மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 18

சித்தம் அறிவோம்...

சித்தம்... சிவம்... சாகசம்! - 18
##~##

'சொல்லுகிறேன் சதுரகிரி தன்னிலப்பா
சுகமான ஆற்றோரம் என் குகைக்குள்
வல்ல சித்தர் அனந்தம் பேராகக் கூடி
வாழ்ந்திருப்பார், அதனருகே குண்டாதன்னில்
நல்லதொரு கஞ்சாவை நான் கசக்கி
நயம் பெறவே அவர்களுக்கு கொடுத்ததாலே
எல்லவரும் பயன் பெற்றார் குகையில் தங்கி
இயற்றினேன் தைலங்கள் அநேகம் தானே’

- பிரம்மஞான தரிசனம்

வேள்விச்சாலையில் கோரக்கர், பிரம்மமுனி ஆகியோரின் சாபத்தால் இருள் மாயையும் அருள் மாயையும் கஞ்சா, புகையிலை எனும் தாவரங்களாக மாறிவிட... வேள்வியும் ஒருமுனைப்போடு தொடர முடியாமல் போயிற்று.

வேள்வி புரிவோர், உணர்வுகளுக்கு இடம் கொடாது வேள்வியின் நோக்கம் ஒன்றையே பிரதானமாகக் கருதி செயல்படவேண்டும் என்பதுதான் வேள்விகளுக்கான அடிப்படை விதி. எனவேதான், இத்தகைய இறைநெறிப் பணிகளில் இன்றும் ஈடுபடுவோர், கையில் ரட்சையை கட்டிக்கொண்டு உடற்சுத்தம், மனோசுத்தம் என இரு விஷயத்திலும் விரதம் இருப்பார்கள். பிறரைத் தீண்டுவது, வாய்க்கு ருசியான உணவுகளை உண்பது, மது- மாது இரண்டையும் மனத்தாலும் நினையாதிருப்பது என்கிற எல்லாமே மனத்துக்கு ஒரே முனைப்பைத் தரவல்லவையாகும்.

இந்த முனைப்பு மிகச் சிறிய ஒரு விஷயத்தில்கூட குலைந்து போகலாம். ஆனால், இங்கே பிரம்மமுனி, கோரக்கர் என்னும் இருவர் வரையில், அவர்கள் கோபப்படவே காரணமாகிவிட்டது.

முனிவர்கள், ரிஷிகள், சித்த புருஷர்கள் முதலானோரின் கோபம் வலிமைமிக்கது. அது இரு பக்கமும் கூர்மையான கத்தியைப் போன்றது.

எதிரில் இருப்பவர்களை மட்டுமல்ல, சபித்த அவர்களையேகூட நிலைகுலையச் செய்துவிடும்.

'விதுர நீதி’ எனும் நீதி சாஸ்திரத்தில், கோபத்தை 'சத்ரு’ என்கிறார் விதுரர். கோபப்படுவதுபோல நடிக்கலாம். ஆனால், நிஜத்தில் கோபம் கூடவே கூடாது என்கிறார் அவர். கோபத்தில் ஒருவரை நாம் நிந்திக்கும்போதும், சபிக்கும்போதும் நம் வசம் உள்ள அருள் சார்ந்த அத்தனையும் எதிரில்

இருப்பவர்களைச் சென்று சேர்கிறது. இதனால்  புலன்களை அடக்கியும், பக்தி செலுத்தியும் நாம் சேமித்து வைத்த அருள் அம்சம் அவ்வளவையும் இழந்துவிடுகிறோம். எனவே, கோபப்படுவதை எதிரிக்காக இல்லாமல், தனக்காகவாவது தடுத்து நிறுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம் என்கிறார்.

அதேநேரம், கோபத்துக்கு ஆளானவர் அருள் வயப்படுகிறார் என்கிற அரிய கருத்தையும் கூறுகிறது விதுர நீதி. இருந்தும், தன்னிலை மறந்து முனிவர்கள் சபித்துவிடுவது நடந்துவிடுகிறது. இங்கேயும் அதுவே நிலை!

ஆனாலும், பிரம்மமுனி மற்றும் கோரக்கரின் கோபம், இரண்டு அரிய தாவரங்கள் இந்த பூமிக்குக் கிடைக்கக் காரணமாயிற்று. இதனைத் தொடர்ந்து சிவபெருமானும் அவர்கள் முன் பிரசன்னமானார். இருவரையும் பார்த்து, அவர்கள் செய்யும் யாகம் குறித்துப் பேசவும் செய்தார்.

'முனிவர்களே! பஞ்ச பூதங்களை அடக்கி ஆளும் வல்லமை என்பது மேலான ஆதிசக்திக்கு மட்டுமே! அதை இந்த மண்ணில் பிறந்துவிட்டவர்கள் அடையவே முடியாது. அருட்பிரசாதமான விபூதியில் தோன்றியமையாலும், பிரம்மஞானம் இருந்த காரணத்தாலும் உங்களுக்கு இந்த உலகை ஏற்றத்தாழ்வற்றதாகப் படைக்கும் விருப்பம் ஏற்பட்டது. ஆனால், அது தேவையற்றது. ஏற்றத் தாழ்வு என்பது பார்வையால் வருவது. மனது சமமாகக் கருத வேண்டியதே ஞானமாகும். ஞானப்பட்டவருக்கு பெரிது எதுவும் பெரிது இல்லை; சிறிது எதுவும் சிறிதும் இல்லை. நோக்குவதில்தான் எதுவும் உள்ளது. இதைப் புரிந்துகொண்டு முக்தி காணுங்கள். ஆனாலும், நீங்கள் செய்த யாகத்துக்கு உங்களுக்கு வரஸித்தி ஒன்றைத் தருகிறேன்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 18

இந்த மலையகத்திலும், இமயச் சருக்கத் திலும் அகால மரணம் அடைவோரை நீங்கள் விரும்பினால் உயிர்ப்பித்து எழச் செய்யலாம். உமக்கு அதற்கான சக்தியைத் தருகிறோம். இந்தச் சக்தி ஓர் அமிர்த ரசம் போல ஒரு ரச மருந்தாக உமக்குக் கிடைத்து, அதனால் அகாலப்படுவோர் காலப்படுவர்!' என்று கூறி மறைந்தார் சிவபெருமான்.

அதன் பிறகே, கோரக்கர் அந்த அபூர்வ ரசத்தை உருவாக்க முனைந்தார். முன்னதாக, அதற்கு சரியான இடத்தை கௌண்டின்ய நதிக்கரையோரம் தேர்வு செய்தார். இந்த நதியை ஒட்டி ஒரு பொய்கையும் உண்டு. இந்தப் பொய்கை வற்றாப் பொய்கையாகும். இதனைச் சுற்றி ஏழாயிரம் மூலிகைச் செடிகள் முளைவிட்டு, அதன் வேர்கள் இந்த பொய்கை நீரைத் தீண்டி, அதை உண்டே ஜீவித்துள்ளன. இதனால் இந்தப் பொய்கை நீருக்கும் அந்த ஏழாயிரம் மூலிகைத் தொடர்பு காரணமாக மருத்துவ குணம் உண்டு. இதில் ஒருவர் நீராடும்போது, ரோமக்கால் துவாரம் வழியாக உட்புகும் இதன் நீரும், மேனிச் சூட்டைக் குறைக்கும் இதன் குளிர்மையும், ஒரு வாய் இதை உண்ணும்போது உட்புறமாய் இது ரத்தக் கலப்பாவதும், பிறகு அதனுள் ஜீவ வாயுக்கள் மிகுவதும்... அதன் காரணமாக நூறு வயதைக் கண்டுவிட்டோர்கூட காளையைக் கைப்பற்றி அடக்க முனையும் ஓர் இளைஞனைப் போல தினவும் வலிவும் கொண்டவராவர்.

இப்படி ஒரு பொய்கையை ஒட்டியே மலைப் பாறையில் ஜாதிப்பாறை ஒன்றைத் தேர்வு செய்து, அதனுள் தேரை இல்லாத வலிவை உணர்ந்து, அங்கே பெரும் குழியை உருவாக்கினார் கோரக்கர். அதில் மூலிகைகளை இடித்துச் சாறாக்கி சேர்த்து, பின் உச்சிவானச் சூரியக் கிரணங்களாலேயே அதை கொதிக்கச் செய்தார். தொடர்ந்து, அதை மூடிவைத்தார். மறுநாள் அதைத் திறந்து, திரும்பவும் அதனுள் கல்ப மூலிகைகளைச் சேர்த்து ஒரு மண்டலம் கொதிப்பாக்கி, அகப்பையில் குழம்புபோல் அள்ள முடிந்த சாறாக அதை ஆக்கினார். இதில் கஞ்சா, புகையிலையை உரிய பக்குவத்தில் சேர்த்து ஆதிரசத்தைத் தயாரித்தார் கோரக்கர்.

இந்த ரசமானது மூப்பைத் தடுக்கவல்லது; இளமையை நிலைநிறுத்துவது; விரும்பும்வரை உயிர் வாழத் துணை நிற்பது. இதை கோரக்கர் செய்த போது, விதிப்பாடுடைய பல சித்த புருஷர்கள் மூன்று கையளவுக்கு அள்ளிக் குடித்து, தங்களை கல்பயோகிகளாக ஆக்கிக்கொண்டனர்.

இதன் பின்புலத்தில் உள்ள மூலிகைகள் எவை எவை என்பதெல்லாம் பெரும் ரகசியமாகும். இந்த ரகசியங்களை பரிபாஷையில் பாடல்களுக்குள் புகுத்தி வைத்தார்கள். இதை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது.

விதியுடையோர் பரிபாஷையைச் சரியாகப் புரிந்துகொண்டு, அந்த மூலிகைகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வர். தப்பித் தவறியும் கோரக்கரோ பிரம்மமுனியோ, இன்று கஞ்சா- புகையிலையை நம் மக்கள் தவறாகப் பயன்படுத் துவது போலப் பயன்படுத்தவில்லை. கஞ்சாவை போதைக்காகப் பயன்படுத்துவோரை 'பேயர்’ என்கிறார் கோரக்கர்.

'கஞ்சாவும் கள்ளும் உண்டோர் காணார் பேயர்...
முலையின் பால் உண்டாலல்லோ நிலைக்கும் தேகம்’

எனும் அவரது சந்திரரேகை பாடல் வரிகள் அதைக் குறிப்பிடுகின்றன.

இன்று புகைபிடிப்போர் பயன்படுத்துவது புகையிலையைத்தான். இது வாய், நெஞ்சகம், நுரையீரலை வேகவைத்துப் புண்ணாக்கிவிடுகிறது. ஒரே காரணம்தான்... இதன் ரசத்தைப் பக்குவப் படுத்தி உட்கொண்டால் மருந்து. இல்லாவிட்டால் விஷம்! அதுமட்டுமல்ல; இந்தத் தாவரங்கள் தோன்றியபோது, இவர்களைச் சபித்த விதமும் காரணம்.

அருள்மாயையும், இருள்மாயையும் வேள்வியின் போது மன ஒருமையைக் கெடுத்தனர். தேவர் களுக்கே மதி மயக்கம் ஏற்பட்டது. எனவே, இவை இரண்டையும் நாடுவோரிடமும் மனச்சிதைவு ஏற்பட்டு, மனஒருமை இல்லாது போகிறது. அத்துடன், சாபத் தொடர்பும் இருப்பதால், இவற்றை நாம் தீண்டும்போது, நாமும் அதன் தொடர்புக்கு ஆளாகிறோம். இதனால், ஒருவர் அழிவுக்கு ஆளாகவேண்டிய விதிப்பாடு இருந்தால், இவற்றைத் தொடர்பு கொள்ளும் நிலைப்பாடு ஏற்படும். எனவே, இவற்றைச் சாபத்துக்கு உரியவையாகக் கருதி விலக்கி வைப்பதே சிறந்த விஷயமாகும்.

இன்றும் சதுரகிரி மலைத் தலத்தில் கோரக்கர் குண்டா இருப்பதாகக் கூறப்படுகிறது. ஓர் ஆலிலை வடிவில் அது காணப்படுகிறது. இன்றும் இதில் தேங்கியிருக்கும் மழைநீருக்கு மருத்துவ குணம் மிகவே இருப்பதாகக் கருதுகின்றனர். இந்தக் குண்டா நீரை அள்ளி, மூன்று கை உண்டால் ஜென்ம சாபல்யமும் பிணிகளில் இருந்து விடுபடுதலும் நிகழ்கிறது.

கோரக்கர் இதுபோல ஆதிரசம் செய்தது மட்டுமல்ல, காலஞானத்தோடு 'நாஸ்டர்டாமஸ்’ எனும் மேல் நாட்டு தீர்க்கதரிசியைப்போல பல எதிர்கால நிகழ்வுகளையும் முன்பே ஜோதிடம் போலக் குறிப்பிட்டுள்ளார். அந்தக் குறிப்புகள் அவர் இயற்றியுள்ள சந்திரரேகை எனும் நூலில் காணப் படுகின்றன. குறிப்பாக, கலியுகம் எப்போது எப்படித் தொடங்கியது என்பதை இரு வரிகள் அழுத்தமாக கூறுகின்றன.

'இந்தக்கலி உதிப்பு பிரமாதி ஆண்டு
ஆன சித்திரை வெள்ளி நவமி மூலம்...’
என்கிறார். அதாவது, பிரமாதி ஆண்டு சித்திரை மாதம் வெள்ளிக் கிழமை நவமி திதி, மூலம் நட்சத்திர நாளில் கலி புருஷன் பிறந்தானாம்.

இந்தக் கலி எப்படிப்பட்டவனாக இருப்பான் என்பதையும் சந்திரரேகையிலுள்ள 98, 99-ஆவது பாடல் வரிகள் கூறுகின்றன. அத்துடன், நம் பாரதநாட்டை யாரெல்லாம் ஆள்வார்கள் என்றும் பாடியுள்ளார்.

'பழியில்லா பரீட்சித்து ஐந்நூறே ஆண்டான்
பரிவாக சனமேசெயன் முந்நூறாண்டான்
இழிவில்லா நரேந்திரனாம் என்ற மன்னன்
இரண்டு நூற்றெண்பத் தெட்டாக ஆண்டான்
செழிப்பாக சாரங்கன் எண்பதைந்து
செகமுழுதும் விக்கிரமாதித்த வேந்தன்
இரண்டாயிரம் ஆண்டதப்பால்...!’
என்று சொல்லும் பாடல் வரிகள், ஒரு கட்டத்தில், 'ஆன்மநலம் அறிந்த கிள்ளு நாமக்காரர்’ என்று ஒருவரைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

இந்தக் கிள்ளு நாமக்காரர் வேறு யாருமல்ல; நமது மகாத்மாகாந்தியைத்தான் குறிப்பிடு கிறது என்கின்றனர் சான்றோர். மொத்தத் தில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சந்திர ரேகையில் பாரததேசம் குறித்து எழுதியது ஏறத்தாழப் பொருந்துவதாக உள்ளது.

அடுத்து, கோரக்கரிடம் நாம் காண வேண்டிய தனிப்பெரும் சிறப்புக்குரிய ஒரு விஷயம் அவரது வான்மிசைப் பயணம்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 18

ஒரு மனிதன் பறவை போல் வானில் பறக்க முடிந்தால் அதைவிட ஓர் இன்பம் இருக்க முடியுமா?

எண்ணிப் பாருங்கள்...

பறக்க வேண்டும் என்றால், நமக்குச் சிறகுகள் தேவை. ஆனால், சிறகோடு பிறக்காவிட்டாலும், அதைச் செயற்கையாக உருவாக்கிக்கொண்டு, ஆடைபோல அதை அணிந்தபடி பயணிப்பது போன்ற முயற்சிகளை பலர் விஞ்ஞான சாகசமாகச் செய்து பார்த்துவிட்டனர். விண்ணின் புவிஈர்ப்பு விசைக்கு எதிராக உடல் எடையைச் சமன் செய்துகொண்டு பறப்பது என்பது இன்றுவரை ஒரு சாத்தியமில்லாத விஷயமாகவே உள்ளது.

ஆனால் கோரக்கரும் சரி, அவரது குருவான போகரும் சரி, அடிக்கடி சீன தேசத்துக்குச் சர்வசாதாரணமாகப் பறந்து போய்விட்டு வந்திருப்பதைக் குறிப்புகள் உணர்த்துகின்றன. அது எப்படி என்பதற்குச் சான்றாக, போகரின் பாடல் வரிகளில் விடை காணப்படுகிறது.

'அறிந்திட்டேன் வெள்ளி என்ற மலையும் கண்டேன்
அப்பனே செம்பினுடை மலையும் கண்டேன்...’

என்று சொல்லும் பாடல் வரிகள், ஓர் இடத்தில்

'குறித்திட்டு வெளியாக்கவென்றே எண்ணி
குளிகையிட்டு சீனபதி அமர்ந்திட்டேனே...
பதியான தீவு தீவாந்திரங்கள்
பறக்கவே குளிகையன்று செய்து கொண்டேன்’

என்கிறார் போகர். இந்தக் குளிகையை வாயில் அடக்கிக்கொண்டு விண்ணில் பறக்கலாம் என்பது இதிலிருந்து புலனாகிறது. ஒரு குளிகை வாயில் அடங்கும்போது எப்படி உடல் எடையைச் சமன் செய்யும் என்கிற கேள்வி இங்கே எழுகிறது. போகர் இப்படிக் குறிப்பிட்ட குளிகை பற்றி கோரக்கர் பதில் கூறுகிறார்...

ஆகாய மார்க்கமாக ஏறிப் பறக்க ஒரு குளிகை உதவும். அதற்குப் பெயர் கெவுனகுளிகை! இதை எப்படிச் செய்யலாம் தெரியுமா?

பலுணி எனும் மரத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இதன் தூர் பெரிதாகவும், இலை கை அகலமாகவும், காய்கள் அத்திக்காய் போலும் இருக்கும். இந்தப் பழத்தைப் பறவைகள் சாப்பிடுமாம்.

இந்த மரத்தின் வேரைக் குடைந்து, அதற்குள் ஒரு பலம் பாதரசம் விட்டு, அந்த மரப்பட்டையாலேயே மூடிவிடவேண்டும். மூன்று மாதம் கழிந்த பின் எடுத்துப் பார்த்தால், அந்த பாதரசம் வெள்ளிபோல் உறைந்து போயிருக்கும். அதை உருட்டி உருண்டையாக்கி வாயில் அடக்கிக்கொண்டால், பறக்கும் சக்தி ஏற்படுமாம்.

அது எப்படி?

- சிலிர்ப்போம்...