குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஸ்ரீபைரவர் தரிசனம்! - திருச்சி

மிளகு மாலை வழிபாடு!

##~##

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீவெளிகண்டநாதர் திருக்கோயில். சுமார் ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்த ஆலயம் இது. 

திருநாமத்தில் 'நாதர்’ எனும் அடைமொழியோடு, திருச்சிராப்பள்ளியில் ஐந்து இடங்களில் கோயில் கொண்டிருக்கிறார் சிவபெருமான். இங்கு ஆகாயத்தைக் குறிக்கும் வகையில் ஸ்ரீவெளிகண்டநாதர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார், ஈசன்.

உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் அழகே உருவெனக் கொண்டு அமைந்துள்ளது கோயில். கிழக்கு நோக்கிய ஆலயத்தில், மூலவராகக் குடிகொண்டிருக்கும் ஸ்ரீவெளிகண்டநாதரை வந்து வணங்கினால், வாழ்வில் நிம்மதியும் பூரிப்புமாக வாழலாம் எனப் பூரிக்கின்றனர் மக்கள்.

அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசுந்தரவல்லி அம்பாள். நான்கு திருக்கரங்களுடன், தாமரை மலரை ஏந்தியபடி, அபய- வரத முத்திரைகளுடன் கருணையே வடிவெனக் கொண்டு, தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறாள் தேவி.

ஸ்ரீபைரவர் தரிசனம்! - திருச்சி

இந்த ஆலயத்தில், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக ஸ்ரீநிவாச பெருமாள் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். அதேபோல் ஸ்ரீபிரம்மாவுக்கும் இங்கு தனிச்சந்நிதி உள்ளது. எனவே, திருச்சி உத்தமர்கோவிலைப் போலவே, இதுவும் மும்மூர்த்திகள் அருளும் தலம் எனப் போற்றப்படுகிறது.

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஐயப்பன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. கருவறையில், லிங்கத் திருமேனியராகக் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார் ஸ்ரீவெளிகண்டநாதர். சிவனாருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், திருமணத் தடை அகலும், மறைமுக எதிர்ப்பு விலகும் என்பது ஐதீகம்!

ஸ்ரீபைரவர் தரிசனம்! - திருச்சி
ஸ்ரீபைரவர் தரிசனம்! - திருச்சி

ஆலயத்தில் அற்புதமாகத் தரிசனம் தருகிறார் ஸ்ரீபைரவர். இவருக்கு, தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த நாளில் கலந்துகொண்டு, ஸ்ரீபைரவரை மனதார வழிபட்டால், பில்லி- சூனியம் முதலான ஏவலில் இருந்து விடுபடலாம்; தொழில் சிறக்கும்; வியாபாரத்தில் லாபம் கொழிக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீபைரவரிடம் பிரார்த்தனை செய்து, அது நிறைவேறியதும் சிறு துணியில் மிளகை மூட்டை போல் கட்டி, மாலையாகச் சார்த்தி, நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். மேலும், ஐந்து வகை எண்ணெய் கொண்டு தீபமேற்றி வழிபடுகிறார்கள், பக்தர்கள்.

- பி.விவேக் ஆனந்த்

படங்கள்: தே.தீட்ஷித்