Published:Updated:

நாரதர் கதைகள் - 3

எழுத்துச் சித்தர் பாலகுமாரன், ஓவியம்: பத்மவாசன்

##~##

டைப்பாற்றலே மிகச் சிறந்தது, படைப்பவரே மிகப் பெரியவர், அவரே சகல மரியாதைக்கும் உரியவர் என்று இந்த உலகம் நினைத்துக்கொண்டிருக்கிறது. உண்மையில் அப்படியில்லை. அது வெறும் 'அலையல்’; வெறும் ஆரவாரம்; தன்னை மட்டுமே கொண்டாடிக்கொள்கிற சுயநலம் என்பது பலருக்குத் தெரியாது.

பொன்னாலான ஒரு பட்டணம் பறந்து வந்தது. மிகப் பெரிய நீளமும், அகலமும் கொண்டிருந்த அது, பூமியில் ஓர் இடத்தில் தடேரென்று இறங்கியது. பயிர்- பச்சைகள், புல்- பூண்டுகள், சிறு பிராணிகள், பெரிய பிராணிகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் எல்லாமும் அழிந்தன. குளம் கலங்கிற்று; காடு நசுங்கிற்று; மணல் பரவிற்று; வாழ்தல் என்பது அந்த இடத்தில் அழிந்துபோயிற்று.

நாரதர் கதைகள் - 3

வெள்ளியால் ஆன பட்டணம் பறந்து வந்தது. வேறு இடத்தில் உரசித் தாக்கி, கீழே இறங்கியது. உரசிய இடமெல்லாம் வெறும் மணல்வெளியாகின. எல்லாமும் அழிந்தன. அங்கும் வாழ்வு ஸ்தம்பித்துப் போயிற்று.

இரும்பால் ஆன பட்டணம் ஒன்று தோன்றியது. அது வேறு இடத்தில் இறங்கியது. மிகவும் கனமாக இருந்தது. அந்த இடத்திலுள்ள சிறு புழுக்களைக்கூட தன்னுடைய சூட்டால், கனத்தால் அழித்து ஒழித்தது. அந்த இடமும் பாழ் வெறுமை ஆயிற்று.

பூமி என்கிற நீல வர்ணம் கொண்ட பசுமைமிக்க அந்தக் குளம், வெறும் வறண்ட நிலமாகப் போயிற்று. பூமியிலிருந்து எந்த வணக்கமும் தேவர்களை நோக்கி வரவில்லை. இதனால் தேவர்கள் துயருற்றார்கள். பூமியை நினைத்துக் கவலைப்பட்டார்கள். என்ன செய்வது என்று வருத்தப்பட்டார்கள். நாரதர் மெள்ள அவர்களோடு பேச்சுக் கொடுத்தார்.

பொன் பட்டணத்துக்கு வித்தியுன்மாலியும், வெள்ளிப் பட்டணத்துக்கு தாரகாக்ஷனும், இரும்புப் பட்டணத்துக்கு கமலாக்ஷனும் தலைமை ஏற்றிருந்தார்கள். அவர்களைச் சந்திக்க நாரதர் போனார். அவர்கள் நாரதரைக் கண்டு பெரிதாகச் சிரித்து வரவேற்றார்கள்.

''எப்படி எங்கள் பலம்?'' என்றார்கள்.

''யார் நீங்கள்?'' நாரதர் வினவினார்.

''நாங்கள் தாரகாசுரனின் புதல்வர்கள். எங்கள் தந்தையார் எங்களை தவம் செய்யச் சொன்னார். நாங்கள் மிகக் கடுமையாக தவம் இருந்தோம். பல நூறு, ஆயிரம் வருடங்கள் தவம் இருந்தோம். எங்கள் தவத்தை மெச்சி, பிரம்மா தோன்றினார். சாகா வரம் கேட்டோம். 'சாகா வரம் கொடுக்க எனக்கு வல்லமை இல்லை. அது சிவனுடைய விஷயம். சிவன் அழிப்பவர். எனவே, அது குறித்து என்னிடம் கேட்காதீர்கள்’ என்றார். 'நாங்கள் வலிமையுடையவராக இருக்க வேண்டும்; இம்மாதிரியான பட்டணங்கள் வேண்டும்; தவிர, நாங்கள் மூவரும் ஒன்றாக இருக்கும் காலத்தில்தான் எங்களுக்கு மரணம் சம்பவிக்க வேண்டும்’ என்று வரம் கேட்டோம். அவற்றைக் கொடுத்தார். அன்றிலிருந்து ஒப்பில்லாத பலத்துடன் நாங்கள் பூமியைச் சுற்றி வருகிறோம். ஒவ்வோர் இடமாக அழித்து வருகிறோம்'' என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தார்கள். வெற்றிச் சிரிப்பு அங்கு எதிரொலித்தது.

தவம் என்பது குறிக்கோள் உடையது. எந்த இடத்தில் குறிக்கோள் இருக்கிறதோ, அங்கு குறி பிசகுவதும் உண்டு. இங்கே குறி பிசகியது. படைப்பு என்கிற விஷயம் மிகப் பெரிய கர்வம் கொடுக்கக்கூடியது; மெள்ள மெள்ள அரக்கத்தனத்துக்கு அழைத்துப் போவது.

ஏதோ ஒன்றைத் தனக்குப் படைக்கத் தெரியும் என்கிற எண்ணம் வந்துவிட்டால் போதும், உலகத்தின் உச்சாணியில் இருக்கிற மமதை வந்துவிடுகிறது. கர்வம் இல்லாத படைப்பாளி என்று எவரும் இல்லை. எல்லாப் படைப்பாளிகளுக்கும் சொல்லத்தரமில்லாத கர்வம் பொங்கி வழிந்துகொண்டுதான் இருக்கும். இது படைப்பால் ஏற்பட்ட சாபம். அடக்கமாகப் படைக்க எவருக்கும் தெரியாது. அடக்கம் உள்ளவர் படைக்கவும் மாட்டார்.

நாரதர் கதைகள் - 3

நாரதர் இந்திராதி தேவர்களைத் தூண்டி விட்டு, ''இப்படியே போனால் இந்த பூகோளம் நாசமாகப் போகும். பிறகு, உங்களை வணங்கு பவர் யாரும் இல்லாமல் போவர். எனவே, இதற்கான தீர்வை திருமாலிடம் கேளுங்கள்'' என்று சொல்ல, இந்திராதி தேவர்கள் திருமாலிடம் போனார்கள். கைகூப்பிக் கேட்டார்கள். திருமால் யோசித்தார்.

''இவர்களை நம்மால் அழிக்க முடியாது. இவர்கள் சிவ ஸ்துதி செய்பவர்கள். இடைய றாது சிவன் நினைப்பில் வாழ்பவர்கள். அந்த நினைப்பும் துதியும் இருக்கிறவரை இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. எனவே, இவர்களை இவர்கள் எண்ணத்தில் இருந்து தள்ளி வைத்துவிட வேண்டும். சிவ ஸ்துதியைவிட, சிவத்தில் மூழ்கியிருப்பதைவிட, வேறு விஷயங்களில் இவர்களை நாம் இழுத்து வர வேண்டும். இவர்கள் புத்தியைத் திசை திருப்பவேண்டும்'' என்று சொல்லி, தன் உடம்பிலிருந்து ஒரு புருஷனை உருவாக்கினார். அவன் மாயையில் வல்லவனாக இருந்தான். சிவனைவிட மிகச் சிறந்த விஷயம் இந்த பூவுலகில் உண்டு என்று சொல்வதற்காக அவன் புறப்பட்டு வித்தியுன்மாலியிடமும் தாரகாக்ஷனிடமும் கமலாக்ஷனிடமும் போனான்.

நாரதர் அவர்களின் சபையில் தோன்றினார். ''அடேடே! மாயையில் வல்லானா... மிகப் பெரிய ஆள் ஆயிற்றே! இவர்தானே எனக்கு எல்லாமும் சொல்லிக் கொடுத்தது. இவரை வணங்கினால் எல்லோருக்கும் நற்பேறு கிடைக்கும். இவருடைய கொள்கையைப் பின்பற்றினால், மிகச் சிறந்த உயர்நிலைக்கு வரலாம். எனவே, செவிமடுத்து இவரைக் கேளுங்கள். நானும் இவரை செவிமடுத்துத்தான் இந்த உயர்நிலைக்கு வந்தேன்'' என்றார்.

''நீங்களே இவரை வணங்குகிறீர்கள் என்றால், நாங்கள் எம்மாத்திரம்! நாங்களும் இவரை வணங்குகிறோம். அய்யா, உங்கள் கொள்கை என்ன?'' என்று கைகூப்பிக் கேட்டார்கள்.

மாயையில் வல்லான், சிவனுக்கு அப்பால் உள்ள விஷயத்தை, சிவனுக்கு எதிரான விஷயத்தை, மயக்கம் தரக்கூடிய விஷயத்தை, பூமியின் சுகபோகங்களை, அந்த சுகபோகங் களின் வரிசையை அவர்களுக்குத் தெரியப் படுத்தினார். அந்தச் சுகத்தால் என்ன விதமான உயர்வை அடையலாம், என்ன விதமான அமைதியை அடையலாம் என்று பெரிதாக விளக்கினார். அவர்கள் மயங்கினார்கள்.

சிவ ஸ்துதியை மறந்தார்கள். சிவ பூஜையை வெறுத்தார்கள். சிவனை மறந்தார்கள். அவர்கள் மறந்துபோக, சிவன் கோபமுற்றார். அவர்கள் ஒன்றாக இருந்த ஒரு தருணத்தில் அவர்களை அழித்து ஒழித்தார்.

நாரதரின் இந்தக் கலகத்தால், பூமி பெருங்கேட் டிலிருந்து தப்பித்தது. இந்திராதி தேவர்கள் நாரதரை வணங்கினார்கள். பூமி மறுபடியும் செழித்தது. தேவர்களுக்கு உண்டான பூஜையை, அவிர்பாகத்தை பூமியில் உள்ள மக்கள் மிகச் சிரத்தையோடு வழங்கினார்கள். பிரபஞ்சம் மறுபடியும் சுகமாக இயங்கத் துவங்கியது.

இரண்டாயிரம் புதல்வர்களைத் திசைமாற்றி நாரதர் அழைத்துச் சென்றதைப் பற்றி துக்கப் பட்ட தட்சன், பிள்ளைகளுக்கு பதிலாகப் பெண்களைப் பிறப்பிக்கலாம் என்று தீர்மானம் செய்தான்.  பல நூறு பெண்களைப் பெற்று, ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் திருமணம் செய்து வைத்தான். அவர்களின் ஆசீர்வாதத்தால் மிகச் சிறப்பாக வாழ்ந்தான். பார்வதிதேவியே தனக்கு மகளாக வரவேண்டும் என்று வேண்டி, அவ்விதமே பெற்றான்.

ஆறு வயதில் தகப்பனை விட்டு, வேறு இடத்துக்கு போய், அங்கு சிவனைக் குறித்துக் கடும் தவம் செய்தாள் தாட்சாயினி. சரியான தருணத்தில் சிவபெருமான் அவள் முன் தோன்றி, திருமணம் செய்துகொண்டார்.

நாரதர் கதைகள் - 3

தன்னுடைய அனுமதியின்றி, தன் பெண்ணே விரும்பி, உடம்பு முழுவதும் சாம்பல் பூசிய ஒரு சுடுகாட்டுப் பேயனைத் திருமணம் செய்தது கண்டு தட்சன் வருத்தப்பட்டான். பெண் புத்தி பின் புத்தி என்று நினைத்துக்கொண்டான்.

சிவனுடைய உயரிய விஷயங்களை அறிந்திருந்தபோதும், அவரே முடிவின் முடிவு என்று தெரிந்திருந்தபோதும், ஊழ்வினை வழியால், தன் அகங்காரத்தால் அதை மறந்து, 'இவன் போய் எனக்கு மருமகனாக வந்தானே’ என்ற இழிவுரையைப் பலரிடமும் பரப்ப ஆரம்பித்தான். 'இவன் என் மகளை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டான். இவனை அவமானப்படுத்த வேண்டும்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டான்.

எப்படி அவமானப்படுத்துவது? போருக்கு அழைப்பதா? வேண்டாம். வேறு விதமாகச் செய்வோம். மிகப் பெரிய வேள்வி ஒன்றை ஆரம்பிப்போம். அதற்குத் தேவர்கள் அனைவரையும் அழைப்போம். இவனை மட்டும் புறக்கணிப்போம்.

அவமானத்தில் மிகச் சிறந்தது புறக்கணிப்பு. அடித்து அவமானப்படுத்துவதைவிட, வெட்டி வீழ்த்துவதைவிட, புறக்கணிப்பதுதான் சிறந்த தண்டனை என்று கொக்கரித் தான். அவ்விதமே, மிகப் பெரிய வேள்வியைத் துவக்கினான். எல்லோரையும் வேள்விக்கு அழைத்தான்.

'என்னது... என் தந்தை மிகப் பெரிய வேள்வி நடத்துகிறாரா! எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறாரா! எனக்கு சொல்லவில்லையே? எனக்கு ஏன் அழைப்பு இல்லை? நான் போக வேண்டாமா? அழைப்பு அனுப்பினாலும் அனுப்பாவிட்டாலும் அவர் என் தந்தைதானே? அது என் வீடுதானே? அந்த வீட்டில் ஒரு விசேஷம் என்றால், மிகப் பெரிய வேள்வி நடக்கிறது என்றால், நான் இல்லாது நடக்குமா? என் வருகையை அங்கு புறக்கணிப்பார் உண்டா? நான் நிச்சயம் போயாக வேண்டும். என் தந்தையைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க வேண்டும். ஊர் முழுவதும் கூட்டியிருக்கிறாய். பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை கோயில்களிலுள்ள நவநாயகர்களையும், மிகச் சிறந்த சிரேஷ்டர் களையும் தெய்வங்களையும் அழைத்திருக் கிறாய். ஆனால், என் புருஷனுக்கு அழைப்பு இல்லையே, ஏன்? அவரிடம் என்ன குறை கண்டாய்? எதற்காக என் புருஷனை அவமதிக்கிறாய்? நீ செய்வது தவறல்லவா! நான் உன் மகள். எனக்கு நீ தந்தையெனில், அவருக்கு நீ மாமன்தானே? அப்படியானால் அவரை மரியாதையுடன் நீ வணங்கி அழைக்கவேண்டியது முறையல்லவா! எப்படி மறந்தாய்? ஏன் மறுத்தாய்?

அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த வேள்வியைத் துவக்கினாயா? அவரை அவமானப்படுத்திவிட முடியுமா உன்னால்? மிகப் பெரியவராயிற்றே அவர். அவருடைய பிரமாண்டம் தெரியாதா உனக்கு? அவரை வணங்கி நின்றவன்தானே நீ? அவரை வணங்குகின்ற பிரம்மாதி தேவர்களையெல்லாம் உனக்குத் தெரியும்தானே! அவர்களை வணங்கி வரம் பெற்றவன்தானே நீ! யாரிடம் நீ வரம் பெற்றாயோ அவர்களே கை கூப்பி, தலை வணங்கி, அஞ்சி, நடுங்கித் தொழுகின்ற என் புருஷனை நீ எப்படி உதாசீனம் செய்யலாம்? எவராலும் உதாசீனம் செய்யமுடியாத இடத்தில் இருக்கிற என் புருஷனை வேள்விக்கு அழைக்காமல் இருப்பது என்ன நியாயம்?

நான் உன் பிரியமுள்ள மகள் என்றால், எனக்கு நீ தந்தையென்றால், அவருக்கும் நீ உறவு. அந்த உறவின்படி அவருக்கு நீ அழைப்பு அனுப்பு. அவருக்கு இந்த யாகத்தில் உண்டான அவிர் பாகத்தைக் கொடு. மறுத்தால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது...’ - பார்வதிதேவி உள்ளுக்குள் சீறினாள்.

புருஷனிடம் போய் கை கூப்பி நின்றாள். ''நான் என் தந்தை நடத்துகிற வேள்விக்குப் போக விரும்புகிறேன். தயவுசெய்து அனுமதிக்க வேண்டும். அந்த வேள்வியின் சிறப்பு காரணமாகவோ, என் தந்தைமீது எனக்கு இருக்கிற மரியாதை காரணமாகவோ, அன்பு காரணமாகவோ நான் அங்கு போக விரும்பவில்லை. உங்களுக்கு அவர் அழைப்பு அனுப்பவில்லை. வேண்டும் என்றே புறக்கணித்திருக்கிறார். மற்ற எல்லோரையும் அழைத்துவிட்டு, உங்களை அந்த வேள்வியில் கலந்துகொள்ளத் தகுதியில்லாதவர் என்று காட்டுவதற்காக இப்படிப்பட்ட அகங்காரமான எண்ணம் கொண்டிருக்கிறார். அவரது ஆணவத்தை முற்றிலுமாக நீக்கி, அவருக்குப் புத்தி புகட்டி, உங்களை முறைப்படி அழைக்குமாறு செய்யவே நான் அங்கு போகப் போகிறேன்'' என்று சொன்னாள்.

- தொடரும்...