குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஸ்ரீபைரவர் தரிசனம்! - மதுரை

இன்னல் தீர்க்கும் தயிர்சாத பிரசாதம்!

##~##

துரையம்பதியின் எல்லைப் பகுதியில், ஊரையும் ஊரில் குடியிருக்கும் மக்களையும் காக்கும் பொருட்டு, சிவனாரிடம் மனமுருகி வேண்டினார் பாண்டிய மன்னன். அவரின் பிரார்த்தனைக்குச் செவிமடுக்கும் வகையில், அவர் எதிரில் தோன்றி தரிசனம் தந்தார் ஈசன்.

அதுவும் எப்படி? 'நீ சொன்னபடியே எல்லையில் காவலாக இருந்து காக்கிறேன்’ என அருளிய சிவபெருமான், ஸ்ரீகாலபைரவ மூர்த்தியாகத் தோன்றி தரிசனம் தந்தார். அதில் மெய்சிலிர்த்த மன்னர், அந்த இடத்தில் ஸ்ரீகாலபைரவருக்குக் கோயில் எழுப்பி வழிபட்டதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

மதுரை- பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது தெப்பக்குளம். குளத்தின் அருகில் புகழ்மிக்க ஸ்ரீமாரியம்மன் ஆலயமும், ஸ்ரீமுக்தீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. இங்கே... தெப்பக்குளத்தின் சுற்றுப் பகுதியில், தெற்கு நோக்கி தனியே அமைந்துள்ளது ஸ்ரீகால பைரவர் திருக்கோயில்.

சிறிய கோயில்தான் என்றாலும், பிரசித்தி பெற்றதும் வரங்கள் தந்தருளக்கூடியதுமான ஆலயம் இது எனப் போற்றுகின்றனர், மதுரை மக்கள். ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன் ஆகியோருடன் தனிக்கோயிலில் இருந்து அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீகால பைரவர்.

ஸ்ரீபைரவர் தரிசனம்! - மதுரை
ஸ்ரீபைரவர் தரிசனம்! - மதுரை

தொடர்ந்து பதினெட்டு வாரங்கள், ஸ்ரீகால பைரவருக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால், மரண பயம் நீங்கும்; மங்கல வாழ்வு பெருகும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமியிலும் ஞாயிற்றுக் கிழமை ராகுகாலத்திலும் இவருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசித்து வேண்டினால், சகல விதமான இன்னல்களில் இருந்தும் விடுபடலாம்; சந்தோஷங்கள் பெருக நிம்மதியாக வாழலாம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.  

ஸ்ரீகால பைரவருக்குத் தயிர்சாதம் அல்லது வடைமாலை சார்த்தி வழிபடுவது கூடுதல் பலனைத் தரும். தொழிலில் லாபம் கொழிக்கும். ஞானமும் யோகமும் பெறலாம். வெளியூர் செல்பவர்கள் அல்லது வெளியூரில் இருந்து இங்கு வந்தவர்கள், ஸ்ரீகால பைரவரை வணங்கினால், பயணத்தில் துணையாக இருந்து காத்தருள்வார் காலபைரவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    - ச.பா.முத்துகுமார்

படங்கள்: எஸ்.கேசவசுதன்