Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

வி.ராம்ஜி

ஆலயம் தேடுவோம்!

வி.ராம்ஜி

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
##~##

மிழகத்தில் ஊருக்கு ஓர் ஆலயம் எனும்படியாக, பிரபலமாகவும் பிரமாண்டமாகவும் உள்ள திருக்கோயில்கள் ஏராளம். சில ஊர்களில் இரண்டு மூன்று கோயில்கள்கூட பிரமாண்டமாக அமைந்திருப்பதுண்டு. குறிப்பாக, சோழ தேசம் எனப்படும் பழைய தஞ்சாவூர் ஜில்லாவில், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருவாரூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை எனப் பல ஊர்கள், சோழ தேசத்தின் முக்கிய ஊர்களாக இருந்தன. அங்கே சிற்ப நுட்பங்களுடன் கூடிய ஆலயங்கள், வெகு அழகாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சாவூரில் மட்டுமின்றி தஞ்சாவூருக்கு இந்தப் பக்கம் திருவையாறிலும், அந்தப் பக்கம் பாபநாசத்திலும் பல கோயில்கள் கட்டப்பட்டன. அதேபோல் கும்பகோணத்துக்கு இந்தப் பக்கம் தாராசுரத்திலும், அந்தப் பக்கம் ஆடுதுறையிலும் ஆலயங்கள் பல அமைக்கப்பட்டன. சின்னஞ்சிறிய கிராமமாக இருந்தாலும் அந்த ஊரிலும் நீண்ட பிராகாரத்துடனும் அழகிய கோபுரத்துடனும் கோயில்கள் கட்டப்பட்டன. அந்தக் கோயில்களில் பூஜைகளும் விழாக்களும் குறைவின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக, கோயிலுக்காகவும் கோயில் பராமரிப்புக்காகவும் பண்டிகை விசேஷங்களுக்காகவும் நிலங்கள் ஒதுக்கித் தரப்பட்டன; நிவந்தங்கள் விடப்பட்டன; ஆடு- மாடுகளும் வழங்கப்பட்டன.

சோழ தேசத்தின் எந்தவொரு கிராமத்திலும் புராதனம் மிக்க ஒரேயரு கோயிலாவது இருப்பதைப் பார்க்கமுடியும். முக்கியமான பெரிய ஊருக்கும் அடுத்த முக்கியமான ஊருக்கும் நடுவே குறைந்தது நான்கைந்து கிராமங்களாவது இருக்கின்றன. அந்தக் கிராமங்களிலும் புராணப் பெருமையுடன் புராதன அமைப்புடன் மன்னர் பெருமக்கள் கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து  வைத்து,  பூஜைகள் தொடர்ந்து நடப்பதற்கு வழிவகைகளும் செய்திருப்பது தெரிகிறது.

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் பயணிக்கும்போது, மிகச் சிறிய கிராமமான மாவூர் எனும் ஊரைப் பார்க்கலாம். அங்கிருந்து கிழக்கில் எட்டுக்குடி முருகப்பெருமானின் தலத்தை நோக்கிச் செல்லும் வழியில், சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது வயலூர் எனும் கிராமம்.

ஊரின் பெயருக்கேற்ப நாலாபுறமும் வயல்களால் சூழப்பட்டுப் பச்சைப்பசேலெனக் காட்சி தரும் அற்புதக் கிராமம், வயலூர். இங்கே, ஸ்ரீசீதாதேவி சமேதரான ஸ்ரீராமசாமிப் பெருமாள் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஸ்ரீராமபிரானுக்குக் கோயில் அமைந்திருப்பது மிகவும் குறைவுதான். அப்படிப்பட்ட நிலையில், வயலூர் எனும் கிராமத்தில் ஸ்ரீராமசாமிப் பெருமாள் கோயில், மிகச் சொற்பமான ராமர் கோயிலில் ஒன்றாக அமைந்துள்ளது என்பதை நினைக்கும்போதே சிலிர்க்கிறது மனம்.

ஒருகாலத்தில், ஸ்ரீராமநவமி கொண்டாட்டங்கள் இங்கே வெகு விமரிசையாக நடைபெறுமாம். தினமும் ஸ்ரீராமாயண உபன்யாசம் என்ன... சப்பரத்தில் ஸ்ரீராமபிரான் வீதியுலா வருவதென்ன... தினந்தோறும் உத்ஸவர் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருவதென்ன... அத்தனையும் நிறைவு தந்து பக்தியை வளர்க்கும் வகையில் இருக்கும் என்று சொல்லிப் பூரிக்கின்றனர், வயலூர் கிராம மக்கள்.

ஆலயம் தேடுவோம்!

பத்து நாள் விழா நடைபெறும் வயலூர் ஆலயத்தை நோக்கித் திருவாரூரில் இருந்தும் திருத்துறைப்பூண்டியில் இருந்தும் அக்கம்பக்கத்துக் கிராமங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்ப சகிதமாக வந்து, தரிசித்துச் செல்வார்களாம். ஆனால், இன்றைக்கு அந்த ஆலயத்தில் வவ்வால்களின் ராஜ்ஜியம்தான் நிறைந்திருக்கிறது.

ஆண்டாண்டு காலமாக வழிபாடுகளும் விழாக்களும் களை கட்டிய ஆலயத்தில், இன்றைக்கு வழிபாடுகள் அறவே இல்லை. விழாக்களும் பூஜைகளும் இல்லாமல், ஸ்ரீசீதாபிராட்டி சமேத ஸ்ரீராமசாமிப் பெருமாளும் அவர்தம் கோயிலும் களையிழந்து காட்சி தருவதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது.

கோயிலுக்கு எதிரில் உள்ள தாமரைக்குளமும் தூர் வாரப் படாமலேயே கிடக்கிறது. மதிலும் பிராகாரப் பகுதியும் ரொம்பவே சிதிலமுற்றுக் கிடக்கின்றன. வைணவ ஆகமப்படி கட்டப்பட்ட அழகிய கோயில் திருப்பணிகள் செய்யப்படாமல், தன் அழகையெல்லாம் தொலைத்துவிட்டுப் பரிதாபமாக நிற்பதைப் பார்த்தால் பதறிப் போவீர்கள்.

'வழிபாடுகளும் பூஜைகளும் இல்லாவிட்டால் என்ன... எங்கள் பெருமாளை, ஸ்ரீராமபிரானை அனுதினமும் ரசித்துத் தரிசித்தபடி நாங்கள் நிற்கிறோம். எங்களுக்கு அது போதும்!’ என்பதுபோல், அழகு ததும்பக் காட்சி தருகின்றனர் ஸ்ரீவீர ஆஞ்சநேயரும் ஸ்ரீகருடாழ்வாரும்.

மண்டபம் முழுவதும் சிதிலம் அடைந்துவிட்டாலும், தன்னை நாடி வருவோருக்கு மங்கல வாழ்வைத் தரும் ஸ்ரீராம துர்கை, ஒரு கரத்தில் ஜப மாலையையும், மற்றொரு கரத்தில் தாமரை மலரையும் ஏந்தியபடி காட்சி தருகிறாள்.

உள்ளே, கருவறையில் இடப்பக்கத்தில் ஸ்ரீசீதாதேவியும், வலப் பக்கத்தில் ஸ்ரீலட்சுமணரும் நின்றிருக்க, நடுநாயகமாக கையில் வில்லுடன் நிற்கும் ஸ்ரீராமசாமிப் பெருமாளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மூன்று பேருக்கும் அருகில், ஸ்ரீஅனுமன்.

ஆலயம் தேடுவோம்!

கடந்த ஆட்சியில், தமிழக அரசால் இருபது தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக் கப்பட்டன. அவர்களில் வ.கோ.சண்முகமும் ஒருவர். இவர்தான் இந்தக் கோயிலின் பரம்பரை அறங்காவலர். தற்போது இவரின் மகன் ராஜகுமாரன் மற்றும் கிராம மக்கள் கோயில் திருப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

''எங்கள் தாத்தா காலத்துக்கு முன்பு, இந்தக் கோயிலும் கோயிலின் வழிபாடுகளும் பிரமாதமாக இருந்ததாம்! தன்னை நாடி வரும் அன்பர்களின் குடும்பங்களைச் சுபிட்சமாக வாழவைத்து அருள்பவர் ஸ்ரீராமர் என்று காலம்காலமாகச் சொல்லிப் போற்றி வந்திருக்கிறார்கள். அந்தக் கோயில், இப்போது இப்படி சிதிலம் அடைந்து, வழிபாடுகளும் இல்லாமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது'' என்கிறார் ராஜகுமாரன்.

''கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தே பல வருடங்களாகிவிட்டன. இங்கு வந்து ஸ்ரீராமருக்குப் பட்டாபிஷேகம் செய்துவைத்து வேண்டிக்கொண்டால், இழந்ததை விரைவில் பெறலாம்; பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்!

அதேபோல், ஸ்ரீவீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு செய்து வேண்டிக் கொண்டால், திருமணத் தடை அகலும்; மனோ தைரியம் பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்தக் கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகமும் நடந்துவிட்டால், இந்த ஊர் இன்னும் செழிக்கும் என்பது உறுதி!'' என்று ஏக்கத்துடன் சொல்கிறார் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.கணபதி.

வயலூர் ஸ்ரீராமசாமிப் பெருமாள் கோயில் சீர்பெற்று, விரைவில் கும்பாபிஷேகம் காண நம்மால் முடிந்த உதவிகளைத் திருப்பணிக்குச் செய்வோம். வயலூர் மக்களை வளமுடன் வாழச் செய்யும் ஆலயத்தின் கைங்கர்யத்தில் நமது பங்கு கடுகளவு இருந்தாலும், அந்த மக்களின் வாழ்த்தாலும் ஸ்ரீராமபிரானின் பேரருளாலும் நாமும் நம் சந்ததியினரும் வாழையடி வாழையாக, செழிப்புடனும் சிறப்புடனும் வாழ்வோம் என்பது உறுதி.

ஸ்ரீராமபிரானின் கோயிலுக்கு அணிலென உதவுவோம், வாருங்கள்!

படங்கள்: செ.சிவபாலன்