மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விடை சொல்லும் வேதங்கள் - 3

ஒரு கதை... ஒரு தீர்வு!

விடை சொல்லும் வேதங்கள் - 3
##~##

'ரெண்டு மாசமா வீட்டுக்கு வாடா வாடான்னு கூப்பிட்டுக்கிட்டிருக்கேன்; பிடிகொடுக்காம நழுவிக்கிட்டே இருக்கியே..?'' என்றான் நண்பன்.

நண்பன் சொன்னதுபோல் நான் நழுவவில்லை; அதிகம் மெனக்கிடவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். என்றாலும், அவன் வீட்டுக்குச் செல்வதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கத்தான் செய்தன.

முதல் முக்கிய காரணம் அவனுடைய மகள். யூ.கே.ஜி. படிக்கிறாள். அத்தனை அழகு! அவ்வளவு சூட்டிகை! யார் ​தூக்கிக்கொண்டாலும் தயங்காமல் மலர்ச்சியுடன் இருப்பாள். என்றாலும், பிறரைவிடத் தன்னிடம்தான் அவள் அதிகம் ஒட்டிக்கொள்கிறாள் என்று நினைத்துக்கொள்வதில் அனைவருக்குமே ஒரு அலாதியான சந்தோஷம் இருந்தது.

இரண்டாவது காரணம், அவனது வீடு. இரு மாதங்களுக்கு முன்புதான் நண்பன் புது வீட்டுக்கு மாறியிருந்தான். அந்த வீட்டுக்குள் இன்னும் நான் அடியெடுத்து வைக்கவில்லை.

போனில் வாக்களித்தபடியே, அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவன் வீட்டுக்குச் சென்றேன். நுழைந்தவுடன் என் பார்வை அங்குமிங்கும் தேடியது. நண்பன் புரிந்துகொண்டான். ''ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க இல்லியா, அதான் குழந்தை அடுத்த தெருவிலே இருக்கிற மாமா வீட்டுக்குப் போயிருக்கா. இன்னும் அரை மணியிலே வந்துடுவா. நான் வேணா போய் கூட்டிட்டு வரவா?'' என்றான்.

''வேண்டாம். அரை மணி நேரம்தானே! வெயிட் பண்ணினாப் போச்சு. அதுவரை நாம பேசிட்டிருக்கலாம்'' என்றேன்.

தன் புதிய வீட்டை நண்பன் எனக்குச் சுற்றிக் காட்டினான். மிகவும் வசதியானதாகத் தென்பட்டது. வாடகைகூட நியாயமானதுதான். மாடியிலிருந்து இந்திப் பாடல் ஒன்று அதிக சத்ததுடன் கேட்டது.

என் பார்வையில் உள்ள கேள்வியைப் புரிந்து கொண்டவன் போல, ''மாடி போர்ஷனில் ​மரைன் இன்ஜினீயர் ஒருவரும் அவரது மனைவியும் குடியிருக்காங்க'' என்றான் நண்பன்.

'வட இந்திய தம்பதிகளா?'' என்றேன்.  

விடை சொல்லும் வேதங்கள் - 3

'இல்லை. பக்கா மதுரைக்காரங்க. இன்ஜினீயருக்குத் தமிழ்ப் பாட்டுதான் பிடிக்கும். ஆனா, லல்லிக்கு இந்திப் பாட்டுன்னா உயிர்'' என்றான்.

சட்டென்று ஏதோ மனத்தில் தைத்தது. 'இன்ஜினீயர் மனைவி’ என்று அவன் குறிப்பிடவில்லை.  பெயரையும் சுருக்கி (செல்லமாக?) 'லல்லி’ என்கிறான். நான் நண்பனை உற்றுப் பார்த்தேன். அவன் கண்களில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. எனினும், சமாளித்துக் கொண்டு உறுதியான குரலில் சொன்னான்...

'டேய் டேய்... உன் மனத்தில் ஓடும் கற்பனைகள் தப்பு! நம்பர் ஒன்: என் மனைவியை நான் மிக மிக நேசிக்கிறேன். நம்பர் ​டூ: என் மகளின்மீது எனக்குக் கொள்ளைப் பாசம். நம்பர் த்ரீ: என் குடும்ப கௌரவம் எனக்கு மிக முக்கியம். நம்பர் ஃபோர்: லலிதாவின் அழகு என்னைக் கொஞ்சம் டிஸ்டர்ப் செய்வது உண்மைதான். அவளுக்கும் என்னிடம் கொஞ்சம் ஸாஃப்ட் கார்னர் இருக்குங்கறதை புரிஞ்சுக்க முடியுது. ஆனா, அதுக்கும் மேலே எதுவும் இல்லை. எங்களுக் குள்ளே எந்தத் தவறான பேச்சுவார்த்தையோ, நடவடிக் கையோ கிடையாது. போதுமா? என்னை நம்பு!''.

அவன் உண்மையைத்தான் கூறுகிறான் என்பது புரிந்தது. ஆனாலும், எனக்கென்று ஒரு கடமை இருந்ததை உணர்ந்தேன்.

'உன் மனைவியும் குழந்தையும் வருவதற்கு இன்னும் 20 நிமிஷம் இருக்கு. அதற்குள் உனக்கு ஒரு கதை சொல்றேன், கேளு'' என்று அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினேன்.

சுந்தன், உபசுந்தன் என்ற பெயர் கொண்ட இரண்டு அசுரர்கள் இருந்தார்கள். அண்ணன்- தம்பியான அவர்களுக்கு ஒருவர்மீது மற்றவருக்குப் பாசம் அதிகம். அவர்கள் இருவரும் தங்களுக்கு சாகாவரம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.  

வரம் தேவை என்றால், தவம்தானே அதற்கான வழிமுறை? எனவே, இருவரும் பிரம்மனை நோக்கிக் கடுமையான தவத்தில் ஈடுபட்டார்கள். பல கடினமான சோதனைகளுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டார்கள். தங்கள் உடலைப் பெரிதும் வருத்திக்கொண்டார்கள். ஒருமுகமாக அவர்கள் செய்த தவத்துக்குப் பலன் இருந்தது.  நான்முகன் அவர்கள் முன் தோன்றினார். 'மகிழ்ந்தேன். என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார்.

அவரைப் பணிந்து வணங்கிய சகோதரர்கள், 'எங்களுக்கு சாகா வரம் அருள வேண்டும்'' என்றனர்.  

'அப்படிப் பொதுப்படையான வரத்தை யாருக்கும் அளிப்பதில்லையே? அது இயலவும் இயலாது! மற்றபடி, எந்த விதமாக உங்கள் மரணம் நிகழவேண்டும் என்று சொன்னால், அந்த விதத்தில் மட்டுமே உங்கள் முடிவு நேரும்படி வரம் அருள்கிறேன்'' என்றார் பிரம்மா.  

சகோதரர்கள் தங்களுக்குள் விவாதித்தனர். 'ஆயிரம் வருடம் ஆயுள் வேண்டுமென்று கேட்கலாமா? கூடாது. அதையும் தாண்டி வாழ வேண்டும். நாம் கேட்கும் வரம் என்பது மறைமுகமாக சாகாவரமாகவே இருக்க வேண்டும்.

என்ன செய்யலாம்? மிகவும் வித்தியாசமான, உலகிலேயே காணப்படாத உருவத்தால்தான் முடிவு நேர வேண்டும் எனக் கேட்கலாமா? ஆனால், நரசிம்ம அவதாரம் தோன்றியதைப் போல தங்களுக்கும் ஏதாவது நேரிட்டால்? அய்யய்யோ..! கூடாது’ என்றெல்லாம் யோசித்தவர்கள், கடைசியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள். ஒரே குரலில் பிரம்மனிடம் அந்த வரத்தைக் கேட்டார்கள்.

'எங்களுக்கு எங்களைத் தவிர பிறரால் மரணம் நேரக்கூடாது!''

ஒருவர் மீது மற்றவர் அதீத பாசத்துடன் இருக்கும் இந்த அசுர சகோதரர்களுக்கிடையில் பகை உண்டாகவே வாய்ப்பு இல்லை; எனவேதான், மறைமுகமாக மரணமில்லாத வரத்தை இவர்கள் சாதுர்யமாகக் கேட்டிருக்கிறார்கள் என்பதை பிரம்மா புரிந்துகொண்டார். எனினும், வாக்கு கொடுத்தாகிவிட்டதே! எனவே, அவர்கள் கோரியபடியே வரம் அளித்தார் பிரம்மா.  

இதற்குத்தானே காத்திருந்தார்கள் அந்த இருவரும்! வரம் ஒரு கவசமாகப் பயன்பட, எல்லா அழிவுச் செயல்களிலும் இறங்கினார்கள். முனிவர்களும் நல்லோரும் இவர்களால் பெரும் துயரங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாயினர். அசுரர்கள் இருவரும் பெண்களைச் சூறையாடினர். இந்திரலோகத்தைத் தங்கள்வசம் கொண்டு வந்தனர். மமதை உணர்வு தலைக்கேற, படுபாதகங்கள் அனைத்தையும் அரங்கேற்றினர்.

தீமை அத்துமீறும்போது தெய்வ சக்தி உதவிக்கு வராமல் இருக்குமா? பிரம்மன் ஒரு பேரழகியைப் படைத்தார். அந்தப் பிரபஞ்ச அழகிக்கு திலோத்தமை என்று பெயர். அவளைப் பார்த்தவர்கள் அவள் அழகில் மெய்ம்மறந்து வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தனர். அனைவரையும் ஏக்கப் பெருமூச்சுடன் தவிக்கச் செய்த அந்த அழகி, ஒருநாள் இந்த அரக்க சகோதரர்களின் அரண்மனைக்கும் வந்தாள். பார்த்த மாத்திரத்தில் சுந்தனும், உபசுந்தனும் பிரமித்துப் போனார்கள். அவள் மீது மையல் கொண்டார்கள். யார் முதலில் அவளை அடைவது என்ற கேள்வியில் இருவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. 'அவன்தான் கொஞ்சம் விட்டுக் கொடுக்கட்டுமே’ என்று இருவருமே நினைத்தார்கள். கோபம் தலைக்கு ஏறியது. புத்தி தடுமாறியது. வரத்தின் தன்மையை மறந்தார்கள். ஒருவரோடு ஒருவர் வாள் சண்டையிடத் தொடங்கினார்கள். விதி விளையாடியது. இருவருமே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்து போனார்கள்.

இந்தக் கதையை நான் சொல்லி முடித்து விட்டு, ''இதை உன்னிடம் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது'' என்று சொல்லி நிறுத்தினேன். நண்பன் என்னைக் குழப்பமாக ஏறிட்டான்.

'அரக்க சகோதரர்கள் மிகவும் சாதுர்யமாகத்தான் வரம் வாங்கினார்கள். நம்பர் ஒன்: இருவருக்குமே ஒருவர்மீது மற்றவருக்கு கொள்ளைப் பாசம். நம்பர் ​டூ: தவம் செய்தபோதும் சேர்ந்துதான் செய்தனர். சாகாவரம் கேட்கவேண்டும் என்பதில்கூட ஒருமித்து இருந்தனர். நம்பர் த்ரீ: பிரம்மனைக் தரிசித்தபோதும் இருவரும் அவரவருக்குத் தோன்றிய வரத்தைக் கேட்கவில்லை. கலந்து விவாதித்துதான் கேட்டனர். நம்பர் ஃபோர்: திலோத்தமையின்மீது மையல் கொண்டபோதுகூட இருவருமே அவளை அடைய வேண்டும் என்றுதான் எண்ணினார்கள். நம்பர் ஃபைவ்: காமம் மிகும்போது அது தங்களது புத்தியைத் தடுமாறச் செய்து, தங்களுக்கு இடையிலான சகோதர பாசத்தை மழுங்கடித்து, பெற்ற வரத்தையும் மறக்கடிக்கச் செய்யும் என்பதை அவர்கள் சற்றும் எண்ணிப் பார்க்கவில்லை. அவ்வளவுதான்!'' என்றேன்.

விடை சொல்லும் வேதங்கள் - 3

நண்பனின் முகம் சிவந்தது. 'நான் கூறியதைப் போலவே நீயும் பாயின்ட் பாயின்ட்டாகச் சொல்கிறாய். ஆனால், நான் சொன்னதற்கும் நீ சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?'' என்று கேட்டான்.

'காமம் என்பது வலுவானதொரு உணர்வு. 'ஒரு சங்கிலியின் பலம் என்பது, அதன் மிக பலவீனமான இணைப்பின் அளவுதான்’ என்று, ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. புராணக் கதையின் சாரத்தை நான் பாயின்ட்டுகளாக எடுத்து வைத்ததில், மற்றவையெல்லாம் சகோதர பாசத்தை விளக்கினாலும், கடைசி பாயின்டான அந்த பலவீனம்தான்- அதாவது, காமம்தான் அவர்களை வீழ்த்தியது. அதுபோல...''

''நான்தான் சொன்னேனே, எனக்கும் அவளுக்கும்...'' என்று அவசரமாகக் குறுக்கிட்டான் நண்பன். அவனைக் கையமர்த்தி, ''நான் இன்னும் முடிக்கவில்லை. கொஞ்சம் பொறுமையாகக் கேள்'' என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்...

'நீ அடுக்கிய பாயின்ட்டுகளில் மற்ற எல்லாமே சிறப்பானதாக இருந்தாலும், கடைசியாக நீ சொன்ன பலவீனம் ஒருநாள் உன் வாழ்க்கையையே சிதைக்கக்கூடும். உனக்கும் மாடி வீட்டுப் பெண்ணுக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு லேசான மயக்கம் உண்டு என நீயே உணர்ந்திருக்கிறாய். பண்பாடு காரணமாக அதை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை, அவ்வளவுதான்! மற்றபடி, தனிமை வாய்ப்பு உண்டானால், நீயும் அவளும் வழி தவற சாத்தியக்கூறு அதிகம். அவள் கணவன் ​மரைன் இன்ஜினீயர் என்கிறாய். வருடத்தில் பல மாதங்கள் அவன் கப்பலிலேயே செல்ல வாய்ப்பு உண்டு. எனவே, தனிமையின் விளைவு எதுவாகவும் இருக்கலாம். உன் தாம்பத்திய சங்கிலியில் ஒவ்வொரு இணைப்பும் பலமானதாக இருக்கவேண்டும் என்பது என் விருப்பம்''.

''இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?'' என்று நண்பன் கேட்ட போது, அவன் குரல் பலவீனமாக ஒலித்தது.

''மனைவியையும் குழந்தையையும் முன்னைவிட அதிகமாக நேசி! அலுவலக நேரம் தவிர, அவர்களை ஒரு கணமும் பிரியாதே! தனிமையான சந்தர்ப்பத்துக்கு இடம் கொடுக்காதே! மாடிப் பெண்ணோடு பேசுவதானாலும் மனைவி, குழந்தை இவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே பேசு! சில காலம் கழித்து தானாகவே உன் மயக்கம் தெளிந்துவிடும். அதன்பின்பு பிரச்னை இல்லை. என்ன, சரிதானே?'' என்றேன்.

ஒப்புக்கொண்டதுபோல் தலையசைத்தான் நண்பன்.

- தீர்வுகள் தொடரும்...