சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

கேள்வி - பதில்

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்இறைநாமம் சொன்னால் போதுமா?

##~##

'தவம், வேள்வி, பூஜை ஆகியன எல்லாம் இன்றைய சூழலுக்கு உதவாது. எப்போதும் கடவுளின் திருப்பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தாலே போதும்... விருப்பங்கள் நிறைவேறும்; மன நிம்மதியும் கிடைக்கும்’ என்கிறார் சொற்பொழிவாளர் ஒருவர். இது சரிதானா?

- இ.ராமகிருஷ்ணன், மதுரை-9

தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் குடும்பம் மற்றும் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் உண்டு. அவற்றோடு வாழ்க்கைப் பயணத்தை சரிவர நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். அதற்குப் பணம் ஈட்ட வேண்டும்; பணம் சம்பாதிக்க, வேலையை ஏற்றாக வேண்டும்; பெற்றோரைக் கவனிக்க வேண்டும்; குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். இதெல்லாம் அறத்தில் அடங்கும். இப்படிப் பிறக்கும்போதே தன்னுடன் இணைந்த அறத்தை அலட்சியப் படுத்திவிட்டு, பக்தனாக மாறுவதைக் கடவுள் ஏற்கமாட்டார்.

'தாய்- தந்தையைக் கவனி’ என்கிறது வேதம். பிறந்த குழந்தைகளுக்கும் மனைவிக்கும் பாதுகாப்பாகச் செயல்படச் சொல்கிறது தர்மசாஸ்திரம். 'வேதமும் தர்மசாஸ்திரமும் சொன்னதை அலட்சியம் செய்பவன் எனது பக்தனாக மாட்டான்’ என்கிறார் கண்ணன் (ச்ருதிஸ்ம்ருதீ மம வாக்யே...). தர்மசாஸ்திரக் கோட்பாடுகளைச் செயல்படுத்தும்போது, பக்தி யோடும், பகவான் நாமாவோடும் சேர்த்துதான் செயல்படுவோம். நாம் செய்யும் கடமைகளில் பகவான் நாமாவும்,

கேள்வி - பதில்

பக்தியும் கலந்திருக்கும். விக்னேஸ்வரரை வணங்கி, செயலில் இறங்குவோம். தவமும் பக்தியை இணைத்துக்கொள்ளும். அதேபோன்று, வேள்வியிலும் கடவுள் பக்தியும் நாமஸ்மரணமும் சேர்ந்தே இருக்கும். ஸ்மார்த்த கர்மங்களிலும் பக்தியோடும் பகவான் நாமாவோடும் கலந்துதான் வைத்திருக்கிறார்கள். சிராத்தத்தில் வேள்வியில் உணவு அளிக்கும்போது, கீதை ஸ்லோகத்தை உச்சரிப்போம் (ப்ரம்மார்ப்பணம் ப்ரம்ம ஹவி:...). செய்யும் சடங்குகளை பகவத் அர்ப்பணமாகச் செய்வோம்.

பூஜைகளில் பக்தி மேலிட்டுக் காணப்படும். ஒன்பது வகையான பக்தியும் பூஜையில் இருக்கும். நாமாவை உச்சரித்து உச்சரித்து ஒவ்வொரு பணிவிடையும் இருக்கும். நாமாவைச் சொல்லிக்கொண்டு அர்ச்சனை செய்வோம். செய்யும் சடங்கில் குறையை அகற்ற, அவன் பெயரைச் சொல்வோம் (யஸ்யஸ்ம்ருத்யாச.....) பிண்ட ஸம்யோஜனத்திலும் உத்க்ராந்தி கோதானத்திலும்கூட மந்திரத்துடன் சிவ சிவ சிவ... நாராயண நாராயண நாராயண... என்று பகவானின் நாமாவை உச்சரிப்போம். (இறந்த நம் முன்னோரை திவ்ய பித்ருக்களுடன் இணைப்பது பிண்டஸம்யோஜனம். இறக்கும் தறுவாயில் கபம் தொண்டையை அடைத்துக்கொண்டு, உயிர் வெளியேற முடியாமல் தத்தளிக்கும்போது, வெளியேற வழி அமைத்துக் கொடுப்பது உத்க்ராந்தி கோதானம் ஆகும்.). ஆக... தவம், வேள்வி, பூஜை எல்லாவற்றிலும் பகவான் நாமா இணைந்திருக்கும். செயல்பாடுகள், கடமைகள் அத்தனையையும் பகவான் நாமாவுடன் இணைத்து வைத்திருக்கிறார்கள். ஆகவே, அம்மூன்றும் பகவான் நாமாவை ஜாக்கிரதையுடன் சொல்ல வைக்கும்.

பகவான் நாமாவைச் சொன்னால் போதும் என்ற கோணத்தில், வாய் மட்டுமே பெயரைச் சொல்ல, மனம் சம்பந்தப்படாமல் இருந்தால், நமது விருப்பம் ஈடேறாது. கர்மாவுடன் இணைந்த பக்தி நம்பிக்கைக்கு உகந்தது. கர்மாவைக் கைவிட்ட பக்தி பயன்படாமல் போகலாம். வாய் மட்டும் நாமாவைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, மனம் பல இடங்களில் பயணம் செய்யும். அப்படியில்லாமல், மற்ற புலன்களையும் கர்மாவுடன் இணைத்து நாமாவைச் சொல்லும்போது, மனமும் அதில் தொட்டுக்கொண்டிருக்கும். மற்ற புலன்களும் இறைப்பணிக்கான வேலையில் மூழ்கி இருக்கும்போது மனம் தடுமாறாது. ஆகவே, முன்னோர் வகுத்த வழி நம்பகமானது.

'நாமாவைச் சொன்னால் போதும்’ எனும் புதுவழி ஏமாற்றத்தை அளிக்கலாம். எல்லா நேரமும் சொல்வதைத் தவிர்த்து தவம், வேள்வி, பூஜை இதில் மட்டும் இறைநாமாவை இணைத்துச் செயல்படுவது சிறப்பு. 'மற்ற சிந்தனைகளை அறவே அகற்றி, என்னை மட்டும் மனத்தில் பதிய வைத்து வழிபடு’ என்பான் கண்ணன். இப்போதைய கோலாகலமான சூழலில், ஆசையில் தோய்ந்து ஒன்றியிருக்கும் மனத்தை விடுவிக்க இயலாது. கேட்பதற்கு இனிப்பாக இருக்கும்; பக்தியைக் கையாளுவது கடினம். ஒன்று மற்றொன்றை நிறைவு செய்யும் விதத்தில் இணைந்திருக்கும் பக்தியையும் கர்மத்தையும் பிரித்தால் பயன் தராது.

கேள்வி - பதில்

ஒருவனிடம் தினமும் முட்டையிடும் கோழி ஒன்று இருந்தது. ஒருநாள் காலையில், உணவுக்கு ஒன்றும் கிடைக்காத நிலையில், கோழியை அறுத்து பாதியை கறிக்கும், மறு பாதியை முட்டை இடவும் பயன்படுத்த எண்ணினான். அப்படியே செயல்பட்டான். ஆனால், இரண்டும் பயனற்றுப் போய்விட்டது. இதை, 'அர்த்த ஹரதீன்யாயம்’ என்கிறது சாஸ்திரம். கர்மாவிலிருந்து பக்தியைப் பிரித்துப் பார்த்தால் விருப்பம் இழக்கப்பட்டுவிடும். ஆகவே, சமர்த்தாகச் செயல்படுங்கள்.

இப்படி கர்மத்துக்கு உயர்வளித்து, ஒருசாரார் விளக்கம் சொல்வார்கள்.

விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. வாழ்க்கைப் பயணம் தங்கு தடையின்றி தொடர, நாள் முழுவதும் உழைக்க வேண்டியிருக்கிறது. உலகளாவிய கால மாற்றம், சிந்தனையைத் திசை திருப்பி, உலக சுகங்களைச் சுவைப்பதில் நாட்டத்தை வளர்த்துள்ளது. உழைப்பில் கிடைத்த ஊதியம், அதன்பொருட்டு இழந்துவிட்ட உடல் வலிமையை நிறைவு செய்யும் அளவுக்குப் போதுமானதாக இல்லை. ஒருவேளை போதுமானதாக இருந்தாலும், அடுத்தடுத்து உழைக்கப் பயன்படுகிறதே தவிர, பொது விஷயங்களில் ஈடுபடும் அளவுக்கு நேரமும் இல்லை; தெம்பும் இல்லை. அதேபோன்று, தவத்துக்கான சூழல் நாட்டிலும் இல்லை; காட்டிலும் இல்லை. வேள்வியில் இறங்கினால், ஜீவகாருண்ய அமைப்புகள் எதிர்த்துச் செயல்பட்டு,

வேள்வியை நிறுத்திவிடும். பூஜை- புனஸ்காரங் களுக்குச் சுதந்திரம் இருந்தாலும், பொருளாதாரம் போதுமானதாக இருப்பதில்லை. ஒருவேளை ஊதியம் பெருகினாலும், சேமிப்பில் பற்று இருக்குமே தவிர, பூஜையில் இருக்காது. வருங்காலத்தில் நம்பிக்கை இல்லாததால், சேமிப்பைத் தொடரவே மனம் ஏங்கும். பங்குச் சந்தையும் வங்கிகளும் பணத்தைப் பெருக்கத் தூண்டிவிடுவதால், ஆன்மிக வாழ்வில் சிந்தனை திரும்பாது.

பூஜை புனஸ்காரங்களையும் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வியாபார நோக்கில் பயன்படுத்துவதால், பூஜையின் குறிக்கோள் முற்றிலும் மாறிவிட்டது. எனவே தவம், வேள்வி, பூஜை மூன்றையும் இன்றைய சூழலில் ஏற்க இயலாது; நாமும் ஏற்கத் தயார் இல்லை. அறம், ஆன்மிகம் போன்றவற்றுக்கு அன்றாட வாழ்வில் பங்கு இல்லை என்று எண்ணும் தலைமுறை தோன்றிவிட்டது. ஆகவே, நாம சங்கீர்த்தனத்தை மட்டுமே நம்மால் ஏற்க முடியும்.

கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் போதும் என்கிறது கவிஸந்தரணோபநிஷத். பிரகலாதன், அஜாமிளன் ஆகியோர் நாம சங்கீர்த்தனத்தில் வீடுபேறு அடைந்தனர் என்கிறது புராணம். ஆகையால், நாம சங்கீர்த்தனம் பண்ணினால் விருப்பம் ஈடேறும். எப்போதும் எந்தச் சூழலிலும் நாம சங்கீர்த்தனம் செய்ய இயலும். அதற்கு எதிர்ப்பு இல்லை; நமக்கும் அதில் திறமையும் பிடிப்பும் உண்டு. ஆக, நாம சங்கீர்த் தனமே போதுமானது.

இப்படி நாம சங்கீர்த்தனத்துக்கு உயர்வு தருவார்கள் சிலர்.

கேள்வி - பதில்

கர்மத்துக்கு உயர்வு அளிக்கும் நோக்கில் முதல் வாதம் தென்படுகிறது. நாம சங்கீர்த்தனத்தை உயர்வாக எண்ணுகிறது, இரண்டாவது விளக்கம். இரண்டும் பாரபட்சமற்ற விளக்கத்தைக் கையாளவில்லை.கர்மத்தை உயர்வாக ஏற்றால், பரம்பொருளை மறந்து இன்றைய யுக்திவாதியாக மாறி, மனிதத் தன்மையை இழந்து தரம் தாழ்ந்துவிட வாய்ப்பு உண்டு. நாம சங்கீர்த்தனத்தை மட்டுமே ஏற்றால், அறத்தை மறந்து தரத்தைத் தாழ்த்திக்கொள்வான். உடலில் இருக்கும் அறிவுப் புலன்கள் சிந்தனையை வளர்க்கும்; செயல் புலன்கள் கர்மத்தை வலியுறுத்தும். தலையில்லாத முண்டமும், முண்டம் இல்லாத தலையும் செயல்பட இயலாது. ஒன்று மற்றொன்றை நிறைவு செய்கிறது. பக்தியும் கர்மமும் இணைந்த வாழ்க்கைதான் இனிக்கும்.

கடவுள், கர்ம ஸ்வரூபியாகவும் பிரம்ம ஸ்வரூபியாக வும் இருப்பார் என்கிறது தர்மசாஸ்திரம் (கர்மப்ரம்ம ஸ்வரூபிணே ஸ்வர்க்காபவரிக்க ரூபாய...).

இரண்டையும் தனித்தனி வழியாகப் பார்ப்பது ஏற்புடையது அல்ல. வேதம் அறத்தில் ஈடுபடச் சொல்லும். அதே நேரம் ஆன்மிகத்தையும் இணைத்துக் கொள்ளச் சொல்லும் (சத்யம்வத தர்மம் சர, ஸ்வாதியாயான்மா ப்ரமத:). இரண்டையும் பிரித்துப் பார்ப்பதை ஸனாதனம் ஏற்காது. ஆன்மாவின் தொடர்பு இன்றி, உடல் இயங்காது.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. தவத்தை ஏற்க காட்டுக்குச் செல்லவேண்டாம்; வீட்டிலேயே நடத்தலாம். வேள்வியும் அப்படியே! இன்றைய சுதந்திர பாரதத்தில், நமது பிறப்பு உரிமையை எவராலும் பறிக்க இயலாது. பொருளாதாரம் பூஜை புனஸ்காரத்தைத் தடுக்காது. மானசீக பூஜையையும் ஏற்பார் கடவுள். மானசீக பூஜையை உயர்ந்ததாகச் சொல்வார் ஆதிசங்கரர் (அந்தர் முகஸமாராத்யா...). அற விளக்கத்தை முறையோடு விளக்கினால், வேள்வியை நடத்தலாம். நமக்குப் பிடிப்பு இல்லாததில் குறை கண்டு ஒதுக்குவது நல்ல சிந்தனை அல்ல. யுகத்துக்காக அறம் இல்லை. நமக்காக அறம். எண் ணமும் சூழலும் இருந்தால், எதையும் ஏற்கலாம்.

மானசீக பூஜையில் ஆன்மாவை அமுதாகப் படைப்போம். நமது ஆன்மா அழிவற்றது. அது அமுது. அதையே பரமாத்மாவோடு இணைத்துவிடுவோம் (அமிருதாத்மனே அமிர்தம் நிவேதயாமி). இதைவிட உயர்ந்த சரணாகதி இல்லை. கர்மா வழியாகத்தான் ஈசனை வழிபடுவோம். உதடு மட்டும் அசைந்து பகவான் நாமம் வெளிவருவது நாம சங்கீர்த்தனம் ஆகாது. மனம் முழுவதும் கடவுள் சாந்நித்தியம் நிறைந்தால், அந்த மனத்தின் செயல்பாட்டிலும் சாந்நித்தியம் இருக்கும். கடவுள் நாமத்தை உச்சரித்தால் அது உபாசனையாக மாறும். கர்மமும் சங்கீர்த்தனமும் இணைய வேண்டும். நாமாவை உச்சரிப்பது கர்மம்தான். செயல்பாட்டில் வெளிவருவது

பகவான் நாமா. ஆகையால் பிரிக்க இயலாத இரண்டைப் பிரித்துப் பார்ப்பதும், இரண்டில் ஒன்றுக்கு உயர்வளிப்பதும் உள்நோக்கம் உடையது.

கர்மம், நாம சங்கீர்த்தனம் இரண்டும் சம அளவில் தகுதி பெற்று இருப்பதால், இரண்டையும் ஏற்க வேண்டும். ஆகவே, ஒருதலைப்பட்சமான இரண்டு வாதங்களையும் ஏற்க இயலாது.

இஷ்ட காம்யார்த்தங்களைப் பூர்த்தி செய்ய வேண்டி ஆலயங்களில் பகவானிடம் கோரிக்கை வைக்கிறார்கள். கோரிக்கை நிறைவேறியதும் பணம், தங்கம், வெள்ளி என காணிக்கை செலுத்துகிறார்கள். இது சரியா?

- பா.சுப்ரமணியராவ், பெங்களூரு-97

ஆகமத்தின் அறிவுரையில் கோயில்கள் இயங்குகின்றன. வேதத்தின் அறிவுரையில் தர்ம சாஸ்திரம் இயங்குகிறது. சனியிடம் இருந்து விடுபட திருநள்ளாறு, திருமணத்துக்குத் தீர்வு திருமணஞ்சேரி, ராகுவின் பிடியிலிருந்து மீள காளஹஸ்தி, பித்ருக்கள் அருள்பெற திலதர்ப்பணபுரி, செல்வத்துக்குத் திருப்பதி, கல்விக்குக் கூத்தனூர், வெற்றிக்கு மகிஷாசுரமர்த்தினி, மோட்சத்துக்கு கும்பகோணம் மகாமகக் குளம், புகழின் உச்சியை எட்ட சபரிகிரீசன், சாந்திக்கு காமாட்சி, அமைதிக்கு மீனாட்சி, ஆனந்தத்துக்கு விசாலாட்சி, இடையூறுகளை விலக்க விக்னேஸ்வரன், பதற்றம் மறைய கந்தன்... இது, இந்திரன் வழிபட்ட கோயில், அகஸ்தியர் வழிபட்ட தலம், விஸ்வாமித்திரர் வணங்கிய தெய்வம், ஸ்ரீமந் நாராயணன் வழிபட்ட இடம், பரமேஸ்வரன் வணங்கிய இடம், பார்வதி வணங்கிய ஈஸ்வரன்...  

இப்படி, நமது தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்யும் இடங்களைச் சுட்டிக்காட்டும் அந்தந்த ஸ்தல புராணங்கள். அதுபோல், புராணங்களும் கோயில் தோன்றக் காரணமான சுவாரஸ்யமான கதைகள் வாயிலாக பக்த ஜனங்களை ஈர்க்கும். இந்தக் கோயிலில் துலாபாரம் காணிக்கை, இங்கு சர்க்கரைப் பொங்கல் விசேஷம், இங்கு அவல்- பொரி விசேஷம், இங்கு உப்பு, இங்கு எள்ளு, இங்கு அருகம்புல், இங்கு தேங்காய் மட்டை... இப்படி நீண்ட காணிக்கைப் பட்டியலை கோயில்களில் பார்க்கலாம்.

கர்ணபரம்பரையாக வந்த நிகழ்வுகளை வைத்துக் காணிக்கைப் பட்டியல் இருக்கும். இருமுடி, ஐயப்பனுக்கு மட்டுமில்லை; அம்பாளுக்கும் உண்டு. காவடி, முருகனுக்கு மட்டுமில்லை; அம்பாளுக்கும் இருக்கும். ஸ்ரீநிவாஸனுக்கு மட்டுமே முடிகாணிக்கை இல்லை; கந்தனுக்கும் உண்டு. அது பழநிக்கு மட்டுமல்ல, வடபழநிக்கும் சொந்தம். கல்யாணோத்ஸவம் திருப்பதியில் மட்டுமின்றி, ஸ்ரீநிவாஸன் இருக்கும் இடமெல்லாம் உண்டு. உதயாஸ்தமன பூஜை குருவாயூரில் மட்டுமின்றி, எல்லா குருவாயூரப்பன் ஆலயங்களிலும் இருக்கும்.

கோயிலின் பெருமைக்கு ஆகமம், தர்மசாஸ்திரம், புராணம் ஆகியவற்றின் சட்டதிட்டத்தை மீறி, வித்தியாசமான நைவேத்தியம் பரிந்துரைக்கப்பட்டு, பக்தர்களை ஈர்க்கும். இங்கு தயிர்சாதம் சிறப்பு, இங்கு எள்ளு சாதம், இங்கு தேங்காய் பருப்பு கஞ்சி... இப்படி நைவேத்தியங்களும் நீளும். பாராமுகமாக இருக்கும் மக்களை ஆஸ்திகத்திலும் ஆன்மிகத்திலும் இணைத்து முன்னேற்றி தன்னிறைவு பெறச் செய்வதற்காக காணிக்கைகளும், தலபுராணங்களும், புராணங்களும் கோயில் மற்றும் தெய்வத்தின் பெருமையை விளக்குகின்றன.

ஏனோதானோ என்று வாழாமல் பண்புடன் வாழ்ந்து பெருமைப்பட, அத்தனையும் வேண்டும்.

கேள்வி - பதில்

கோரிக்கை நிறைவேறினாலும், நிறைவேறா விட்டாலும் கடவுளை மறக்கக் கூடாது. அதற்காகக் கோரிக்கை வைக்கவேண்டும். நிறைவேறிய பிறகு காணிக்கையை செலுத்தவேண்டும். 'காணிக்கை செலுத்தும் பொருள்கள் அத்தனையும் அவன் அளித்தது; அவனுக்குச் சொந்தமானது’ என்று உணர்ந்தால், மனம் தளராது.

விளம்பரங்களை நம்பிப் பொருளை ஏற்கிறோம். பயன்படாவிட்டாலும் கவலைப்படுவதில்லை. காணிக்கை தருகிறேன் என்று வேண்டும்போது, 'அவர் இருக்கிறார்; வெற்றியைத் தருவார்’ என்று நம் மனம் நம்பும். நம்பிக்கை திடமாகும்போது, கடவுள் நம் மனத்தில் தோன்றி புத்தியைத் திருப்பிவிட்டு, வெற்றியைச் சுவைக்க வைக்கிறார். ஆகையால், பிரார்த்தனையும் வேண்டும்; காணிக்கையும் வேண்டும். அது நம் மனத்தை உயர்த்தும்.

- பதில்கள் தொடரும்...

படங்கள்: இ.ராஜவிபீஷிகா