குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

வி.ராம்ஜி

ஆலயம் தேடுவோம்!
##~##

'கோயில் நகரம்’ என்று எல்லோராலும் புகழப்படும் கும்பகோணம், எண்ணற்ற கோயில்களுக்கு நடுவே அமைந்துள்ள அற்புதமான ஊர். கும்பகோணத்தின் எல்லாத் தெருக்களிலும் ராஜாக்கள் காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான ஆலயம் ஒன்று நிச்சயம் இருக்கும். அதேபோல், மகான்கள் வாழ்ந்த ஆஸ்ரமங்களும் அவர்களின் அதிஷ்டானங்களும் அமைந்திருக்கும் புண்ணிய பூமி, கும்பகோணம்.

இந்த ஊருக்குள் ஏகப்பட்ட ஆலயங்கள் அமைந்திருப்பது போலவே, ஊரைச் சுற்றிலும்கூட ஏராளமான ஆலயங்கள் உள்ளன. திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் கோயில், அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி என்றும், அந்தப் பக்கம் சூரியனார்கோயில், ஆடுதுறை, திருவிடைமருதூர் என்றும், மற்றொரு பக்கத்தில் திருப்பனந்தாள், இன்னொரு பக்கத்தில் கொரநாட்டுக் கருப்பூர் என எங்கு பார்த்தாலும் கோயில்கள்... கோயில்கள்... கோயில்கள்..!

ஆலயம் தேடுவோம்!

போதாக்குறைக்கு காவிரிக்கரையோரமாகப் பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதே போல், காவிரியில் இருந்து கிளைபிரிந்து ஓடுகிற கொள்ளிடத்தை ஒட்டியும் ஏராளமான கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டு, தினமும் தடையின்றி பூஜைகள் நடக்கவும், நைவேத்தியமும் அன்னதானமும் குறைவின்றி நடைபெறவும் ஏராளமான ஆடு- மாடுகளையும் விளைநிலங்களையும் கோயில்களுக்கு விரும்பி வழங்கியிருக்கிறார்கள், மன்னர் பெருமக்கள்.

பிரமாண்டமாகக் கட்டப்பட்ட கோயில்களில் வழிபாடுகளும் விழாக்களும் விசேஷங்களும் விமரிசையாக நடந்தன. அந்த விழாக்களில் இறை விக்கிரகங்கள் திருவீதியுலா வருவதற்காக, அழகழகான வாகனங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் சர்வ அலங்காரத்துடன் ஸ்வாமி திருவீதியுலா வரும் அழகைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.

கும்பகோணத்தில் இருந்து நீலத்தநல்லூர் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது கடிச்சம்பாடி. இந்த ஊரின் நடுவே, அமைந்துள்ள அற்புதமான கோயிலில் குடியமர்ந்தபடி, மொத்த குடிமக்களையும் தேசத்தையும் காத்தருள்கிறார் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர்.

ஆலயம் தேடுவோம்!

நீண்ட பிராகாரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், கருவறை என மிக விஸ்தாரமான கோயில்தான். < கருவறையில் குடிகொண்டிருக் கிற மூலவர் ஸ்ரீமாசிலாமணீஸ்வரரின் லிங்கத் திருமேனியும் கொள்ளை அழகு! ஆனாலும் என்ன... விழாக்களோ வைபவங்களோ இன்றிக் களையிழந்த நிலையில் ஆலயமும் இறைவனும் இருப்பதுதான் வேதனையான உண்மை!

தை அமாவாசை, மாசி மகா சிவராத்திரி நாட்களில் இங்கே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட காலமெல்லாம் உண்டு. சித்திரையில் கொடியேற்றத்துடன் துவங்கி, பத்து நாள் கோலாகலமாக நடைபெறும் விழாவுக்கு கும்பகோணம், சுவாமிமலை, திருப்புறம்பியம், தாராசுரம், அணைக்கரை எனப் பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பார்களாம்! ஆனால் இன்றோ... கடிச்சம்பாடியில் இப்படியரு ஆலயம் இருப்பதுகூட எத்தனை பேருக்குத் தெரியுமோ எனும் அளவுக்கு பக்தர்களின் வருகையும் வழிபாடுகளும் வெகுவாகக் குறைந்துவிட்டது.

ஐப்பசியில் அன்னாபிஷேக வைபவத்தின் போது, இந்தக் கோயிலில் சுடச்சுட சாதம் வடித்துக்கொண்டே இருப்பார்களாம். பக்தர் கள் தங்களால் இயன்ற அரிசியைக் கோயிலுக்கு வண்டி வண்டியாக ஏற்றிக்கொண்டு வந்து, மூட்டை மூட்டையாகத் தருவார்களாம். அன்று, வருவோருக்கெல்லாம் அன்னதானம் நடைபெறும். ஆனால், கடந்த 150 வருடங்களுக் கும் மேலாக கும்பாபிஷேகம் காணாமலேயே இருக்கிறது கோயில் என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் கிராம மக்கள்.

ஆலயம் தேடுவோம்!

அம்பாளின் திருநாமம்- ஸ்ரீதிரிபுரசுந்தரி. பெண்கள் இங்கு வந்து தங்களின் குறைகளைச் சொல்லி முறையிட்டால், தாங்கமாட்டாளாம் தேவி. உடனே அவர்களின் குறைகளைக் களைந்து, வாழ்வில் ஒளியேற்றித் தரும் கருணைத் தாய் இவள். ஆனி, சித்திரை மாதங்களில் இவளுக்கெனவே சிறப்பு விழாக்கள் நடைபெறுமாம்.

ஆலயம் தேடுவோம்!

''முன்னெல்லாம் அம்மாவுக்குப் புடவை சார்த்தணும்னு மாட்டுவண்டி கட்டிக்கிட்டு, எங்கிருந்தெல்லாமோ கூட்டம் கூட்டமா சனங்க வரும். வந்து, கோயில் வாசல்ல அவங்களே பொங்கல் வைச்சு, அம்பாளுக்குப் புடவை சார்த்திட்டு, 'எங்க பொண்ணைக் கட்டிக் கொடுத்தோம். ஆனா அங்கே சீரும் சிறப்புமா வாழலை எங்க பொண்ணு. அவளும் அவ புருஷனும் நிம்மதியா, சந்தோஷமா வாழணும்’னு வந்து கண்ணீர் விட்டு வேண்டிட்டுப் போவாங்க. அடுத்த நாலே மாசத்துல, மகளும் மருமகப் பிள்ளையுமா சிரிக்கச் சிரிக்க, ஜோடியா கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுப் போவாங்க. ஆனா, இப்ப கோயில்ல விசேஷம் நடக்கறதும் குறைசிருச்சு; வெளியூர்லேருந்து வர பக்தர்களும்குறைஞ்சிட்டாங்க'' என்று கைங்கர்ய சபா பொருளாளர் கணேசன் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

சித்திரை மாதத்தில் 16, 17 மற்றும் 18-ஆம் தேதிகளில், சூரிய பகவான் தன் கதிர்களால் சிவலிங்கத் திருமேனியில் விழுந்து வணங்கும் காட்சியைத் தரிசிக்க ஏராளமான அன்பர்கள் காலையிலேயே வந்துவிடுவார்களாம். இன்றைக்கும் சித்திரை 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை, அதிகாலையில் சூரியோதயத்தின்போது, சூரியக் கதிர்கள் ஸ்ரீமாசிலாமணீஸ்வரரின் சந்நிதியில் வந்து விழுகின்றன. அவரின் திருமேனியைத் தொடுகின்றன. திருவடியில் விழுந்துவிட்டு பிறகு செல்கின்றன. ஆனால், இந்த அற்புதத் தரிசனத்தைக் காண பக்தர்கள்தான் வருவதில்லை.

கோயிலும் சரி, கோயிலில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை முதலான தெய்வங்களும் சரி... அத்தனை அழகுடனும் நேர்த்தியுடனும் கம்பீரமாகத் திகழ்வதைப் பார்க்கப் பார்க்க, இத்தனை அழகான கோயிலுக்கு, இவ்வளவு சாந்நித்தியங்களைக் கொண்ட ஆலயத்துக்கு, கும்பாபிஷேகம் சீக்கிரம் நடக்கவேண்டுமே எனும் ஆசையும் பிரார்த்தனையும் ஓடியது உள்ளுக்குள்ளே!

கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கடிச்சம்பாடி தலத்தில், ஊர்கொள்ளாத அளவுக்கு கூட்டம் வர வேண்டாமா? கருணையுள்ளம் கொண்ட ஸ்ரீதிரிபுரசுந்தரிக்கு புடவைகளும் நைவேத்தியங்களும் சமர்ப்பிக்கப்பட்டு, பக்தர்களின் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறவேண்டும்தானே!

ஊருக்கே படியளக்கும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரருக்கு அன்னா பிஷேகம் சிறப்புற நடைபெறட்டும். முன்னதாக, 150 வருடங்களாக கும்பாபிஷேகம் காணாத அவரின் ஆலயம் திருப்பணிகள் நடந்து, சீரும் சிறப்புமாகக் கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடக்கட்டும். அடியார்களாகிய நாம் மனது வைத்தால், சிவனாரின் கோயிலில் கும்பாபிஷேகம் சீக்கிரமே நடக்காதா, என்ன? கட்டாயம் நடக்கும். விரைவிலேயே சக்தி விகடனில் 'நல்லது நடந்தது’ என்னும் தலைப்பில், 'ஆன்மிக அன்பர்களின் முயற்சியாலும் உதவியாலும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது’ என்கிற தகவல் வெளியாகி, பக்தர்களின் உள்ளத்தைக் குளிரச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

படங்கள்: செ.சிவபாலன்

எங்கே இருக்கிறது?

கும்பகோணத்தில் இருந்து நீலத்தநல்லூர் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது கடிச்சம்பாடி. ஊரின் மையப்பகுதியில் அழகுற அமைந்துள்ளது, ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் திருக்கோயில். பஸ் வசதி உண்டு. ஆட்டோவிலும் செல்லலாம்.