குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!
##~##

'ஆனந்த்’ ரயில் நிலையத்துக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது விவேக் எக்ஸ்பிரஸ். கிட்டத்தட்ட நடுஇரவில் துவாரகா ரயில் நிலையத்தை அடைந்தோம். பாஷை தெரியாத ஊர்; இரவு நேரம்; ஆனாலும், அங்கேயுள்ள ஆட்டோக்காரர்கள் யாரும் அநியாய வாடகை கேட்கவில்லை. அதிகபட்சம் 40 அல்லது 50 ரூபாய்தான் வசூலிக்கிறார்கள். துவாரகாவில் தங்குவதற்கு தர்மசாலாக்கள் இருக்கின்றன. வாடகை 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ஆகிறது. தங்கும் இடவசதி மிக அருமை என்று சிலாகித்துச் சொல்லமுடியாது என்றாலும், அறை சுத்தமாகவே இருந்தது. நாங்கள் அறைக்குச் சென்றபோதே நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டதால், படுத்தவுடன் உறங்கிப் போனோம்.

காலையில் மிகவும் குளிராக இருந்தது. குளிப்பதற்கு வாளி ஒன்றுக்குப் பத்து ரூபாய் பெற்றுக்கொண்டு வெந்நீர் தந்தார்கள். குளித்து, சாப்பிட்டு முடித்ததும், கோயிலுக்குப் புறப்பட்டோம்.

துவாரகா ஆலயத்தைச் சென்றடைய சுமார் ஒரு கி.மீ தொலைவுக்கு நடக்கவேண்டி இருந்தது. இங்கேயும் கோயிலைச் சுற்றி அதிக கெடுபிடி! ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆயுதம் தாங்கிய காவலர்கள் கவனமாகப் பரிசோதித்த பிறகே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கிறார்கள். செல்போன் மற்றும் கேமராக்களுக்கு ஆலயத்தினுள் அனுமதி இல்லை.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

நாம் கோயிலுக்குள் செல்வதற்கு முன்பாக, துவாரகா நகரம் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடுவோமே..!

இந்திய வரைபடத்தின் வடமேற்கில் மாங்காய் வடிவில் அமைந்திருக்கிறது குஜராத் மாநிலம். அந்த மாங்காயின் நுனியில் இருப்பதுதான் துவாரகா. வடக்கத்தியர்கள் 'த்வார்க்கா’ என்று உச்சரிக்கிறார்கள். இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் இதுவும் ஒன்று. மற்ற ஆறு ஸ்தலங்கள்: அயோத்தியா, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி). துவாரகா நகர் மக்களின் எழுத்தறிவு 64 சதவிகிதம். (தேசிய எழுத்தறிவு 59.5 சதவிகிதம் மட்டுமே!)

முதன்முதலாக துவாரகாவில் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம், அவரின் பேரனான வஜ்ரநாபா என்பவரால் காட்டப்பட்டதாம். தற்போது இருக்கும் ஆலயம் 6-ஆம் நூற்றாண்டில் இருந்து 7-ஆம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டு இருக்கலாம்

என்று ஆய்வுகள் சொல்கின்றன. 5 அடுக்குகளைக் கொண்ட இந்த ஆலயம் சுண்ணாம்புக் கற்கள் மற்றும் மணலால் கட்டப்பட்டிருக்கிறது. நாளன்றுக்கு ஐந்து முறை ஆலயத்தில் கொடி ஏற்றுகிறார்கள்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

கடலை நோக்கிப் பாயும் கோமதி ஆற்றை, கோயில் வளாகத்தில் இருந்து பார்க்க முடிகிறது. ஆதிசங்கரரால் அமைக்கப்பட்ட மடங்களில் ஒன்று இங்கே இருக்கிறது.

இனி, கோயிலுக்குள் தரிசிக்கச் செல்வோம்...

பக்தர்கள் ஆலயத்துக்குள் நுழைவதற்கு 'ஸ்வர்க்க துவாரம்’ என்ற வழியும், வெளியே வர 'மோட்ச துவாரம்’ என்ற வழியும் உள்ளது.

ஸ்ரீகிருஷ்ணர் இங்கே கல்யாண மாப்பிள்ளைக் கோலத்தில் 'ஜம்’மென்று காட்சி தருகிறார். குழந்தை போலவும், அரசரைப் போலவும் பலவகையான கோலங்களிலும் அருள்கிறார். அதற்கேற்ப அவரது ஆடை அலங்காரங்களை அவ்வப்போது மாற்றுகிறார்கள். திருமஞ்சன சேவையும் உண்டு.

ஆனால், கண்ணன் அவ்வளவு லேசில் குளிக்க வந்துவிடுவானா என்ன? பெரியாழ்வார் தன்னையே யசோதையாக எண்ணிப் பாடிய பாடல் ஒன்று புன்முறுவலை வரவழைக்கிறது. 'நீ வெண்ணெய் திருடித் தின்கிற விஷயத்தை எல்லாம் வெளியில் சொல்ல மாட்டேன். கண்ணா! நீ அடம் பிடிக்காமல் சமர்த்தாகக் குளிக்க வந்துவிடு, பார்க்கலாம்!’ என்று கண்ணனை நைச்சியம்

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பண்ணி அழைக்கிற அந்தப் பாசுரம் இதோ...

'கறந்த நற்பாலும் தயிரும்
   கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப்
   பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர்தூற்றும்
   என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்
   மஞ்சனம் ஆட நீ வாராய்''     
   

இந்த ஆலயத்தில் மூலவரின் திருநாமம் கல்யாண நாராயணன். இவரை த்வாரகாநாத்ஜீ என்றும் அழைக்கிறார்கள். தாயார்கள்: கல்யாண நாச்சியார் (லட்சுமி), ருக்மிணி, அஷ்டமஹிஷிகள். கோயில் தீர்த்தம்: கோமதி நதி மற்றும் சமுத்திர சங்கமம். விமானம்: ஹேமகூட விமானம். பிரத்யட்சம்: திரௌபதி.

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீராதிகாஜீ, ஸ்ரீலட்சுமி நாராயணன், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகோபால கிருஷ்ணர், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசத்யபாமா, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபலராமர், ஸ்ரீகருடர், ஸ்ரீமாதவராய், ஸ்ரீதேவகி, ஸ்ரீராதாகிருஷ்ணர், ஸ்ரீபுருஷோத்தமர், ஸ்ரீஅம்பிகா, ஸ்ரீகாயத்ரிதேவி, ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீசத்தியநாராயணர், ஸ்ரீமகாதேவ், ஸ்ரீஉச்சீஷ்வரர் எனப் பல கடவுளர்களுக்கும் தனித்தனியே சந்நிதிகள் இருக்கின்றன. குரு தத்தாத்ரேயர், ஸ்வாமி ஸ்வரூபானந்தர் போன்ற ஆன்மிக மகான்களும் தனிச் சந்நிதிகளில் தரிசனம் தருகிறார்கள்.

ஆதிகாலத்தில் இருந்த துவாரகை நகரைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதம், பாகவத புராணம், ஸ்காந்த புராணம் மற்றும் விஷ்ணு புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, கம்சனின் மாமனாரான ஜராசந்தன் மக்களைத் துன்புறுத்தாமல் இருப்பதற்காக, சௌராஷ்டிராவின் மேற்குக் கரையோரத்தில் சமுத்திர ராஜனிடம் இருந்து நிலம் பெறப்பட்டு, கோமதி நதிக்கரையில் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

ஸ்ரீகிருஷ்ணரின் ஆணைப்படி, விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டதுதான் துவாரகை நகரம். கண்கவர் நீரூற்றுகள், பூங்காக்கள், மாடமாளிகைகள் எனப் பேரழகுடன் அமைக்கப்பட்டதாம் அந்தப் பழைய துவாரகை.

அதனால்தான் ஆண்டாள்,

'சூட்டுயர் மா​டங்கள் சூழ்ந்து தோ​ன்றும்
துவராபதிக்கு எ​ன்னை உய்த்தி​டுமின்’
என்று பாடினாளோ?

வசதிகள் நிரம்பிய துறைமுகமும் இங்கே இருந்ததாம். துவாராமதி, துவாராவதி, குஷ்ஸ்தாலி என்ற பெயர்களும் துவாரகைக்கு உண்டு. 'சுதாமாபுரி’ என்றும் ஒரு பெயர் உண்டு. அதற்குக் காரணம், சுதாமர் எனப்படும் குசேலர் இங்குதான் பிறந்தார் எனக் கூறப்படுகிறது. குசேலருக்கென தனிக் கோயிலும் இங்கே உண்டு. தற்போது இருக்கும் துவாரகைக்கு அருகில் இது இருந்ததாகவும், பின்னாளில் கடலில் மூழ்கிவிட்டதாகவும் ஐதீகம்.

மகாபாரதப் போர் முடிந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு, துவாரகையில் இருந்த பலரும் தங்களுக்குள் சண்டையிட்டு மடிந்தனராம். அர்ஜுனன் துவாரகையிலிருந்து ஸ்ரீகிருஷ்ணரின் பேரர்களை ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்துச்சென்ற பின்னர், பழைய துவாரகை நகரம் நீரில் மூழ்கிவிட்டதாம்.

துவாரகையில் சில நாட்கள் தங்கும்படி உங்கள் பயணத்தை அமைத்துக் கொண்டால், அருகில் உள்ள விராவல் ரயில் நிலையத்தில் இறங்கி பிரபாச தீர்த்தம், சோமநாதர் கோயில் ஆகியவற்றைத் தரிசிக்கலாம். பாலகா என்ற இடத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தையும், கிருஷ்ணர் வைகுண்டம் செல்லும்முன் காட்சி அளித்த அரச மரத்தடி சயனத் திருக்கோலத்தையும் கண்டுகளிக்கலாம். அதோடு, ஜூனாகட் ரயில் நிலையத்தில் இருந்து 160 கி.மீ. தூரத்தில் கிர்நார் மலையையும், அங்கேயுள்ள பல ஆலயங்களையும் சேவிக்கலாம்.

ஆனால், எங்கள் பயணத் திட்டம் மிகவும் குறுகியதாக அமைந்திருந்ததால், அடுத்து பஞ்ச துவாரகைகளில் ஒன்றான 'பேட் துவாரகா’ செல்ல ஆயத்தமானோம்.

- யாத்திரை தொடரும்...

படங்கள்: துளசி கோபால்

பாகிஸ்தானின் போர்க்கோலம்!

1965-ஆம் ஆண்டு பாகிஸ்தானோடு நடைபெற்ற போரில் துவாரகா நகரை பாகிஸ்தான் தாக்கியது. செப்டம்பர் 7-ஆம் தேதி இரவு நடைபெற்ற அந்தத் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் துவாரகா’ என்று பெயர்.

கராச்சி துறைமுகத்தில் இருந்து 200 கி.மீ. தூரத்தில் உள்ள துவாரகையை நோக்கி வந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள், 20 நிமிடத்தில் சுமார் 50 குண்டுகளை வீசின. நல்லவேளையாக, அவற்றில் ஒன்றுகூட வெடிக்கவில்லை.