானும் இதுபோல் இங்கே ஒரு சிவாலயம் கட்டி வழிபட்டால் என்ன என்கிற எண்ணம் மேலோங்கியது.

ஆலயம் தேடுவோம்!

கரிகாலச் சோழப் பெருவளத்தான் எனப் பெருமையோடு குறிப்பிடப்படும் கரிகால் சோழன் காவிரியின் குறுக்கே கட்டி வைத்த கல்லணை அமைந்திருக்க, அதன் வழியே பயணித்து அடுத்தடுத்த கிராமங்களைக் கடந்தால், திருப்பாலைத்துறை என்றும் திருப்பாற்றுறை என்றும் போற்றப்படுகிற சிவ ஸ்தலத்தை அடையலாம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம்- ஸ்ரீஆதிமூலநாதர். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீமேகலாம்பிகை (ஸ்ரீநித்ய கல்யாணி). திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இந்தத் திருத்தலத்தில் சூரிய பகவான், மார்க்கண்டேயர் முதலானோர் வழிபட்டு, சிவனிடம் வரம் பெற்றுள்ளனர்.

புராணப் பெருமைகள் கொண்ட இந்தக் கோயிலுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணைக்கும் நடுவே தானும் தன் பங்குக்கு அழகிய ஆலயம் ஒன்றை அமைப்பது என முடிவு செய்தான் மன்னன். அதன்படியே, கோயிலும் அமைத்து வழிபட்டான். தலத்தின் நாயகனாம் சிவனாருக்கு ஸ்ரீகயிலாசநாதர் என்றும், உமையவளுக்கு ஸ்ரீஆனந்தவல்லி என்றும் திருநாமங்கள் சூட்டி, கோயிலுக்குப் பல நிவந்தங்களும் எழுதி வைத்தான் மன்னன்.

கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தமான காவிரிக்கரையில், தென்னை மரங்களும் வாழையும் சூழ்ந்திருந்த வனப்பகுதியில் அந்தக் கோயில் அமைக்கப்பட்டது. பின்னாளில் அந்தப் பகுதி 'உத்தமர்சீலி’ எனும் அழகிய கிராமமாக உருவெடுத்தது. திருச்சியில் இருந்தும் தஞ்சாவூரில் இருந்தும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கல்லணையைப் பார்த்துவிட்டு, அப்படியே திருப்பாற்றுறை ஸ்ரீஆதிமூலநாதரையும் உத்தமர்சீலி ஸ்ரீகயிலாச நாதரையும் தரிசித்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டனர். மாட்டுவண்டி கட்டிக்கொண்டு, இன்னொரு வண்டியில் பாத்திர பண்டங்களை ஏற்றி வந்து, காவிரிக் கரையில் அடுப்புப் பற்ற வைத்துச் சமைத்துச் சாப்பிடுவதை மகிழ்ச்சிக்குரிய ஒரு பொழுது போக்காகவும் இறைத் தேடலாகவும் சேர்த்தே செய்துவந்தார்கள், மக்கள்.

ஆலயம் தேடுவோம்!

ஆனால், இதெல்லாம் ஒருகாலம்! 1924-ஆம் வருடத்துக்கு முந்தைய நிலவரம். அதன்பின்பு, கோயிலில் வழிபாடுகள் குறைந்து, மண்டபங்கள் இடிந்து, சிலைகள் பின்னப்பட்டுப் போய் விட்டன. போதாக்குறைக்கு அந்த வருடத்தில் கடும் வெள்ளம் ஏற்பட, வெள்ளத்தில் கோயில் இன்னும் சீர்குலைந்து போனது. இந்த வெள்ளத் தாக்குதலுக்கு எஞ்சியது, மூலவர் சந்நிதியும் ஸ்ரீகயிலாசநாதரும் ஸ்ரீஆனந்தவல்லியும் மட்டுமே!

அதையடுத்து, பன்னெடுங்காலமாக வழிபாடுகளோ திருவிழாக்களோ இல்லாமலே இருந்தது ஆலயம். நித்தியப்படி பூஜைகளைச் செய்வதற்கும் ஆளில்லை. அந்த வழியே சென்றவர்கள், 'அட... இங்கே ஒரு கோயில் இருக்கே!’ என்று ஆர்வத்துடன் இறங்கி வந்தாலும், உள்ளே நுழையமுடியாதபடி முள்ளும் புதருமாகக் கிடக்கவே... நொந்து போனார்கள் உத்தமர்சீலி கிராம மக்கள்.

ஆலயம் தேடுவோம்!

''ஒருகாலத்துல ரொம்ப அற்புதமாகத் திகழ்ந்த கோயில் இதுன்னு தெரிஞ்சதும், இதன் இன்றைய நிலையை நினைச்சு ரொம்பவே நொறுங்கிப் போயிட்டேன். இந்தக் கோயில் திருப்பணியில நாம பங்கெடுத்துக்கணும்னு ஊர்மக்கள்கிட்டப் பேசினேன். 'எங்க ஊர்ல இருக்கிற கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கணும். அதுபோதும் எங்களுக்கு’ன்னு ஒட்டுமொத்தமா எல்லாரும் சொன்னாங்க. எட்டு வருஷத்துக்கு முன்னாடி பாலாலயம் செய்து, திருப்பணியில இறங்கினோம். மெள்ள மெள்ள வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. மே மாசம் 27-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்திடணும்னு கிராம மக்கள் விரும்பறாங்க. அன்பர்களோட உதவியாலதான் அது சாத்தியமாகும். எல்லாத் துக்கும் மேலே சிவ கடாக்ஷமும் வேணுமே..!'' என்று திருப்பணிக் குழு ஒருங்கிணைப்பாளரும் கிருஷ்ணா ரைஸ்மில் மற்றும் ஆயில்மில் உரிமையாளருமான ரவி தெரிவிக்கிறார்.

ஆலயம் தேடுவோம்!

''காவிரியில குளிச்சு, கரையில பித்ருக்களைக் கும்பிட்டுட்டு, ஸ்ரீகயிலாசநாதருக்கு வில்வம் சார்த்தி வழிபட்டா, முன்னோர்கள் ஆசீர் வாதம் கிடைக்கும்; சாபம் நீங்கி சந்தோஷமாக வாழலாம். ஸ்ரீஆனந்தவல்லி அம்பாளுக்குப் புடவை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் பண்ணி வேண்டிக்கிட்டா, வீடே குதூகலமாயிடும்னு ஓர் ஐதீகம். இந்தக் கோயிலைச் சீரமைக்கிற வேலைகள்ல பங்கெடுத்துக்கிட்டு, திருப்பணிகள் நடக்க உதவி செய்ற அன்பர்கள் எல்லாருக்கும் முன்னோர்களோட ஆசீர்வாதம் கண்டிப்பா கிடைச்சே தீரும்'' என்று நெகிழ்ந்து சொல்கின்றனர் ஊர்மக்கள்.

கரிகாலன் கட்டிய கல்லணையும் ஞானசம்பந்தரால் பாடப்பட்ட திருப்பாற்றுறை தலமும் அருகருகே இருக்க, நடுவில் அமைந்துள்ள ஸ்ரீகயிலாசநாதர் கோயில் வழிபாடுகளின்றி இருக்கலாமா?  

ஊருக்கும் உலகுக்கும் சுபிட்சத்தைத் தந்து நம்மையெல்லாம் ஆனந்தமாக வாழ வைக்கும் ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் அருளாட்சி செய்யும் ஆலயம் இருளோ என்றிருக்கலாமா? திருவிளக்காலும் மின்னொளியாலும் ஜொலிக்க வேண்டும்தானே!

தலைமுறைகளைக் கடந்தும் பயன் தருபவை வாழையும் தென்னையும்! அப்படி வாழையும் தென்னையும் நிறைந்த இடத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தைப் பழைய பொலிவுக்குக் கொண்டு வருகிறவர் குடும்பங்களில் அடுத்தடுத்த தலைமுறையினரும் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதி. வாழையடி வாழையென நம் சந்ததி செழித்து வளரும் என்பது நிச்சயம்!

ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீகயிலாச நாதர் கோயிலுக்கு உங்களால் இயன்றதை அள்ளித் தாருங்கள். அமர்க்களமாகக் கும்பாபி ஷேகம் நடைபெறும் நாளில், அத்தனை தேவர்பெருமக்களும் தேவதைகளும் உங்களை ஆசீர்வதித்து அருள்வார்கள்!

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

எங்கே இருக்கிறது?

திருச்சியில் இருந்து காவிரிக்கரையோரமாக உள்ள தார்ச்சாலை வழியே பயணித்தால், சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது கல்லணை. கரிகால் சோழ மன்னன் கட்டிய இந்தக் கல்லணைக்கு முன்னதாகவே சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்தமர்சீலி.

திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருப்பாற்றுறை என்றும் திருப்பாலைத்துறை என்றும் சொல்லப்படுகிற ஸ்ரீஆதிமூலநாதர் கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்தமர்சீலி ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில்.