Published:Updated:

ஞானப் பொக்கிஷம்- 30

ஞானப் பொக்கிஷம்- 30

ஞானப் பொக்கிஷம்- 30

ஞானப் பொக்கிஷம்- 30

Published:Updated:
ஞானப் பொக்கிஷம்- 30
##~##

நாலடியார் என்கிற நூல், அது உருவான விதம், அந்த நூலில் உள்ள தகவல்கள் ஆகியவற்றைப் பற்றி ஏற்கெனவே இந்தத் தொடரில் பார்த்தோம். அத்துடன், இலவச இணைப்பைப் போல 'பழமொழி நானூறு’ என்ற நூல் எப்படி வந்தது என்பதைப் பற்றிப் பரவலாகச் சொல்லப்படும் ஒரு கதையையும் (கதையை மட்டும்) பார்த்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏனென்றால், நாலடியாரைப் பற்றிக் கூறும்போது அந்தக் கதையையும் சேர்த்தே சொல்வது, பழங்காலம் முதலே வழக்கத்தில் இருந்துள்ளது. சில நூல்களிலும் அவ்வாறே இடம் பெற்றுள்ளது. ஆனால், நாலடியாரை உருவாக்கிய பிறகு, அதைத் தொகுத்த சமண முனிவர்களுக்கும் 'பழமொழி நானூறு’ என்ற நூலுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது.

நாலடியார் பாடல்கள் பலரால் எழுதப்பட்டவை. ஆனால், 'பழமொழி நானூறு’ பாடல்களோ ஒருவராலேயே எழுதப்பட்டுள்ளன.

தலைப்பைப் பார்த்தாலே புரியும், இந்த நூலில் 400 பாடல்கள் உள்ளன என்பதும், ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழி இடம் பெற்றிருக்கிறது என்பதும்! தவிர, ஒவ்வொரு பாடலிலும் அந்தப் பழமொழியை விளக்கும் இதிகாசப் புராணக் கதையோ, அல்லது வரலாற்றை விளக்கும் கதையோ இடம் பெற்றிருக்கும். இந்த நூலை எழுதியவர் - முன்றுரையர்.

ஓரளவுக்காவது மக்கள் மத்தியில் பரவி இருக்கும் கதைகளே இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அதே நேரம், தெரிந்த வரலாறுகளையும் பழமொழிகளையும் இந்த நூல் விவரித்திருக்கும் விதம், புதிய கோணத்தில், புதிய தகவல்களோடு பிரமிப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது.

மகாபலிச் சக்ரவர்த்தி நல்லவன்தான். ஆனால், ஆணவத்தால் தன் அரசை இழந்தான். 'வாமனனுக்கு மூன்று அடி மண் கொடுக்காதே! அது உன்னால் முடியாத காரியம். வேண்டாம்!'' என்று எச்சரித்தார் மகாபலியின் குரு. ஆனால், அவர் பேச்சை மகாபலி கேட்கவில்லை. 'உலகத்துக்கே ஈசனான என்னால் முடியாததா?’ என அகங்காரம் கொண்டதால், அரசை இழந்தான்.

இந்தக் கதையைச் சொல்லி நம்மை எச்சரிக்கும் இந்த நூல், மேற்படி கருத்தை விளக்க ராமாயண நிகழ்ச்சி ஒன்றைக் குறிப்பிடுகின்றது.

'பொலந்தார் இராமன் துணையாகப் போதந்து
இலங்கைக் கிழவற்கு இளையான் - இலங்கைக்கே
போந்து இறை ஆயதூ உம் பெற்றான்; பெரியாரைச்
சார்ந்து கெழீஇ இலார் இல்’

என்கிறது பழமொழி நானூறு.

இலங்கைக்கு உரியவன் ராவணன். அவன் தம்பி விபீஷணன். அந்த விபீஷணன், 'ராமனே எனக்குத் துணையாவான்’ என்று எண்ணி ராமனிடம் வந்தான். பின்னர், அவன் இலங்கைக்கே மன்னனாகிவிட்டான். ஆனால், ஆணவம் கொண்ட ராவணனோ அழிந்துபோனான்.

ராமாயணத்தின் ஒரு பகுதி இப்பாடலில் இடம் பெற்றிருப்பதைப் போல, வேறு பல கதைக் குறிப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

ஞானப் பொக்கிஷம்- 30

இதிகாச புராணக் கதைகள் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வரலாறு பலவும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது சிறப்பு. ஒரு சிலவற்றை நாம் இங்கே காணலாம்.

குல வித்தை கல்லாமலே வந்துவிடும் என்பார்கள். இதை 'குல விச்சை கல்லாமல் பாகம் படும்’ என்று இந்நூல் கூறுகிறது. 'மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?’ என்கிற பழமொழியும் இதை ஒட்டி உருவானதுதான்.

இந்தப் பழமொழியை விளக்குவதற்காக, கரிகால்சோழனின் வரலாறு ஒன்றை ஒரு வெண்பாவில் இந்த நூல் கூறுகிறது.

'உரை முடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுதுமக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறை செய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்’

என்று கரிகால்சோழனின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி ஒன்றை இந்த நூல் கூறுகிறது.

கரிகால்சோழன் மிகவும் இளம் வயதிலேயே பட்டத்துக்கு வந்துவிட்டான். அப்போது ஒரு நிகழ்ச்சி நடந்தது.

முதியவர் இருவர் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னைக்காகக் கரிகால்சோழனிடம் வழக்கைக் கொண்டுவந்தார்கள். ஆனால், அவர்கள் இருவரும் கரிகால்சோழனை நேரில் பார்த்ததும், அவனது இளம் வயது காரணமாக, 'இவனால் நமக்கு எப்படிச் சரியான நீதி வழங்க முடியும்?'' என்று அவநம்பிக்கை கொண்டார்கள்.

ஞானப் பொக்கிஷம்- 30

அதைக் குறிப்பால் உணர்ந்த கரிகால்சோழன் எழுந்து உள்ளே போய் நரைத்த தாடி, மீசை, தலைமுடி ஆகியவற்றுடன் திரும்பிவந்தான்.

வழக்கு தொடுத்த முதியவர் இருவரும், ''இவர் யாரோ முதியவர் வந்திருக்கிறார். இவர் நமக்கு நல்ல தீர்ப்பு சொல்வார்'' என்று எண்ணி வழக்கை விவரித்தார்கள். அவர்கள் வழக்கைக் கேட்டு, கரிகால்சோழனும் நல்ல தீர்ப்பு வழங்கினான்.

வழக்கு தொடுத்தவர்கள், ''நல்ல தீர்ப்பு! நல்ல தீர்ப்பு!'' என மகிழ்ந்தார்கள். பிறகு, அவ்வாறு தீர்ப்பளித்தவன் கரிகாலனே என்பதைக் கண்டு வியந்தார்கள்.

இந்தத் தகவலைச் சொன்ன இந்த நூல், கரிகால்சோழனைப் பற்றிய மற்றொரு தகவலையும் சொல்லி நமக்கு வழிகாட்டுகிறது. அதாவது, முயற்சி உடையவர்களாக இருந்தால், அவர்கள் தம் காரியத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்று சொல்லி, முயற்சியின் உயர்வை விளக்குகிறது. இதோ, அந்தப் பாடல்...

ஞானப் பொக்கிஷம்- 30

'சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானை பெற்றுக் - கடைத்தலை
செயிர் அறு செங்கோல் செலீ இனான் இல்லை
உயிர் உடையார் எய்தா வினை’

கரிகால்சோழன் சிறுவனாக இருந்தபோது, அவனை அழிப்பதற்காகப் பகைவர்கள் அவனை அவன் இருந்த மாளிகையோடு வைத்துக் கொளுத்திவிட்டார்கள். ஆனால், அதிலிருந்து கரிகால்சோழன் உயிர் தப்பிவிட்டான். பிறகு, அவன் தன் முயற்சியால், தன் மாமனான இரும்பிடர்த்தலையார் என்பவரின் துணையோடு பகைவர்களைக் கொன்று, தன் அரசாட்சியைப் பெற்றான். நல்லாட்சி நடத்தினான்.

ஆகையால், முயற்சியினால் வெற்றி பெறாத செயலே இல்லை என, கரிகால்சோழனின் வரலாற்றைச் சொல்லி, முயற்சியின் மேன்மையைப் பதிவு செய்கிறது இந்த நூல்.

குற்றவாளியின் மேல் உள்ள குற்றம் எவ்வளவு காலம் கழித்து வெளிப்பட்டாலும், அந்தக் குற்றவாளி தண்டிக்கப்படவேண்டிய வனே என்ற 'சட்டமுறை’ பற்றியும் இந்த நூல் சொல்கிறது.

'சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கை கரப்பக்
காலை கழிந்ததன் பின்றையும் - மேலைக்
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பு இளமை இல்’

இந்தப் பாடலில் சொல்லப்பட்ட மனுநீதி சோழனின் வரலாறு: சோழனின் மகன், தன் தேர்ச் சக்கரத்தால் ஒரு பசுங்கன்றைக் கொன்றுவிட்டான். அமைச்சர்களும் மற்றவர்களும் சேர்ந்து, அந்தச் செய்தியை அரசனுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டார் கள். நாட்கள் பல கடந்தன. தன் மகன் பசுங்கன்றைக் கொன்று விட்டான் என்பதைப் பின்னர் அறிந்தான் மன்னன். உடனே, அவன் தன் மகன் மீது தேரேற்றி அவனைக் கொன்றான்.

அதாவது, இளவரசன் செய்த குற்றத்தை மந்திரிகள் மறைத்து விட்டார்கள். பல நாட்கள் கடந்து அந்தக் குற்றம் வெளிப்பட்டது. அதை அறிந்தவுடன், பசுவின் கன்றின் மேல் தேரை ஏற்றிக் கொன்ற தன் மகனைத் தந்தையான மன்னனும் தேரை ஏற்றிக் கொன்றான். ஆகையால், நீதிக்கு அதிக நாள், குறைந்த நாள் என்ற எல்லையில்லை என இந்த நூல் தெரிவிக்கிறது.

இப்படி, இந்த நூலில் பழைய பழக்கவழக்கங்கள், பழந்தமிழர் பண்பாடு என நிறையத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. நீதி நூல்களிலேயே தலைசிறந்த நூல் இது. பழந்தமிழர் பண்பாட்டைக் காண்பதற்குப் பெருந்துணையாக இருக்கும் இந்த நூல் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றாகும்.

- இன்னும் அள்ளுவோம்...