குருப்பெயர்ச்சி பலன்கள்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஸ்ரீபைரவர் தரிசனம்! - உடுமலைப்பேட்டை

காசி விநாயகரும்... கால பைரவரும்!

##~##

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபிரசன்ன விநாயகர் கோயில். சுமார் 350 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம் இது. கருவறையிலும் அரச மரத்தடியிலுமாக இரண்டு விநாயகர்கள் அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

மூலவர் ஸ்ரீபிரசன்ன விநாயகரின் திருமேனி, காசியம்பதியில் இருந்து எடுத்துவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். எனவே, இந்தத் தலத்து விநாயகரை வணங்கினால், காசியில் சென்று வழிபட்ட பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

ஸ்ரீபைரவர் தரிசனம்! - உடுமலைப்பேட்டை

ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீசௌரிராஜ பெருமாள், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீபாலசுப்ரமணியர், ஸ்ரீபிரம்மா மற்றும் ஸ்ரீகால பைரவர் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர்.

சதுர்த்தி நாளில் ஸ்ரீவிநாயகருக்கும், பிரதோஷ வேளையில் ஸ்ரீகாசி விஸ்வநாதருக்கும், சஷ்டி திதியில் ஸ்ரீமுருகப்பெருமானுக்கும், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

கார்த்திகையில் சிவனாருக்கு 108 சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெறும். அதேபோல் விநாயகர் சதுர்த்தி நாளில், வெள்ளிக் கவசத்தில் காட்சிதரும் ஆனைமுகத்தானைக் காணக் கண் கோடி வேண்டும்.  

வன்னிமரத்தடியில் இருந்தபடி, தன்னை நாடி வருவோருக்கு அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீபிரம்மா, கொடுமுடி தலத்தைப் போலவே இங்கேயும் இருந்து அருள்புரிகிறார் எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர் பக்தர்கள்.

தெற்குத் திசையை நோக்கியபடி நம்மைக் காலமெல்லாம் வாழவைக்கக் காட்சி தருகிறார் ஸ்ரீகால பைரவர். சிவாம்சமான இவர், தெற்குப் பார்த்தபடி காட்சிதருவது சிறப்பு என்பார்கள். அக்னி சொரூபமாகவும் திகம்பரராகவும் திகழ்பவரை வணங்கினால், தீராத பிரச்னைகள் யாவும் தீர்ந்து நிம்மதியாக வாழலாம் என்பது ஐதீகம்!  

ஸ்ரீபைரவர் தரிசனம்! - உடுமலைப்பேட்டை
ஸ்ரீபைரவர் தரிசனம்! - உடுமலைப்பேட்டை

தேய்பிறை அஷ்டமியிலும், ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையிலும் ஸ்ரீகால பைரவருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தால், வாழ்வில் தடைகள் யாவும் விலகும்; எதிலும் வெற்றி கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். தவிர, குழந்தைகளுக்கு உண்டாகும் பயத்தையும் போக்கி அருள்வார், ஸ்ரீகாலபைரவர் எனப் போற்றுகின்றனர்.

 - இரா.வசந்த்

படங்கள்: கி.விக்னேஸ்வரி