Published:Updated:

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

Published:Updated:
பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!
##~##

ஸ்ரீகண்ணன் ஆண்ட துவாரகையை மனதார தரிசித்த திருப்தியுடன் பஞ்ச துவாரகையில் அடுத்ததான பேட் துவாரகைக்குப் புறப்படத் தயாரானோம். கோயிலுக்கு அருகில் உணவகங்கள் எதுவும் இல்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு, பேட் துவாரகைக்கு எப்படிப் போவது என்று விசாரித்தோம். பல டிராவல்ஸ் நிறுவனங்கள் துவாரகையிலேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றன என்ற தகவல் கிடைக்க... துவாரகை கோயிலில் இருந்து ஆட்டோவுக்கு 50 ரூபாய் வாடகை கொடுத்து, டிராவல்ஸ் ஒன்றைச் சென்றடைந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்கே நபர் ஒருவருக்கு 160 ரூபாய் வாங்கிக் கொண்டார்கள். பயணத்துக்காக அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், அதன் ஸீட் எண்ணிக்கையைவிடக் கொஞ்சம் கூடுதலான யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டார்கள். சற்று நேரத்தில், 31 கி.மீ. தொலைவில் இருக்கும் பேட் துவாரகை நோக்கிப் பயணித்தோம்.

பேட் துவாரகை உள்பட நான்கு இடங்களை சுற்றிக் காண்பித்தார்கள். ஏனைய மூன்று தலங்களும் பேட் துவாரகை செல்லும் வழியிலேயே இருக்கின்றன. அவை: ருக்மிணி ஆலயம், நாகேஷ்வர் ஆலயம், கோபி தாலவ்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

நாங்கள் முதலாவதாகச் சென்ற இடம் ருக்மிணி ஆலயம். துவாரகையில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே இருக்கிறது இந்த ஆலயம். ஸ்ரீகண்ணன் வீற்றிருக்கும் துவாரகை ஆலயத்திலேயே இல்லாமல் ஏன் இவ்வளவு தூரம் தள்ளிக் கோயில் கொண்டிருக்கிறாள் ருக்மிணி என்று விசாரித்தபோது, ஒரு புராணத் தகவலைச் சொன்னார்கள் அங்குள்ளவர்கள்.

ஒருமுறை, ஸ்ரீகண்ணனும் ருக்மிணியும் துர்வாச முனிவரைத் தங்கள் மாளிகையில் விருந்துண்ண அழைத்தார்கள். துர்வாசரும் சம்மதித்தார். கூடவே, ஒரு நிபந்தனையும் விதித்தார். தன்னைத் தேரில் வைத்து, தேரை கண்ணனும் ருக்மிணியும் இழுத்துவரவேண்டும் என்பதே அது.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

மகிழ்ச்சியோடு அந்த நிபந்தனைக்கு இருவரும் சம்மதித்தனர். துர்வாச முனிவரைத் தேரில் அமர வைத்து, இருவரும் தேரை இழுத்து வரும் வழியில் ருக்மிணிக்குத் தாகம் ஏற்பட்டது. ஸ்ரீகண்ணன் தன்னுடைய காலை பூமியில் அழுத்தி, கங்கையை நீரூற்றாக வருமாறு செய்தார். தாகத்தால் தவித்த ருக்மிணி, துர்வாசருக்குத் தண்ணீர் கொடுக்கவேண்டும் என்று நினைக்காமல், தானே குடித்துவிட்டாள். துர்வாசர்தான் கோபத்துக்குப் பெயர்போனவர் ஆயிற்றே! கணவனைவிட்டுப் பிரிந்து, தள்ளி இருக்கும்படி ருக்மிணியைச் சபித்துவிட்டார்.

அதனால்தான், துவாரகையில் இருக்கும் ஸ்ரீகண்ணன் ஆலயத்தைவிட்டு 2 கி.மீ. தள்ளி ருக்மிணி கோயில்கொண்டிருக்கிறாள் என்றார்கள்.

இந்த ஆலயம் தோன்றி 2,500 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். தற்போதுள்ள கூம்பு வடிவ கூரையும், மண்டபமும், படிக்கட்டு அமைப்புகளும் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

கோயிலின் வெளிச்சுற்றில் மனிதர்கள் மற்றும் யானைகளின் சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. கூடவே, கிருஷ்ணரின் வாழ்வில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறார்கள். சபா மண்டபத் தூண்களில் அற்புதமான பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு அருகிலேயே கடலின் கழிமுகம் இருக்கிறது. கோயிலுக்கு வெளியே மைதானம் போன்ற இடத்தில் ஆதரவற்ற பலரும் அமர்ந்திருக்கின்றனர். கோயிலில் இருந்து வெளிவருபவர்களை நோக்கி அபயக் குரல் எழுப்புகின்றனர். விரும்புபவர்கள் ஏதாவது பணம் கொடுத்து உதவி செய்யலாம். இங்கும் உணவகங்கள் ஏதும் இல்லை.

கோயில் தரிசனத்தில் மனம் நிறைந்திருந்தாலும், காலையில் இருந்து சில பிஸ்கட்டுகளை மட்டுமே சாப்பிட்டு இருந்ததால், பசியுடன் அடுத்த ஆலயம் நோக்கிப் பயணமானோம். அது  நாகேஷ்வர் ஆலயம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

துவாரகையில் இருந்து பேட் துவாரகை செல்லும் வழியில் 16 கி.மீ. தூரத்தில் இருக்கிறது நாகேஷ்வர் ஆலயம். நாகநாதர் ஆலயம் என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள மூலவரின் திருநாமம் 'நாகேஷ்வர் மஹாதேவ்’. இறைவன் சிவபெருமான் சுயம்புவாக உருவான 12 ஜோதிர்லிங்கங்களில் இதுவும் ஒன்று. (ஏனைய 11 ஜோதிர்லிங்கங்கள் உள்ள இடங்கள்: ராமேஸ்வரம், கேதார்நாத், த்ரியம்பகம், ஸ்ரீசைலம், உஜ்ஜயினி, ஓம்காரேஷ்வர், எல்லோரா, தேவ்கர், சோம்நாத், ஸ்ரீசைலம், பீமா சங்கரம்).

நாகேஷ்வர் ஆலய முகப்பில் 25 அடி உயரத்தில், அமர்ந்த திருக்கோலத்தில் காட்சிதரும் சிவபெருமான் நம்மை வியக்க வைக்கிறார். தரைமட்டத்துக்குக் கீழே அமைந்துள்ள கருவறையில், லிங்க வடிவில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார்.

இங்கே நந்தவனம் ஒன்றும், அழகிய தடாகமும் மனதைக் கவர்கின்றன. ஒருகாலத்தில் இந்தப் பகுதியில் ஐந்து நகரங்கள் இருந்திருக்கலாம் எனத் தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன.

நாகேஷ்வர் ஆலயம் அமைந்திருக்கும் இடம் புராண காலத்தில் தாருகாவனம் என அழைக்கப்பட்டதாக ஸ்தல வரலாறு சொல்கிறது. இதுபற்றி சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகவலைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அங்குள்ளவர்கள்.

அதன்படி, ஒருகாலத்தில் இங்கே தாருகன்- தாருகி என்று அசுர குலத்தைச் சேர்ந்த கணவன்- மனைவி வசித்து வந்தார்களாம். தாருகி பார்வதியின் பக்தை. அந்த ஆணவத்தில், மக்களுக்கு இடைஞ்சல் செய்தாளாம்.

பிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை!

ஒருமுறை, சுப்ரியா என்னும் சிவபக்தையை, இன்னும் பலரோடு சேர்த்துத் சிறைப்பிடித்துத் தாருகாவனத்தில் அடைத்துவிட்டாள் அரக்கி தாருகி. சுப்ரியா, தன்னுடன் பிடிபட்ட அனைவரையும் 'ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரிக்கச் சொன்னாள்.

இதுபற்றித் தகவல் அறிந்த அரக்கன் தாருகன், சுப்ரியாவைக் கொல்ல விரைந்து வந்தான். அப்போது ஜோதிர்லிங்க வடிவில் சிவபெருமான் பூமியில் இருந்து தோன்றி சுப்ரியாவைக் காப்பாற்றினார் என்கிறது கோயில் ஸ்தல வரலாறு.

இந்த ஆலயத்தில் சிவலிங்கம் தெற்கு திசையை நோக்கி இருக்கிறது. கோமுகம் கிழக்கு நோக்கி இருக்கிறது.

ஆலய வளாகத்தில், வட இந்தியாவில் அதிகம் தென்படாத வேம்பு மரங்கள் நிறைய இருக்கின்றன. அவை ஓங்கி உயர்ந்து காணப்படுகின்றன.

சனி பகவானுக்கும் இங்கே சந்நிதி இருக்கிறது. மகாசிவராத்திரி இங்கு மிகமிக விசேஷம். அன்றைய தினம் கோயில் பிரமாண்டமாய் விழாக்கோலம் பூண்டு பக்தர்களால் நிரம்பி வழியும் என்றார்கள்.

மற்றபடி, ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 10 வரை திறந்திருக்கிறது.

அடுத்ததாக நாங்கள் தரிசிக்க சென்ற திருத்தலம் கோபி தாலவ்.

- யாத்திரை தொடரும்... 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism