சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

சித்ரா பௌர்ணமியில்... தீர்த்தவாரித் திருவிழா

சித்ரா பௌர்ணமியில்... தீர்த்தவாரித் திருவிழா

சித்ரா பௌர்ணமியில்... தீர்த்தவாரித் திருவிழா

திருநெல்வேலி- ஸ்ரீகாந்திமதியம்மையுடன் ஸ்ரீநெல்லையப்பர் கோயில் கொண்டிருக்கும் இந்த ஊரின் பெயரே, அதன் கதையைச் சொல்லும். நெல்லுக்கு வேலியிட்டவர் என்பதால் இங்குள்ள இறைவனுக்கு நெல்லையப்பர் என்று திருநாமம். அதேபோன்று 'காந்தி’ என்றால் ஒளி, 'மதி’ என்றால் அறிவு; ஞானப் பௌர்ணமியாய், நம் வாழ்வில் இன்ப ஒளியேற்றும் நாயகியாய் திகழ்கிறாள் அன்னை காந்திமதி.

இப்படி, அம்மையும் அப்பனும் மட்டுமின்றி, இந்த ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கும் பிற தெய்வங்களும் வரப்பிரசாதியானவர்கள். மூலவர் சந்நிதிக்கு இடப் புறத்தில் நெல்லை கோவிந்தர் சந்நிதி உள்ளது. எல்லாத் திருத்தலத்திலும் பெருமாள் ஒருபுறமாக அனந்த

##~##
சயனத்தில் தலையில் கை வைத்தவாறு காட்சியளிப்பார். ஆனால், ஆதிசேஷனின்மீது, ஆகாயத்தைப் பார்த்து நெடும்படுக்கையாக, சுதர்சன சக்கரத்தைத் தன் பாதக்கமலத்தால் மிதித்தவாறு, இடது கையில் பூஜை தட்டுடனும், வலது கையால் சிவப்பரம்பொருளை பூஜித்தவாறும் காட்சியளிக்கிறார். 'அரியும் சிவனும் ஒண்ணு’ என்பதைத் தன் ஆத்மார்த்த சிவபூஜையினால் உலகுக்கு ராமபிரான் உணர்த்தியதாகச் சொல்கிறது தலபுராணம். இவரின் உத்ஸவர், நின்றகோலத்தில் கங்கையைக் கையில் ஏந்தி இறைவனுக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதுபோல தரிசனம் தருகிறார். ஆறுமுகநயினார் திறந்தவெளியில் தனிச்சந்நிதியில் காட்சியளிப்பது, வேறெங்கும் இல்லாது இங்கு மட்டுமே காணப்பெறும் சிறப்பு. சிவபெருமான் தாண்டவம் ஆடிய ஜந்து அம்பலங்களில் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் முனிவர்களுக்காக முனி தாண்டவமாடி அருளிய நான்காவது அம்பலம்தான் நெல்லை. சிவபெருமானுக்கு உரிய ஐந்து சபைகளில், இதைத் தாமிரசபை என்பார்கள்.

திருவாதிரை தினத்தில் ஸ்வாமியின் திருத்தாண்டவமும், அந்த நடனத்தை சிவகாமியம்மை மறைந்திருந்து பார்க்கும் வைபவமும் வேறெங்கும் காண்பதற்கு அரிய ஒன்று. மேலும் இத்திருத்தலத்தில் சபாபதியார், தைப்பூசத் திருநாளில் கௌரிதாண்டவம் ஆடி, சிவகாமி அம்பாளுக்கு அருள் புரியும் 'சௌந்தர்யசபை’யும் உள்ளது. கன்னிவிநாயகர், தட்சிணாமூர்த்தி, சப்தகன்னிகள், காலபைரவர், சப்த ரிக்ஷிகள் ஆகியோரும் தனிச்சந்நிதியில் அருள்கின்றனர்.

சித்ரா பௌர்ணமியில்... தீர்த்தவாரித் திருவிழா
சித்ரா பௌர்ணமியில்... தீர்த்தவாரித் திருவிழா

விழாக்களாலும் சிறப்பு பெற்றது இந்தத் திருத்தலம். சித்திரையில் வசந்த உத்ஸவம், வைகாசியில் விசாகம், ஆனியில் காரியஸித்தி, ஆடியில் பூரம், ஆவணியில் திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி ஆருத்ரா தரிசனம், தைப் பூசம், பங்குனியில் செங்கோல் திருவிழா... என வருடம் முழுவதுமே விழா நாயக- நாயகியாகக் காட்சியளிக்கின்றனர் நெல்லையப்பரும் காந்திமதி அம்பிகையும்.

சித்ரா பௌர்ணமி நாளில், தைப்பூச மண்டபத்தில் காலையில் தீர்த்தவாரித் திருவிழா விமரிசையாக நடைபெறும். மாலையில் காந்திமதி அம்பாளின் சந்நிதிக்கு முன்னே, திருவிளக்கு பூஜை நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டால், திருமணத் தடை விலகும்; வீட்டில் சுபிட்சம் குடிகொள்ளும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து நிம்மதியாக வாழலாம் என்பது ஐதீகம்.

- ச.காளிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்