சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

வெள்ளலூர் தேனீஸ்வரர்

வெள்ளலூர் தேனீஸ்வரர்

வெள்ளலூர் தேனீஸ்வரர்
##~##

கோவையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வெள்ளலூர். ஊருக்குள் நுழையும்போதே, அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேனீஸ்வரர். முதலாம் கரிகாற்சோழன், பராந்தக சோழன் ஆகியோரால் திருப்பணிகள் செய்யப்பட்டு, நிவந்தங்கள் அளிக்கப் பட்ட புராதனமான ஆலயம் இது.  

சுயம்பு மூர்த்தமாக, லிங்க வடிவில் காட்சி தருகிறார் சிவனார். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகல்யாண கணபதி, ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஸித்தி விநாயகர் என நான்கு விநாயகரை இங்கு தரிசிக்கலாம். இங்கே உள்ள ஸ்ரீகால பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறுகின்றன. ஸ்ரீசூரிய பகவான், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசந்திரன், ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசிவகாமி அம்பாள்.

அகத்திய முனிவர் இங்கு வந்து வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம். அம்பாள் கொள்ளை அழகுடன், கருணையே உருவெனக் கொண்டு தன்னை நாடி வருவோர்க்கு, அருள் வழங்குகிறாள்.

வெள்ளலூர் தேனீஸ்வரர்
வெள்ளலூர் தேனீஸ்வரர்

ஸ்ரீதேனீஸ்வரர் குடிகொண்டிருக்கும் ஆலயத் தில், ஸ்ரீபிரம்மாவும் ஸ்ரீசங்கரநாராயணரும் சந்நிதி கொண்டிருப்பதால், மும்மூர்த்திகளும் அருள் வழங்கும் திருத்தலம் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

சித்திரை முதல் நாளில், அதாவது தமிழ் வருடப் பிறப்பன்று, சூரிய பகவான் தன் கதிர்களால் சிவபெருமானை வணங்கும் தலம் என்பது சிறப்பு. திருமணத் தடையால் அவதிப் படும் அன்பர்கள் இங்கு வந்து சிவ- பார்வதிக்கு பூமாலை சார்த்திப் பிரார்த்தித்து, அந்த மாலையை

யும் எலுமிச்சைப் பிரசாதத்தையும் பெற்று வீட்டுக்கு எடுத்துச் சென்றால்... விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்பது ஐதீகம்!  

வருடம் முழுவதும் பல விழாக்கள் சிறப்புற நடைபெற்றாலும், சித்ரா பௌர்ணமி நாளில், சிவனாருக்கு சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறுகின்றன. அன்று, 108 சங்காபிஷேகம் கோலாகலமாக நடைபெறும். அதைத் தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். சித்ரா பௌர்ணமி நாளில் சிவ தரிசனம் செய்தால், சகல ஞானமும் யோகமும் பெறலாம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.

ஸ்ரீதேனீஸ்வரரை வணங்குங்கள்; தேனென நம் வாழ்வையே இனிக்கச் செய்வார்!  

இரா.வசந்த்
படங்கள்: தி.விஜய்