சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!
##~##

துவாரகா- ஸ்ரீகிருஷ்ணர் அரசாட்சி செய்த புண்ணிய பூமி. 108 வைணவ திவ்ய தேசங்களில் துவாரகாவும் ஒன்று. மதுராவில் இருந்து, குஜராத் மாநிலத்தில் இருக்கும் துவாரகாவுக்கு சாலை மார்க்கமாகச் செல்ல சுமார் 1,291 கி.மீ. பயணிக்க வேண்டும். ரயில் பயணம் எனில் ஜெய்பூர், அஜ்மீர் வழியாக துவாரகாவுக்குச் செல்ல சுமார் 19 மணி நேரம் ஆகும்.

நாங்கள், தவிர்க்க முடியாத சில காரணங்களால் மதுரா, பிருந்தாவனம் தரிசனம் முடித்து சென்னைக்குத் திரும்பிவிட்டோம். துவாரகா பயணத்தை சில நாட்கள் இடைவெளிவிட்டு அமைக்கும்படி நேர்ந்தது.

துவாரகை ஒரே  திவ்ய தேசமாகக் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், ஐந்து வெவ்வேறு இடங்களில் உள்ள புண்ணிய பூமிகளையும் 'துவாரகா’ என்றே குறிப்பிடுகிறார்கள். இந்த ஐந்து க்ஷேத்திரங்களையும் 'பஞ்ச துவாரகா’ என்கிறார்கள். டாக்கோர் துவாரகா (குஜராத்), கண்ணன் அரசாண்ட துவாரகா (குஜராத்), பேட் துவாரகா (குஜராத்), நாத்வார்கா (ராஜஸ்தான்), கங்க்ரோலி (ராஜஸ்தான்) ஆகியவைதான் பஞ்ச துவாரகாக்கள்.

வாருங்கள்... நாமும் பஞ்ச துவாரகா தரிசனம் காணப் புறப்படுவோம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

சென்னையில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் செல்ல, நவஜீவன் எக்ஸ்பிரஸில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். ஏற்கெனவே சொன்னபடி ஒரு 'செக் லிஸ்ட்’ தயாரித்து, அதன்படி பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு, குலதெய்வத்தையும், பெருமாளையும் மனதார வணங்கிவிட்டு, பஞ்ச துவாரகா யாத்திரையைத் தொடங்கினோம்.

முதலில், நாங்கள் பயணமானது டாக்கோர் துவாரகாவுக்கு!

காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் நவஜீவன் எக்ஸ்பிரஸில் ஏறினோம். இயன்ற அளவு குடிநீரை வீட்டில் இருந்தே கொண்டுசெல்வது நல்லது. அது தீர்ந்துவிட்டால், செலவானாலும் பரவாயில்லை என மினரல் வாட்டரைப் பயன்படுத்துவதுதான் நல்லது என்பதால், அதற்கான ஏற்பாடுகளுடன் புறப்பட்டோம்.

நீண்ட தொலைவு பயணம். அகமதாபாத்துக்கு முன்பாக உள்ள 'ஆனந்த்’ என்கிற ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அடுத்த நாள் மாலை 5.30 மணியளவில், ஆனந்த் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் போய்ச் சேரும் என்றார்கள். அதன்படி, மாலை 5.40-க்கு அந்த ரயில் நிலையத்தை அடைந்தோம்.

அதே ஆனந்த் ஸ்டேஷனில் இருந்து கோத்ரா செல்லும் புறநகர் மின்சார ரயில் மாலை 7 மணிக்கு புறப்பட்டது. அதில் சுமார் 45 நிமிடப் பயணத்துக்குப் பிறகு டாக்கோர் ஸ்டேஷனை அடைந்தோம். இந்த இடத்தில், இந்த ரயில்வே ஸ்டேஷன் பற்றிய ஒரு தகவலைச் சொல்லியாக வேண்டும். இந்தியாவில் உள்ள மிக நீளமான 19 ரயில்வே பிளாட்பாரங்களில் இதுவும்  ஒன்று. இங்கேயுள்ள பிளாட்பாரத்தின்  நீளம் 1,470 அடி.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

டாக்கோரை நாங்கள் சென்றடைந்ததும், நன்கு பசியெடுக்க ஆரம்பித்துவிட்டது. சுவையான தென்னிந்திய உணவுகள் கிடைக்கும் உணவகத்தைத் தேடியபோது ஏமாற்றமே மிஞ்சியது. அங்கே இங்கே என்று நீண்டநேரம் தேடி அலைந்தபிறகு ஒருவழியாக, ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த ஒரு தென்னிந்திய உணவகத்தைக் கண்டுபிடித்து, டிபன் சாப்பிட்டோம்.

இந்தச் சாப்பாட்டு விஷயத்தில் ஒரு படிப்பினையையும் கற்றுக்கொண்டோம். ஆனந்த் ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே தென்னிந்திய உணவுகள் கிடைக்கும் உணவகங்கள் நிறைய இருந்தன. அங்கேயே இரவு உணவை பார்சலாக வாங்கிக்கொண்டு டாக்கோருக்கு வந்திருக்கலாம். அப்படிச் செய்யாததால், இங்கே ஓட்டலைத் தேடி அலையவேண்டியதாகிவிட்டது.

சாப்பிட்டு முடித்ததும், தங்கும் விடுதியைத் தேடிச் சென்றோம். இங்கே 'தர்மசாலாக்கள்’ என்று அழைக்கப்படும் தங்கும் விடுதிகள் நிறைய இருக்கின்றன. ஆட்டோக்கள் நம்ம ஊர் மாதிரி இல்லை. எங்கிருந்து எங்கு சென்றாலும் 20 அல்லது 25 ரூபாய்தான் வாங்குகிறார்கள். ஆட்டோவுக்கு 20 ரூபாய் கொடுத்து 'அதிதி பவன்’ என்ற தர்மசாலாவில் வந்து இறங்கினோம். அறை வாடகையாக ஒரு நாளைக்கு ரூ.350 கேட்டார்கள். நாங்கள் எங்களுக்கான அறையைத் தேர்வு செய்து தங்கினோம்.

மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம் ஸ்வாமி தரிசனம் செய்யப் புறப்பட்டுவிட்டோம். முதலாவதாக 2 கி.மீ. தொலைவில் இருந்த ஆலயம் நோக்கி நடந்தே சென்றோம். ஸ்ரீகண்ணனைத் தரிசிக்கப் போகும் முன்பாக டாக்கோர் நகரம் பற்றி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.

குஜராத்தின் கைரா மாவட்டத்தில், தஸ்ரா தாலுகாவில், ஷேதி ஆற்றங்கரையில் அமைந்திருக் கும் சிற்றூர்தான் டாக்கோர். ஆனந்த் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சைதன்ய மஹாபிரபுவும் மீராவும் டாக்கோர் வந்து தரிசித்திருக்கிறார்களாம். நவீன குஜராத்தின் தலைசிறந்த கவிஞரான நன்ஹாலால் தன்னுடைய புகழ்பெற்ற படைப்பான ஹரிஸம்ஹிதாவைப் பிரசுரிப்பதற்கு முன்னர் இங்கு வாசித்திருக்கிறார். காந்தியடிகளும் தரிசனம் செய்திருக்கிறார் என்றார்கள்.

சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு, ஸ்ரீகிருஷ்ணர் கோயிலைச் சென்றடைந்தோம். டாக்கோர் நகரின் முக்கியமான கடைத்தெரு வில் கோட்டை மதில்கள் சூழ, கோமதி ஏரியின் அருகில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது ஆலயம். இங்கே அருளும் ஸ்ரீகிருஷ்ணரை 'ரஞ்சோட்ராய்ஜி’ என்று அழைக்கிறார்கள். ரஞ்சோட்ராய்ஜி என்றால், 'போர்க்களத்தை விட்டு விலகியவர்’ என்று பொருள்.

இங்கே கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீகிருஷ்ணர் முதலில் துவாரகையில்தான் இருந்தாராம். தீவிர கிருஷ்ண பக்தரான 'விஜயானந்த போதனா’ என்னும் ராஜபுத்திரர், துளசிச்செடி ஒன்றை மண்பானையில் எடுத்துக்கொண்டு, ஆண்டுக்கு இருமுறை துவாரகை சென்று ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். 72 வயதான பின்பு, முதுமையின் காரணமாக அவரால் துவாரகை சென்று தரிசிக்க இயலவில்லை. அவரது நிலையை உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணர், துவாரகையில் இருந்து டாக்கோருக்கு எழுந்தருளி அவருக்கு அருள்புரிந்ததாகச் சொல்கிறது இக்கோயிலின் ஸ்தல புராணம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

8 குவிந்த மேற்கூரைகளும், 24 சிறு கோபுரங்களும் கொண்டு அழகாகத் திகழ்கிறது ஆலயம். கோயிலின் மையத்தில் இருக்கும் கோபுரம் 27 மீட்டர் உயரம் கொண்டது. தங்கக் கலசத்துடனும் வெள்ளைப் பட்டுக்கொடியுடனும் அற்புதமான தோற்றம் அளிக்கிறது ரஞ்சோட்ராய்ஜி ஆலயம்.

ஆலயத்தின் உட்புறத்தில் இருக்கும் பெரிய ஹாலில் ஸ்ரீகண்ணனின் பால்ய பருவத்து லீலைகள் படங்களாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பிரமாண்டமான சர விளக்குகள் மனத்தைக் கவர்கின்றன.

கோபால் ஜகந்நாத் அம்பெகர் என்பவர் பூனாவின் பேஷ்வா அரசவையில் ஷெராஃப் என்ற பதவி வகித்தவர். இவரது கனவில் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றி, இங்கே ஆலயம் எழுப்புமாறு சொன்னாராம். அதன்படி, 1772-ல் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இன்றைக்கும் இவரது சந்ததிகள் ஆலயத்துக்குக் கைங்கர்யம் செய்து வருகிறார்களாம்.

ஆலயத்துக்கு மிக அதிகமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கைகளில் துப்பாக்கிகளோடு ஆங்காங்கே காவலர்கள் நிற்கின்றனர். கோயிலுக்கு உள்ளே புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மூலவரான ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம், கறுப்பு உறைகல்லால் ஆனது. இது, 1 மீட்டர் உயரமும் 45 செ.மீ. அகலமும் கொண்டது. விலை உயர்ந்த ஆபரணங்களையும் ஆடைகளையும் அணிந்து தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர். ஸ்வாமியின் சிம்மாசனம் நுணுக்கமான மர வேலைப்பாடுகளால் ஆனது. தங்கத்தாலும் வெள்ளியாலும் இது இழைக்கப்பட்டிருக்கிறது. தரை முழுக்கப் பளிங்குக் கற்கள் பாவியிருக்கிறார்கள். தரிசிக்கும்போது பக்தர்கள் கைகளைத் தட்டி மகிழ்கிறார்கள். தங்களது உள்ளங்கைகளை ஸ்ரீகண்ணனுக்குக் காண்பிக்கிறார்கள். தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு முழுக்க முழுக்கத் தனி வரிசைதான்.

ஆலயத்துக்கு உள்ளேயே ஆங்காங்கே சி.சி.டி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, மூலவருக்கு நடைபெறும் பூஜை புனஸ்காரங்களை வெளியில் இருப்பவர்களும் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் ஷெனாய் மற்றும் பேரிகைகள் மூலம் இசை ஒலி எழுப்புகிறார்கள். ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வருவார்களாம்.

கோயிலுக்கு வெளியே, மிக அருகிலேயே லட்சுமிதேவிக்குத் தனி ஆலயம் ஒன்று இருக்கிறது. அழகிய சிறிய ஆலயம். தேவியை வணங்கிவிட்டு, விடுதி வந்தடைந்தோம்.

அடுத்ததாக, ஸ்ரீ கண்ணன் அரசாண்ட துவாரகை நோக்கிப் பயணிக்கத் துவங்கினோம். அதற்காக, டாக்கோரில் இருந்து ஒரு ஷேர் டாக்ஸியில் 100 ரூபாய் கொடுத்து ஆனந்த் ரயில்வே ஸ்டேஷன் வந்தோம். பிற்பகல் 3 மணிக்கு அங்கே இருந்து விவேக் எக்ஸ்பிரஸ் மூலம் துவாரகா நோக்கிப் பயணித்தோம். மனத்தில் திருமழிசை ஆழ்வாரின்,

'சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற மாயன், அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்'

என்ற பாசுரம் ஒலித்தபடி இருந்தது.

ஸ்ரீ கண்ணன் அரசாண்ட அந்த புண்ணிய பூமி எங்கள் மனக்கண் முன் வந்து நின்றது.

- யாத்திரை தொடரும்...