மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##

மீன ராசிக்கு அதிபதி குரு. ராசிச் சக்கரத்தில் முதல் ராசியை இணைக்கும் கடைசிக் கண்ணி; ராசிச் சக்கரத்தின் கடைசி 30 ஆரங்கள் இணைந்திருக்கும் பகுதி. 330 முதல் 360 வரையிலான பாகைகள் இதில் அடக்கம். தனுசுக்கும் குருவே அதிபதி. ராசி புருஷனின் பாக்கியத்தையும் இழப்பையும் நிர்ணயிக்கும் பொறுப்பில் குருவுக்குப் பங்கு உண்டு.

இந்த ராசியில் சுக்கிரன் உச்சன்; புதன் நீசன். அறிவும் ஆற்றலும் பின்தள்ளப்பட்டாலும், செல்வச் செழிப்பானது வாழ்வின் இழப்பை  நிரப்பிவிடும். சுக்கிரனும் புதனும் மீனத்தில் அமர்ந்து நீசபங்கம் வந்துவிட்டால், சிந்தனை வளமும் செல்வச் செழிப்பும் நிறைவாகி மகிழ்ச்சி அளிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோருக்கு பந்து கிரகம். புதன், சுக்கிரன், சனி ஆகியோருக்கு சத்ரு கிரகம். ராசியின் தகுதியை வரையறுப்பதில், ராகு- கேதுவின் பங்கு சுட்டிக்காட்டப்படவில்லை. 'ராகு- கேதுக்களைத் தவிர்த்து, ஏழு கிரகங்களை வைத்துச் செயல்பட்ட காலம் உண்டு. ஸப்த கிரக சித்தாந்தமானது, வராஹமிஹிரர் வரை தொடர்ந்து செயல்பட்டது.வராஹமிஹிரர் அதை எதிர்க்கவில்லை.

'தற்போது நவக்கிரக சித்தாந்தத்தை ஏற்கிறோம்’ என்று ஜைமினி பத்யாமிருதத்தில் தகவல் உண்டு. கிரகணத்தில் ராகுவை ஏற்கும் தர்மசாஸ்திரம், கேதுவை சுட்டிக்காட்டாது (ராஹுக்ரஸ்தே திவாகரே, ராகு தர்சனே...). ராகு- கேதுவை இரண்டாகப் பார்க்காமல் ஒன்றாகப் பார்ப்பார்கள். அதர்வண வேதமும் ராகு- கேதுக்களை ஒன்றாகவே பார்த்தது (சன்னோ கிரஹா: சாந்த்ரமஸ: சமாதித்ய: சரா ஹுணா...). ஆதி சங்கரரும் ராகுவைச் சுட்டிக்காட்டுவார் (ராஹு க்ரஸ்ததிவாகரேந்து...). கணிதத்திலும் ராஹுசாராத்யாயம் உண்டு. கேது கணங்கள் என்று தூமகேதுக்களையும் சேர்த்துச் சொல்லும். ஓர் உடல் இரண்டாக்கப்பட்டதாக புராணம் கூறும். இரண்டுவிதமான செயல்பாடுகளை அது வரையறுக்கவில்லை. மனிதனும் பாம்பும் கலந்த உடலமைப்பை இருவருக்கும் அளித்து வழிபடச் சொல்கிறது தர்மசாஸ்திரம்.

கைகளின் திறமை அதாவது பாஹுபலம், குலத்தின் உயர்வு ஆகியவற்றை முறையே ராகுவும் கேதுவும் அளிப்பர் என்கிறது தர்மசாஸ்திரம் (ராஹுர்பாஹுபலம் கேது: குலஸ்யோன்னதிம்...).  பிற்பாடு வந்த சிந்தனையாளர்களின் பரிசாகவே ராகுவும் கேதுவும் உயர்வை பெற்றார்கள். குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்று ராகுப் பெயர்ச்சியிலும் வேள்வியும் ஆராதனையும் சேர்த்தார்கள், இன்றைய சிந்தனையாளர்கள். சுதந்திர இந்தியாவுக்கு முன்பு பரிச்சயம் இல்லாத பெயர்ச்சி வேள்விகள் இன்று கொண்டாட்டமாக உயர்த்தப்பட்டிருக்கின்றன.

'சனிவத்ராஹு: குஜவத்கேது:’ ராகுவுக்கு சனியைப்போல பாவித்தும் கேதுவுக்கு செவ்வாய் போல பாவித்தும் பலன் சொல்லலாம் என்று, தனிப் பலன் சொல்லும் பொறுப்பில் இருந்து நழுவிவிட்டார்கள். தற்போது ராகுவும் கேதுவும் உயர்வைப் பெற்று, பலன் சொல்லுவதில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகின்றனர். கெடுதலைச் செய்யும் கிரகமாகச் சுட்டிக்காட்டி, பரிகாரங்களில் இறங்கவைக்கப் பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலம் இருண்டதாகிவிடுமோ என்ற பீதியில் இருப்பவ னுக்கு, ராகுவின் வரவு அந்த பீதியை இரட்டிப்பாக்கி, விஸ்தாரமான பரிகாரத்தில் இறங்கவைக்க தோதாக அமைந்துவிட்டது. கலங்கிய மனத்தை தெளியவைக்க ஜோதிடம் பயன்படும். ஆனால், கலக்கத்தை இரட்டிப்பாக்க பயன்படுவது துரதிர்ஷ்டவசமானது. ஆறாவது அறிவு எப்படியெல்லாம் தாறுமாறாக செயல்படும் என்பதற்கு, ராகு-கேதுவை வைத்து பலன் சொல்லும் பகுதி உதாரணமாகத் திகழ்கிறது.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சத்ரு கிரகத்தில் உச்சம் பெற்ற சுக்கிரனை நன்மை அளிப்பவனாகவே சொல்கிறது ஜோதிடம். சத்ரு வீட்டை அழிப்பவனாக மாறவில்லை. சத்ரு வீட்டில் நீசம் பெற்ற புதனும், சுக்கிரனின் சேர்க்கையால் பலம் பெற்று, அந்த ராசிக்காரருக்கு அபரிமிதமான வளம் அளித்து உயர்த்துகிறான். சொந்த வீடு இல்லாதவன் வாடகை வீட்டில் அமர்ந்துகொண்டு, வீட்டுக்காரனை திக்குமுக்காடச் செய்வது பொருத்தமாகப்படவில்லை. குருவோடு இணைந்தால் அத்தனை பாப கிரகங்களும் சுப கிரகங்களாக மாறிவிடும் என்கிறது ஜோதிடம். ராகுவோடு இணைந்தால் குரு பாபியாக மாறுவான் என்ற தகவல் வியக்கவைக்கிறது. நவக்கிரக நாடகத்தில் ராகுவை வில்லனாகச் சித்திரிப்பது பொருத்தமாக இல்லை. இப்படியரு சிந்தனை ஜோதிடத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.

5-ல் ராகு இருக்கும் ஜாதகங்கள் பதினாறு குழந்தைகளைப் பெற்று பெருவாழ்வு பெற்றிருக்கிறது. 7-ல் ராகு இருக்கும் ஜாதகங்கள் தாம்பத்தியத்தைச் சுவைத்து, சதாபி ஷேகத்தைப் பெற்று மகிழ்ந்திருக்கிறது. குடும்பக் கட்டுப்பாட்டையும் விவாகரத் தையும் ஏற்ற பிறகு, 5-ல் ராகு இல்லை யென்றாலும் குழந்தை இருக்காது. 7-ல் ராகு இல்லையானாலும் விவாகரத்து இருக்கும். கற்பு செல்லாக்காசாக மாறிய பிறகு, பண்பு தற்கொலை செய்து கொண்டது. விருப்பப்படி குழந்தை பெறவும், திருமணத்தை ஏற்கவும் சுதந்திரம் இருக்கும்போது, ராகு அந்த சுதந்திரத்தைப் பறிக்கிறான் என்று சுட்டிக்காட்டுவது சிந்தனை வளம் குன்றியதற்கு அடை யாளம். ஜோதிடம் பொதுச் சந்தைக்கு வந்துவிட்டால், அத்தனை அலங்கோலங் களும் அரங்கேறும் என்கிறது சாஸ்திரம். வாழ்வுக்கு வழிகாட்டியாகத் திகழும் ஜோதிடம், எங்கேயோ இழுத்துச் செல்கிறது. அதற்கு ராகு- கேது பயன்படுவது விசித்திரம்.

அவர்களுக்கு ராசிகளிலும் இடம் இல்லை, வாரத்திலும் இடம் இல்லை, பஞ்சமஹா புருஷ யோகத்திலும் இடம் இல்லை, காரகத்திலும் இடம் இல்லை. ஆனால், அவர்கள் இருவரும் இன்றைய ஜோதிடத்தில் கோலோச்சும் இரட்டையர்கள். புது தலைமுறைகள் சிந்தித்து விளக்கம் பெற்று செயல்படவேண்டும். இல்லையெனில், ஏமாற்றமே மிஞ்சும்.

ஒருவனுக்குச் சிந்தனை முட்டுச்சந்தில் முட்டி நினைவிழந்து இருக்கும் வேளையில், ஜோதிடனை அணுகுவான். அந்த ஜோதிடனின் தகவல்தான் சிந்தனைக்கு விஷயமாகும். சுயசிந்தனை படுத்திருக்கும் வேளையில், ஜோதிடரின் விருப்பத்துக்குப் பணிந்துவிடுவான். படுத்த சிந்தனையைத் தட்டி எழுப்பி, சிந்தனைக்கு தகவல் அளித்து திருப்பிவிடுபவன் ஜோதிடன். பரிகாரத்தில் ஈடுபடும் மனம் விஸ்தாரமாக சிந்திக்கும் வலிமை பெற்றுவிடும். அப்போது இக்கட்டில் இருந்து விடுபட உதவி கிடைக்கும். அதனால் வெற்றி பெற்றுவிடுவான். ஜோதிடரின் பெருமையும் இரு மடங்காக உயரும். பரிகாரத்தின் புகழும் வானத்தைத் தொடும். ஆனால், செல்வச் செழிப்பில் மிதப்பவன் ஜோதிடத்தை நினைக்க மாட்டான். அவனிடம் ஜோதிடம் அடிபணிந்துவிடும். பூர்வஜென்ம கர்மவினையின் தூண்டுதலால், தன் வசமிழந்து ஜோதிடனை அணுகுவான் என்கிறது ப்ரச்ன சாஸ்திரம் (விவச: தைவந்ந ஸன்னிதிமேதி...). அவனுக்கு அடைக்கலம் அளித்து விழிப்புறச் செய்து, வாழ்க்கைப் பாதையில் சேர்த்துவிடுவது ஜோதிடத்தின் வேலை; அதை நடைமுறைப்படுத்துவது ஜோதிடரின் கடமை என்கிறது சாஸ்திரம். இக்கட்டில் சிக்கியவனை விடுவித்து நன்மையில் இணைய வைக்க உருவானது ஜோதிடம்.

ஆசையும் பாசமும் நிறைந்த மனமானது நேர்வழிச் சிந்தனையில் இறங்க இயலாது. இங்குதான் ஜோதிடரிடம் அடைக்கலமாகி விடுகிறது. ஜோதிடரின் சிந்தனை அவனது (ஜாதகனின்) சிந்தனையாக மாறும். அது அலைக்கழிப்பதும் உண்டு; ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதும் உண்டு. அதை அவனது கர்ம வினை வரையறுக்கும். இங்கே, ஜோதிடரின் சிந்தனையோ அவனது சிந்தனையோ வெல்லவில்லை; கர்மவினைதான் வென்றது. ஆனால், தாங்கள் வெற்றியைத் தழுவியதாக இருவரும் பெருமிதம் கொள்வார்கள். இப்படித்தான் சாஸ்திரத்தைவிட சாஸ்திரம் பயின்றவருக்குப் பெயரும் புகழும் வந்து சேருகிறது. 'என் கையில் ஒன்றுமில்லை. எல்லாம் அவன் செயல்’ என்ற கூற்றை ஆராய்ந்து பாருங்கள் உண்மை தெரியும். 'கொடுத்து வைத்தவன் வாழ்கிறான். கொடுத்து வைக்காத வன் திண்டாடுகிறான்’ என்ற சொல் வழக்கைத் துருவித் துருவிப் பாருங்கள், உண்மை பளிச்சிடும். அத்தனை கிரகங்களும் அவனது பூர்வஜென்ம வினையைசுட்டிக்காட்டி நடைமுறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. சிந்தனையில் எதிர்விளைவை எதிர்கொள்ள வைப்பதில் சத்ரு கிரகமும், எதிர்விளைவுகளைச் சந்திக்க சந்தர்ப்பம் அளிக்காமல் இன்பத்தில் இணைப்ப தில் பந்து கிரகமும் தனிப் பங்கு வகிக்கும்.

கேந்திராதிபதி, த்ரிகோணாதிபதி, உபசய ஸ்தானம், அபசய ஸ்தானம், த்ரிகாதிபதி (6, 8, 12), உச்சம், நீசம், நீசபங்கம், மௌட்யம், அஸ்தங்கதம், வ்யயாதிபதி, தனாதிபதி, கர்மாதிபதி... இப்படியெல்லாம் பல தகுதிகள் எல்லாக் கிரகங்களுக்கும் உண்டு (சூரியனின் பிரகாசத்தில் குறிப்பிட்ட கிரகம் தன் தகுதியை இழப்பது மௌட்யம்; அதனால் அது செயல்படாமல் இருக்கும் நிலை அஸ்தங்கதம். 12-க்கு உடையவன் வ்யயாதிபதி). இந்தத் தகுதிகள், பூர்வஜென்ம கர்மவினையின் தகுதியைப் படம் போட்டுக் காட்டும். இதில், ராகு-கேதுக்களைக் கண்டுகொள்ளவில்லை ஜோதிடம். ராசிகளின் தகுதியை, அவற்றுடன் இணைந்த- இணைப்பற்ற கிரகங்களின் போக்கை ஜோதிடக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால், பூர்வஜன்ம வினையின் வரைபடம் கிட்டி விடும். அதையட்டியே சிந்தனை எழுவதால், சிந்தனையின் தரமும் தெரிந்துவிடும். முனிவர்கள் சொல்லும் வார்த்தைகளை இணைத்துப் பார்த்தால், ஜாதகத்துக்கு உரியவனின் முக்காலமும் நம் கண்முன் பளிச்சிடும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

முறையாகக் கற்காதவனின் கூற்று ஜோதிடத்தை ரணப்படுத்தாது. புதுத் தலை முறையினரிடம் சிந்தனை வளம் செழிப்புற்று விளங்குகிறது. அவர்கள் கைகளில் சாஸ்திரம் விழுந்துவிட்டால், எதிர்காலம் நன்றாக அமையும்.

கடக ராசியின் அதிபதி சந்திரன். அங்கு குரு உச்சம் பெறுகிறான். மீன ராசி த்ரிகோண ராசி. ஆகையால் சந்திரன் இந்த ராசிக்காரர் களுக்கு வலிய வந்து உதவுவான். மனத்துடன் இணைந்த குரு நல்ல சிந்தனையை அளிப்பான்.

இரண்டு மீன்கள் ஒன்றுக்கொன்று இணைந்த ராசி. ஜலராசி, உபயராசி, பெண்ராசி, ஜீவராசி, ஸம்ஹார ராசி (முடிவைக் குறிக்கும் ராசி), பகல் ராசி, குட்டையான ராசி, கர்பராசி- இப்படிப் பல மாற்றங்கள் உண்டு. ஆன்மிக விஷயத்தில் நாட்டம், ஈவு இரக்கம், சட்டதிட்டத்தில் மதிப்பு, நாகரிகமான வாழ்வு, கிடைத்ததைப் பகிர்ந்தளிக்கும் பாங்கு, இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் பிடிப்பு, சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை, பொது நன்மைக்கு அர்ப்பணிப்பு ஆகிய அத்தனையும் தென்படும்.

சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் வலுப்பெற்று இருந்தால், பெயரும் புகழும் தேடி வரும். உலகளாவிய அங்கீகாரமும் தேடி வரும். சிந்தனை வளம் பெற்று தலைவனாகவும் தென்படுவான். புதன், சுக்கிரன், சனி வலுப்பெற்றால் குடத்தில் வைத்த விளக்கு போல் பெயரும் புகழும் பரவாமல் மறைந்துவிடும். முயற்சிகள் தோல்வியுற்று தன்னையே நொந்துகொள்வான். பணி செய்ய மனம் இருந்தும் செயல்பட முடியாமலும், செயல்படவிடாமலும் இருக்கும் சூழலைச் சந்தித்து துயருறுவான். உலக வழிகாட்டியாகவும் உயர்வை அடைவான். மதத் தலைவனாகவும், அரசர்களின் அதாவது அமைச்சர்களின் ஆலோசகனாகவும் திகழ்வான். தரம் தாழ்ந்த சிந்தனை இவர்களிடம் இருக்காது. மானத்தைத் தக்கவைக்க உயிரை இழக்கவும் தயங்கமாட்டான். நல்லவர்களை மதிப்பதில் ஆர்வம் இருக்கும். பாட்டு, வாத்தியம், நாட்டியம், கலைகள் அத்தனையிலும் விருப்பம் இருக்கும். இவற்றை வளர்ப்பதிலும், கற்றறிந்து மகிழ்வதிலும் விருப்பம் இருக்கும். லக்னாதிபதி நீசம் பெற்று, வ்யயாதிபதி வலுப்பெற்று, சந்திரனும் பலமிழந்து காணப்பட்டால், மறைமுகமாக பலரை எதிர்த்து, கெட்ட பெயரைச் சம்பாதித்து, அரசாங்க தண்டனையில் சிக்கித் தவித்து வாழ்வை அவலமாக்கவும் செய்வான்.

முதல் அம்சகம் ( பூரட்டாதி 4-ஆம் பாதம்) குரு தசை இருக்கும். அடுத்த நான்கு அம்சகங்கள் (உத்திரட்டாதி 1, 2, 3, 4) சனி தசையில் முடிவடையும். கடைசி நான்கு அம்சகங்கள் (ரேவதி 1, 2, 3, 4) புதன் தசையைத் தழுவும். கடகத்துக்கும் விருச்சிகத்துக்கும் இதே தசா வரிசைகள் இருந்தாலும் ராசியின் தன்மையில் பலன் மாறுபட்டிருக்கும். சனி வலுப்பெற்று இருந்தால், 20 வயதுக்குள் கல்வியை முழுமையாகப் பெற்று வாழ்வின் அடித்தளம் திடமாகும். புதன் தசையில் தாம்பத்தியத்திலும் பணம் ஈட்டுவதிலும் வெற்றி பெற்று விளங்குவான். 37 வயதுக்கு பிறகு சந்திக்கும் கேது, சுக்கிரன், சூரியன் ஆகிய அத்தனைபேரும் அறிவுத்திறனை வளர்த்து, பிறப்பின் இலக்கை எட்டவைப்பார்கள்.

5-க்கு உடைய சந்திரனும், 9-க்கு உடைய செவ்வாயும் இவனது முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள். மனம் (சந்திரன்) சுறுசுறுப்போடு (செவ்வாய்) இயங்கும் தறுவாயில், நேரான சிந்தனைகள் (குரு) இணையும்போது, மனிதருள் மாணிக்கமாகத் திகழ்வான். 'கும் குரவே நம: சம் சந்திராய நம: கும்குஜாய நம:’ என்று சொல்லி மூவரையும் வழிபடலாம். ரஜோ குணம் செயல்படும்போது, அதை அளவோடு காப்பாற்ற குருவின் ஒத்துழைப்பு தேவை. அதை வெற்றிபெறச் செய்வதற்கான மனத் தெளிவு பெற சந்திரனின் இணைப்பு அவசியம். 'பிரஹஸ்பதே’ 'ஆப்யாயஸ்வ’ 'அக்னிர்மூர்த்தா’ - என்ற மந்திரங்களைச் சொல்லியும் வழிபடலாம். 'குஜம் பிரஹஸ்பதிம் சந்திரம் ஸர்வா பீஷ்டப்ரதாயகம், நமாமி ப்ரயா பக்த்யா மன: ஸந்துஷ்டிஹேதவே’ - என்ற செய்யுளைச் சொல்லி, கைகளால் புஷ்பத்தை அள்ளி அளித்து வணங்கலாம்.

எல்லாக் கிரகங்களுடைய ஒட்டுமொத்த இணைப்பே பலனின் இறுதி முடிவை எட்டவைக்கிறது. ஆகவே, கிரகங்களை தனித் தனியாகப் பிரித்து பார்க்காமல் சேர்த்து வழிபடுவது சிறப்பு. நவக்கிரக ஆராதனை, நவக்கிரக ப்ரீதி, நவக்ரஹ யக்ஞம்- இப்படித்தான் தர்மசாஸ்திரம் சேர்த்துச் சொல்லும்.நாமும் தினமும் காலையில் எழுந்ததும் நவக்கிரகங்களை வணங்கினால், எதிரிடையான பலன்கள் தலைதூக்காது. தேவைகள் இரட்டிப்பாக நம்மை வந்து அடையும்; மகிழ்ச்சியான வாழ்வைச் சுவைக்கலாம்.

- வழிபடுவோம்...