மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்!... - 17

சித்தம் அறிவோம்இந்திரா சௌந்தர்ராஜன்

சித்தம்... சிவம்... சாகசம்!... - 17
##~##

''மலையாது பூரணமாய் அறிந்தோரானால்
அந்தரத்தில் வாரியது அசையா நிற்கும்
அலையாமல் உண்டவர்கள் கண்டே கொள்வார்
கஞ்சாவும் கள்ளும் உண்டோர் காணார் பேயர்
முலையின் பால் உண்டாலல்லோ நிலைக்கும் தேகம்
நிலவரமாய் யோக சித்தி ஞான சித்தி
தலைகாமப் பாலுண்டோர் அருட்சித்தனாகி
வாழ்ந்திருப்பார் கோடானு கோடி காலம்..!''
               - சந்திர ரேகை

மிர்தத்துக்கு இணையான மூலிகை ரசத்தை அடைந்து, அதன் மூலமாய் சிரஞ்ஜீவித்துவத்தை அடைந்துவிட வேண்டும். அதாவது, உடல் சார்ந்த நரை- திரை- மூப்பை வெற்றி கொண்டுவிட வேண்டும். பின், அந்த நரை- திரை- மூப்புக்குக் காரணமான ஐந்து பூதங்களை தன் உடம்பில் மட்டுமல்ல, உலகிலும் அடக்கி ஆளவேண்டும் என்கிற எண்ணமும் முனைப்பும் கோரக்கருக்குள்ளும் பிரம்மமுனிக்குள்ளும் ஒருசேர எழும்பியது.

கூடவே, இன்னொரு எண்ணமும் சேர்ந்துகொண்டது. உலகில் பிறந்துவிட்டால் இறந்தாக வேண்டும் என்பது ஒரு மாற்றமுடியாத விதியாக உள்ளது. ஆனால், இது தேவர்களுக்குப் பொருந்துவதில்லை. எனவே, இந்த உலகிலும் இறப்பின்றி வாழ வழி காண வேண்டும். அதாவது, பூவுலகிலும் தேவர்களைப் போல ஏற்றத் தாழ்வில்லாத இறவாப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று இருவரும் விரும்பினார்கள். தாங்கள் இருவர் மட்டும் இறவாப் பெருவாழ்வு வாழ்ந்தால் போதும் என்று அவர்கள் எண்ணவில்லை. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்று விரும்பினார்கள்.

நல்ல எண்ணம்தான் இது. ஆனால், நடக்கக் கூடியதா? முயற்சி திருவினையாக்கும் என்பது பழமொழி. எனவே, கடும் முயற்சி செய்தால், இந்த எண்ணம் ஈடேறிவிடாதா என்ன?

இப்படி நம்மில் பலருக்கும்கூடத் தோன்ற லாம். ஆனால், இதுபோன்ற சிந்தனைகளை வெறும் உணர்வு மற்றும் புலனறிவால் மட்டும் அணுகினால் போதாது. இவற்றைக் கடந்த, அதாவது... உணர்வு, அறிவு இரண்டையும் சமன்படுத்திச் செய்யும் சிந்தனையால் விளையும் ஞானத்தைக் கொண்டே இதை அணுக வேண்டும். அப்படி ஞானத்தோடு இந்த விஷயத்தை அணுகும்போதுதான் பல உண்மைகள் புலனாகும்.

அந்த அடிப்படையில் பார்த்தால், இன்பம் என்ற ஒன்றுக்கு மதிப்பிருப்பதே துன்பம் என்கிற ஒன்றால்தான் என்பதும் புரியும். இது அப்படியே இனிப்புக்கு மதிப்பு கசப்பால், அன்புக்கு மதிப்பு வெறுப்பால், குணப்பாட்டுக்கு மதிப்பு வியாதியால் என, ஒன்று இரண்டாக எல்லாத் தளங்களிலும் இருப்பதும் புரியவரும்.

அப்படி இல்லாதபட்சத்தில், எந்தவொரு நல்லதின் மதிப்பும் பரிமாணமும் நமக்குப் புரியாமலேயே போய்விடும். இன்றைய நம் வாழ்க்கையிலேயே அதற்கு நிறைய உதார ணங்கள் இருப்பது, கொஞ்சம் சிந்தித்தால் புரியும். பெரும்பாலும் நாம் ஆரோக்கியமாக, பசியை உண்ணும் உணவால் வென்று மகிழ்வாகவே வாழ்ந்தபடி இருக்கிறோம். எப்போதாவதுதான் பசிக்கு உணவில்லாத ஓர் இக்கட்டுக்குப் பல காரணங்களால் ஆளாகிறோம். ஆனால், அப்போதோ நம் மனது, 'காலமெல்லாம் இப்படித் துன்பப்பட நேர்ந்தால்..?’ என்னும் அச்சத்துக்கு ஆளாகி, தவிக்கத் தொடங்கிவிடுகிறது. அந்த அச்சம் நம்மைப் பலவித சிந்தனைகளுக்கு ஆளாக்கி, அடுத்துப் பல மாத காலத்துக்கு உணவுப் பொருட்களை நம் இல்லத்தில் சேமித்து வைத்துக்கொள்ளக் காரணமாகிவிடுகிறது.

அதாவது, நமக்கு ஏற்பட்ட பசி பயமாகி, இறுதியில் வெறும் சுயநலமாக மாறிவிடுகிறது. இந்தவகையில் மனிதனைத் தவிர, மற்ற உயிரினங்கள் நாளைக்கு என்று எதையும் சேமித்து வைத்துக் கொள்வதில்லை. அப்படி சேமித்து வைத்துக்கொள்ளத் தெரியாததால் அல்லது முடியாததால் அவை வாழாமலும் போய்விடுவதில்லை.

சித்தம்... சிவம்... சாகசம்!... - 17

நாளைய தினத்தை எண்ணி அரிசி, பருப்பில் இருந்து... தங்கம், வெள்ளி வரை தன் எதிர்கால நலம் கருதிச் சேமித்து வைத்துக்கொள்ளும் மனிதன், கடைசி வரை அல்லது தான் விரும்பும்வரை இறவாப் பெருவாழ்வை இந்த மண்ணில் வாழ்ந்துவிடுகிறானா?

என்னதான் சேமிப்பும் செல்வமும் இருந்தா லும் மரணம் எப்போது வரும் என்பது தெரிய வில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த மண்ணில் வாழ்ந்து வரும் ஒரே ஒருவரைக்கூட இந்த உலகம் இதுவரை காணவில்லை; இனி, காணப்போவதும் இல்லை.

ஒருவேளை, அப்படி வாழ முடிந்துவிட்டால், அதாவது, காலகாலமாய் பிறப்பு மட்டுமே உண்டு, இறப்பே கிடையாது என்கிற நிலை உருவாகிவிட்டால், பின்பு இந்த உலகில் நாம் நடமாடித் திரிய நிலப்பரப்பு இருக்குமா என்பது சந்தேகமே! தவிர, இந்த உலகம் என்பது ஆயிரம் ஆண்டு, இரண்டாயிரம் ஆண்டு, மூவாயிரம் ஆண்டுகள் இறவாது உயிர்வாழ்ந்து வரும் முதியவர்களின் பூமியாகவே இருக்கமுடியும். அப்படி மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்கிறவர்களின் மனோபாவம் எப்படி இருக்கும்? 'அட, போப்பா!  ஆயிரம் ஆயிரம் வருடங்களாக ஒரே மாதிரி இரவு பகலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உடம்பால் அழிவின்றி அப்படியே இருக்கிறேன். ஆனால், உள்ளத்தில்தான் உற்சாகம் என்பதே கிஞ்சித்தும் இல்லை. ஒரே மாதிரி வாழ்க்கைப்போக்கில், மாற்றமே இல்லாத இந்த வாழ்வைப் போலக் கொடிய வாழ்வை பார்க்கமுடியாது. இதற்குப் பதிலாகத் தீயில் குதித்துச் சாம்பலாகிவிடுவதே மேல்’ என்பார்கள். அதுமட்டுமல்ல, புதிதாய் பிறக்கும் குழந்தையைப் பார்த்து, 'இந்த உலகச் சிறைக்கு இன்னொரு கைதி வந்துவிட்டான்’ என்றே நினைப்பார்கள்.

எனவே, இறவாப் பெருவாழ்வு என்பதைப் போல ஒரு அபத்தமான சிந்தனை இருக்கவே முடியாது என்பதே யதார்த்தம். இருக்கவே முடியாது என்பதல்ல; இருக்கவும் கூடாது என்பார்கள் சிலர்.

இன்றுள்ளதைப் போல நூறாண்டு என்பதே போதுமானது. இதிலும் நரை- திரை- மூப்பில்லாவிட்டால் ஒருவரின் வயதை அறிவது முதல் அனைத்திலும் குழப்பம் ஏற்படும். நரை- திரை- மூப்பு ஏற்பட்டாலே அடையாளங்கள் காணமுடியும். இதன்படி பார்த்தால், இப்போது நடைமுறையில் உள்ள மனித வாழ்க்கைப் போக்கில் ஓர் அசாதாரண திட்டமிடலும், நிகரில்லாத கட்டமைப்பும் இருப்பது புலனாகும்.

ஆனாலும், கோரக்கரும் பிரம்மமுனியும் இவற்றைப் பற்றி எண்ணாமல், மரணமில்லாத வாழ்வையும், பஞ்ச பூதங்களையும் கட்டுப் படுத்த எண்ணியதன் பின்னாலே நாம் கவனிக்கவேண்டியது... அவர்களுக்கு இந்த உலகத்து உயிர்களின் மேல் இருந்த கருணையும் கரிசனமும்தான்! அந்தக் கருணையும் கரிசனமும் செயலானது. அந்த நாளிலும் சரி, இந்த நாளிலும் சரி... வேண்டியதை அடைய மானுடத்துக்கு இருக்கும் மகத்தான ஒரே வழி- வேள்வி புரிவது என்பதுதான். வேள்வியில் அக்னிக்குத்தான் பிரதான இடம். நாம் மந்திர முழக்கத்தோடு இடும் அவிர் பாகங்களைப் பெற்று அவனே உரியவர்களிடம் சேர்ப்பிக்கிறான். அவிர் பாகம் பெற்ற தேவர்கள், பதிலுக்கு நம் கோரிக்கையை ஈடேற்றுபவர்கள் ஆகிறார்கள்.

தனியொரு மனிதன், தன் நலன் பொருட்டு வளர்க்கும் தீ 'ஹோமம்’ எனப்படும். இது வீடுகளில் நிகழ்வது. ஒரு மனிதக் கூட்டம் நாட்டு நலன் விரும்பி வளர்க்கும் தீ 'வேள்வி’ எனப்படும். இது பொதுவான இடத்தில் நிகழ்வது. பிரம்மமுனியும் கோரக்கரும் உலக நன்மைக்காகவே யாகம் எனும் வேள்வியை செய்யத் தயாரானார்கள். அதற்கு அவர்கள் தேர்வு செய்த இடம் சதுரகிரி மலையில், ஆலயத்துக்கு தென் திசையில் உள்ள பிரம்ம வனம் எனும் பகுதி.

எப்போதும் இதுபோன்ற நற்செயல்களை கால பலத்தோடு செய்வது முக்கியம். கால பலம் என்பது... இரவு- பகல் எனும் இரு பிரிவுக்குள் கிடக்கும் காலை, மதியம், மாலை, நள்ளிரவு, பிரம்மமுகூர்த்த அதிகாலை எனும் பிரிவுகளில் மட்டுமல்ல; அன்றுள்ள மாதம் மற்றும் கிழமை, அது சார்ந்த நட்சத்திர ஆதிக்கம், இந்த இரண்டோடு கூடிய திதிப் பொழுது, அதனுள் நிலவும் ஹோரை எனும் ஐந்து அம்சங்கள் கொண்டதாகும். ஐந்து எனும் பஞ்ச அம்சங்களை அங்கங்களாக உடையதையே 'பஞ்சாங்கம்’ என்கிறோம். பஞ்சாங்கம் என்பதோ கணிதமயமானது. மிக மிகத் துல்லியமானது. கணிதம் என்றாலே துல்லியம் என்றும் ஒரு பொருள் உண்டு. அடுத்து, மிக நியாயமானது என்றும் ஒரு பொருள் உண்டு. ஏனென்றால், கணக்கை யார் எங்கிருந்து போட்டாலும் விடை மாறாது. அது ஆளுக்குத் தகுந்த மாதிரி மாறும் ஒன்றல்ல; மாறாத் தன்மை உடையது. இந்த மாறாத் தன்மை உலகிலேயே இறைவனுக்கு மட்டுமே பொருந்தும். அடுத்து, கணிதத்துக்குதான் பொருந்தும்.

எனவே, கணிதத்தைக் கடவுளாகவும் கருதலாம். அதில் தப்பில்லை. இந்தக் கணிதம் எண் வடிவானது. அதனாலேயே நம் சான்றோர்கள் இதைக் கண்ணாக கருதினர். அதுவும் எப்படி... 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்பதில், எண்ணை முதலில் வைத்து சிறப்பித்தனர். எழுத்தை ஏன் பின்னால் வைத்தனர் என்றால்... அது, இனத்துக்கு இனம், கண்டத்துக்கு கண்டம் மாறுதல்களோடு உள்ளது. எழுத்துதான் மொழியால் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு எனப் பல விஷயங்கள் கண்டுள்ளது. அதாவது, அது மாறும் தன்மைக்குரியது. ஆனால், பல மொழியாளரிடத்தும் எண் மட்டும் மாறாமல் ஒன்றாகவே உள்ளது. ஒன்று, இரண்டை அமெரிக்கன், இந்தியன், ஆப்பிரிக்கர்கள், அரேபியர்கள் என்று எவரும் ஒரே வடிவில் ஏற்று, அதையே பயன்பாட்டிலும் கொண்டுள்ளனர்.

இப்படி, எண் குறித்துச் சிந்திக்க அநேக விஷயங்கள் உள்ளன. இந்த எண்ணின் பின்புலத்துக் கணிதம்தான், காலப் பொழுதை அளந்து கணித்து, இந்த நாளில் இந்த வேளை யில் இத்தனை நிலை அளவுக்கு உட்பட்ட நிமிடங்கள் மிகுந்த செறிவுடைய- கதிர் வீச்சு கொண்ட பொழுதாக உள்ளது என்பதைக் காண நமக்கு உதவுகிறது.

இந்தக் கணக்கில் கோரக்கரும் புலி. உலக நன்மைக்கான வேள்வியைத் தொடங்க அவர் இந்தக் கணிதப்படி தேர்வு செய்த இடமே பிரம்மவனம். தேர்வு செய்த காலம்- மாசி மாதம் பௌர்ணமி திதி, மக நட்சத்திர நாளின் இரவுப்பொழுது. அதிலும் பத்து நாழிகை சென்றுவிட்ட பதினோராவது நாழிகையின் தொடக்க காலம்..!

இப்படிக் காலமறிந்து செயல்பட்டால்தான் அது வெற்றியில் முடியும். இங்கே காலம் கூடவா வெற்றிக்குரியது, தோல்விக்குரியது என இரண்டாக இருக்க வேண்டும் என்கிற கேள்வி எழலாம். ஒன்று இரண்டாக இருந்தாலே, அதில் ஒன்றை நாம் உணர முடியும். இந்த ஒன்று இரண்டாக இருப்பது என்பதும், உணர்ந்துவிட்ட பின் இரண்டையும் சமமாகக் கருதுவதும்தான் அத்வைதம் ஆகும்.

சித்தம்... சிவம்... சாகசம்!... - 17

துவைதம் என்றால், இரண்டாக இருப்பதைக் குறிக்கும். இரண்டையும் உணர்ந்து, அதை ஒன்றாகக் கருதும் நிலைக்கு வந்துவிட்டவர்களை 'அத்வைதிகள்’ என்பார்கள்.

நாம் திரும்ப காலகதிக்கு வருவோம்.

பிரம்மமுனியும் கோரக்கரும் காலகதியைக் கண்டறிந்து வேள்வியைத் தொடங்கவும், அது மற்ற சித்த புருஷர்கள், தேவர்கள் என எல்லோருக்கும் தெரியவந்து, அவர்களும் அங்கே வந்து குழுமினர். சதுரகிரி தலத்தில் தவமியற்ற வந்த யோகியர்களும் அந்த வேள்வியை ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

'எதற்காக இந்த வேள்வி?’ என்ற அவர்கள் கேள்விக்கு 'பூவுலகையும் தேவருலகம் போல இன்ப- துன்பங்களுக்கு இடமில்லாத, அமைதி மட்டுமே தவழும் உலகமாக உருவாக்க’ என்கிற பதில் அளிக்கப்பட்டது. அதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

அவர்கள் மட்டுமா ஆச்சரியப்பட்டனர்?

கயிலாயத்தில் சிவபெருமானும் ஆச்சரியத்துக்கு ஆளானார். அருகில் இருந்த பார்வதிதேவியைப் பார்த்தார். ஏற்றத் தாழ்வே இல்லாத அமைதியான உலகத்தைப் படைக்கும் நோக்கோடு நடத்தப்படும் இந்த வேள்வி குறித்து சிவபெருமானின் எண்ணத்தை அறிய விரும்பினாள் உமாதேவி.

சிவபெருமானோ, 'தேவி! அந்த இரு சித்த புருஷர்களும் நல்ல எண்ணத்தோடுதான் வேள்வி புரிகின்றனர். ஆனால், அவர்களிடம் தூர திருஷ்டி (தொலைநோக்கு பார்வை) இல்லை. அவர்களது வேள்வி வெற்றிபெற்றால் வரத்தை அளித்தே தீரவேண்டும்''  என்றார்.

''நம் கேள்விக்கு இரு விடைகளா?'' என உமை திருப்பிக் கேட்டாள்.

''இந்த இரு விடைகளில் ஒன்றை நீதான் முடிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு வேண்டுமானால் இறவாப் பெருவாழ்வை வரமாகத் தரலாம். உலகோர்க்குத் தர முடியாது. எனவே, அவர்கள் வேள்வியும் வென்றதுபோல, நம் எண்ணமும் வென்றதுபோல ஒருவழிப் பாட்டை நீ உன் திறத்தாலே உருவாக்கு' என்றார்.

உமையும் தன் க்ரியா சக்தியிலிருந்து அருள், இருள் எனும் இரு சக்தி அம்சங்களை அழகிய பெண்களாக ஆக்கி, வேள்விச்சாலை நோக்கி அனுப்பிவித்தாள். அருளும் இருளும் 'அருள்மாயா’, இருள்மாயா’வாக வேள்விச் சாலையில் தோன்றி எழிலோடு நின்றிட... அக்னி, வாயு, வருணன் முதலான பஞ்ச பூதாதியர் அவர்களைக் கண்டு மயங்கத் தொடங்கினர். இதனால் வேள்வி தடைப்படும் சூழல் உருவாகியது. மற்றவர்கள் மனமும் மயங்கியது.

என்னதான் காலக்கணக்கைத் துல்லியமாகப் போட்டிருந்தாலும், வேள்வி தடுமாற்றம் கண்டது. அது பிரம்மமுனி, கோரக்கரிடம் கோபமாக மாறியது. வேள்வியின்போது வரக்கூடாதது வந்தும் விட்டது. அவர்களுக்குள் சேமிப்பாகி இருந்த தவசக்தி சாபமாக மாறியது.

'தேவர்களையே மயக்கும் வல்லமை பெற்ற பெண்களே! நீங்கள் உங்கள் தோற்றத்தை இழந்து தாவரங்களாக ஆவீர்களாக. தாவரங்களான உங்களை இந்த அக்னியும், எந்த வாயுவும் கண்டு மயங்கினார்களோ, அவர்களே சாம்பலாகவும் ஆக்கிடுவார்கள்' என்று சபித்தனர்.

சாபம் வேலை செய்தது. அருள்மாயை கஞ்சாசெடியாகவும், இருள்மாயை புகையிலைச் செடியாகவும் ஆயினர்.

- சிலிர்ப்போம்...