சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பனிமுடி தரிசனம்

பனிமுடி தரிசனம்

பனிமுடி தரிசனம்
##~##

ப்போது நாம் திராபுக்கில் இருக்கிறோம். இங்கே அதிகாலையில் நாம் காணும் கயிலைமலையானின் பொன்மேனி தரிசனம் நம்மைப் பரவசப் படுத்துகிறது. ஆதவனின் மஞ்சள் ஒளிவெள்ளத்தில் தகதகக்கும் கயிலையானை தரிசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும்!

திராபுக்கில் இருந்து 6 கி.மீ. தொலைவு பயணித்தால், டோல்மாபாஸ் என்னும் இடத்தை அடையலாம். இந்த இடம்வரை நாம் பயணிக்கும் மலைப்பகுதி 60 டிகிரி கோணத்தில் செங்குத்து உயரமாக ஒழுங்கற்று அமைந்திருப்பதால், மிகக் கவனத்தோடு பாதுகாப்பாகப் பயணிக்கவேண்டியது அவசியமாகிறது.

இப்போது நாம் பயணித்துக்கொண்டிருக்கும் இடத்தில், நமது சுவாசத்துக்கு அவசியமான ஆக்சிஜனின் அளவு குறைவு. சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக ஆக்சிஜன் முழுவதுமாக இல்லாமல் போய், திரும்பவும் வரும். ஓரிரு நொடிகளே இந்த நிலை நீடிக்கும் என்றாலும், அதை எதிர்பாராமல் திணறுவோர் நிறையப் பேர்!

கடும்குளிர், கடுமையான பனிப்பொழிவு, மழை- வெயில் எனக் காலநிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். கூடவே, ஆக்சிஜன் பிரச்னையும் இருப்பதால், சுவாசக் கோளாறு இருப்பவர்கள் ஆக்சிஜன் சிலிண்டரைக் கையோடு எடுத்துச் செல்வது அவசியம்.

இந்தக் கடுமையான பயணத்தில் திட உணவு சாப்பிட முடியாது என்பதால், குளூக்கோஸ் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். கயிலை யாத்திரை மேற்கொள்வதற்கு முன்பாக மூன்று மாத காலத்துக்கு யோகா, மூச்சுப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டிருந்தால், அதற்கான பலனை நாம் இந்த இடத்தில் எதிர்பார்க்கலாம். கயிலை யாத்திரை அழைத்துச் செல்லும் சுற்றுலா முகவர்கள், யாத்ரீகர்களை இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள்.

படத்தை கிளிக் செய்யவும்

பனிமுடி தரிசனம்

இந்தக் கடுமையான பயணத்தின் ஊடே நாம் காணும், உள்ளங்கைக்குள் அடங்கிவிடக்கூடிய அதிசயக் குட்டி முயல்கள் மற்றும் காகங்கள் நம்மைக் குதூகலம் அடையச் செய்கின்றன.

ஒருவழியாக 6 கி.மீ. தொலைவுக்குக் கஷ்டப்பட்டுப் பயணித்து டோல்மாபாஸை அடைகிறோம். இந்த இடத்தை வந்தடையும் ஒவ்வொருவருமே சாதனையாளர்கள்தான். ஆமாம்... உலகிலேயே, சாதாரண மனிதர்கள் வந்து செல்லும்படியான, கடல் மட்டத்தில் இருந்து அதிகபட்ச உயரத்தில் (சுமார் 18,600 அடி) உள்ள ஒரே இடம் இதுதான்.

டோல்மாபாஸ் வந்தடையும் யாத்ரீகர்கள், அங்குள்ள ஓர் இடத்தில் தங்களுக்கு விருப்பமான பொருள் ஏதேனும் ஒன்றை விட்டுச் செல்கிறார்கள். ஸ்வெட்டர், தொப்பி, ஆடை என்று அந்தப் பொருள் எதுவாகவும் இருக்கலாம். அப்படி ஏதேனும் ஒரு பொருளை விட்டுவிட்டு நாம் தொடர்ந்து பயணிக்கும்போது, 'வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை’ என்கிற படிப்பினையை உணர்வது நிச்சயம்!

(ஆன்மிக ஆல்பம் புரட்டுவோம்...)