
ஆலயம் ஆயிரம்!

##~## |
கும்பகோணம்- தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலின் முக மண்டபமான ராஜகம்பீரன் திருமண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் நிற்கிறோம்.
இங்கே, மேல்தளத்துக்குச் செல்லும் படிக்கட்டுகள் உள்ளன. அதன் மேலேறி முதல் தளத்துக்குச் சென்றால், அங்கே ஸ்ரீவிமானத்தையட்டி ஒரு மண்டபமும், அதன் மேல்தளத்தில் மேலும் ஒரு சிறுமண்டபமும் இருக்கின்றது.
கீழ் மண்டப வெளிச்சுவரிலும் உட்சுவரிலுமாக மொத்தம் எட்டு கோஷ்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நீங்கலாக, மற்ற ஏழு கோஷ்டங்களின் மாடங்களிலும் வேறு எந்த ஆலயத்திலும் இடம்பெற்றிராத ஏழு பெண்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த ஏழு பெண்களும், நதி தெய்வங்கள்.
இடுப்புக்கு மேலே பெண் உருவமும், இடுப்புக்குக் கீழே நீர்ச்சுழலுமாகத் திகழும் அந்தப் பெண்களின் ஒரு கரத்தில் தண்ணீர்ச் சொம்பு, மறு கரத்தில் தாமரை, குவளை போன்ற மலர்களில் ஒன்று எனக் காணலாம். இவை, நம் இந்திய தேசத்தின் புனித நதி தெய்வங்களின் உருவங்கள். நதிப்பெண்கள் என்பதால், இடுப்புக்குக் கீழே தண்ணீர்த்திரளைச் சுழலுடன் சோழச் சிற்பிகள் நயமாகக் காட்டியுள்ளனர்.
மேல் தளத்தில், ஏழு நதிப் பெண்களின் சிற்பங்கள் காணக் கிடைத்தாலும், கங்கை எனும் நதிமகளை, தரைத்தளமான ராஜகம்பீரன் திருமண்டபத்தின் உள்ளே மாடம் ஒன்றில் முழுப் பெண்ணாகவே வடித்துள்ளான் சிற்பி. கருப்பு நிறத்திலான, உயர்ந்த கருங்கல்லில் இந்தச் சிற்பத்தை வெகு அழகாக வடித்துள்ள விதம் ரசிக்கத்தக்கது.

மகுடம் அணிந்து, பேரெழிலுடன் காட்சி தருகிறாள் ஸ்ரீகங்காதேவி. வலது கரத்தில் மலர்ந்திருக்கிற தாமரைப் பூவையும், இடது கரத்தில் தண்ணீர்ச் சொம்பையும் ஏந்தியபடி இருக்கிறாள் அவள். இந்தச் சிற்பத்துக்கு மேலே கோஷ்டப் பகுதியில், சோழர் கால எழுத்துப் பொறிப்பாக, 'கங்காதேவி’ என்ற பெயர் செந்தூர எழுத்துகளில் மங்கிய நிலையில் காணப்படுகிறது.
குடந்தைக் கீழ்க்கோட்டம் எனப்படும் ஸ்ரீநாகேஸ்வரன் கோயிலில் பதிகம் பாடிய திருநாவுக்கரசர் கங்கை, யமுனை, சரஸ்வதி, தாவி (சிந்து நதியில் இணையும் காஷ்மீர நாட்டு நதி), கோமதி, கோதாவரி, பொன்னியாம் காவிரி என ஏழு நதி தெய்வங்கள் கும்பகோணத்துக்கு வந்து ஈசனை வழிபட்டதாகப் பாடியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள ஏழு நதி தெய்வங்களை, இங்கே தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலில் சிற்பமாகப் பார்க்கிறோம்.
அதேபோல், இந்தக் கோயிலில் வியக்க வைக்கும் இன்னொரு சிற்ப நுட்பம்... திருக்கயிலாயக் காட்சி. ஏழு நதி தெய்வங்கள் உள்ள மண்டபத்தின் மேற்தளத்தில் உள்ள சிறுமண்டபம், ஸ்ரீவிமானத்தின் கிழக்கு முகத்துடன் இணைந்துள்ளது. அந்த மண்டபத்தின் தென்புறம் மற்றும் வடபுறம் உள்ள சுவர்களின் வெளிப்புறம் திருக்கயிலாய மலையில் சிவபெருமானைத் தொழுது நிற்கும் தெய்வங்கள், இருடிகள், கணங்கள் என நூற்றுக்கணக்கானவர்களின் சிற்றுருவச் சிற்பங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இந்தச் சிறுமண்டபமும் ஸ்ரீவிமானமும் இங்கே திருக்கயிலாய மலையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
சிறுமண்டபத்தின் உள்ளே உள்ள கற்பீடத்தின் மேலே, அமர்ந்த கோலத்தில் சிவபெரு மானும் உமாதேவியும் இருக்க, அருகே மற்றொரு பெண் தெய்வம் நின்ற கோலத்தில் இருப்பதைப் பார்க்கலாம். இந்த மூன்று வடிவங்களும் கி.பி.15-ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு, சுண்ணாம்புச் சுதையால் வடிக்கப்பட்டவை.
ஸ்ரீவிமானமும் திருக்கயிலாயக் காட்சியைக் காட்டுகிற மண்டபமும் சோழர் காலப் படைப்பாக இருக்கும்போது, இவை மட்டும் ஏன் பிற்காலத்தில் சுதையால் அமைக்கப்பட்டன என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே நெடுங்காலம் தவித்து வந்தேன். சமீபத்தில்தான் அதற்கு விடை தெரிந்தது.

அதாவது, கி.பி.14-ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், தமிழகத்தில் உள்ள கோயில்கள் பலவும் சூறையாடப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் கோயில் உடைமைகளைக் காப்பாற்றும் விதமாக கோயிலின் வளாகத்துக்குள்ளேயே வைத்துப் புதைத்தனர். தாராசுரத்தில் அப்படிப் புதைக்கப்பட்ட இருபத்தொரு செப்புச்சிலைகளை, இந்தியத் தொல்லியல் துறையினர் பூமியில் இருந்து அகழ்ந்து எடுத்தார்கள். அவற்றில், திருக்கயிலாய மண்டபத்து பீடத்தின் மேல் வைக்கப்பட்ட கயிலாயப் பகுதி மற்றும் ஸ்ரீஉமாதேவி என இரண்டு செப்புச் சிலைகளும் அடங்கும்.
இரண்டாம் ராஜராஜ சோழன், ராஜராஜேச்சரம் என்ற பெயரில் எடுத்த கயிலாய மலையான தாராசுரம் திருக்கோயிலின் ஸ்ரீவிமானத்துக்கு, அந்தப் பேரரசனின் மகன் மூன்றாம் குலோத்துங்கன் பொற்தகடுகளைப் போர்த்தி, பொன்மலையாகவே மாற்றி இருந்தான். இதனை அவனுடைய கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
தாராசுரம் கோயில் மண்டபத்தின் மேற்தளத்தில் ஏறி நின்று, நதி தெய்வங்களைக் கண்டு வணங்கி, அங்கே உள்ள திருக்கயிலாயக் காட்சி மண்டபத்தில், புதையுண்டு கிடைத்த செப்புத் திருமேனிகளையும் அந்த ஸ்ரீவிமானத்தை பொற்தகடுகள் போர்த்தியிருந்த பொற்கயிலையாகவும் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால், சோழப் பேரரசர்கள் காலத்தில் திகழ்ந்த அந்த பொன் கயிலாயத்தின் மாட்சிமையும், அவர்களுக்கு சிவனார் மீதும் சிவாலயங்கள் மீதும் இருந்த பக்தியும் தெளிவுறப் புலப்படும்.
- புரட்டுவோம்
படங்கள்: கே.குணசீலன்