சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

நாரதர் கதைகள் - 2

இது நான்கு வேத சாரம்எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

##~##

ந்த வெந்நீர் நீல தடாகத்துக்குப் பெயர் மானஸா ஏரி. அந்த ஏரிக்கரையின் ஓரம், நாரதர் மெள்ள வீணையைச் சுருதி மீட்டிக்கொண்டு நடந்தார். எதனாலேயோ மனம் இங்கு இழுக்கப்பட்டு, 'இங்கு ஏதோ நடக்கிறது; கவனி!’ என்று தூண்டப்பட்டு, அவர் இந்தப் பக்கம் நடைபயின்றார்.

மானஸா ஏரி, இமயமலை அடிவாரத்தில் மிகுந்த அமைதியுடன் தேவதைகளெல்லாம் குளிக்கின்ற நீர் நிலையாக இருந்தது. இமயமலையின் பனிக்காற்று மெள்ள வருடிக்கொண்டு போயிற்று. சூரியன் வட திசை நகர்ந்து உஷ்ணம் பரவும் காலமாக இருந்தாலும், மானஸா ஏரிக்கரையில் வெயில் தெரியவில்லை. ஏரியின் ஓரத்திலிருந்து நீர்க்குமிழிகள் மெள்ள வெளியே வந்தன. சற்றுத் தள்ளி இன்னொரு நீர்க்குமிழி கிளம்பியது. இன்னும் சற்று தள்ளி இன்னொரு நீர்க்குமிழி. இடது, வலது, இந்தப் பக்கம், அந்தப் பக்கம், நேர் எதிரே எனப் பல நீர்க்குமிழிகள் தோன்றின.

நாரதர் கதைகள் - 2

நாரதர் வியந்தார். 'இது என்ன... மீன்களின் ஆட்டமா அல்லது வேறு ஏதாவது விலங்குகளின் சேஷ்டையா?’ என, அதை ஊன்றிக் கவனித்தார். உள்ளுக்குள்ளே யாரோ சம்மணமிட்டு அமர்ந்திருப்பதும், சேமித்து வைத்த காற்றை அவர் நிதானமாக மெள்ள மெள்ள விடுவதும் தெரிந்தது. 'யாரேனும் நீரில் மூழ்கி தபஸ் செய்கிறார்களா, என்ன?’ தொடையளவு நீரில் நாரதர் இறங்கினார். குனிந்து பார்த்தார். உள்ளே ஒரு பாலகன் உட்கார்ந்திருந்தான். மெள்ள அவன் தாடையைப் பற்றி மேலே தூக்கினார். வெளியே இழுத்தார். அந்த பாலகன் மூச்சை முழுவதும் உள்ளே இழுத்து, காற்றால் நுரையீரலை நிரப்பிக்கொண்டான்.

''என்னப்பா இது, யார் நீ? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' - மிகுந்த வாஞ்சையோடு நாரதர் கேட்டார். 'பத்து வயதுக்கும் குறைவான இந்த பாலகன், இத்தனைக் குளிரில், இவ்வளவு பெரிய ஏரியில் தனிமையாக மூழ்கிக் கிடக்கிறான். என்ன காரியம் இவனுக்கு இங்கே?!’ என்று வியந்தார். அவன் எழுந்திருக்க, அங்கங்கே அங்கங்கே ஆட்கள் எழுந்திருந்தார்கள். எழுந்தவர்கள் அத்தனை பேரும் இளைஞர்கள். கிட்டத்தட்ட நாரதர் தூக்கி நிறுத்திய பாலகனின் அதே வயதை ஒத்தவர்கள். எல்லோரும் ஒரே மாதிரியாக இருந்தார்கள். நாரதர் திடுக்கிட்டுக் கரையேறினார்.

''யார் நீங்கள்? என்ன செய்து கொண்டிருக் கிறீர்கள் இங்கே? இந்தக் கடும் குளிரில் எதற்காக இந்த வேதனை?'' என்று பிரியத்தோடு கேட்டார். அவர்கள் கரையேறினார்கள். நாரதரைப் பார்த்துக் கை கூப்பினார்கள். காலில் விழுந்து வணங்கினார்கள்.

''நாங்கள் தவம் செய்கிறோம்!''

''என்ன தவம்?''

''நீரில் மூழ்கி மூச்சை வசப்படுத்தி, பின்பு மெள்ள மெள்ள மூச்சை விட்டுச் சுத்தமாக மூச்சை நிறுத்துகின்ற தவம்!''

''யாரை நோக்கி?''

''எங்கள் தாத்தாவான படைப்புலக பிரம்மாவை நோக்கி!''

''என்ன... பிரம்மாவின் பேரர்களா நீங்கள்? அப்படியெனில் உங்கள் தந்தை..?''

''தட்ஷன்'' - அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் பதில் சொன்னார்கள்.

''தட்ஷனின் குழந்தைகளா? அதுதான் முகத்தில் இத்தனைப் பொலிவு! இத்தனை அழகு! இவ்வளவு சிறு வயதில் இவ்வளவு பெரிய தவத்தைச் செய்ய முடியுமெனில், ஓர் உயர்ந்த தகப்பனுக்குப் பிறந்தவராகத்தான் இருக்க முடியும். நல்லது, எதற்காக இந்தத் தவம்?''

''எங்கள் தந்தை கட்டளையிட்டார்!''

''என்ன சொல்லிக் கட்டளையிட்டார்?''

''நாங்கள் நீரில் மூழ்கி பிரம்மாவை நோக்கித் தவம் செய்ய வேண்டும்!''

''எதற்காக?''

''படைப்புத் தொழிலை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக, தவம் செய்து அதை வரமாகப் பெற வேண்டும்.''

''படைப்புத் தொழிலா? ஆயிரம் பேரா? ஒரு பிரம்மா செய்யும் படைப்பையே உலகம் சுமக்கமுடியாமல் தவிக்கிறது. நீங்கள் எல்லோரும் பிரம்மாவைப் போல் படைப்புத் தொழிலைக் கற்றுக்கொண்டு செய்ய ஆரம்பித்தால், இந்த உலகம் என்ன ஆகும்! சுழலுவது நின்று போகுமய்யா! பாரம் தாங்காமல் திணறிப் போகும். இவ்வளவு பெரிய வேலையை எதற்கு செய்யச் சொன்னார் உங்கள் தகப்பன்?''

''படைப்புத் தொழில் மிகச் சிறந்தது அல்லவா?''

''ஆமாம்.''

''மிக அரிதான ஒன்றல்லவா?''

''ஆமாம்.''

''ஆதலால் மிக அரிதான, சிறப்பான ஒன்றைக் கற்றுக்கொள்ளச் சொன்னார்.''

''பொன் அற்புதமான பொருள்தான். கிடைத்தற்கரிய பொருள்தான். அதற்காக, பொன்னில் விலங்கு செய்து காலில் மாட்டிக் கொள்வார்களா யாரேனும்?''

நாரதர் கதைகள் - 2

அந்த இளைஞர்கள் திகைத்தார்கள்.

''இல்லை. மாட்டார்கள்!''

''நீங்கள் செய்வது அப்படித்தான் இருக்கிறது. படைப்புத் தொழில் செய்தால் என்ன ஏற்படும்? என்ன கிடைக்கும்?''

''ஒரு சிறந்த பதவிக்கு வந்துவிட்டோம் என்ற மரியாதை கிடைக்குமல்லவா?''

''அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஆயிரம் பேர் படைப்புத் தொழிலில் ஈடுபட்டால், இந்தப் பூமியின் கதி என்ன ஆவது? உங்களுக்குள் போட்டி வராதா? நான் சிறந்தவன், நீ சிறந்தவன், இது அழகு, அது அழகு, இது அவலம் என்று உங்களுக்குள் சண்டை வராதா? எல்லோரும் இப்போது ஒற்றுமையாக இருக்கிறீர்கள். வரம் கிடைத்தால், பிளவு வராதா? ஏன் இந்த வேதனை?''

''சரி, நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?''

''சிவனை நோக்கி 'எங்களுக்கு இந்த மன அவஸ்தையிலிருந்து விடுதலை வேண்டும். ஜீவன் முக்தி வேண்டும். உங்கள் பாதத்தையே சரணடைய வேண்டும். உங்களோடு கயிலையில் உங்கள் கணங்களாக நாங்கள் குடியேற வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ளலாமே? மறுபடி பிறக்காத ஒரு தன்மையை அடைய லாமே? வேறு எந்த வேலையும் இல்லாமல் உள்ளுக்குள்ளே சிவனை நினைத்து சிவமாய் மாறுவது என்ற உன்னதத்தை அடையலாமே? அதை விட்டுப் படைப்புத் தொழில் செய்கிறேன் என்று ஆரம்பித்து, உலகையும் நாசம் செய்து, உங்களுக்குள் பிரிவு ஏற்பட்டு... தேவைதானா? பெரிய அவஸ்தையாயிற்றே!''

அவர்கள் சிந்தித்தார்கள். ''ஆமாம்'' என்றார் கள். நாரதரைக் கும்பிட்டார்கள். மறுபடியும் நீர்நிலை நோக்கிப் போனார்கள். உள்ளுக்குள்ளே மூழ்கினார்கள். சிவ சொரூபம் அடைய வேண்டும், சிவ கணங்களில் ஒன்றாக அங்கு இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் சிந்தனை மாறிற்று. தட்ஷன் வேதனைப்பட்டான்.

மனச்சோர்வு அடைந்தாலும், தட்ஷன் மறுபடியும் இமயவான் மகள் வேதவல்லியுடன் கூடி இன்னும் ஆயிரம் குழந்தைகள் பெற்றான். அவர்கள் முன்னவர்களைக் காட்டிலும் வலிவு மிக்கவர்களாகவும், தந்தைக்குப் பணிந்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்களை, சிவனை நோக்கித் தவம் செய்து படைப்புத் தொழிலைக் கற்று வருமாறு பணித்தான்.

நாரதர் கதைகள் - 2

'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று அவர்கள் அந்தக் கட்டளையை நிறைவேற்ற, மானஸா பொய்கைக்கு வந்தார்கள். அப்போதும் நாரதர் அங்கே வந்தார். நீரில் மூழ்கி தவம் செய்பவர்களைப் பார்த்துக் கைதட்டி, மேலே எழுப்பினார்.

''என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இதைத் தானே உங்கள் தமையன்கள் செய்தார்கள்? நீங்களும் அதே விஷயத்தில் ஈடுபடுகிறீர்களே, என்ன காரணம்?''

''எங்கள் தந்தையின் கட்டளை!''

''படைப்புத் தொழில் கற்றுக் கொள்ளவா?''

''ஆமாம்.''

''பிரம்மராக மாறவா?''

''ஆமாம்.''

''ஒரு பிரம்மனையே இந்த உலகம் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. நீங்களும் படைப்புத் தொழிலை ஆரம்பித்தால் உலகம் என்ன ஆகும்? எதற்கு உங்களுக்குள் போட்டி? ஏன் சண்டை? இதற்காகவா தவம் செய்வார்கள்? மிகப் பெரிய நிலம் முழுவதையும் உழுது, கடைசியில் ஓரத்தில்

ஓய்ந்து கிடக்கும் பூசணிக்காயையா பரிசாகப் பெற்றுப் போவார்கள்? என்ன வேலை செய் கிறீர்களோ, அதற்கேற்ற பலனைக் கேளுங்கள். நீங்கள் செய்வது கடும் தவம்.அற்புதமான தவம். இதற்குண்டான பரிசு வெறும் பூசணிக்காய் அல்ல. இம்மாதிரியான படைப்புத் தொழில் அல்ல. நீங்கள் சிவ சொரூபம் அடையவேண்டும், சிவலோகத்தில் இருக்க வேன்டும், ஜீவன் முக்தி பெறவேண்டும் என்று வேண்டுங்கள்'' என்று சொல்லி, விடுதலை பெற்றவர்களாக இருப்பதன் அவசியத்தை, அற்புதத்தை விளக்கினார்.

''எந்தவித ஈடுபாடும் இல்லாமல், எந்தவிதமான பிணைப்பும் இல்லாமல், எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் மிக மிக அமைதியாய் ஓர் இடத்தில் அமர முடியுமானால், அதைவிட சௌக்கியம் உலகில் உண்டோ?'' என்று கேள்வி எழுப்பினார்.

'இல்லை’ என்று மறுத்தார்கள்.

''காரியமாற்றாமல் கண்மூடி அமைதியாய் அமர்ந்திருப்பதுதானே உன்னதமான இடம்?''

''ஆமாம்.''

''அப்படிப்பட்ட இடத்தில் இருப்பதற்காக சிவனைக் கேளுங்கள். அதுவே உத்தமம்!'' என்று சொல்ல, நாரதர் சொல்லை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவரை வணங் கினார்கள். மறுபடியும் நீரில் மூழ்கினார்கள். சிவனை நோக்கி ஜீவன் முக்தி அடையும்வண்ணம் பிரார்த்தனை செய்தார்கள்.

தன்னுடைய குழந்தைகள் இரண்டாயிரம் பேரும் திசைமாறிப் போனதையும், அதற்குக் காரணம் நாரதரே என்பதையும் தட்ஷன் அறிந்துகொண்டான். கோபமுற்றான்.

''குழந்தைகள் பெறுவதும், அவர்களை வளர்ப்பதும், அவர்களை ஓர் உன்னத இடத்துக்குக் கொண்டு வருவதுமான தகப்பனின் கடமையை நீர் அறிவீரா? அறியமாட்டீர்! வெறுமே சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறீர். வீடு இல்லாமல், மனைவி இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் சுற்றித் திரியுங்கள். எல்லா இடத்திலும் முழி முழி என்று முழித்துக்கொண்டிருங்கள். உங்களுக்கு ஓர் இருப்பிடம் இல்லை.உங்களுக்கு ஒரு ஸ்திரம் இல்லை. எனவே, நீங்கள் எல்லா நாளும் அலையும்படியான தன்மையை மேற் கொள்ளுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையாக இருக்கட்டும்'' என்று சபித்தான்.

நாரதர் தலைகுனிந்து அந்தச் சாபத்தை ஏற்றுக்கொண்டார். படைப்புத் தொழிலால் பூமி அவஸ்தைப்படுவதைவிட, தான் ஒருவர் இந்த அவஸ்தையை மேற்கொள்வது நல்லது என்று நினைத்தார். அதுவும் தவிர, தட்ஷன் சொன்னது சாபமல்ல; அது ஒரு வாழ்த்து! எந்தப் பிடிப்பும் இல்லாமல், எந்த இடமும் இல்லாமல், எல்லா இடத்திலும் சஞ்சரிக்கின்ற தன்மை தனக்குக் கிடைத்தது ஒரு வரம் என்று நினைத்தார் நாரதர். சந்தோஷப்பட்டார்.

'நாராயண... நாராயண’ என்று மனத்துக்குள் தன் பகவானை வணங்கி நமஸ்கரித்தார்.

படைப்புத் தொழிலின் அபத்தத்தை நாரதர் இன்னொரு சம்பவத்தின் மூலமும் அழகாக விளக்குகிறார்.

- தொடரும்