சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

சித்ரா பௌர்ணமி வழிபாடு!

சித்ரா பௌர்ணமி வழிபாடு!

சித்ரா பௌர்ணமி வழிபாடு!
##~##

துரையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான். வீரபாண்டியன் எனும் மன்னன் சோழ மன்னனைக் கொன்ற இடம் என்பதால், சோழாந்தகச் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டதாகவும், பிறகு ராஜராஜசோழன் இங்கு படையெடுத்து வந்து வென்றதால் 'சோழவந்தான்’ என அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

பாகனூர், சதுர்வேதிமங்கலம், ஜனநாதன் சதுர்வேதிமங்கலம் என ஆதிகாலத்தில் பல பெயர்களுடன் விளங்கிய சோழவந்தானுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ஜனக மகாராஜா வந்து வழிபட்ட திருத்தலம் இது.

வைகையாறு பாய்ந்தோடுகிற இந்த அழகிய இடத்தில் தங்கி, பெருமாளையும் சக்தியான பெண் தெய்வத்தையும் வழிபட்டாராம் ஜனகர். பின்னாளில், ஜனகர் வழிபட்ட பெருமாளுக்கும் அம்மனுக்கும் தனித்தனியே கோயில் கட்டி வழிபட்டனர், அடுத்து வந்த மன்னர் பெருமக்கள்.

சித்ரா பௌர்ணமி வழிபாடு!

இந்த ஊரில் ஜனகை மாரியம்மன் திருக்கோயிலும், அங்கே நடைபெறும் திருவிழாவும் வெகு பிரசித்தம்! அதேபோல், மாரியம்மன் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள ஸ்ரீஜனகை நாராயணப் பெருமாள் கோயில், முழுக்க முழுக்கக் கற்றளிக் கோயிலாக அமைக்கப்பட்ட, அற்புதமான வேலைப் பாடுகள் கொண்ட ஆலயம்.  

சுக்கிர யோகம் தந்தருளக்கூடிய திருத்தலம் எனப் போற்றப்படும் ஸ்ரீஜனகை நாராயணர் கோயிலில் அழகும் கருணையும் கொண்டு காட்சி தரும் பெருமாளை, கண்ணாரப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆடிப் பூரம், பங்குனி உத்ஸவம், மார்கழி திருப் பள்ளியெழுச்சி, ஸ்ரீஅனுமன் ஜயந்தி, திருக் கல்யாணம் ஆகியவை சிறப்புற நடைபெறும் இந்தக் கோயிலில், சித்ரா பௌர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வேண்டிச் செல்கின்றனர்.

சித்ரா பௌர்ணமி வழிபாடு!

அந்த நாளில், காலையிலிருந்து சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெறும். மாலையில் குதிரை வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறும். ஊரில் மொத்தம் ஐம்பது மண்டகப்படிகள் உண்டு. எனவே, சர்வ அலங்காரத்தில் வாகனத்தில் வருகிற பெருமாள், ஐம்பது இடங்களுக்கும் சென்று, ஒவ்வொருவரின் பிரார்த்தனையையும் வேண்டுதலையும் கேட்டு, அவற்றை நிறைவேற்றி அருள்வார் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், கிராம மக்கள்.  

சித்ரா பௌர்ணமி வழிபாடு!

பிறகு, அழகர் ஆற்றில் இறங்குகிற வைபவம் போலவே, இங்கும் ஸ்ரீஜனகை நாராயணப் பெருமாள், ஊரில் உள்ள வைகையாற்றில் இறங்குகிற நிகழ்ச்சி சிறப்புற நடைபெறும். அப்போது கருட வாகனத்தில், சர்வ அலங்காரங்களுடன் வருகிற பெருமாளைக் காணக் கண் கோடி வேண்டும்.

மறுநாள், தசாவதார திருக்கோலக் காட்சி. ஒவ்வொரு அலங்காரத்திலும் காட்சி தருவார் பெருமாள். பிறகு, பூப்பல்லக்கில் உத்ஸவர் திருவீதியுலா வருவார். மண்டூக மகரிஷிக்கு சாபத்தில் இருந்து விமோசனம் தந்தருளினார் என்பதால் சோழவந்தான் ஸ்ரீஜனகை நாராயணப் பெருமாளை வந்து வணங்கினால், நம் சாபங்களும் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை இல்லா தவர்கள், வறுமையில் வாடுபவர்கள், தொடர்ந்து 7 அல்லது 11 வாரங்கள் வெள்ளிக் கிழமைகளில் வந்து, வெள்ளை மொச்சை வைத்து வழிபட்டால்  அவர்களுக்கு சுக்கிர தோஷம் விலகி, சுக்கிர யோகம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

   - கா.பெனாசிர்

படங்கள்: எஸ்.கேசவசுதன்