
##~## |
'நாலு பேர் போன வழியில் போ!'' - எல்லோருக்கும் ஓரளவுக்காவது பழக்கப்பட்ட வார்த்தைகள்தான் இவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நான்கு (நாலு) என்பது மிகவும் விசேஷமான எண்ணிக்கை. ரிக், யஜுர், சாம, அதர்வணம் என, வேதங்கள் 4. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என, திசைகள் 4. நீளம், அகலம், உயரம், கனம் (எடை) என எந்தவொரு பொருளுக்கும் இருக்கும் அளவீடுகள் 4. உத்தமம், மத்திமம், அதமம், அதமாதமம் என, நிலைகள் 4.
இவ்வாறு, நான்கு என்பதில் பலவிதமான படிக்கட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்றான, ஓர் உத்தமமான வாக்குதான், 'நாலு பேர் போன வழியில் போ!’.
அந்த நான்கு பேர் யார், யார்? அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரே அந்த நான்கு பேர். இறைவனை அடையும் நான்கு நெறிகளைத் தங்கள் அனுபவத்தில் நடத்திக்காட்டி, நமக்கு உணர்த்தியவர்கள் அவர்கள்.
'நால்வர் நெறி’ என்றதும் என்னவோ ஏதோ என்று தேவையில்லாத ஒரு பிரமிப்பில், குழப்பத்தில் ஆழவேண்டாம். 'நெறி’ என்றால், 'வழி’ என்று பொருள். 'நால்வர் நெறி’, என்றால், நால்வர் காட்டிய வழி என்று பொருள்.

இந்த நால்வரில், தொண்டு வழியைக் காட்டியவர்- அப்பர் ஸ்வாமிகள். குழந்தை யாக இருந்து, இறைவனை அடையும் வழியைக் காட்டியவர்- சம்பந்தர். தோழனாக இருந்து, தோழமை வழியைக் காட்டியவர்- சுந்தரர். அடிமையாக இருந்து, இறைவனை அடையும் 'தாஸ’ மார்க்கத்தைக் காட்டியவர்- மாணிக்கவாசகர்.
இந்த நான்கு வழிகளில் எந்த வழியைப் பின்பற்றினாலும், அங்கே நம்மை எதிர் கொள்ள ஆண்டவன் தயாராக இருப்பான். அதை நமக்கு உணர்த்துவதே நால்வர் வரலாறு. நால்வர் பெருமக்களின் திருவடிவங்களும் திருக்கோயில்களில் இடம் பெற்றிருப்பதற்கும் இதுவே காரணம்.
நால்வர் பெருமக்களின் வாழ்வில் நடந்த பல சம்பவங்களை சேக்கிழாரின் பெரிய புராணம், உபமன்யு முனிவரின் உபமன்யு பக்த விலாஸம், அகத்தியர் எழுதிய சிவபக்த விலாஸம், திருவிளையாடற் புராணம், சிவ லீலார்ணவம், சரஸ்வதியின் அவதாரமாகவே திகழ்ந்த மகாவித்வான் பிள்ளைவாள் அருளிய திருப்பெருந்துறை புராணம் முதலான பல நூல்கள் விவரிக்கின்றன.
ஆனால், அவற்றில் எல்லாம் காணமுடியாத அரும்பெரும் தகவல்களை அற்புதமாக அள்ளிக் கொட்டியிருக்கிறது ஒரு நூல். அது- நால்வர் நான்மணிமாலை. இதை எழுதியவர், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். இவர் சம்ஸ்க்ருதம், தமிழ் எனும் இரு மொழிகளிலும் கரைகண்டவர். நால்வர் பெருமக்களைப் பற்றி இவர் சொன்ன அரிய தகவல்களில் இருந்து ஒன்றே ஒன்றை மட்டும் நாம் இங்கே பார்க்கலாம்.
பெரிய புராணத்தில் அனைவருக்கும் தெரிந்த வரலாறு இது. குளத்தில் நீராடச் சென்ற சிறுவர்களில் ஒருவனை, குளத்தில் வசித்த முதலை ஒன்று விழுங்கிவிட, பல வருடங்களுக்கு பிறகு அந்தத் தலத்துக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயனார் பதிகம் பாடி, சிறுவனை உயிருடன் மீட்ட கதைதான் அது. அவிநாசி தலத்தில் நிகழ்ந்த இந்த புண்ணியக் கதை கடந்த சக்தி விகடன் இதழிலும் (கருணையே உருவான அம்மை... அருளை வழங்கும் அப்பன்) விரிவாக வெளி வந்திருந்தது. இதை, 'நால்வர் நான்மணிமாலை’ விவரம் சொல்லித் தத்துவார்த்தமும் சொல்லும்போது, பிரமிப்பாக இருக்கிறது.
இந்தக் கதையில் வரும் சிறுவன் யார்? குளம் என்பது எது? முதலை என்பது எது? யமன் என்பது யார்? சிறுவனை உமிழ்ந்த கரை எது? தந்தை யார்? - என்பதற்கான ஆழ்ந்த தத்துவங்களைக் கூறி, நம் மனத்தில் பதிய வைக்கிறார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.
சிறுவன் என்பது உயிர். குளம்- வளைந்த வில்லைப் போன்ற உடல். முதலை- ஆணவமலம். கூற்றுவன்- ஆதி திரோதாயி எனும் சக்தி. கரை- நாதாந்தம். தந்தை- ஒப்பற்ற சிவபெருமான்.
இந்தத் தகவல்களை மனத்தில் பதிய வைத்துக்கொண்டால், 'நால்வர் நான்மணிமாலை’ சொல்லும் தத்துவார்த்தம் எளிமையாகப் புரியும். அதாவது, உடலில் உயிர் என்பது வந்து, புகுந்து இருக்கிறது. அது ஆணவத்தில் அகப்பட்டு அழிந்தது. குருநாதரின் (சுந்தரரின்) ஞான ஆற்றலால்,

ஆணவத்தினின்று உயிர் விலகியது. அதன்பிறகு, ஆதி திரோதாயி என்னும் சக்தி (கூற்றுவன்) ஆணவம் நீங்கிய உயிரை, நாதாந்த வெளியைக் கடந்து இருக்கும் சிவபெருமானின் திருவடிகளில் சேர்த்தது.
இக்கருத்தைச் சொல்லும் பாடல்;
வாங்கு சிலை புரையும் உடல் எனும் குளத்தின் மூல
மலமெனும் ஓர் வெங்கரவின் படுவாயில் நின்றும்
தீங்கில் உயிர் எனும் பனவக் குலமகனை ஆதி
திரோதாயி என்னும் ஒரு வெந்திறல் கூற்றுவனால்
ஓங்குறு நாதாந்தம் எனப் பெயரிய அக்கரையின்
உமிழ்வித்துச் சிவம் எனும் ஓர் தந்தையடும் கூட்டாய்
கோங்கமுகை கவற்றுமிளமு லைப்பரவை மகிழக்
குண்டையூர் நெல் மலை முற்கொண்ட அருட்கடலே!
(நால்வர் நான்மணிமாலை 11-ஆம் பாடல்)
இவ்வாறு தனக்கு அருள்புரியும்படி சுந்தரரிடம் வேண்டிய இந்த நூலின் ஆசிரியரான துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இளம் வயதில் இவர் ஒருமுறை திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தபோது, கிரிவலம் முடிவதற்குள்ளாகவே நூறு பாடல்களைக் கொண்ட 'சோணசைல மாலை’ எனும் நூலைப் பாடி முடித்த பெருமை கொண்டவர்.
அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் நால்வர் மீதும், ஒவ்வொருவருக்கும் பத்து பாடல்கள் வீதம் நாற்பது பாடல்களைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதியுள்ளார். நால்வர் பெருமக்களைப் பற்றிய நுணுக்கமான தகவல்களை கொண்டது இந்த நூல்.
- இன்னும் அள்ளுவோம்...