குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள் - 77

சரயு நதிக்கரையில்...தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

##~##

வன் திருமேனி முழுக்க நாவற்பழ வண்ணம். உதடுகள் மட்டும் கோவைப்பழம் போல் சிவந்திருக்கும். பாதங்களோ தாமரை மலர்கள்! குழந்தை கண்ணலர்ந்தான் எனில், அலைபாயும் அவனது கண்மணிகளை கருவண்டுகளாகக் கண்டு, அவன் மார்பில் மாலையாகப் புரளும் மலர்களும் தானாகவே தேன் சுரக்கும். அப்படியரு அழகு!

அரிதுயில் கொள்ளும் அந்தக் குழந்தையைப் பார்க்கப் பார்க்க பரவசம் தாளவில்லை அந்தத் தாய்க்கு.

இருக்காதா பின்னே!

'மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணும் திறத்து மகிழ்ந்துண்ணும்’ அந்தப் பிள்ளையை, மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில் இட்டு, 'மாணிக்குறளனே தாலேலோ... வையம் அளந்தானே தாலேலோ...’ என்று தாலாட்டுப்பாடி உறங்கவைத்தும், 'மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடி வா’ என்று நிலாச் சோறு ஊட்டியும், 'கருங்குழல் குட்டனே சப்பாணி’ என்று சப்பாணி கொட்ட சொல்லிக்கொடுத்தும், அவன் தளர்நடை நடந்தபோது, 'எம்பெருமான் வாராய் அச்சோ அச்சோ...’ என்று அகமகிழந்தும் அவள் பொத்திப் பொத்தி வளர்த்த தெய்வக் குழந்தை அல்லவா அவன்!

பெண்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. தன் மணிவயிற்றில் பிறந்த மழலையின் பெருமையை ஒரு நாளைக்கு ஓரிருவரிடமாவது பகிர்ந்துகொண்டாக வேண்டும். இவளுக்கோ அப்படி எவரும் கிடைக்கவில்லை.

என்ன செய்வது?! அனுதினமும் தனது இல்லத்துக்கு இரை தேடி வந்து கரையும் காகத்தைப் பிடித்துக் கொண்டாள். அதனிடம் கதை கதையாய் சொல்லிப்பாடுகிறாள், தன் குழந்தையின் பெருமையை:

பொன்திகழ் சித்திரக்கூடப் பொருப்பினில்
உற்றவடிவில் ஒருகண்ணும் கொண்டஅக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டுவா...
   மணிவண்ண நம்பிக்கு ஒரு கோல் கொண்டு வா!

''காகமே... மிக அழகான சித்ரகூட பர்வதத்தில் ஸ்ரீராமனும், லட்சுமணனும், சீதையும் தங்கியிருந்தபோது, இந்திரனின் மகனான ஜயந்தன் அங்கு வந்தான். அவன் சீதையின் அழகில் மயங்கி, ஒரு காகத்தின் வடிவம் தாங்கி வந்து அவளின் மார்பைக் கொத்தினான். அதனால் கோபம் கொண்ட ஸ்ரீராமன், ஒரு புல்லைப் பிடுங்கி அதையே பிரம்மாஸ்திரமாக்கி காகத்தின் மீது ஏவினார். அது, காகத்தின் ஒரு கண்ணைப் பறித்தது. எனவே, கற்றையான முடியை உடைய அவன் (என் மகன்) மிகக் கடுமையானவன். நீயும் அந்த காகம் போலவே இருக்கிறாய். தாமதிக்காமல் சென்று என் மைந்தன் ஆநிரை மேய்ப்பதற்கு உதவியாக, அவனுக்கு ஒரு கோல் கொண்டு வா! இல்லை யெனில் மீதமிருக்கும் ஒரு கண்ணையும் பறித்துவிடுவான்'' எனச் சொல்லி காகத்தை மிரட்டுகிறாள்.

தசாவதார திருத்தலங்கள் - 77

சரி... யார் இந்த அன்னை? அவள் போற்றிப் பரவும் குழந்தைதான் யார்?

சாட்சாத் பெரியாழ்வார்தான் அந்த அன்னை. தன் உள்ளம் கவர்ந்த கண்ணனையே குழந்தையாகக் கருதி பிள்ளைத் தமிழ் பாடி வைத்தார் அவர். தமது பாசுரங்களில் ஆயர்பாடிக் கண்ணனை ஏற்றிச் சொன்ன பெரியாழ்வார், பல இடங்களில் அயோத்தி நகர் அண்ணலையும் பாடிப் பரவியிருக்கிறார்.

திருமாலவன் அடியவர்களுக்கு ஆயர்ப்பாடி யைப் போலவே அயோத்தியையும் மிகப் பிடிக்கும். அயோத்திநகருக்கு அதிபதியே என்றும் அயோத்திமனே என்றும் குலசேகராழ்வார் ஸ்ரீராமனைப் போற்றுகிறார். திருமங்கை ஆழ்வாரோ அயோத்தியின் காவலனே எனப் போற்றுகிறார்.

யோத்தி- உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 150 கி.மீ.

தொலைவில் சரயு நதிக்கரையில் அமைந்துள்ளது. பைஸாபாத் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரம். அயோத்யா, அயுத்யா என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த ஊர், ஸ்ரீராமன் அவதரித்த புண்ணிய பூமி. புத்த மதம் தோன்றிய காலத்தில் பௌத்தர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இது திகழ்ந்ததாம். புத்தர்பிரானும் இங்கு வந்து தங்கியிருந்ததாகக் கூறுவர். இவ்வூர் குறித்து புராணத் தகவல்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?

அயோத்தி ஏழு முக்தி தலங்களில் ஒன்று. மற்றவை: மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சி, அவந்தி மற்றும் துவாரகை. சுமார் 48 மைல் நீளமும், 12 மைல் அகலமும் கொண்ட இந்த நகரம், கோசல தேசத்து தலைநகராக-

ரகு வம்சத்து அரசர்களின் ராஜதானியாக திகழ்ந்தது. ஆதியில், ஸ்ரீமந் நாராயணன் வைகுண்ட மத்தியில் இருந்து ஒரு பாகத்தை பிரம்மதேவன் மூலமாக சுவாயம்புவ மனுவுக்குக் கொடுக்க, அவர் அதனை பூலோகத்தில் சரயு நதிக்கரையில் ஸ்தாபித்தார். எப்போதும், எவராலும் வெல்ல முடியா நகரம் இது. சகஸ்ர தாரை, சுவர்க்கத் துவாரம், ராமதந்ததாவன குண்டம், சீதாகூபம், ஞான கூபம், சுக்ரீவ குண்டம் முதலான எண்ணற்ற தீர்த்தங்கள், இந்தத் தலத்தின் சிறப்பம்சம். அவற்றுள் தலையா யது சரயு நதி என்கின்றன புராணங்கள்.

அவதார பூமியான இங்கே ரகுநாயகன், சக்கரவர்த்தி திருமகன் என்று போற்றிக் கொண் டாடப்படுகிறார் ஸ்ரீராமன். இங்கே ஆலயங்கள் அதிகம் என்றாலும், அம்பாஜி மந்தர் ஆலயம் குறிப்பிடத்தக்கது. கருவறையில் புஷ்கல விமானத்தின் கீழ், வடக்கே திருமுக மண்டலமாக வீற்றிருந்த கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீராமன். தாயார் சீதாப்பிராட்டி. தென்னிந்திய கட்டட பாணியுடன் திகழும் இந்த ஆலயத்தில் ஸ்ரீராம தரிசனம் மட்டுமின்றி ஸ்ரீரங்கநாதரையும் ஸேவிக்கலாம் என்பது விசேஷம். இந்த ஆலயம் மட்டுமின்றி, அயோத்தியில் நாம் தரிசிக்க வேண்டிய வேறு பல இடங்களும் உண்டு.

தசாவதார திருத்தலங்கள் - 77

அயோத்திக்குள் நுழைந்ததும் 'குப்தர்காட்’ என்ற இடம் உள்ளது. இங்கே ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரச் சிற்பங்களையும், ஸ்ரீராம பாத சந்நிதியையும் தரிசிக்கலாம். அடுத்து, ஸ்ரீராமர் ஜென்ம ஸ்தானம். ஸ்ரீராமனின் வாழ்வைச் சித்திரிக்கும் சந்நிதிகள் இதன் சிறப்பம்சம். இதைத் தொடர்ந்து சீதா மஹாலில் ஸ்ரீராமன் - சீதாதேவியைத் தரிசிக்கலாம். அனுமனுக்கும் இங்கே சிறு கோயில் உண்டு. சிறிய குன்றின் மீது அமர்ந்த நிலையில் கனகம்பீரமாக அருள்கிறார் வாயுமைந்தன்.

அயோத்தியில் ஸ்ரீராமன் யாகம் செய்ததாக ஓர் இடத்தைச் சொல்கிறார் கள்; லட்சுமண் காட் என்று பெயர். லட்சுமணன் நீராடிய இடம் என்பதால் இந்தப் பெயர் வந்ததாம். இங்கிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் நந்தி கிராமம் உள்ளது. ஸ்ரீராமனின் வனவாச காலத்தில், அவரின் பாதுகையைப் பெற்று வந்த பரதாழ்வான், குடில் அமைத்து தங்கியிருந்தது இங்குதான். அவன் பெயரால் இந்த இடம் பரத குண்டம் எனப்படுகிறது. மேலும் சொர்க்க துவாரம், தசரத தீர்த்தம், பிரம்ம குண்டம் ஆகிய இடங்களையும் தரிசித்து மகிழலாம்.

அயோத்தி வரும் பக்தர்கள், ஸ்ரீராமனைத் தரிசிப்பதுடன் ஸ்ரீநாகேஸ்வரநாத் சிவாலயத் துக்கும் சென்று வழிபடுகிறார்கள். ஒருமுறை, ஸ்ரீராமரின் புதல்வனான குசன் சரயு நதியில் நீராடிக் கொண்டிருக்கும்போது அவனுடைய கங்கணம் தொலைந்து போனது. அதை நாக கன்னிகை ஒருத்தி மீட்டுக் கொடுத்ததாகச் சொல்கிறது புராணம். சிவபக்தி மிகுந்த அந்த நாக கன்னிக்காக குசன் அமைத்த சிவாலயம் இது என்கிறார்கள். ஸ்ரீராமபக்தரான துளசி தாசருக்கும் அயோத்தியில் கோயில் உள்ளது.

அடடா... இவ்வளவு சிறப்புமிக்க அயோத்திக்கு நம்மால் செல்ல இயலவில்லையே என்று எவரும் வருந்த வேண்டாம். ஸ்ரீரங்கம் சென்று அரங்கனையும், ஸ்ரீரங்க விமானத்தையும் தரிசித்து வாருங்கள். ஸ்ரீராமன் வழிபட்ட ஸ்ரீரங்கநாதரும் விமானமும் விபீஷணனுக்கு அளிக்கப்பட்டு, பிறகு காவிரி-கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு. ஆக, அரங்கனைத் தரிசிக்க அயோத்தி அண்ணலைத் தரிசித்த பலன் பரிபூரணமாகக் கிடைக்கும்.

- அவதாரம் தொடரும்...

தசாவதார திருத்தலங்கள் - 77

அனுமன் அருளிய சீதா ராம ஸ்தோத்திரம்!

அனுக்ஷணம் கடாக்ஷாப்யாமந்யோந்யே க்ஷணகாங்க்ஷிணௌ
அன்யோன்யஸத்ருஸாகாரௌ த்ரை லோக்யக்ருஹதம்பதீ
இமௌ யுவாம் ப்ரணம்யாஹம் பஜாம்யத்ய க்ருதார்த்ததாம்

பொருள்: ஒவ்வொரு நிமிடமும் கடைக்கண்களால் ஒருவரையருவர் பார்த்துக் கொள்வதை விரும்புபவர்களும், ஒருவருக்கு ஒருவர் பொருந்திய உருவம் உடையவர்களும், மூவுலகமாகிய வீட்டுக்கு தம்பதியுமாகிய ஸ்ரீராமன் - சீதாப்பிராட்டி இருவரையும் வணங்கி ஜன்ம லாபம் அடைகிறேன்.

ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் நிறைவேறிய பிறகு, சீதையுடன் அவர் சிம்மாசனத்தில் வீற்றிருந்தபோது அனுமன் இருவரையும் வணங்கி அருளியதே ஸ்ரீசீதாராம ஸ்தோத்திரம். அதில் ஒன்றான இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்து வழிபட, வீட்டில் தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; சகல சுபிட்சங்களும் பெருகும்!

சென்னை-திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சீதாதேவி, லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகியோருடனும் அனுமனுடனும் காட்சி தருகிறார் ஸ்ரீராமன். இந்தத் தலம் குறித்து பாடிய திருமங்கை ஆழ்வாரும், 'பரதனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும் திருவல்லிக்கேணி கண்டேனே’ என்று அருளியிருக்கிறார்.

மதுமான் என்றொரு சிறுவன்; தேனை மட்டுமே உண்டு உயிர் வாழ்பவன். சிறுவயதிலேயே பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டவன் தவச் சாலையில் முனிவர்கள் ஆதரவில் வளர்ந்தான். அவர்கள் மூலம் ஸ்ரீராமனின் கதையை அறிந்தவன், ஸ்ரீராம தரிசனம் காண விரும்பினான். இறை ஸித்தப்படி பிருந்தாரண்யம் எனும் அல்லிக்கேணி தலத்துக்கு வந்து தவம் இருந்தான். அதன் பயனாக இந்தத் தலத்தில் அவனுக்கு பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமன் காட்சி தந்ததாக ஐதீகம்.