##~## |
கரவிந்தம் என்றால் களாமரம் என்று அர்த்தம். இந்த மரங்கள் சூழ்ந்த வனத்துக்கு வந்த பிரம்மா, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, கடும் தவத்தில் ஈடுபட்டார். அவருக்கு அருளினார் சிவனார். அதேபோல், மலையத்துவஜன் எனும் மன்னன் தன் குருநாதரால் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக, இங்கே உள்ள சிவனாரை (திருக்களாவுடையார்) வணங்கி, சாபம் நீங்கப் பெற்றான். அந்த வனம் பின்னாளில் உடையார் கோவில் என்றானது என்று, கடந்த 12.6.12 சக்தி விகடன் இதழில், ஆலயம் தேடுவோம் பகுதியில் எழுதியிருந்தோம்; நினைவு இருக்கிறதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்வாமி- ஸ்ரீகரவந்தீஸ்வரர். அம்பாள்- ஸ்ரீதர்ம வல்லி. சதய நட்சத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய திருத்தலம்; நமக்கே தெரியாமல் நமக்கு இருக்கிற சாபங்களையும் பாவங்களையும் போக்கி அருளும் ஆலயம்; புராணப் பெருமைகள் பல கொண்ட இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்து சுமார் 52 வருடங்களாகிவிட்டன என்பதோடு, இது இப்போது வழிபாடுகளின்றி சிதிலம் அடைந்து கிடக்கும் அவலத்தையும் அந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தோம்.
படித்ததும் பதறிப்போன வாசகர்கள், கோயிலுக்கு ஏராளமான நன்கொடைகளை அனுப்பினார்கள்.
சக்தி விகடன் வாசகர்களின் உதவியாலும், அன்பர் களின் பெருமுயற்சியாலும் திருப்பணி வேலைகள் மளமளவென நடைபெறத் துவங்கின. இதோ... இந்த மே மாதம் 20-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 முதல் 7.30 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் சிறப்புற நடைபெறுகிறது.

''சக்தி விகடனுக்கும் அதன் எண்ணற்ற வாசகர்களுக்கும் எங்கள் கிராமமே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. கும்பாபிஷேகத்துக்கு அனைவரும் வந்து சிறப்பித்து, எல்லோருக்கும் ஸ்ரீகரவந்தீஸ்வரரின் பேரருள் கிடைத்து இன்புற்று வாழவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்'' என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் உடையார்கோவில் கிராம மக்கள்.
தஞ்சாவூரில் இருந்து நீடாமங்கலம் செல்லும் வழியில், சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது உடையார்கோவில். இங்கே உள்ள அலங்கார வளைவைக் கடந்து சென்றால், கோயிலை அடையலாம்.
வாழ்வில் நம்மைக் கைதூக்கிவிடும் ஸ்ரீகரவந்தீஸ்வரரை, கும்பாபிஷேக நாளில் தரிசியுங்கள். நம் வம்சமே செழித்து வளரும்.
- வி.ராம்ஜி
படங்கள்: அருண்பாண்டியன்