மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 3

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 3

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 3
##~##

கும்பகோணம் நகரத்துக்குத் தென்மேற்கே கும்பகோணம்- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் புறநகராக விளங்குவது தாராசுரம் எனும் பேரூர். காவிரியின் கிளை நதியான அரசிலாறு, இந்த இரண்டு ஊர்களையும் பிரித்து நடுவே செல்கிறது. சோழப் பேரரசர்களின் கோநகரமான பழையாறை என்ற தலைநகரத்தின் ஒரு பகுதியாக ராசராசபுரம் விளங்கியது. இந்த ராசராசபுரம் நாளடைவில் ராராபுரமாக மருவி, பின்பு தாராசுரம் என அழைக்கப்படலாயிற்று.

சோழப் பெருமன்னன் இரண்டாம் ராசராசன் (கி.பி.1146-1163) இந்த ஊரை நிர்மாணம் செய்து, அங்கு ராசராசேச்சரம் என்ற பெயரில் பெரிய சிவாலயம் ஒன்றை எடுப்பித்தான். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர், ராசராசபுரத்தின் சிறப்பையும் அங்கு திகழும் ராசராசேச்சரத்தின் பெருமையையும் 'தக்கயாகப்பரணி’ எனும் அருந்தமிழ் நூலில் குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் அந்தக் கோயில் ஐராவதீஸ்வரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

சேக்கிழார் பெருமானையும் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரையும் ஞானாசிரியர்களாகப் பெற்ற பேறுடையவன் இரண்டாம் குலோத்துங்கனின் மகனான இரண்டாம் ராசராசன். இவன், தன் தந்தையின் ஆட்சிக்காலத்தில் தில்லையில் பெரிய புராணம் அரங்கேற்றம் நிகழ்ந்ததைக் கண்டு களித்தவன். பெரிய புராணத்தில் கூறப்படுகிற நாயன்மார் வரலாறு இந்த மன்னனை ரொம்பவே ஈர்த்தது. சேக்கிழார் பெருமான் சொல்லால் வடித்த அடியார்களின் வாழ்வை, கல்லில் சிற்பக் காட்சிகளாக வடித்து, அவற்றை தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் இடம்பெறச் செய்தான். ஒன்றரை அடி நீளம், ஆறு அங்குல உயரமுள்ள பகுதிகளுக்குள்ளே ஒவ்வொரு காட்சியும் அமைந்துள்ளன.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 3

சுந்தரர் வரலாறு திருத்தொண்டர் புராணத்தில் எவ்வாறு உபமன்யு மகரிஷியால் விரித்துரைக்கப்பட்டுள்ளதோ, அதே போலவே சிற்பக் காட்சிகள் தொடங்கி, ஞானசம்பந்தர் வரலாறு, திருநாவுக்கரசர் வரலாறு, நாவுக்கரசர் 'மாதற்பிறைக் கண்ணியானை’ எனத் தொடங்கும் பதிகம் பாடும் காட்சி, பின்பு சுந்தரர் குறிப்பிடும் அறுபத்து மூவர் வரலாற்றுக் காட்சிகள் என நீண்டு, மொத்தம் 90 காட்சிகளில் சுந்தரரும் சேரமான் பெருமாளும் கயிலை செல்லும் காட்சியுடன் பெரிய புராணச் சிற்பக் காட்சிகள் நிறைவு பெறுகின்றன.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 3

ஐராவதீஸ்வரர் திருக்கோயிலின் முக மண்டபத்தை, தேர் வடிவில் 'ராஜகம்பீரன் திருமண்டபம்’ என்ற பெயரில் சிற்பக்கலையின் கருவூலமாகவே படைத்திருக்கிறான் மன்னன். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் உள்ள நான்கு தூண்களின் நான்கு பக்கங்களிலும் 48 சிற்பக் காட்சிகள் உள்ளன. இவற்றில் கந்த புராணம் முழுவதும் சித்திரிக்கப் பெற்றிருப்பதைப் பார்த்தால், சிலிர்த்துப் போவீர்கள். கச்சியப்ப சிவாச்சார்யரின் கந்தபுராணம் எழுதப்படுவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு கந்தபுராணம் சிற்பங்களாக வழங்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று!

இன்னொரு விஷயம்... இந்தக் கோயிலின் கோஷ்டங்களில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் உலகின் கலை வல்லுநர்களால் இன்றைக்கும் பிரமிப்போடு பார்க்கப் படுகின்றன; போற்றப்படுகின்றன. ஸ்ரீநரசிம்ம உருவத்தை அழிக்கும் சரபமூர்த்தி வடிவம் அரியதொரு பொக்கிஷம்! சிறகுகள் பெற்ற சிங்கவடிவாகிய சரபப்புள் பறந்து வந்து, சினமுற்ற நரசிங்கத்தை வான மண்டலத்துக்குத் தூக்கிச் செல்கிற அற்புதக் காட்சியைச் சிற்பமாக வடித்திருப்பதைப் பார்த்தால், நம் விழிகள் விரியும்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 3
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 3

வான மண்டலமும், அங்கு திகழும் தேவர்களும், கழுகு மீனைத் தூக்கிச் செல்வது போல் நரசிங்கத்தை சரபம் தூக்கிச் செல்வதும் தத்ரூபமான காட்சிகளாகும். ராஜகம்பீரன் மண்டபத்தின் கிழக்குச் சுவரில் அமைந்த கோஷ்டம் ஒன்றில் காணப்பெறும் அர்த்தநாரியின் சூரிய வடிவம் உலகில் வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத ஒன்று! சிவசூரியன் இங்கே தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம் எனும் நான்கு முகங்களுடன், உடலில் ஒரு பாதி ஆணாகவும், ஒரு பாதி பெண்ணாகவும் எட்டுத் திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். கோஷ்டத்துக்கு மேல், சோழர் கால செந்தூர எழுத்துக்களில், 'அர்த்தநாரி சூரியன்’ என எழுதப்பட்டுள்ளது.

சங்க நிதி, பதும நிதி, அகத்தியர், உபமன்யு மகரிஷி, அகோர மூர்த்தி, நான்கு திருமுகங்களுடன் 14 பாம்புகளை உடலில் தரித்த வண்ணம் ஆடும் ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீஆலமர்ச் செல்வர், ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீபிரம்மன், ஸ்ரீதுர்கை, ஸ்ரீநாகராஜர், ஸ்ரீகணபதி, ஸ்ரீதிரிபுராந்தகர், ஆனை உரிச்ச தேவர், ஸ்ரீபைரவர், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீஆதிசண்டேஸ்வரர், ஸ்ரீராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்கள் கல்வெட்டுப் பொறிப்புகளோடு கோஷ்டங்களில் இடம் பெற்றிருந்தன. இவற்றில் சில, பிற்காலத்தில் அகற்றப்பட்டுவிட்டன.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 3

இந்தக் கோயிலிலிருந்து தஞ்சைக் கலைக்கூடத்துக்கு எடுத்துச் சென்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தி என்ற ஆனை உரிச்ச தேவரின் சிற்பம் அற்புதமானது. ஸ்ரீகாலபைரவராக கஜாசுரன் என்ற அரக்க யானையின் உடலுள் புகுந்து, அதனைக் கிழித்தவாறு ஆடிக்கொண்டே வெளிவரும் அண்ணலைக் கண்டு உமாதேவி அஞ்சி, தன் கையில் அணைத்துள்ள குழந்தை முருகன் அந்தக் கோலத்தைப் பார்க்காதபடி மறைத்து நிற்கிறாள். அது கண்டு, கோபத்துடன் இருந்த ஆடுத்தேவர் புன்னகை செய்கிறார். அற்புதமான இந்தச் சிலையின் 45 டிகிரி கோணத்தில் ஒரு பக்கம் இருந்து பார்த்தால், முகத்தில் கோபம் தெரியும். அதே முகத்தில் தேவி இருக்கும் திசையில் 45 டிகிரி கோணத்திலிருந்து பார்த்தால் புன்னகை தெரியும். ஒரே முகத்தில் இரண்டு விதமான பாவங்களைச் சிற்பி காட்டியுள்ளார்.

'விரித்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆக வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திகு மணிவாய்விள்ளச்
சரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே’

என்ற திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல், இங்கு சிற்பமாகி நிற்பதையும் தரிசிக்கலாம்.

- புரட்டுவோம்

படங்கள்: கே.குணசீலன்