குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஆன்மிக உபன்யாசத்தில் அசத்தும் ஐ.டி.இன்ஜினீயர்!

படிப்பு... பக்தி... பாட்டு... கதை!கட்டுரை, படங்கள்: இ.ராஜவிபீஷிகா

##~##

வர் மேடையேறியதுமே அப்படியரு நிசப்தத்தில் ஆழ்ந்துவிடுகிறது கூட்டம். பிறகு, உபன்யாசம் நிறைவுறுகிற வரைக்கும் அதே அமைதியுடன் இருந்து, அவர் பேசுவதை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கேட்கிறார்கள், வந்திருக்கும் அனைவரும். கேட்பவர்களைத் தனது வசீகரப் பேச்சால் கட்டிப்போடுகிறவர் என இளம் வயதிலேயே பெயரெடுத்திருக்கிறார் துஷ்யந்த் ஸ்ரீதர். ஆன்மிகத்தை எளிமையாகச் சொல்லும் உபன்யாசகர்.

பார்ப்பதற்கு வடநாட்டவர்போல் இருக்கிறாரே என்று விசாரித்தால், ''ஹலோ... எனக்குப் பூர்வீகம் சோழ தேசம். கும்பகோணம்தான் எங்களுக்கு'' என்று சொல்லிச் சிரிக்கிறார். ஆனால், இவர் பிறந்தது பெங்களூரில்!

''அப்பாவுக்கு மெடிக்கல் வேலை. அம்மா டீச்சர். அப்பாவுக்கு ஊர் ஊரா மாறிக்கிட்டே இருக்கிற வேலைங்கறதால, நான் சென்னை, பெங்களூருன்னு மாறி மாறிப் படிச்சேன். பெங்களூருல தாத்தாவும் பாட்டியும் இருந்தாங்க. அதனால, அங்கேயே படிச்சு வளரட்டும்னு என்னை விட்டாங்க. நம்மூர்ல தாத்தா, பாட்டிகளைப் போலப் பிரமாதமான கதைசொல்லிகள் யாரும் இல்லைங்கறது என் அபிப்ராயம். என்னைச் சாப்பிட வைக்கறதுக்கும் தூங்க வைக்கறதுக்குமா அவங்க சொன்ன குட்டிக் குட்டி புராணக் கதைகள்தான் என்னை இப்படி உபன்யாசகராகக் கொண்டு வந்து உங்க முன்னாடி உக்கார வைச்சிருக்கோ என்னவோ!'' என்று கண்கள் விரியச் சொல்கிற துஷ்யந்த் தற்போது இருப்பது மும்பையில்.

ஆன்மிக உபன்யாசத்தில் அசத்தும் ஐ.டி.இன்ஜினீயர்!

''படிப்புன்னா வெல்லக்கட்டி எனக்கு. ரொம்ப ஆர்வமாப் படிச்சேன். நிறைய மார்க் வாங்கினேன். ராஜஸ்தான்ல 'பிட்ஸ் பிலானி’ல பி.இ. கெமிக்கல் படிச்சதுல அப்பாவுக்கு ரொம்பவே சந்தோஷம்; பெருமிதம்! லீவு நாட்கள்ல சென்னை, பெங்களூருன்னு வர்றப்ப ஒரு உபன்யாசம் விடாம போயிடுவேன்.

குறிப்பா, என் இந்த உபன்யாச வாழ்க்கைக்கான ரோல்மாடல் வேளுக்குடி கிருஷ்ணன்தான். அவரோட உபன்யாசம் எங்கே நடக்குதுன்னு பார்த்துக்கிட்டே இருப்பேன். அங்கே போய் முதல் ஆளா உக்காந்து முழுசாக் கேப்பேன். தவிர, ஸ்கூல் படிக்கிற காலத்துலேர்ந்தே அவர் கேசட்டுகளைப் போட்டுப் போட்டுக் கேட்டவன் நான். இது எல்லாமா சேர்ந்து, நான் காலேஜ்ல படிக்கும்போதே சொற்பொழிவு செய்ய வாய்ப்பு தேடி வர்ற அளவுக்குக் கொண்டு வந்து விட்டுடுச்சு என்னை.

ஆமாம்... அது நல்ல குளிர்காலம். கோட்டு சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு, நடுக்கியெடுக்கிற பனியில, ஸ்வெட்டர், மப்ளர், குல்லா சகிதமா காலேஜ்ல நான் பண்ணின முதல் உபன்யாசம் மறக்கவே மறக்காது எனக்கு! 'சீதா கல்யாணம்’தான் தலைப்பு. முக்கால் மணி நேரம் பேசி முடிச்சதும், எங்க காலேஜ் டீன் ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டார். 'அசத்திட்டே துஷ்யந்த்’னு பாராட்டினார். அதுக்குப் பிறகு, எங்க காலேஜ்ல மட்டுமே பன்னண்டு முறை உபன்யாசம் பண்ண வாய்ப்புக் கொடுத்து, ஊக்கப்படுத்தினாங்க.

அதுக்குப் பிறகு வெளியிடங்கள்லயும் கோயில்கள்லயுமா வாய்ப்புகள் கிடைச்சுது. அப்படி நான் பேசினதைக் கேட்டுட்டு குஜராத்லேருந்து ஒருத்தர் வந்து, 'உங்களால ராமாயணம் முழுவதையும் கதையா சொல்லமுடியுமா? சி.டி. போடலாமா?’னு கேட்டார். கிட்டத்தட்ட 36 மணி நேரம் பேசின அந்த ராமாயண சி.டி. செம ஹிட்! அதைக் கேட்டுட்டுதான் விஜய் டி.வி-யில 'பக்தித் திருவிழா’ நிகழ்ச்சியில எனக்கு வாய்ப்புக் கொடுத்தாங்க. அதுதான் என்னை இன்னும் பிரபலப்படுத்திச்சு!'' என்று சொல்லும் துஷ்யந்த், இளம் வயதில் சென்னையில் வசித்தபோது, தாம்பரம் அருகில் உள்ள அகோபில மடத்துக்குச் சென்றுவிடுவாராம். அங்கே, திருமங்கையாழ்வார், பெரியவாச்சான்பிள்ளை உள்பட பல ஆன்மிகப் பெரியவர்கள் பற்றி அறிந்துகொண்டாராம்.  

ஆன்மிக உபன்யாசத்தில் அசத்தும் ஐ.டி.இன்ஜினீயர்!

துஷ்யந்திடம் இன்னொரு சிறப்பம்சம்... உபன்யாசத்தின் இடையிடையே நிறையப் பாடல்களைப் பாடி அசத்துகிறார். இசை ஆர்வம் குறித்துக் கேட்டால், ''அஞ்சு வயசுல இந்திரா ராஜகோபால்கிட்ட சம்ஸ்கிருதம் கத்துக்கிட்டேன். ஆழ்வார்களோட நாலாயிர திவ்விய பிரபந்தமும் ஸ்ரீமந் நாராயணீயமும் கத்துக்கிட்டேன். கர்னாடக சங்கீதத்தை கிருத்திகா, பவானி கணேசன்கிட்டக் கத்துக்கிட்டேன். தவிர, சின்ன வயசுலேர்ந்தே பாட்டுன்னா உயிர் எனக்கு. அதனால, உபன்யாசத்துல பாடல்களைப் பாடுறதை வழக்கமாக்கிக்கிட்டேன். இதுக்கு மக்கள்கிட்டேயும் நல்ல ரெஸ்பான்ஸ்!'' என்று சொல்லும் துஷ்யந்த், மும்பையில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

''புராண- இதிகாசங்கள் எல்லாமே நாம நல்லபடியா வாழறதுக்கான வழிமுறைகள்தான். அந்த சத்விஷயங்களை எவ்வளவுக்கு எவ்வளவு மக்களுக்கு எளிமையா சொல்லமுடியுமோ அப்படிச் சொல்லி அதைப் புரிய வைக்கணும்; உணரச் செய்யணுங்கறதுதான் என் விருப்பம். புரிஞ்சு உணர்ந்துக்கிட்டா, அதன்படி நீதியும் நேர்மையுமா வாழ ஆரம்பிச்சிடலாம். அப்படி வாழ்ந்தா, உலகத்துல வன்முறைக்கோ கோப தாபங்களுக்கோ இடமே இல்லை.

பின்னாடி ஒருகட்டத்துல, சம்ஸ்கிருதத்துல உள்ள நல்ல விஷயங்களையும் புராண- இதிகாசங்கள்ல இருக்கிற நீதி நெறிகளையும் எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கணும்னு நிறைய ஆசைகளும் திட்டங்களும் இருக்கு. பகவான் துணை இருப்பார்; பார்ப்போம்!'' என்று கண்கள் மூடி, நெகிழ்வு பொங்கச் சொல்கிறார் துஷ்யந்த்.

வாழ்த்துக்கள் துஷ்யந்த்!